உங்களுக்குப் பிடித்த விதத்தில் ஷூக்களை வடிவமைத்து தயாரித்து தரும் நிறுவனம்!

0

சுயநிதியில் இயங்கி வரும் ’ரபாவாக்’ (Rapawalk) என்கிற ஸ்டார்ட் அப் காசிஃப் மொஹமத், அர்விந்த் மட்டிரெட்டி ஆகிய நிறுவனர்களால் 2017-ம் ஆண்டு நிறுவப்பட்டது. பெங்களூருவைச் சேர்ந்த இந்நிறுவனம் ஷூக்கள் தயாரிப்பு பிரிவில் செயல்பட்டு தனிப்பட்ட தேவைக்கேற்ப கைகளால் வடிவமைக்கப்பட்ட ஷூக்களை வழங்குகிறது.

உங்களுக்கு எப்போதும் ஒரு ஷூவின் நிறமும், இரண்டாவது ஷூவின் அளவும், மூன்றாவது ஷூவின் வடிவமைப்பும் பிடிக்குமா? சில ப்ராண்டட் ஷூக்கள் பார்க்க அழகாக இருக்கும் ஆனால் உங்களுக்கு பொருத்தமாக இருக்காதா? 

பெங்களூருவைச் சேர்ந்த ரபாவாக் நிறுவனத்திடம் இந்த கேள்விகளுக்கான விடைகள் உள்ளன. இந்நிறுவனம் நீங்கள் உங்களுக்குத் தேவையான விதத்தில் ஷூக்களை 3டி வடிவத்தில் வடிவமைத்துக் கொள்ள உதவுகிறது. அதன் பிறகு உங்களது ஆர்டரை எடுத்துக்கொண்டு அதே போன்று தயாரிக்கிறது.

ரபாவாக் வாடிக்கையாளர்கள் ஏற்கெனவே தொகுக்கப்பட்ட சேகரிப்பில் இருந்து தேர்வு செய்யலாம். அல்லது தங்களுக்குப் பிடித்தவாறு வடிவமைத்துக் கொள்ளலாம்.

துவக்கம்

காசிஃப் மொஹமத், அர்விந்த் மட்டிரெட்டி ஆகிய இருவரும் ஐஐஎம் அஹமதாபாத்தில் ஒரே அணியில் பயின்றவர்கள். இவர்கள் உருவாக்கிய ரபாவாக் நிறுவனத்தில் இவ்விரு நிறுவனர்களையும் சேர்த்து 12 பேர் உள்ளனர். இதில் ஐந்து பேர் பெங்களூருவிலும் ஏழு பேர் கான்பூரில் உள்ள நிறுவனத்தின் தொழிற்சாலையிலும் பணிபுரிகின்றனர்.

காசிஃபின் குடும்பத்தினர் கான்பூரைச் சேர்ந்தவர்கள். இவர்கள் உலகளவிலான உயர்தர காலணி ப்ராண்ட்களுக்காக உற்பத்தி செய்கின்றனர். காசிஃப் வடிவமைப்பில் ஆர்வம் கொண்டவர். அவர் கூறுகையில், 

“நாங்கள் எங்களது தொழிற்சாலையில் உற்பத்தி செய்யும்போது செலவிடும் தொகையைக் காட்டிலும் பத்து மடங்கு அதிக விலைக்கு இந்த ப்ராண்டுகள் விற்பனை செய்வதை நான் உணர்ந்தேன்,” என்றார். 

ஐஐஎம் முடித்த பிறகு காசிஃப் இத்தாலி சென்று வடிவமைப்புப் பயின்றார். இந்தியா திரும்பியதும் ரபாவாக் திட்டம் குறித்து அர்விந்த் உடன் கலந்துரையாடினார்.

ஆரம்பகட்ட சவால்கள்

காசிஃப் உற்பத்தித் தொடர்பான பின்னணி கொண்டவர். அர்விந்த் முன்னாள் முதலீட்டு வங்கியாளராக இருந்து தொழில்நுட்பப் பிரிவில் தொழில்முனைவோராக மாறியவர்.

”நாங்கள் இருவரும் மிகுந்த உற்சாகமானோம். ரபாவாக் முயற்சிக்கு இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகளவில் மிகப்பெரிய வாய்ப்பு இருப்பதை உணர்ந்தோம். அமெரிக்காவில் உள்ள கண்ணாடி நிறுவனமான Warby Parker நிறுவனம் எங்களுக்கு உந்துதலளித்தது. எங்களது வணிக நடவடிக்கைகளில் சில குறிப்பிட்ட அம்சங்கள் அவர்களது வணிக மாதிரியுடன் ஒப்பிடக்கூடியவை ஆகும். தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்கும், தயாரிப்பிற்கான இடத்தை அமைக்கவும், குழுக்களை உருவாக்கவும், மூலப்பொருட்களுக்கான உலகளவிலான விற்பனையாளரைக் கண்டறியவும் 18 மாதங்கள் செலவிட்டோம்,” என்றார்.

காசிஃப் அவர்கள் சந்தித்த சவால்கள் குறித்து குறிப்பிடுகையில், 

“தொழிற்சாலையை அமைத்து விநியோக சங்கிலியை சீர்படுத்துவது நாங்கள் கையாள வேண்டிய ஆரம்பகட்ட சவாலாக இருந்தது. மொத்த உற்பத்தியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களைத் தனிப்பட்ட தேவைக்கேற்றவாறான காலணிகளை தயாரிக்க பயிற்சியளிப்பதும் நாங்கள் சந்தித்த ஆரம்பகட்ட சவாலாகும்,” என்றார்.

இது எவ்வாறு செயல்படுகிறது?

ரபாவாக் காலணிகள் விரைவிலேயே வழக்கமான மின்வணிக தளங்களில் கிடைக்கும். வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தேவைக்கேற்றவாறு கிடைக்கும். அல்லது வாடிக்கையாளர் நிறுவனத்தின் வலைதளத்தைப் பார்வையிடலாம். இதிலுள்ள 3டி கான்ஃபிகரேட்டர் ஷூவின் ஒரு பாணியில் 15-16 வேறுபாடுகளை வழங்கும். ஆர்டர் செய்வதற்கு முன்பு நிறம், வடிவமைப்பு, காலணியின் அடிப்பகுதி, அளவு, ஷூக்களின் அகலம் போன்றவற்றை தனிப்பட்ட தேவைக்கேற்றவாறு தீர்மானித்துக்கொள்ளலாம்.  காசிஃப் கூறுகையில்,

 “ஷூக்களின் அளவைப் பொருத்தவரை ஒவ்வொரு ப்ராண்டின் அளவும் மாறுபடும். இந்த காரணத்தினாலேயே மின்வணிகம் வாயிலாக வாங்கும் வாடிக்கையாளர்களில் அதிகம் பேர் காலணிகளை திரும்பக் கொடுத்துவிடும் நிலை உள்ளது. இங்குதான் நாங்கள் செயல்பட்டு தீர்வளிக்கிறோம்,” என்றார்.

இதன் தொழிற்சாலை கான்பூரில் அமைந்துள்ளது. ரபாவாக் தோல் போன்ற மூலப்பொருட்களை இத்தாலி மற்றும் மெக்சிகோவில் இருந்து கொள்முதல் செய்கிறது. அதன் வடிவமைப்பு கான்ஃபிகரேட்டர் அடிப்பகுதியின் மிகச்சிறந்த பாணிகளையும், ஒவ்வொரு பாணியிலும் பல்வேறு வடிவமைப்புகளையும், மூலப்பொருட்கள் மற்றும் நிறங்களுக்கான விரிவான தேர்வுகளையும் வழங்குகிறது.

வடிவமைப்பு செயல்முறை கீழ்கண்டவாறு காணப்படும்:

1. அடிப்பகுதி பாணியை தேர்வு செய்தல்

2. வடிவமைப்பை தேர்வு செய்தல்

3. மூலப்பொருட்கள் மற்றும் நிறத்தை தேர்வு செய்தல்

4. அளவு மற்றும் பொருத்தத்தை தேர்வு செய்தல்

5. ஆர்டர் செய்தல்

போட்டியாளர்கள் மற்றும் நிதி

அர்விந்த் கூறுகையில், “இந்தியாவில் எந்த ஒரு போட்டியாளரும் இல்லை,” என்றார். நிதி குறித்து அவர் குறிப்பிடுகையில், 

“தற்சமயம் சுயநிதியில் இயங்கி வருகிறோம். தயாரிப்பிற்கான இடத்தை அமைத்தல், தொழில்நுட்பத் தளத்தை உருவாக்குதல், குழுவை தேர்ந்தெடுத்தல், ஆரம்பகட்ட வாடிக்கையாளர்களைப் பெறுதல் உள்ளிட்டவற்றிற்கு எங்களிடம் இருந்த நிதியையே பயன்படுத்தினோம். தற்போது பல்வேறு முதலீட்டாளர்களுடன் கலந்துரையாடி வருகிறோம்,” என்றார்.

வருவாய் மற்றும் சந்தை

ஒராண்டு தீவிர சோதனை மற்றும் சரிபார்த்தல் நடவடிக்கைகளுக்குப் பிறகு ரபாவாக் ஒரு மாதத்திற்கு முன்புதான் அறிமுகப்படுத்தப்பட்டது. ஒரு மாதமே ஆகியிருந்தாலும் உலகளவிலான காலணி சந்தையில் செயல்படுவதில் தீவிர முனைப்புடன் இருப்பதாக காசிஃப் தெரிவித்தார். உலகளவிலான சந்தை தற்போது 150 பில்லியனாக மதிப்பிடப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். இதற்கான இந்திய சந்தை மதிப்பு 5 மில்லியன் டாலராக மதிப்பிடப்படுவதாகவும் தெரிவித்தார்.

இந்நிறுவனம் மின்வணிக சந்தைப்பகுதிகளில் தனது தயாரிப்புகளை விற்பனை செய்யவும் தனது 3டி கான்ஃபிகரேட்டரை அதில் இணைக்கவும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த ஸ்டார்ட் அப் தற்போது ஆண்களுக்கான ஷூக்களில் மட்டுமே கவனம் செலுத்துகிறது. அடுத்த ஆண்டு பெண்களுக்கான காலணிகளிலும் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளது.

ஆங்கில கட்டுரையாளர் : சமீர் ரஞ்சன் | தமிழில் : ஸ்ரீவித்யா