’மோடியின் ரூபாய் நோட்டு உத்தரவு- சரியா? தவறா? காத்திருப்போம்...’- ஆம் ஆத்மி கட்சி அசுடோஷ்

0

"என் மொபைல் போனின் திரை திடீரென பளிச்சிட்டது...” எடுத்து பார்த்தால் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் தொலைக்காட்சியில் நேரடியாக உரையாடப் போகிறார் என்று வந்த பிரேகிங் செய்தி அது. நான் சற்றே ஆச்சர்யம் அடைந்தேன். இப்போது அப்படி என்ன நெருக்கடி ஏற்பட்டுவிட்டது? ஒரு சில எல்லை தாக்குதல்கள் தவிர வேறெல்லாம் மந்தமாகவும், இயல்பாகத்தானே இருக்கிறது. என்னுள் இன்னமும் ஒளிந்திருக்கும் செய்தி ஆசிரியர் இவைகளை யோசிக்க தூண்டினார். நாட்டு மக்களிடம் பிரதமர் உரையாட போகிறார் என்றால் அதற்கு பின் ஒரு ஆழ்ந்த காரணம் இருக்கும். ஆனால் அது என்னவென்று என்னால் யூகிக்க முடியவில்லை. 8 மணி அடித்தும், நான் டிவியை ஆன் செய்தேன். 

பிரதமர், தீவிரவாதம், ஊழல் மற்றும் கறுப்புப்பணத்தை பற்றி பேசிக்கொண்டிருந்தார். இருப்பினும் இவர் எதைப்பற்றி சொல்ல வருகிறார் என்று எனக்கு புரியவில்லை. அரசு, ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளை நடு இரவில் இருந்து செல்லாமல் ஆக்குகிறது என்று அறிவித்தார். கறுப்புப்பணத்தை ஒழிக்க இந்த திட்டம் என்றார். நாங்கள் எல்லாரும் அதிர்ந்து போனோம், உடனே என் பர்சை எடுத்து என்னிடம் எவ்வளவு நோட்டுகள் இருக்கிறது என்று பார்த்தேன். மூன்று 500 ரூ நோட்டுகள் மட்டுமே இருந்தன. ஆனால் அவை ஒரே நொடியில் செல்லாமல் ஆகிவிட்டதே, இப்போது என்னிடம் வேறு பணம் கையில் இல்லை. காகித துண்டாகிய அந்த நோட்டிற்கு மதிப்பில்லாமல் போனது. வியர்வை உழைப்பால் கிடைத்த அந்த நோட்டுகள் வியர்வையை துடைக்க மட்டுமே இப்போது பயன்படும், அதை வைத்துக் கொண்டு ஒன்றும் வாங்கமுடியாது. 

நானும் என் நண்பர்களும் அந்த பணத்தை வெளியில் சென்று சாப்பிட்டுவிட்டு கெடு முடிவதற்குள் செலவழிக்க முடிவெடுத்தோம். அருமையான உணவை உண்டோம். அப்போது எங்களுக்குள் இந்த அறிவிப்பு பற்றி பேச்சு தொடங்கியது. இது ஒரு தைரியமான முடிவு என்று சொல்லப்பட்டது. ஆனால் உண்மையில் எது அதன் நோக்கத்தில் வெற்றி அடையுமா? கறுப்புப்பணத்தை ஒழிக்க இந்த அறிவிப்பு வழிசெய்யுமா? அதுவே எல்லார் முன் இருந்த பெரும் கேள்வி. பிரதமர் இதில் தீவிரமாக உள்ளாரா? இது அவரின் அரசியல் வாழ்வை பாதிக்குமா? அவரது பிம்பத்தை உயர்த்துமா? இதில் வெற்றியடைவாரா, தோல்வியடைவாரா? குழப்பத்தில் முடியுமா அல்லது ஒழுங்குமுறையை பெறுமா?

உண்மையில் எனக்கு குழப்பமாக இருந்தது. இது அவரின் மதிப்பை கூட்டும் என்று எண்ணினேன். அவர் ஊழலுக்கு எதிராக போராடும் ஒரு மனிதராக பார்க்கப்படுவார் ஆனால் இதன்மூலம் அரசியலில் அவர் லாபம் காணமுடியுமா என்ற கேள்வி என்னுள் ஓடியது. ஆனால் அதற்கு என்னிடம் விடையில்லை. செய்தி வெளியில் பரவ, பெட்ரோல் பங்குகளுக்கு மக்கள் கூட்டமாக வரத்தொடங்கினர். அமைதியின்று தவித்தனர் மக்கள். 

அடுத்த நாள் மேலும் குழப்பம், முடக்கம், அராஜகம், சலசலப்பு. வங்கி மற்றும் ஏடிஎம்’கள் முன் மக்கள் வரிசையாக நிற்கத்தொடங்கினர். Demonetization என்ற சொல் எல்லாராலும் பேசப்பட்டது. ’ஒரு வாரம் என்பது அரசியலில் நீண்ட நேரம்’ என்று சர்ச்சில் சொல்லுவார், ஆனால் இங்கோ 45 நிமிடங்கள் கூட ஒரு வாரத்தை காட்டிலும் நீண்டு சென்றது. ஆம் இந்த அறிவிப்பு அரசியலில் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தியது, முன்பை போல் மீண்டும் அதே நிலை இருக்கப்போவதில்லை. இரண்டு வாரங்கள் ஆகியுள்ள நிலையில், தெளிவான அரசியல் கோடுகள் வரையப்பட்டு, தற்போது இரண்டு பிரிவுகள் இருப்பதை காணமுடிகிறது. 

மோடி, இந்த எண்ணத்தை பிரச்சாரம் செய்து இந்தியாவை  ஊழலற்ற நாடாக ஆக்க முயற்சி செய்ததாக பார்க்கப்படுகிறது. இது அவரது வழி. கறுப்புப்பணம் மற்றும் ஊழலை ஒழிக்க அவர் தீட்டிய திட்டம். ஆனால் எனக்கு இது ஒரு கடுமையான மருந்து... ஜீரணிக்க முடியாத மருந்து. 

2014 தேர்தலில் போட்டியிட்ட சமயத்தில், கறுப்புப்பணத்தை வெளியில் கொண்டுவந்து எல்லாருடைய அகவுண்டிலும் 15 லட்சம் ரூபாய் போடுவேன் என்று மோடி அறிவித்தார். கடந்த காங்கிரஸ் ஆட்சியின் ஊழலே அவர்கள் தேசிய அளவில் தோல்வியுற்றதற்கு காரணம். அவர்கள் 50 இடங்களுக்கு குறைவாகவே நாடாளுமன்றத்தில் வெற்றி பெற்றனர். காங்கிரஸின் வருங்காலம் குறித்தும் சந்தேகமாக இருப்பதாக வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். ஒரு காலத்தில் இந்திய அரசியலை ஆட்டிப்படைத்த காங்கிரஸ் கட்சி தற்போது இந்த நிலையில் உள்ளது. 

மோடி ஊழலை எதிர்த்து போராடுவார் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலே வெற்றிப்பெற்றார். வெளிநாடு வங்கிகள் குறிப்பாக ஸ்விஸ் வங்கியில் உள்ள கத்தைகத்தையான கறுப்புப்பணத்தை வெளியில் கொண்டுவருவார் என்ற நம்பிக்கையின் பேரிலே மக்கள் அவருக்கு வாக்களித்தனர். ஸ்விஸ் வங்கி என்ற பெயரை உச்சரித்தவுடன், பலருக்கும் ஆத்திரமும், எரிச்சலும் வந்துவிடுகிறது. கோடிகளில் பணத்தை ஊழல் செய்து இந்தியர்களிடம் இருந்து சம்பாதித்து, ஸ்விட்சர்லாந்தில் வங்கிகளில் அடுக்கிவைப்பது எல்லாரையும் கொதித்து எழ வைக்கிறது. ஒரு பிரபலமான, சக்திவாய்ந்த பணக்காரர் ஸ்விஸ் வங்கியில் பணத்தை வைத்துக்கொள்வது வழக்கமாகி விட்டது. வெளிநாட்டு வங்கியில் பணம் வைத்திருக்கும் ஆண் அல்லது பெண் ஒரு வெற்றியாளராக, மேல்தட்டை சேர்ந்த கோடீஸ்வரராக இருப்பார் என்பதில் சந்தேகமில்லை.  

பிஜிபேயின் மூத்த தலைவர், மோடியின் வழிகாட்டியும் ஆன எல்.கே.அத்வானி, முதன்முதலில் கறுப்புப்பணத்தை பற்றி 2009 நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். இது சம்மந்தமாக பத்திரிகையாளர் சந்திப்புகள் நடத்தி பலமுறை அது குறித்து பேட்டி அளித்தும், அந்த தேர்தலில் பெரிய ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியவில்லை. 2008 இல் சர்வதேச பொருளாதார மந்தநிலையிலும் நம் பொருளாதாரம் 9 சதவீதம் உயர்ந்து கொண்டு வந்தது. மன்மோகன் சிங் மீண்டும் பிரதமர் ஆனார். 2004 இல் கிடைத்ததை விட மிகப்பெரிய பெரும்பான்மையுடன் காங்கிரஸ் பதவிக்கு வந்தது. அப்போது எடுபடாத பிரச்சனை 2011 இல் மீண்டும் மெல்ல தலைத்தூக்கத் தொடங்கியது. 

அன்னா ஹசாரே’வின் எழுச்சி மாநாடுகள், உறங்கிக்கொண்டிருந்த இந்தியர்களை எழுப்பியது. அரசியலில் ஊழல் என்பதே முக்கிய புள்ளியாக மாறியது. தொடர்ந்து ஊழல், மன்மோகன் மற்றும் சோனியா காந்தி மீதிருந்த நம்பிக்கையை குலைத்தது. மிகவும் ஊழளுள்ள கட்சியாக காங்கிரஸ் பார்க்கப்பட்டது. பொருளாதாரமும் வீழ்ச்சியை நோக்கிச் சென்றது. உலக பிரச்சனைகளும் அதிகரிக்க, எழுச்சி கொண்ட இந்திய மக்கள், தவறு செய்த கட்சிகளை, அரசியல்வாதிகளை தண்டனையில் இருந்து தப்பிக்க விடாமல் இருக்க குரல் கொடுத்தனர். அப்போது பிறந்த ஒரு மாபெரும் சக்தி ‘மோடி’. அவர், தான் ஒரு ஊழலற்ற மனிதர் என்று மக்களை சுலபமாக நம்பவைத்தார். கடினமான, எந்தவித கஷ்டமான முடிவுகளையும் சுலபமாக எடுக்கக்கூடியவர் என்ற பிம்பத்தை ஏற்படுத்தினார். நாடே அவரிடன் விழுந்தது... மன்மோகள் வெளியே, மோடி வெற்றிப்பெற்று உள்ளே வந்தார். 

பெரிய வாக்குறுதிகளை கொடுத்த மோடியால், வெளிநாட்டில் உள்ள கறுப்புப்பணத்தை, சொன்னப்படி 100 நாட்களில் கொண்டுவர முடியவில்லை. உச்சநீதிமன்ற தீர்ப்பு அளித்தும், ஒரு பல்லில்லாத ‘சிறப்பு புலனாய்வு குழு’ ஒன்றை மட்டுமே அவரால் அமைக்க முடிந்தது. இறுதியில் பிஜேபி தலைவர் அமித் ஷா, ‘இது வெறும் வேடிக்கை’, தேர்தல் சமயத்தில் எல்லா தலைவர்களும் தரும் வாக்குறுதியை போல, இதை வாக்காளர்கள் உண்மையாக எடுத்துக் கொள்ள தேவையில்லை என்று கிண்டலாக சொன்னார்.

இதுவரை நடந்தவற்றிலே மோடியின் தேர்தல் பிரச்சாரங்களே அதிக செலவீனம் கொண்டவை. இந்தியா முழுதும் அதிக பணச்செலவில் அவை செய்யப்பட்டது. ரூ.10000 கோடி முதல் ரூ.20000 கோடி வரை செலவிடப் பட்டிருக்கும் என்று கணக்குகள் கூறுகின்றன. பெரிய கார்பரேட் நிறுவனங்கள் எல்லாம் அவருக்காக தங்கள் கஜானவை திறந்து விட்டனர். மோடி அந்த கணக்கை பற்றி பேசுவதில்லை. அதை வெளியில் காட்டவுமில்லை. தேர்தல் ஆணையத்தின் கூற்றுப்படி, பிஜேபி தங்களுக்கு வந்த 80% நிதிக்கான கணக்கை காண்பிக்க மறுத்துவிட்டது. தெருவில் நடக்கும் எவரை வேண்டுமானாலும் கேளுங்கள் அது என்ன பணம் என்று... அது கறுப்புப்பணம் என்று அப்பட்டமாக சொல்வார்கள். 

கடந்த இரண்டரை ஆண்டுகளாக பிரதமராக இருந்தும் இதுவரை லோக்பால் திட்டத்தை அமைக்கவில்லை. மன்மோகன் சிங் தனது பணிகாலம் முடிவதற்கு முன் இந்த சட்டத்தை நிறைவேற்றினார். மோடி குஜராத்தின் முதல்வராக 12 ஆண்டுகள் இருந்தும் லோக் ஆயுக்த் சட்டத்தை நிறைவேற்றவில்லை. அரசு மற்றும் உயர் அதிகாரிகளிடையே ஊழலை தடுத்து நிறுத்த உதவும் சட்டம் இது. ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அவரது அமைச்சரவையில் உள்ள ஊழல் அமைச்சர்கள் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் சொன்னால், ஊழலுக்கு பெயர் போன சிலரையே அவர் தனது அமைச்சரவையில் அமைச்சராக்கினார். ஆம் ஆத்மி கட்சியிடம் இருந்து ஊழலுக்கு எதிரான அமைப்பை கைப்பற்றினார் மோடி. 

இப்போது அவர் இரண்டு பெரிய தொழில் குழுமங்களில் இருந்து நிதி பெறுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். அதற்கான ஆவணங்கள் அரசு அதிகாரிகளிடம் உள்ளது. எனினும் மோடி இதுவரை அதற்கு விளக்கம் அளிக்கவில்லை. அதே மோடி அவர்கள் தான் தற்போது நம்மை நம்பவைக்க முயற்சிக்கிறார். ஊழலை முற்றிலும் ஒழிப்பதில் அவருக்கு துணை நிற்கவும், இந்திய சமூகத்தில் இருந்து கருப்புப்பணத்தை அகற்றவும் நம்மை அழைத்துள்ளார். இதை நான் எப்படி நம்புவது? இது அரசியல் இல்லையா? இது ஒரு தெளிவான அரசியல்...

இந்த முடிவால் நாட்டு மக்களின் கருத்துக்கள் எதிர்முனைகளாக உள்ளது. ஊழலை எதிர்த்து போராடும் ஒரு போராளியாக, தனது மதிப்பை கூட்டிக்கொள்பவராக மோடி பார்க்கப்படுகிறார். இப்போதே அவர் இந்த விஷயத்தில் வெற்றிப்பெற்றார் அல்லது தோல்வி அடைந்தார் என்று சொல்வது நன்றாக இருக்காது. பொறுத்திருந்து பார்ப்போம். பண தட்டுப்பாடில் தவிக்கும் மக்கள் முதலில் அதிலிருந்து வெளிவரட்டும். பின்னர் இதைப்பற்றி சிந்திக்கட்டும். இது அவருக்கும் நாட்டு மக்களுக்கும் ஒரு பதட்டமான நேரமாகும். பொருத்து இருப்போம்...

கட்டுரையாளர்: அசுடோஷ்

(பொறுப்பு துறப்பு: இது தமிழில் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ள கட்டுரை. ஆங்கில கட்டுரையாளர் அசுடோஷ், இவரின் கருத்துக்கள் அவரின் தனிப்பட்ட கருத்துக்கள். கட்சியின் கருத்துக்களை பிரதிபலிப்பவை அல்ல.)