ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால்  பாலியல் கொடுமை அனுபவித்த நதியா-க்கு கிடைத்தது நோபல் பரிசு!

0

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்ட பெண்களின் கௌரவத்தை பாதுகாக்க போராடிய நதியா முராத்தின் பயணம் மன உறுதி நிறைந்ததாகும்.

"உலகத்திலேயே இத்தகைய அனுபவத்தை எதிர்கொண்ட கடைசி பெண் நானாகவே இருக்கவேண்டும் என விரும்புகிறேன்."

2018-ம் ஆண்டின் நோபல் பரிசு பெற்ற நதியா முராத் சமீபத்தில் வெளியான ”The Last Girl: My Story of Captivity, and My Fight Against the Islamic State” என்கிற தனது சுயசரிதையில் இந்த சக்திவாய்ந்த வரிகளைக் குறிப்பிட்டார், 

நதியா மற்றும் டாக்டர். டெனிஸ் முக்வகே இருவரும் இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை வென்றுள்ளனர். டாக்டர். டெனிஸ் முக்வகே மகளிர் மருத்துவர். இவர் காங்கோ குடியரசில் உள்ள பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுகிறார்.

நதியா யாஸிதி சிறுபான்மை சமூகத்தினர் ஆவார். 2014-ம் ஆண்டு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட ஆயிரக்கணக்கான பெண்களில் இவரும் ஒருவர். “On Her Shoulder” என்கிற அவரது ஆவணப்படத்தில் 3,400 யாஸிதி பெண்கள் இன்னமும் சிறைபிடிக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

2016-ம் ஆண்டு 25 வயதான இந்த ஈராக்கிய பெண், ஐக்கிய நாடுகளின் மனித கடத்தலில் உயிர்பிழைத்தவர்களில் முதல் நல்லெண்ண தூதராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருக்கு வக்லேவ் ஹேவல் மனித உரிமை பரிசு (Vaclav Havel Human Rights Prize) வழங்கப்பட்டது.

வாஷிங்டன் டிசியில் உள்ள நேஷனல் ப்ரெஸ் க்ளப்பில் அவர் பேசுகையில்,

இனப்படுகொலைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து இந்தக் குற்றத்தில் ஈடுபடுவர்களுக்கு தண்டனை வழங்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க நாம் ஒன்றிணைந்து பணிபுரியவேண்டும். இது வரை யாஸிதி சமூகத்தினருக்கு, குறிப்பாக பாலியல் அடிமைத்தனத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைத்ததில்லை. ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் அவர்கள் செய்த குற்றங்களுக்கான தண்டனையை பெறவேண்டும்.

பாலியல் ரீதியான வன்கொடுமைகள் போருக்கான ஆயுதமான பயன்படுத்தப்படுவதை முடிவிற்கு கொண்டுவருவதற்கான முயற்சி எடுத்ததற்காக நதியா, டெனீஸ் இருவருக்கும் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

2014-ம் ஆண்டு ஆகஸ்ட் 3-ம் தேதி வடக்கு ஈராக்கின் கோஜோ பகுதியில் உள்ள நதியாவின் வீடு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் சூறையாடப்பட்டது. இனப்படுக்கொலை என்கிற பெயரில் வடக்கு ஈராக்கில் யாஸிதி கிராமங்களில் கோஜோ பகுதியே முதலில் தாக்குதலுக்கு ஆளானது.

பெண்கள் உள்ளூர் பள்ளியில் அடைக்கப்பட்டனர். ஆண்கள் தனியாக பிரிக்கப்பட்டனர். பின்னர் ஆண்கள் தூக்கிலப்பட்டனர். 7,000 யாஸிதி பெண்கள் கட்டாயப்படுத்தப்பட்டு அடிமைகளாக்கப்பட்டனர். நதியா ஐஎஸ்ஐஎஸ் ஜட்ஜ் ஒருவருக்கு விற்கப்பட்டு கொடூரமான சித்திரவதை செய்யப்பட்டார். ஒருமுறை தப்பிக்க முயன்று மாட்டிக்கொண்டு கொடுமையை அனுபவித்தார். இறுதியாக தப்பித்தபோது உலகளவில் பிரச்சாரம் செய்யவும் யாஸிதி பெண்களுக்கு எதிராக நடந்த காட்டுமிராண்டித்தனமான குற்றங்கள் குறித்து பேசவும் தொடங்கினார்.

’தி கார்டியன்’ உடனான நேர்காணலில் நதியா குறிப்பிடுகையில்,

”ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளிடம் நான் ஒரு பாலியல் அடிமையாக இருந்தேன். நான் என்னுடைய கதையை சொல்கிறேன். ஏனெனில் இதுவே என்னிடம் உள்ள சிறந்த ஆயுதம்,” என்றார்.

பாலியல் அடிமையாக இருந்து பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்பவராக மாறியது வரையிலான நதியாவின் பயணம் உந்துதளிக்கும் விதத்தில் அமைந்துள்ளது.

கட்டுரை : THINK CHANGE INDIA

Related Stories

Stories by YS TEAM TAMIL