’அலிபாபா’விற்கு இந்தியா மிகவும் முக்கிய நாடாகும்’ – சிஇஓ டானியல் சாங்

1

2013-ம் ஆண்டு சைனீஸ் சில்லறை வர்த்தக ஜாம்பவானான ’அலிபாபா’ இந்தியாவில் பேடிஎம் நிறுவனத்தில் முதலீடு செய்தது. அப்போதிருந்து இந்நிறுவனம் மற்ற லாஜிஸ்டிக்ஸ் நிறுவனங்கள், உணவு விநியோக செயலிகள் என இ-காமர்ஸ் நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட ஒப்பந்தத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்திய ஆன்லைன் மளிகை சந்தையில் முன்னணியில் இருக்கும் பிக்பாஸ்கெட் நிறுவனத்தில் முதலீடு செய்கிறது என்கிற தகவல் வெளியானது. இதையடுத்து நிறுவனத்தின் தலைவர் அலிபாபா க்ரூப்பிற்கு இந்தியா மிகவும் முக்கியமானது என்பதை தெளிவுப்படுத்தியுள்ளார். 

அலிபாபா குழுமம் சிஇஒ டானியல் சாங்
அலிபாபா குழுமம் சிஇஒ டானியல் சாங்

ஷாங்காயின் 11.11 நிகழ்வில் (இது ‘சிங்கிள்ஸ் டே’ என்றும் அழைக்கப்படும்) சர்வதேச ஊடகத்துடனான உரையாடலில் அலிபாபா க்ரூப்பின் சிஇஓ டானியேல் சாங் அடுத்த சில ஆண்டுகளுக்கு உலகமயமாக்கல்தான் இவர்களது முக்கிய உத்தி என்று குறிப்பிட்டார். இந்தியாவில் விரிவடைய திட்டமிடுவதற்கான வாய்ப்புகள் குறித்து கேட்கையில் அவர்,

”நாங்கள் எங்களையே கேட்டுக்கொள்ளும் கேள்வி என்னவென்றால் ‘அலிபாபா ஏன் அங்கு செல்லவேண்டும்? எவ்வாறு உதவ முடியும்?’ என்பதுதான். உள்ளூர் தொழில்முனைவோரின் வளர்ச்சிக்கு உதவ விரும்புகிறோம். அதனால்தான் நாங்கள் பேடிஎம்மில் முதலீடு செய்துள்ளோம். டிஜிட்டல் கட்டண முறை பிரபலமாகி வருவதைப் பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. அவர்கள் வளர்ச்சிக்கு உதவவேண்டும் என்கிற எங்களது முயற்சியை வெளிப்படுத்த இது ஒரு தெளிவான உதாரணமாகும். 

எங்களது வணிகத்தில் வளர்ச்சியடைவதற்கான முயற்சி அல்ல. அவர்கள் வெற்றிகரமாக செயல்பட உதவும் முயற்சியாகும்,” என்றார்.

புதிய சில்லறை வர்த்தக மாதிரி

அலிபாபாவின் முக்கிய உத்திகளில் ஒன்று புதிய சில்லறை வர்த்தகம் (New Retail). புதிய சில்லறை வர்த்தக சகாப்தத்தின் துவக்கமாக 2017-ம் ஆண்டு பார்க்கப்படுகிறது. ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் உலகிற்கிடையே எல்லையற்ற இணைப்பு இருப்பதை உறுதிசெய்து மின் வர்த்தகத்தை மறுவரையறை செய்கிறது. சீனாவில் மொத்த சில்லறை வர்த்தகத்தில் மின் வர்த்தகம் 18 சதவீதம் பங்களிக்கிறது. புதிய சில்லறை வர்த்தகம் வாயிலாக தரவுகள் மற்றும் தொழில்நுட்பத் திறனை செலுத்தி இந்த 82 சதவீத ஆஃப்லைன் வர்த்தகத்தை டிஜிட்டலாக மாற்றுவதை அலிபாபா நோக்கமாகக் கொண்டுள்ளது. வாடிக்கையாளர் அனுபவம், சரக்கு மேலாண்மை, சில்லறை வர்த்தக பகுதி உள்ளிட்டவை சார்ந்த நடவடிக்கைகளை மேம்படுத்த விரும்புகிறது.

இந்த கான்செப்டின் கீழ் அலிபாலா Hema என்கிற முயற்சியை அறிமுகப்படுத்தியது. இதில் வாடிக்கையாளர்கள் ஃப்ரெஷ்ஷான உணவுகளை வாங்கலாம், சாப்பிடலாம் அல்லது வீட்டில் டெலிவரி செய்யப்படுவதற்காக ஆர்டர் செய்யலாம். மேலும் இந்த வருட 11.11-ல் கிட்டத்தட்ட 1,00,000 ஸ்டோர்கள், ஆயிரக்கணக்கான ப்ராண்டுகள், எஃப்எம்சிஜி அவுட்லெட்கள் போன்றவை ஸ்மார்ட் ஸ்டோராக மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் அலிபாபாவின் தரவுகள் நுண்ணறிவானது ஆஃப்லைன் ஸ்டோர்களுக்கு தங்களது வாடிக்கையாளர்கள் குறித்த நுண்ணறிவை வழங்குகிறது. அதேபோல் ‘Tmaal Stores’ B2B விநியோகம், லாஜிஸ்டிக்ஸ், ப்ரொமோஷன், பிற மதிப்பு கூட்டல் சேவைகள் என அனைத்து சேவைகளுக்கும் அலிபாபாவின் சில்லறை வர்த்தக தீர்வுகளை பயன்படுத்துகிறது.

இந்தியா குறித்த கேள்வி

O2O மாதிரியை பின்பற்றும் பேடிஎம் மாலில் ஒரு பில்லியன் டாலர்களை அலிபாபா ஏற்கெனவே முதலீடு செய்துள்ளது. இதன் புதிய சில்லறை வணிக மாதிரிக்கு இது முன்னோடியா? இந்த புதிய சில்லறை வணிக மாதிரியை ஏற்றுக்கொள்ளும் திறன் இந்தியாவிற்கு உள்ளது என்று அவர் நினைக்கிறாரா என்கிற கேள்விக்கு டானியேல் பதிலளிக்கையில்,

”புதிய சில்லறை வர்த்தகம் சிறப்பாக செயல்படுவதற்கான வாய்ப்புகள் இந்தியாவில் உள்ளது. சில நாடுகளில் மின் வர்த்தகங்கள் பாரம்பரிய வழிமுறைகளை பின்பற்றுவதில்லை. சில சந்தைகள் மொபைலுக்கு மாறுவதற்காக PC/டெஸ்க்டாப் போன்றவற்றை தவிர்த்துவிடுவது போல ஒரு குறிப்பிட்ட கட்டத்தை அவர்கள் தவிர்த்துவிடுகிறார்கள். இப்படிப்பட்ட சந்தைகளில் மின் வர்த்தக 1.0 தவிர்க்கப்பட்டு நேரடியாக மின் வர்த்தக 2.0 ஏற்றுக்கொள்ளப்படும். ஆனால் இது தொழில்நுட்பம், தரவு, சில்லறை வர்த்தக வடிவங்களில் புதுமை போன்றவற்றைச் சார்ந்தே உள்ளது.”

எனினும் புதிய சில்லறை வர்த்தகத்திற்கான O2O-வில் முன் நிபந்தனைகள் உள்ளது என்று உறுதிப்படுத்துகிறார். ”இது வெறும் ஆன்லைன் – ஆஃப்லைன் இணைப்பு அல்ல. ஆன்லைன் செயல்பாடுகளை அதிகரிக்கச் செய்யும் முயற்சியும் அல்ல. வாடிக்கையாளர்கள், வணிகங்கள் இரண்டு தரப்பிற்கும் மதிப்பை வழங்கும் முயற்சியாகும்,” என்றார்.

ஆங்கில கட்டுரையாளர் : அதிரா ஏ நாயர்