மைம் மூலம் சென்னையில் சாலை பாதுகாப்பை எடுத்துரைக்கும் மாற்றுத் திறனாளி!

நல்லதை எடுத்துரைக்க பேச்சு முக்கியம் இல்லை என, மைம் கலையை கையில் எடுத்து, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் பேச்சு மற்றும் கேட்கும் திறமை இல்லாத வீரமணி!

0

சாலை விபத்து செய்தி இல்லாத செய்தித்தாளை நாம் பார்க்க முடியாது. நாளுக்குநாள் விபத்து செய்திகள் அதிகரித்துதான் வருகின்றது, அதிலும் பெரும்பாலான விபத்துகள் அடிப்படை சாலை விதிமுறைகளை பின்பற்றாததால் ஏற்படுகிறது. இதனால் சென்னையை சேர்ந்த தன்னார்வலர் வீரமணி, சென்னையை விபத்தில்லா நகரமாக்க வேண்டும் என்று மைம் மூலம் சாலை பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்

“அதிக சாலை விபத்துகளில் இந்தியா முன்னிலையில் உள்ளது. இந்தியாவிற்குள் தமிழக மாநிலத்தில் சென்னை அதிக சாலை விபத்துகளை சந்திக்கும் நகரமாக உள்ளது,” என ஆரம்பிக்கிறார் சமுக தன்னார்வளர் வீரமணி.

பிறவியில் இருந்தே காது மற்றும் வாய் பேசாத வீரமணி ஓர் வங்கி மேலாளர். வங்கி மேலாளராக இருப்பினும் நம் பாதுகாப்பிற்காக சாலையில் நின்று சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்திக்கொண்டு வருகிறார். வாய் மற்றும் காது கேளாத இவர் தனது விழுப்புணர்வு பிரசாரத்தை மைம் கலை மூலம் எடுத்துரைக்கிறார்.

முகத்தில் பெயிண்ட் அடித்து மைம் செய்யும் வீரமணி
முகத்தில் பெயிண்ட் அடித்து மைம் செய்யும் வீரமணி

தோழன் சமூக அமைப்புடன் இணைந்து சாலைகளில் நின்று, வேடம் அணிந்து மைம் மூலம் சாலை விதிகளின் முக்கியத்தவத்தை மக்களுக்கு எடுத்துரைக்கிறார் இவர். எல்லா வார இறுதியிலும் சென்னையைச் சுற்றியுள்ள பிசியான சிக்னல்களில் நின்று தங்களது பிரச்சாரத்தை நடத்தி வருகின்றனர் இவ்வமைப்பினர்.

நம் மக்களுக்கு சாலை விதிமுறைகள் தெரிந்தாலும் அதை பின்பற்றுவதில்லை, ஹெல்மெட் போடவும், சீட் பெல்ட் அணியவும் என அவர்களுக்கு தொடர்ந்து நியாபகம் படுத்த வேண்டிய சூழ்நிலை இங்கு உருவாகி உள்ளது. ஓர் விபத்தை சந்தித்த பிறகுதான் இதன் முக்கியத்துவம் தனக்கு தெரிந்ததாக குறிப்பிடுகிறார் வீரமணி.

“என் குழந்தையும் நானும் வண்டியில் சென்று கொண்டிருந்த போது எதிரில் வந்த வண்டி வேகமாக எங்களை தாக்கியது. நான் அனைத்து பாதுகாப்பு விதிகளை பின்பற்றியும் சேதம் அடைந்தது நான் தான். அனைவரும் விதிமுறைகளை பின்பற்றினால் மட்டுமே விபத்துகள் குறையும்,” என்கிறார்.

சிறிய காயங்களுடன் விபத்தில் இருந்து தப்பினாலும், ஒருவர் சாலை விதியை பின்பற்றவில்லை என்றால் குற்றமற்ற மற்றவர் பாதிக்கப்படுகிறார். இதுவே சாலை விதிமுறைகளை மக்கள் அனைவரையும் பின்பற்ற வைக்க வேண்டும் என யோசனையை தனக்கு கொடுத்தது என்கிறார். 

சாலை பாதுகாப்பு குறித்து கடந்த 10 ஆண்டுகளாக விழிப்புணர்வை பரப்பி வரும் தோழன் தொண்டு அமைப்பில் 3 ஆண்டுகளுக்கு முன்பு இணைந்து சாலை விதிகளுக்கான விழிப்புணர்வை கொடுக்கத் துவங்கவிட்டார் வீரமணி.

பொதுவாக தன்னுடன் இருக்கும் மற்ற தன்னார்வலர்கள் சாலையில் ஓட்டுனர்களிடம் சாலை பாதுகாப்பு மற்றும் விதிமுறைகளின் முக்கியத்துவத்தை பேச்சால் எடுத்துரைப்பார்கள். தன்னால் பேச முடியாது என்பதால் மைம் என்னும் ஆயுதத்தை கையில் எடுத்துள்ளார் இவர். இவரின் முயற்சியால் மைம் மூலம் இன்று பிரசாரங்களை நடத்தி வருகின்றனர்.

“நாம் பேசுவதை பாதி நேரம் மக்கள் காதில் போட்டுக் கொள்வதில்லை, ஆனால் இப்பொழுது நான் வேடம் அணிந்து சிக்னல் ஓரத்தில் நின்று இருந்தால் அவர்களின் பார்வை நிச்சயம் என் மேல் படும்,” என்கிறார்.

60-90 வினாடிகளுக்குள் சிறிய மைம் நிகழ்வுகளை நடத்தி, குடித்துவிட்டு வாகனம் ஓட்டாதிர், வாகனம் ஓட்டும்போது கைபேசியில் பேசாதீர், ஹெல்மெட் அணியவும், சீட் பெல்ட் அணியவும் போன்ற சாலையின் அடிப்படை விதிமுறைகளை எடுத்துரைக்கிறார். தன்னைப் பார்த்த பிறகு மக்கள் உடனே சீட் பெல்ட் மற்றும் ஹெல்மெட் அணிவதையும் தான் பார்த்ததாக நெகிழ்கிறார் வீரமணி. இதுவே இவரது பிரச்சாரத்தின் முதல் வெற்றியாகவும் கருதுகிறார்.

நடிப்பின் மீது சிறு வயதில் முதலே ஆர்வம் கொண்டிருந்த வீரமணிக்கு கேட்கும் மற்றும் பேச்சு திறமை இல்லாததால் அதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் அதற்கு மாறாக மைம்மை கற்றுக்கொண்டுள்ளார் இவர். தான் கற்ற கலை மக்களின் பாதுகாப்புக்கு உதவுவதை நினைத்து மகிழ்கிறார். சாலை விபத்து இல்லாத நகரமாக சென்னையை மாற்ற வேண்டும் என்பதை தற்போது தனது குறிக்கோளாக கொண்டுள்ளார் இந்த தன்னார்வளர்.

இவரின் முயற்சிக்கு இணங்கி நாமும் மாறுவோம், அனைத்து சாலை விதிமுறைகளையும் பின்பற்றுவோம்!

Related Stories

Stories by Mahmoodha Nowshin