ரூபாய் நோட்டு நடவடிக்கையால் 'ஜன் தன்' வைப்புநிதி ரூ.27,000 கோடி ஆக அதிகரிப்பு!

0

’ஜன் தன்’ கணக்குகளில் வைப்புநிதி அதிகரித்துக் கொண்டேவருகிறது. கடந்த 14 தினங்களில் சுமார் ரூ.27,000 கோடி வரை வைப்பு நிதி, இந்த கணக்குகளில் கூடியுள்ளது என்று தெரியவந்துள்ளது. ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாமல் ஆக்கப்பட்டதில் இருந்துதான் இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது. 25.68 கோடி ஜன் தன் கணக்குகளில் செலுத்தப்பட்ட டெபாசிட் பணம், 70,000 கோடிகளை கடந்து நவம்பர் 23 ஆம் தேதி எடுத்த கணக்கின்படி ரூ.72,834.72 கோடியாக நாடு முழுவதிலும் இருந்துள்ளது. நவம்பர் 9 ஆம் தேதி வரை, ஜன் தன் கணக்குகளில் 45,636.61 கோடி ரூபாய் மட்டுமே வைப்புநிதி இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

நவம்பர் 8 ஆம் தேதி, திடீரென பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த 500, 1000 ரூபாய் நோட்டு தடையால், ஜன் தன் கணக்குகள் உயிர்பெற்று, அதில் உள்ள வரவு அதிகரித்துள்ளது. இருப்பினும் 25.68 கோடி கணக்குகளில் 22.94 சதவீதம் இன்னமும் பூஜ்யம் பாலன்சுடன் இருப்பதாகவும் தெரிகிறது. 

நவம்பர் 16 ஆம் தேதி வரை, 25.58 கோடி கணக்குகள், சராசரி வரவான ரூ.64,252.15 கோடி கொண்டு, பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ் நாடெங்கும் திறக்கப்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. வங்கிகள் வசதியை நாடெங்கும் கொண்டுவரவும், நிதி மேலாண்மையை எல்லா வீடுகளிலும் அமல்படுத்தவும், ஒரு வீட்டிற்கு குறைந்தது ஒரு வங்கி கணக்காவது இருக்கவேண்டும் என்பதே இத்திட்டத்தின் முக்கிய குறிக்கோள் ஆகும். இது ஆகஸ்ட் மாதம் 2014 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட திட்டமாகும். இந்த வங்கி கணக்குகளில் ரூ.50 ஆயிரம் வரை வைப்புநிதி கொள்ளமுடியும்.  

மக்கள் கறுப்புப்பணத்தை வெள்ளையாக்க, ஜன் தன் கணக்குகளை துஷ்பிரயோகம் செய்வதைக் கண்டு, சில நாட்களுக்கு முன்பு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, கடுமையாக கண்டித்தனர். 

”எங்களுக்கு இது குறித்து புகார்கள் வந்துள்ளது. ஜன் தன் கணக்கில் திடீரென ஆயிரக்கணக்கில் பணம் முளைத்துள்ளது தெரியவந்துள்ளது. இது, கணக்குகள் தவறாக பயன்படுத்தப்படுவதை காட்டுகிறது. அதனால்தால் பங்கீட்டில் சில சந்தேகங்கள் எழுந்துள்ளது,” என்று கூறினார் ஜெட்லி.

மேலும் எச்சரித்த அவர், துறை அலுவலர்கள் இந்த கணக்குகளின் வரவில், தவறான முறைகளை கண்டுபிடித்தால், தவறிழைத்தோர்க்கு கடுமையாக தண்டனை அளிக்கப்படும் என்றார். 

பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டமான, நாடு முழுதும் நிதி உட்புகுத்தல் மூலம் நிதி சேவைகளான வங்கிகள், சேமிப்பு கணக்குகள் மற்றும் வரவுக் கணக்குகள், கிரெடிட், காப்பீடு, பென்சன் போன்றவைகள் அனைவருக்கும் சுலபமான வழிகளில் கிடைக்கவேண்டும் என்பதே ஆகும்.