15 மாதங்களில் 16 தீவிரவாதிகளை சுட்டு, 64 பேரை கைது செய்த வீர ஐபிஎஸ் மங்கை!

0

நாடே ஊழல் மற்றும் தீவிரவாதத்தை எதிர்த்து போராடிவரும் வேளையில், தங்கள் பணியை அர்ப்பணிப்புடன் செய்துள்ள பெண் காவல்துறை அதிகாரிகள் பற்றி வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அசாமின் இரும்புப் பெண்மணி என்று அழைக்கப்படும் சஞ்சுக்தா பராஷர் என்ற ஐபிஎஸ் அதிகாரி, வீரதீர பணிக்காக போற்றப்பட்டு, செய்திகளில் இடம் பெற்றார். 

சஞ்சுக்தா, அசாமில் பணி நியமனமான முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி. கடந்த 15 மாதங்களில் 64 தீவிரவாதிகளை கைது செய்து ஒரு மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளார்.

அவர் அசாமில் ஆரம்பக்கட்ட பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு, இந்திரபிரஸ்தா பல்கலையில் பொலிடிகல் சயின்சில் பட்டம் பெற்றார். பின், ஜேஎன்யூ-வில் பி.எச்.டி முடித்தார். விளையாட்டுத் துறையில் ஆர்வம் கொண்ட சஞ்சுக்தா, அதில் பல விருதுகளை வென்றுள்ளார். 

பள்ளியில் படித்தபோதே, நாட்டில் உள்ள ஊழல் பற்றியும், அசாமில் நிலவும் தீவிரவாதம் பற்றியும் கவலைக் கொண்டார். அதற்காக நன்கு படிக்க முடிவு செய்து, கடின உழைப்பு போட்டு, மாநிலத்தில் சிறந்த மதிப்பெண்களுடன் தேர்வானார். ஐபிஎஸ் தேர்வாகியதும், முதல் பணியாக அசாமில் மாகும் என்ற இடத்தில் 2008 ஆம் ஆண்டு பணிசெய்ய அனுப்பப் பட்டார். அங்கே துணை கமாண்டெண்டாக இருந்தார். சில மாதங்களில் உதல்குரி என்ற மற்றொரு இடத்துக்கு மாற்றப்பட்டார். 

அங்கே போடோ இன மக்கள் மற்றும் பாங்களாதேசி தீவிரவாதிகள் இடையேயான கலவரத்தை கட்டுக்குள் வைக்க அவர் பணியிலமர்த்தப் பட்டார். அங்கே 15 மாதத்தில் தொடர் ஆபரேஷன் செய்து 16 தீவிரவாதிகளை கொன்று, 64 பேரை கைது செய்துள்ளார். 

நான்கு வயது குழந்தையில் தாயான சஞ்சுக்தா, அவரது தீவிரவாத ஆபரேஷன்களின் போது, ஏகே47 ரக துப்பாக்கியோடு களத்தில் குதித்து போராடுவார். தன் வாழ்நாள் முழுவதையும் போடோ தீவிரவாத செயல்களுக்கு எதிராக போராடுவதற்கு அர்ப்பணித்துக்கொண்டார்.

அவ்வப்போது, பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் தீவிரவாத தாக்குதலுக்கு உண்டான மக்களை முகாம்களுக்கு சென்று அவர்களை சந்தித்து வருவார். குடும்பத்துடன் நேரம் ஒதுக்கமுடியாமல், இரண்டு மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே வீட்டிற்கு செல்கிறார் சஞ்சுக்தா. 

இத்தகைய அர்ப்பணிப்பும், பணியின் மீதுள்ள ஆர்வமும் அம்மாநில மக்களை புல்லரிக்க வைத்துள்ளது.

கட்டுரை: Think Change India