மூக்குக்கண்ணாடி உற்பத்தியில் புதுமை படைக்கும் ThinOptics-ல் முதலீடு செய்தது Lenskart

0

மூக்குக் கண்ணாடிகள் வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கும் 'லென்ஸ்கார்ட்' சொல்யூஷன்ஸ் கலிஃபோர்னியாவைச் சேர்ந்த ஸ்டார்ட் அப்பான தின்ஆப்டிக்ஸ் ஐஎன்சி நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது. தின்ஆப்டிக்ஸ் புதுமையான கண்ணாடிகளைத் தயாரித்து வருகிறது. பயனாளிகள் தங்களது கண்ணாடியை மறக்காமல் இருக்க தங்களது ஃபோன், கீசெயின், லேப்டாப் போன்றவற்றில் இணைத்துக்கொள்ளும் வசதியும் செய்துள்ளது.

தின்ஆப்டிக்ஸ் காப்புரிமை பெற்ற வடிவமைப்பைக் கொண்டுள்ளது. உங்கள் கண்ணாடி மூக்கின் மீது கச்சிதமாக பொருந்தும் வகையில் அதை சரிசெய்து கொள்ள முடியும். முதலீடு செய்யப்படுவது குறித்து லென்ஸ்கார்டின் சிஇஓ பியூஷ் பன்சால் அறிவித்தபோது, 

“மக்கள் எங்கு சென்றாலும் தங்களது கண்ணாடியை மறந்துவிடாமல் இருக்கவும் தொலைத்துவிடாமல் இருக்கவும் உதவும் ஒரு புரட்சிகரமான தயாரிப்புதான் தின்ஆப்டிக்ஸ். லென்ஸ்கார்ட் கண்ணாடிகளில் ஒரு புரட்சியை ஏற்படுத்தவேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டிருந்தது. எனவே இந்த முதலீடு அந்த நோக்கத்தை செயல்படுத்தும் முயற்சியாகும்." 

கடந்த சில மாதங்களாக இந்திய வாடிக்கையாளர்களிடையே தின்ஆப்டிக்ஸ் தயாரிப்பை சோதனை செய்து வருகிறோம். சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது. கிட்டத்தட்ட அனைத்து வாடிக்கையாளரும் திரும்ப வந்து மற்றொரு கண்ணாடியை வாங்கிச் செல்கின்றனர். இந்திய சந்தை வளர்ச்சிக்காக இந்த முதலீட்டின் வாயிலாக தின்ஆப்டிக்ஸ் கலிஃபோர்னியா குழுவுடன் இணைந்து செயல்பட உள்ளோம். இந்தப் பகுதியில் மேலும் புதுமைகளை புகுத்த திட்டமிட்டுள்ளோம்."

லென்ஸ்கார்ட் 2010-ம் ஆண்டு நிறுவப்படது. அறிமுகமான ஓராண்டில் அதாவது 2011-ம் ஆண்டில் ஐடிஜி வென்சர்ஸ் நிறுவனத்திடம் இருந்து 4 மில்லியன் டாலர் நிதி உயர்த்தியது. அதனைத் தொடர்ந்து இந்நிறுவனத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு முதலீட்டாளர்கள் முதலீடு செய்துள்ளனர். ரோனி ஸ்க்ரூவாலா தலைமையிலான யூனிலேசர் வென்சர்ஸ் 2013-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10 மில்லியன் டாலர் முதலீடு செய்தது. இதைத் தொடர்ந்து பல்வேறு சுற்று நிதி உயர்த்தப்பட்டது. 2015-ம் ஆண்டு டிபிஜி க்ரோத் மற்றும் டிஆர் கேப்பிடல் 22 மில்லியன் டாலர் முதலீடு செய்தது. 2016-ம் ஆண்டு மே மாதம் உலக வங்கி ஆர்ம் ஐஎஃப்சி, ரத்தன் டாடா, இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் க்ரிஸ் கோபாலகிருஷ்ணன் ஆகியோரிடமிருந்து சீரிஸ் D சுற்றாக 400 கோடி ரூபாய் உயர்த்தப்பட்டது.

தற்போதைய முதலீட்டாளர்களான டிபிஜி க்ரோத் மற்றும் ஐடிஜி வென்சர்ஸ் சீரிஸ் D சுற்றிலும் பங்கேற்றது. ப்ரேம்ஜி இன்வெஸ்ட் 2016-ம் ஆண்டு 200 கோடி ரூபாய் முதலீடு செய்தது.

தின்ஆப்டிக்ஸ் சிஇஓ டேவிட் வெஸ்டர்ண்டார்ஃப் கூறுகையில், 

“நாங்கள் 2015-ம் ஆண்டு முதல் லென்ஸ்கார்ட் நிறுவனத்துடன் பார்ட்னராக இருக்கிறோம். நாங்கள் இணைந்து செயல்பட்டு இந்திய சந்தையில் வளர்ச்சியடைந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. 2018-ம் ஆண்டு எங்களது உறவு மேலும் வலுவடைந்துள்ளது,” என்றார்.

மேலும், “லென்ஸ்கார்டுடனான இந்த முதலீட்டின் மூலம் கண்ணாடி வாங்கும் இந்திய வாடிக்கையாளர்களின் நவீன தேவைகளுக்கு ஏற்றவாறு தயாரிப்புகளின் தொகுப்பை வழங்க உள்ளோம். அடுத்தடுத்த மாதங்களில் பல்வேறு புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்த உள்ளோம். நீங்கள் கட்டாயம் மறக்காமல் எடுத்துச் செல்லும் பொருட்களான ஃபோன், பர்ஸ், சாவி போன்றவற்றுடன் கண்ணாடியையும் எப்போதும் வைத்திருப்பதை உறுதி செய்யும் வகையில் சேவையளிக்கிறோம்,” என்றார்.

ஓராண்டிற்குள்ளாகவே இது லென்ஸ்கார்டின் மூன்றாவது முதலீடாகும். 2017- ம் ஆண்டு செப்டம்பர் மாதம் டிட்டோ (Ditto) நிறுவனத்தில் முதலீடு செய்தது. இது ஃப்ரேம்களை ஆன்லைனில் முயற்சித்துப் பார்க்க உதவும் ஆக்மெண்டட் ரியாலிட்டி தொழில்நுட்பமாகும். சமீபத்தில் லென்ஸ்கார்ட் 6ஓவர்6 என்கிற இஸ்ரேலைச் சேர்ந்த இந்த ஸ்டார்ட் அப்பில் முதலீடு செய்துள்ளது. இந்த ஸ்டார்ட் அப் ஆண்ட்ராய்ட் ஃபோன் மூலம் கண் பரிசோதனை செய்துகொள்ள உதவுகிறது.

ஆங்கில கட்டுரையாளர் : நேஹா ஜெயின் | தமிழில் : ஸ்ரீவித்யா