தன் கண்டுபிடிப்பின் மூலம் அசத்தும் பள்ளிப்படிப்பைத் கைவிட்ட தச்சரின் மகன்!

0

ராஜஸ்தான் மாநிலத்தின் சிக்கார் நகரத்தைச் சேர்ந்த மதன்லால் குமாவத் தனது அடித்தள கண்டுபிடிப்பால் விவசாயிகளின் அன்பிறகு பாத்திரமாகியுள்ளார். சிக்கனமாக எரிபொருளை பயன்படுத்தி, பல்வேறு விதமான பயிர்களை கதிரடிக்கும் கருவியை உருவாக்கியதன் மூலமாக சுற்றுப்புறத்தில் வசிப்போராலும், விவசாயிகளாலும் இவர் கொண்டாடப்படுகின்றார். கடந்த 2010-ம் ஆண்டு “ஃபோர்ப்ஸ் பத்திரிகையால்” இந்தியாவின் கிராமப்புறத்தைச் சேர்ந்த மாபெரும் சக்திவாய்ந்த தொழிலதிபராக அடையாளம் இவர் காணப்பட்டார். இது மட்டுமல்லாது பல்வேறு தரப்பினராலும், இதுபோல தனது சிறப்பான பணிக்காக பாராட்டுக்களைக் குவித்து வந்தாலும், எவரும் இவருக்கு உதவ முன்வரவில்லை என்பதுதான் நிதர்சனம்.

மதன்லாலின் தந்தை ஒரு தச்சர். எனினும், தனது இளம்வயதை வறுமையிலேயே கழித்தார். தனது பதினோறாம் வயதில், 11 கே.வி. சக்திவாய்ந்த மின்சாரக் கம்பிகள் மதன்லாலைத் தாக்கியது. இதனால், பாதிப்புக்குள்ளானவரை இயல்பு நிலைக்குக் கொண்டுவர சுமார் பதினைந்து மாதங்கள் சிகிச்சையளிக்கப்பட்ட்து. ஏற்கனவே வறுமையில் தவித்துவந்த மதன்லால், சிகிச்சை செலவீனங்களால், நான்காம் வகுப்புக்குப் பிறகு படிப்பைத் தொடர வாய்ப்பின்றிப் போனது.

இதையடுத்து, தனது தந்தைக்கு மர சாமன்களைச் செய்ய உறுதுணையாக இருந்தார் மதன்லால். தச்சராக உழைக்கத் தொடங்கி ஐந்தாண்டுகள் கழித்து அதிக பளுவைத் தூக்குவதும், கடினமான தோரணையில் அமர்ந்து பணியாற்றுவதும் மரத்தை வெட்டி வேலை செய்யும்போது வெளிவரும் தூசிகளும், தனது உடல் நலனுக்கு தீங்கு விளைவிப்பதை உணர்ந்துகொண்டார். ஆகவே, இந்தத் தொழிலை விட்டு வேறொரு தொழிலில் இறங்க முடிவெடுத்தார்.

மதன்லால் விரைவில் ஒரு பட்டறையில் பணிபுரியத் தொடங்கினார். டிராக்டர் போன்றவற்றில் பயன்படுத்தப்படும் இரும்புத் தகடுகளை பழுதுபார்க்கவும், உருவாக்கவும் இங்கு கற்றுக்கொண்டார். நேரடியாக விவசாயிகளின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்திய இந்தப் புதிய வேலை அவருக்கு சுவாரஸ்யமானதாகத் தோன்றியது. சிலகாலங்களுக்குப் பின்னர், ஒரே மாதிரியாகவே இருப்பதாகத் தோன்றியதால் இந்த வேலையிலும் அவருக்கு சலிப்பு ஏற்பட்டது.

இதையடுத்து தானே ஒரு கதிரறுக்கும் கருவியை உருவாக்கும் முயற்சியில் இறங்கினார். இந்தக் கருவி பயிரிலிருந்து உமியைத் தனியாகவும், தண்டைத் தனியாகவும் பிரித்தது. இந்த வகையான கருவியை தானாகவே உருவாக்க அவருக்கு சில மாதங்கள் பிடித்தது. சந்தையில் விற்கப்பட்டு வந்த கதிரறுக்கும் கருவியைப்போலவே நேர்த்தியான பணியைச் செய்தாலும், மதன்லாலுக்கு தனது முதல் கருவி திருப்தியைத் தரவில்லை. பல மாதங்களாக இதைத் தொடர்ந்து கவனித்ததில், நிறைய மாற்றங்களைச் ஏற்படுத்த விரும்பினார்.

இந்தக் கருவி பல்வேறு வித பயிர்களை கதிரறுக்க ஏதுவானதாகத் தோன்றவில்லை. ஒவ்வொருமுறையும் வெவ்வேறு விதமான பயிர்களை கதிரறுக்க இந்தக் கருவியை இரண்டு மணிநேரத்துக்கும் அதிகமாக செலவிட்டு பொருத்த வேண்டிவந்தது. இந்தக்கால அளவை குறைப்பதற்காக கதிரறுக்கும் கருவியில் பல்வேறு அளவுகளில் சுலபமாக மாற்றும் விதமான கண்ணிகளை வடிவமைத்தார். இதனால், பதினைந்தே நிமிடத்தில் கண்ணிகளை மாற்றிக் கொண்டு அடுத்த பயிரை கதிரறுக்கத் தொடங்கலாம் என்ற நிலை ஏற்பட்டது.

கதிரறுக்க கருவியுடன் காற்றை ஊதும் கருவியையும் (ப்ளோயர்) இணைத்தார். வெளியேறும் காற்றின் அளவைச் சீராக்க, கியரையும், புலே அமைப்பையும் இதில் ஏற்படுத்தினார். இதன் மூலம் இயந்திரம் வித்தியாசமான அளவு, அடர்த்தி மற்றும் வடிவம் கொண்ட பயிர்களை எளிதில் கதிரறுக்க முடிந்தது. சுழலும் உருளியின் அளவைக் குறைத்ததன் மூலமாக இதற்காக தேவைப்படும் டீசலின் அளவு ஒவ்வோரு மணிநேர பயன்பாட்டின்போதும் ஒரு லிட்டர் வரை குறைந்தது.

மதன்லாலின் இந்த படைப்பு விவசாயிகளுக்கு மிகுந்த உபயோகமான ஒன்றாக அமைந்தது. மதன்லால் சிறிதளவே லாபம் வைத்து, இவற்றை விற்கத் தொடங்கினார். 

“முன்பெல்லாம் விவசாயிகள் சரியான காற்றுக்காக நாட்கணக்கில் காத்திருப்பர். அத்துடன், அதீத அளவில் உடல் உழைப்பும் தேவைப்படும். இந்தப் பிரச்சனைகளிலிருந்து எனது கதிரறுக்கும் கருவி விவசாயிகளுக்கு தீர்வு தந்தது. இந்தக் கருவி மூலமாக பதப்படுத்தப்படும் பயிர்கள் நல்ல சுத்தத்துடன் உள்ளன” என நினைவு கூர்ந்தார்.

அகமதாபாத் தேசிய கண்டுபிடிப்பு அறக்கட்டளையில், தனது வடிவமைப்பை பதிவு செய்வதற்கு தான் பட்ட கஷ்டத்தை துயரத்துடன் மதன்லால் பகிர்ந்துகொண்டார். நீண்ட போராட்டத்துக்குப் பின்னர் தனது கண்டுபிடிப்பைப் பதிவு செய்தார். ஆனால், தனது வடிவமைப்புகளை பதிவு செய்வதற்குட்பட்ட காலத்துக்குள், மாபெரும் நிறுவனங்கள் பலவும் அதைப் பயன்படுத்தி பெரும் லாபம் பெற்றுவிட்டதாக வருந்தினார். மதன்லால், இன்றைய சந்தைகளில் விற்கப்படும் கதிரறுக்கும் கருவிகள் பலவும் தனது வடிவமைப்பினைப் பின்பற்றியதே, எனவும் குறிப்பிட்டார்.

மதன்லாலின் வியாபாரம் தற்போது சிறப்பாக நடைபெற்று வருகின்றது. “கதிரறுக்கும் கருவியை ஆரம்பத்தில் ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்கத் தொடங்கி, தற்போது மேலும் பல சிறப்பம்சங்கள் பொருந்திய கருவிகளை மூன்று லட்சம் வரை விற்பனை செய்கின்றேன்,” என்றார். தற்போது, சிக்கார் நகரத்தில் தனது மேற்பார்வையின் கீழ் ஒரு பட்டறையையும், ஜோத்பூரில் உள்ள இளைய சகோதரனனின் மேற்பார்வையில் ஒரு பட்டறையையும் நடத்தி வருகின்றார்.

தற்போது மதன்லால், நான்கு விதமான கதிரறுக்கும் கருவிகளை விற்பனை செய்து வருகின்றார். தேவைக்கேற்ற அளவுகளிலும், வித்தியாசமான சக்தியுடன் இயங்கும் விதத்திலும் தயாரிக்கப்படும் இவை, சிறு, குறு விவசாயிகள் முதல் மாபெறும் விவசாயிகள் வரை பயன்படுத்த ஏதுவாக உள்ளன.

ஆக்கம்: சவ்ரவ் ராய் | தமிழில்: மூகாம்பிகை தேவி