செயற்கை அறிவு மூலம் தீர்வு வழங்கும் புதுமை நிறுவனம்!

0

ஐ.ஐ.எம் - பெங்களுரூவில் தேர்ச்சி பெற்ற ஆதர்ஷ் நடராஜனும் , என்.ஐ.டி ஜலந்தர் பட்டதாரியுமான அபிஷேக் மிஸ்ராவும் இணைந்து 2012 ல் துவக்கிய நிறுவனத்தின் பெயர் - அய்ந்ரா சிஸ்டம்ஸ்- (Aindra Systems). நிறுவனத்தின் பெயர் மட்டும் புதுமையாக இல்லை. இந்நிறுவனம் அளிக்கும் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகளும் புதுமையாகவே இருக்கிறது.பெரிய வர்த்தக நிறுவனங்களுக்கு தேவையான ஏ.ஐ என சுருக்கமாக சொல்லப்படும் ஆர்டிபிஷியல் இண்டலிஜன்ஸ் எனும் செயற்கை அறிவு அடிப்படையிலான தீர்வுகளை வழங்கி வருகிறது.

மதிய உணவு திட்டத்தில் மானியங்கள், உரியவர்களுக்கு சென்றடையாமல் இருக்கும் பிரச்சனை தொடர்பாக கர்நாடக மாநில அரசு இவர்களின் ஆலோசனையை நாடிய போது இந்த பயணம் ஆரம்பமானது. “ கைரேகை நுட்பம் சரியாக வராது. தொடுதல் தேவையில்லாத தொழில்நுட்பத்தை தான் நாட வேண்டும் என கூறினோம். வருகை பதிவு செய்வதற்காக முக உணர்வு நுட்பத்தை பயன்படுத்த பரிந்துரை செய்து வருகைக்கான ஸ்மார்ட் முறையை உருவாக்கி கொடுத்தோம்.இது தான் அய்ந்ரா சிஸ்டம்ஸ் துவங்க காரணமாக இருந்தது” என்கிறார் ஆதர்ஷ் நடராஜன்.

ஆனால் இந்நிறுவனம் வளர்ச்சிப்பாதையின் ஆரம்ப கட்டத்திலேயே கல்வித்துறையில் இருந்து விலக வேண்டி வந்தது. எல்லா ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தான் நாங்களும் எதிர்கொண்டோம் என்கிறார் அவர். இருந்தாலும் அரசு அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றுவதில் உள்ள சிக்கல்களே இந்த முடிவுக்கு காரணமானது. இது பற்றி நடராஜன் கூறும்போது “இது நீடிக்க கூடியதாக இல்லை. நாங்கள் நுண்கடன் நிறுவனங்கள் , மருத்துவம் மற்றும் தொழில் பயிற்சி ஆகிய துறைகளில் விரிவாக்கம் செய்தோம். இந்திய சந்தையில் உள்ள சிக்கல் என்ன என்றால், இந்திய கண்டுபிடிப்பாளார்களையும் அவர்களின் கண்டுபிடிப்புகளையும் அறிமுக நிலையில் ஏற்க தயங்குவதோடு, எதையும் தாமதமாக ஏற்றுக்கொள்ளும் சந்தையாகவே இருக்கிறோம் என்பதுதான். மின் வணிகம் தவிர எல்லா துறைகளிலும் இந்த சிக்கல் இருக்கிறது” என்கிறார் அவர்.

“ அரசு அமைப்புகளில் உள்ள கொள்முதல் முறை, ஸ்டார்ட் அப் நிறுவங்களுக்கு உகந்ததாக இல்லை. நிறுவனங்கள் செயல்பட்டு வரும் ஆண்டுகள், லாப ஈட்டும் தன்மை ஆகியவற்றுக்கு கூட நிபந்தனைகளை வைத்திருக்கின்றனர். அதே நேரத்தில் பணம் பட்டுவாடா செய்யப்படுவது தாமதமாகிறது. தனது அமைப்பு முறை தனது செயல்பாட்டிற்கு தடையாக இருப்பதை இந்தியா உணராத வரை ஸ்டார்ட் அப்களால் அரசை வாடிக்கையாளராக கொள்வது சிக்கலாக இருக்கும். அரசு தனது செயல்பாட்டு முறையை எளிதாக்கினால் தான் தொடக்க நிறுவனங்கள் அவர்களை அணுக முடியும்” என்கிறார் அவர்.

அவரது குழு தொடர்ந்து இடைநிலை கல்வி நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றுகிறது. அடிப்படையில் வருகைக்கான ஸ்மார்ட் பதிவு முறையை உருவாக்கித்தருகின்றனர். இவை பெரும்பாலும் இயந்திர புரிதல் மற்றும் மைக்ரோ-விஷன் ஆகியவற்றின் கலவையாக இருக்கிறது.

பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் பெரிய நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது நிறுவனத்தின் கொள்கையாக இருக்கிறது. “ எங்களால் சிறந்த முறையில் தீர்க்க கூடிய பிரச்சனைகளுக்கு எங்கள் திறன் மூலம் தீர்வு வழங்குகிறோம்” என்கிறார் நடராஜன். இவற்றில் ஒன்று மருத்துவ துறைக்கான, செயற்கை அறிவு சார்ந்த தீர்வை உருவாக்குவது. இத்துறையை சேர்ந்தவர்களுடன் உரையாடிய போது இதற்கான தீர்வுகள் போதுமான அளவில் இல்லை என்று புரிதல் உண்டானது. “70 சதவீத்த்திற்கும் மேலான சாதனங்களை நாம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறோம்.தேவை மிகவும் அதிகமாக இருக்கிறது. ஆனால் இந்த தேவை வர்த்தக அல்லது ஸ்டார்ட் அப் நிறுவனங்களால் பூர்த்தி செய்யப்படவில்லை” என்றும் நடராஜன் சொல்கிறார். ஆனால் இது எளிதானதல்ல. இதற்கு பலதுறை அறிவு தேவை. எந்த தீர்வாக இருந்தாலும் பொறியியல், அறிவியல் மற்றும் மருத்துவ அறிவு மிகவும் அவசியம். இந்த காரணத்தினால் தான் இந்த பிரிவில் அதிக நிறுவனங்கள் உருவாகவில்லை என்றும் அவர் விளக்குகிறார். ஆனால் இந்த தடையை கடந்து விட்டால் வாய்ப்புகள் அதிகம் இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

வங்கி சாராத நிதி நிறுவனங்களுக்காகவும் நிறுவன தீர்வுகளை வழங்கி வருகிறது. ” களத்தில் உள்ள ஊழியர்களை கண்காணிக்க ஸ்மார்ட்போன் அடிப்படையிலான எங்கள் தொழில்நுட்பம் உதவுகிறது. ஒரு ஊழியரின் வேலை முழுவதுமாக பின் தொடரப்படுகிறது. நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கான தொழில் கல்வி பயிற்சி அளிக்கவும் உதவுகிறோம்” என்கிறார் அவர் மேலும்.

இதனிடையே நிறுவனம் தொலைமருத்துவம் மற்றும் ஜவுளித்துறைக்கான தீர்வுகளையும் உருவாக்கி இருக்கிறது.“தொலைவில் உள்ள நோயாளிகள் டாக்டர்களை அணுகுவதற்கான இரண்டு அடுக்கு அனுமதி முறையை உருவாக்கி உள்ளோம். தான் முதலில் பார்த்த டாக்டரால் தான் சிகிச்சை அளிக்கப்படுகிறோம் என்பதை நோயாளி உறுதி செய்து கொள்வது எப்படி? ” என கேட்கிறார் நடராஜன். இதற்கு தீர்வாக டாக்டரின் முகம் காட்சி நுட்பம் மூலம் பதிவு செய்யப்படுகிறது.

ஜவுளித்துறையில் ரோபோ நுட்பத்தை கொண்டு வர பெங்களூரு நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. இதில் நாம் நாடும் தகவல்களுக்கு ஏற்றாவாறு பதில்களை தர, இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இன்னமும் செயற்கை அறிவு நுட்பம் முழுவதும் ஜனநாயகமயமாகமல் இருப்பதும் சிக்கலாக இருக்கிறது என்கிறார் அவர். “ சாதனங்களுக்கான செலவு, வருவாய் ஆகிய பிரச்சனைகள் இதற்கு காரணிகளாக இருக்கிறது. இருந்தாலும் கம்ப்யூட்டர் ஆற்றல் மலிவானதாகி வரும் நிலையிலும், ஆய்வு மற்றும் வளர்ச்சிப்பணிகள் அதிகரிக்கும் சுவாரஸ்யமான கட்டத்தில் இருக்கிறோம். இதனால் செயற்கை அறிவு மற்றும் இயந்திர புரிதலுக்கான செலவுகள் குறைந்து மேலும் இத்துறை பரவலாக வாய்ப்பு உள்ளது” என்கிறார் அவர் நம்பிக்கையுடன்.

“ செயற்கை அறிவு இன்னமும் சாமானியர்கள் வரை சென்றடையாமல் இருக்கலாம். ஆனால் சிறிய அளவிலேனும் அதை மாற்ற முயல்கிறோம். இதன் விளைவு குறிப்பிடத்தக்கதாக இருக்கும் “ என்கிறார் நடராஜன் தீர்மானமாக!