அடுத்த வளர்ச்சி அலையை எதிர்நோக்கும் இந்திய ஸ்டார்ட் அப் துறை; நாஸ்காம் நம்பிக்கை

0

இந்திய ஸ்டார்ட் அப் துறை எப்படி இருக்கிறது எனும் கேள்வி உங்கள் மனதிலும் இருந்தால், நாஸ்காம் அதற்கான பதிலை அளித்திருக்கிறது. நாஸ்காமின் பதில் உங்களை உற்சாகம் கொள்ள வைக்கும் வகையிலும் அமைந்திருக்கிறது. ஏனெனில், 2018 ல் இந்திய ஸ்டார்ட் அப் துறை வளர்ச்சி கண்டிருப்பதோடு, அடுத்த கட்ட வளர்ச்சியை எதிர்நோக்கியிருப்பதாகவும் நாஸ்காம் கணித்துள்ளது.

உலக ஸ்டார்ட் அப் வரைபடத்தில் இந்தியா முக்கிய இடம் வகிப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். சில ஆண்டுகளுக்கு முன் வெளியான அறிக்கை ஒன்று, இந்தியா உலகின் மூன்றாவது பெரிய ஸ்டார்ட் அப் சூழலாக விளங்குவதாக தெரிவித்தது. அதற்கேற்ப இந்தியாவில் அதிக ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் உருவாக்கப்பட்டன. ஆனால், பல்வேறு காரணங்களினால் 2016-17 ம் ஆண்டு ஸ்டார்ட் அப் துறையில் ஒரு தொய்வு ஏற்பட்டது.

மீண்டும் வளர்ச்சி

இந்நிலையில், 2018 ம் ஆண்டில் இந்திய ஸ்டார்ட் அப் துறை மீண்டு வந்து வளர்ச்சிப்பாதையில் பயணிப்பதாக, மென்பொருள் நிறுவனங்களுக்கான அமைப்பான நாஸ்காம் தெரிவிக்கிறது. ஸ்டார்ட் அப் வளர்ச்சி திட்டங்கள் மற்றும் ஆய்வுகளிலும் கவனம் செலுத்தி வரும் நாஸ்காம் அமைப்பு, 

“இந்திய ஸ்டார்ட் அப் சூழல்- அபிரிமிதமான வளர்ச்சியை நோக்கி’ எனும் பொருள்படும் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இந்திய ஸ்டார்ட் அப் சூழலில் நிலவும் போக்கு, வளர்ச்சி வாய்ப்புகள் குறித்த பல்வேறு முக்கிய அம்சங்களை இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் 7700 வரை புதிய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் நிறுவப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் இந்த அறிக்கை, 

2018 ல் 1200 க்கும் மேற்பட்ட புதிய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் துவக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறது. ஸ்டார்ட் அப் துறையில் சீரான வளர்ச்சி நிகழ்வதை இது உணர்த்துகிறது.

யூனிகார்ன்கள் அதிகரிப்பு

இதில் கவனிக்க வேண்டிய அம்சமாக, 2018 ல் யூனிகார்ன் என சொல்லப்படும் மெகா ஸ்டார்ட் அப்களாக 8 நிறுவனங்கள் உருவாகியிருப்பதையும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. பில்லியன் டாலருக்கு மேல் மதிப்பீடு கொண்ட ஸ்டார்ட் அப்கள் யூனிகார்ன் என அழைக்கப்படுகின்றன. ஸ்டார்ட் அப் வளர்ச்சியில் இந்த வகை மதிப்பீட்டை முக்கிய மைல்கல்லாக கருதலாம்.

அமெரிக்காவில் தான் அதிகபட்சமாக 126 யூனிகார்கள் உள்ளன. இந்தியாவில் 18 யூனிகார்ன்கள் உள்ளன. 2018 ல் மட்டும் 8 இந்திய யூனிகார்ன்கள் உருவாகியிருப்பது வளர்ச்சியில் பெரும் பாய்ச்சலாக கருதலாம். பைஜுஸ், ஜோமேட்டோ, ஃபிரெஷொர்க்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த ஆண்டு யூனிகார்ன் அந்தஸ்தை பெற்றுள்ளன.

ஸ்டார்ட் அப் வளர்ச்சி பற்றி பேசும் போது நிதி திரட்டும் ஆற்றல் முக்கிய அம்சமாகிறது. 2018ல், வளர்ந்த நிலையில் இந்திய ஸ்டார்ட் அப்கள் நிதி திரட்டுவது 250 சதவீதம் அதிகரித்திருப்பதாக நாஸ்காம் அறிக்கை தெரிவிக்கிறது. மொத்த நிதி 2017ல் 2 பில்லியன் டாலரில் இருந்து இந்த ஆண்டு 4.2 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. ஆனால் சீட் பண்டிங் எனப்படும் துவக்க நிலை நிதி, 191 மில்லியன் டாலரிலிருந்து 151 மில்லியன் டாலராக சரிந்துள்ளது.

2018ல் ஸ்டார்ட் அப் உலகில் கையகப்படுத்தலும் பெரிய அளவில் நிகழ்ந்துள்ளன. ஃபின் டெக் எனப்படும் நிதி நுட்பம், இணைய சந்தை மாதிரி, மருத்துவ நுட்பம் மற்றும் வர்த்தக மென்பொருள் ஆகிய துறைகளில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அதிக வளர்ச்சி கண்டுள்ளன. நிதி நுட்பம் மற்றும் வர்த்தக மென்பொருள் துறை அதிக அளவில் வளர்ச்சி கண்டுள்ளன.

டேட்டா அனலிடிக்ஸ், இண்டெர்நெட் ஆப் திங்ஸ், செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) , பிளாக்செயின் ஆகிய நுட்பங்கள் சார்ந்த நிறுவனங்கள் அதிக வளர்ச்சி காணும் சூழல் உள்ளது.

இந்தியா மீது கவனம்

இந்தியா தொடர்ந்து உலகின் மூன்றாவது மிகப்பெரிய ஸ்டார்ட் அப் சூழலாக உள்ளது. இந்திய நகரங்களில் பெங்களூரு முன்னிலை வகிக்கிறது. சர்வதேச அளவில் பெங்களூரு மூன்றாவது இடம் வகிக்கிறது. மேலும், இந்திய ஸ்டார்ட் அப்கள் சர்வதேச அளவில் விரிவாக்கம் செய்வதிலும் கவனம் செலுத்தி வருகின்றன. உலக அளவிலான ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் இந்தியாவை நாடி வரத்துவங்கியுள்ளன.

இந்திய ஸ்டார்ட் அப் சூழலில், மற்றொரு முக்கிய அம்சத்தையும் நாஸ்காம் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. ஸ்டார்ட் அப் நிறுவனர்களாக செயல்பட்டு வெற்றிகரமான தொழில்முனைவோராக உருவாகி இருக்கும் பலர், முதலீட்டாளர்களாக மாறி புதிய ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஆதரிக்கத்துவங்கியுள்ளனர். அந்த வகையில் பியூப்பில் குருப் நிறுவனர் அனூபம் மிட்டல், ஃபிளிப்கார்ட் இணை நிறுவனர் பின்னி பன்சல், பிரிசார்ஜ் நிறுனர் குனால் ஷா, பிரெஷ் டெஸ்க் நிறுவனர் கிரிஷ் மாத்ரூபூதம் உள்ளிட்டோர் முன்னிலை வகிக்கின்றனர்.

பெங்களூரு, தில்லி உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு வெளியே சிறு நகரங்களில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் வளரத் துவங்கியிருப்பதோடு, பெண்களின் பங்கேற்பும் அதிகரிக்கத்துவங்கியுள்ளது. 2018 ல் பெண் தொழில்முனைவோர் எண்ணிக்கை 14 சதவீதம் அதிகரித்துள்ளது.

ஸ்டார்ட் அப்களுக்கான வர்த்தக மாதிரியை பொருத்தவரை உலகலாவிய புதுமை, வாடகை பொருளாதாரம், ஆன் டிமாண்ட் சேவை மற்றும் வர்த்தக சந்தா மாதிரி முக்கியமாக அமைந்துள்ளன.

கொள்முதல் செயல்முறை மற்றும் கொள்கைகள் வடிவில் அரசின் ஆதரவு, ஆரம்ப நிலை ஸ்டார்ட் அப்கள் சர்வதேச முதலீட்டை அணுக அதிக வசதி, ஸ்டார்ட் அப்களில் துறை சார்ந்த மையங்கள் உருவாக்கம் ஆகிய நடவடிக்களை ஸ்டார்ட் அப் வளர்ச்சிக்கு மேலும் உதவும் என்று நாஸ்காம் அறிக்கை தெரிவிக்கிறது.

”நாட்டில் ஸ்டார்ட் அப் சூழல் புதுமையாக்கலின் இருப்பிடமாக விளங்குவதாகவும், உள்ளூர் பிரச்சனைகளுக்கான தீர்வுகளை நிறுவனங்கள் உருவாக்கி வருவது இதற்கான காரணமாக இருப்பதாகவும் நாஸ்காம் தலைவர் தேப்ஜானி கோஷ் கூறியுள்ளார்.

”பரந்த அளவிலான சந்தையை அடைய சரியான வழிகாட்டுதல் மற்றும் நிதியை நாடும் புதிய எண்ணங்களுடன் இந்தியா சுடர்விடுவதாகவும்,” அவர் தெரிவித்துள்ளார்.

நாஸ்காம் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:

• 2018 ல் 1200 க்கும் மேற்பட்ட புதிய ஸ்டார்ட் அப்கள் துவக்கம்

• 2018 ல் 8 புதிய யூனிகார்ன்கள் உருவாக்கம். ஒரே ஆண்டில் உலக அளவில் அதிகம்.

• மேம்பட்ட நிலையில் நிதி பெறுவது அதிகரிப்பு

• 40,000 புதிய நேரடி வேலை வாய்ப்புகள்

• சர்வதேச அளவில் ஸ்டார்ட் அப் உருவாக்க நகரங்களில் பெங்களூரு மூன்றாவது இடம்

• இரண்டாம் கட்ட நகரங்களில் 40 சதவீத ஸ்டார்ட் அப் உருவாக்கம்.

• பெண் தொழில்முனைவோர் எண்ணிக்கை அதிகரிப்பு

• டேட்டா அனலிடிக்ஸ், பிளாக்செயின், ஏ.ஐ. உள்ளிட்ட துறைகளில் ஆர்வம்

தகவல் உதவி: நாஸ்காம் 2018 அறிக்கை