பெண்கள்தான் மாற்றத்துக்கான கட்டியக்காரர்கள்! ஆனால், கோபம் இதற்கான முதல் படியா?

1

பெண்களின் பிரச்சனைகளைப் பற்றி பேசவோ, கேட்கவோ சிந்திக்கவோக் கூடத் தயங்கும் இன்றைய இந்தியா, காளியை கூவி அழைக்கின்றது. இந்து மதத்தைப் பின்பற்றுவோர், தீமைகளை அழிக்கும் சக்தியின் வடிவமாக விளங்கும் காளியை பிரார்த்தனை செய்கின்றனர்!

இந்தக் கோபக்கார பெண் தெய்வமான காளி, இந்த உலகை மாற்றியமைக்கும் உந்து சக்தியாக, பெண்களை பின்னுக்குத் தள்ளும் தீய சக்திகளை தனது ஆற்றலைக் கொண்டு அடித்து விரட்டுவதில் முன்னணியாக விளங்குகின்றாள்.

இந்த ஏழு பெண்களும் பான் நளினின் ‘ஆங்ரி இண்டியன் காடெஸஸ்’ 'Angry Indian Godesses' (கோபக்கார இந்தியப் பெண் தெய்வங்கள்) படத்தில் சமூகத்தின் பார்வையை கேள்வி எழுப்புகின்றனர். அது தம்மையும் தமது வாழ்வையும் மாற்றுவதைக் கண்கூடாக கவனிக்கின்றனர்.

ஒன்றாக வசித்துவரும் இந்த ஏழு தோழிகளைச் சுற்றி நகரும் திரைப்படத்தில் தம்மைத்தாமே தெரிந்துகொள்வதையும், தமது வாழ்வைக் கொண்டாடுவதையும் மையமாகக் கொண்டு வெளிவந்துள்ளது. மேலும், இந்தப் பெண்களின் ஒருங்கிணைந்த செயல்பாடு தம்மை மட்டுமின்றி, தம்மைச் சுற்றிய அனைத்திலும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்கிற நம்பிக்கையை அளிக்கின்ற வகையில் படமாக்கியுள்ளனர்.

கோபக்கார இந்தியப் பெண் கடவுள்களாக உள்ள இந்த ஏழு பெண்கள் தாயாகவும், மனைவியாகவும், சகோதரியாகவும், தோழியாகவும், காதலியாகவும் தோன்றியுள்ளனர். அவர்களுள் ஐவரிடம் தமது வாழ்வைப் பற்றியும், தமது கதாப்பாத்திரங்களைப் பற்றியும் பெண்ணாக இருப்பதைப்பற்றியும், எது அவர்களைப் கோபப்படுத்துகின்றது எனவும் கேட்டோம். அந்த உரையாடலில் இருந்து சிறு துளி உங்களுக்காக:

சந்தியா மிருதுல் - ‘சு’ சுரஞ்சனா

பாலிவுட்டின் திறன்மிக்க நடிகைகளில் ஒருவரான சந்தியா ‘ஆங்ரி இண்டியன் காடெஸஸ்’ படத்தில் ‘சு’ என்கிற சுரஞ்சனா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிரச்சனையான திருமண பந்தத்தில் உள்ள கார்ப்பரேட் நிறுவன ஊழியராக தோன்றியுள்ள இவர் ஆறு வயதுக் குழந்தையின் தாயாகவும் தனது கதாபாத்திரத்தில் மிளிர்கின்றார்.

சந்தியா, ‘பணியையும் வாழ்க்கையும் சமமாக கவனிக்க அவதிப்படும் பெண்களின் நிலையை தனது வாழ்வுடன் தொடர்புப்படுத்திப் பார்க்க முடிவதாக’ குறிப்பிட்டுள்ளார். “எனது கதாப்பாத்திரத்தைப் போலவே நானும் வாழ்க்கையிலும், பணியிலும் சமநிலையை அடைய முயற்ச்சிப்பதுண்டு. என்னுடைய தோழிகள் சிலர் இன்றளவும், குழந்தை பிறந்த பின்னரும் பணியைத் தொடர்ந்தாலும் குழந்தையை விட அதிகமாக வேலையையே விரும்புகின்றோமோ? என்ற குற்ற உணர்வுடனேயே வலம் வருகின்றனர். இன்னும் சிலரோ, குழந்தையால் நல்ல பணியை இழந்துவிட்ட விரக்தியில் உள்ளனர். ஆகவே, இவை இரண்டிலுமே சமநிலையை எட்டுவது கடினம்தான்.”

சந்தியாவைப் பொறுத்த வரை வலிமையும், பலவீனமும் ஒன்றுபோல் கை கோர்த்தே செல்கின்றன. “பலவீனமான பெண் என்று கருதப்படுபவரும், எல்லையில்லா வலிமையை காண்பிக்க வல்லவர்தான்,” என்கிறார். அத்துடன் மனத் தொந்தரவு தொடர்பாக ஒரு ஆழமான கருத்தையும் அவர் வெளியிட்டுள்ளார். அதாவது, மனதளவில் தொந்தரவுக்கு உள்ளாகும் பெண்களின் நிலை எளிதில் கண்டறிய முடியாததாக உள்ளது. இது தொடர்பான விழிப்புணர்வை முன்னெடுத்து நடத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘ஆங்ரி இண்டியன் காடெஸஸ்’ திரைப்படம் ஆண் சமுதாயத்தைச் சாடுவது அல்ல எனவும், ஆனால், பெண்களின் குரலை வெளிப்படுத்தும் முயற்சி எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் சக பெண்களிடம் தமது சப்தத்தைக் கேட்கச் செய்யவேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். “நீங்கள் யார் என்பதை வெளிக்காட்டத் தயங்காதீர்! அடுத்தவர்களுக்காக உங்களை விட்டுக்கொடுக்காதீர்! உண்ண விரும்புவதை உட்கொள்ளுங்கள்! விரும்பும் உடையை அணியுங்கள்! உங்களுக்காக வாழுங்கள்.”

இவரிடம் பெண் தெய்வங்களின் கோபத்துக்கான காரணத்தைக் கேட்டபோது, “கோபப்பட அதிகப்படியான காரணங்கள் உள்ளன. பெண் தெய்வங்களுக்கும் மாபெரும் கடமையுள்ளது. குரலெழுப்பப்படாத விஷயங்களை உரக்க தெரிவிக்க வேண்டியுள்ளது,” என்றார்.

அனுஷ்கா மன்சந்தா - ‘மேட்’ மதுரீட்டா

அனுஷ்கா ஒரு பிராணிகள் பிரியை, பெரும்பாலான பிராணிகளுக்கான அரசு சாரா நல அமைப்புகளுக்கு உதவி வருகின்றார். அனுஷ்கா பெண்கள் இசைக்குழுவான ‘விவா’-வின் பாடகியும், பிரபல தொலைக்காட்சியான சேனல் ‘வீ’-யின் வீடியோ தொகுப்பாளராகவும் நம் மனதில் நீங்கா இடம்பெற்றவர். பல்வேறு புகழ்பெற்ற பாலிவுட் பாடல்களின் பின்னணியில் இவரது குரல் உள்ளது. “சுதந்திரமாக எனது கருத்துக்களை வெளியிடுவதற்கும், எனது அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையில் அதிர்ஷ்டவசமான குடும்பத்தில் பிறந்துள்ளேன்,” என்றார்.

கல்வியே பெண்கள் மேம்பாட்டுக்கான சாவி என நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார். கல்விச் செல்வத்தைப் பெற்ற பெண்கள் தமது வாழ்க்கையில் எந்த தூரத்துக்கும் செல்ல முடியும் என்ற அவர் மேலும், திரைப்படத்தில் வரும் ஒரு வாக்கியத்தை எடுத்துக்காட்டாக குறிப்பிட்டார். “பெண்கள், சக பெண்களுக்கு ஆதரவாக நிற்க தயங்குவது துரதிஷ்டவசமானது. இந்த பண்பை நாம் மாற்றிக்கொள்ள வேண்டும்.

தனது நிஜ வாழ்க்கையில் நேர்மறை அணுகுமுறையுடன் பழகும் அனுஷ்க்கா தனது கதாப்பாத்திரத்தைப்போல எடுத்ததெற்கெல்லாம் சண்டைக்கு போகாதவர். ஆனால், அவரது கதாப்பாத்திரமோ ஆக்ரோஷமாய் உடனடியாக சண்டைக்குப் போவதாக உள்ளது. “நான் நிஜத்தில் மதுரீட்டா இல்லையென்றாலும், அந்தக் கதாப்பாத்திரமாக நடித்தது ஒருவகையில் விடுவிப்பாக இருந்தது” என குறும்புச் சிரிப்புடன் தெரிவித்தார். மேட் கதாப்பாத்திரம் அவ்வப்போது தவறான பாதைக்கு சென்றாலும், நிஜ வாழ்க்கையில் தான் நேர்மறையாகவே இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெண் தெய்வங்களின் கோபத்துக்கான காரணம் கேட்டபோது, “இதைத் தவிர வேறு வழியேயில்லை. பெண்களுக்கு இந்த நாட்டில் என்ன நிகழ்கின்றது எனப் பார்க்கின்றீர்களா? பெண்களின் பிரச்சனைக்கு சமூகம் மரத்துப்போய்விட்டது! இவற்றை அனைவரையும் உணர வைப்பதுதான் முதல்வழி; இதற்குப் பாராமுகமாக இருக்கும் சமூகத்தின் மீது கோபத்தை இந்தப் பெண் தெய்வங்கள் காண்பிக்க வேண்டியுள்ளது,” என்றார்.

பவ்லீன் குஜ்ரால் - பேம் என்கிற பமீலா ஜெய்ஸ்வால்

இன்றைய மங்கையென தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் பல்வீன் ஒரு அறிவிப்பாளராக, நடிகையாக, மாடலாக, நவநாகரீக ஆடை மற்றும் அணிகலன்களை வடிவமைப்பவராக திறம்பட செயலாற்றி வருகின்றார். தனக்கு விருப்பமானவற்றை தானே பெற்றுக்கொள்ள உழைக்கும் இவர் “பெண் தனக்கான மதிப்பை நிலை நிறுத்திக்கொள்ள வேண்டும். ஒரு கணினிப் பொறியாளராக, வழக்கறிஞராக அல்லது திரைப்படங்களில் பணியாற்றும் பெண்கள் தமது முடிவுகளுக்காக மதிக்கப்பட வேண்டும்,” என்கிறார் .

இந்தத் திரைப்படத்தில் டெல்லி நகரப் பெண்ணாக இயல்பாக தோன்றியிருக்கின்றார் பமீலா ஜெய்ஸ்வால். அடக்கமான பெண்ணாக வாழ்க்கைக்குள் சிக்கித் தவிப்பவராக திரையில் தோன்றியுள்ள இவரது வாழ்க்கை ஆதரவான குடும்பத்தினரால் சூழப்பட்டுள்ளது.

பவ்லீனைப் பொருத்தமட்டில், “இத்திரைப்படம் புதிய கருத்து எதையும் புகுத்தவில்லை. ஆனால், இதைப் பார்ப்போர் தமக்கான கருத்தையும், மதிப்பையும் தானே தேடும் வகையில் உள்ளதாக இருக்கின்றது,” என குறிப்பிட்டுள்ளார். அத்துடன், “இத்திரைப்படம் ஆண்களைப் போல பெண்கள் ஒன்றுசேரும்போது உண்டாகும் மகிழ்ச்சியைப் பற்றியும், வாழ்வைக் கொண்டாடுவதைப் பற்றியுமானது. தமக்கான உலகைத் தானே படைக்கும் சக்தி இந்தக் கூட்டணிக்கு உண்டு” என்றார். 

பெண் தெய்வங்களின் கோபத்துக்கு காரணமாக, “நாம் வெகுகாலமாக அனைத்தையும் பொருத்துக்கொண்டோம். இதன் உச்சகட்டம்தான் கோபம்” என்று குறிப்பிட்டார்.

ராஜ்ஸ்ரீ தேஷ்பாண்டே - லக்ஷ்மி

திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சிகளின்  விளம்பரத்துறையில் பணியாற்றி வந்த ராஜ்ஸ்ரீ, “வலிமையாக நின்று தனக்கானவற்றை அடைந்தவர். பயமின்றி போராடும் துணிச்சல் கொண்ட தான், உணர்ச்சிவசப்படுபவரும் கூட” எனத் தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறார்.

இந்தத் திரைப்படத்தைப் பற்றி கேட்டபோது, “உண்மையாக உலவும் பலரும் இந்தக் கதாப்பாத்திரங்களாக இதில் உள்ளன. உங்கள் வட்டாரத்தில் உள்ள சிலரை இந்தப் பாத்திரங்கள் நிச்சயம் நினைவூட்டும். இந்தப் படத்தின் மூலம் நாங்கள் சமூகத்தின் மாற்றமாக இருக்க எண்ணுகின்றோம். அத்துடன், பெண்கள் தமது சக்தியை உணர்ந்துகொண்டு அதற்கு உருவம் கொடுக்கத் தயங்கக்கூடாது என்ற எண்ணத்தையும் விதைக்க விரும்புகின்றோம்.

ராஜ்ஸ்ரீ சக பெண்களை தாமாகவே இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

சாரா-ஜேன் டியாஸ் - ஃப்ரீடா

சாரா சேனல் ‘வீ’-யின் முன்னாள் வீடியோ தொகுப்பாளினியாகவும் 2007-ம் ஆண்டின் ‘மிஸ் இந்தியா’ பட்டத்தையும் வென்றவர். “நானும் ஃப்ரீடாவும், எத்தகைய ஒற்றுமைகளோடு தோன்றுகின்றோமோ, அவ்வளவு வித்தியாசங்களையும் பெற்றுள்ளோம். மேலும், இந்த வித்தியாசங்களைப் பற்றி தெரிந்துகொள்ள முற்படுவது சுவாரஸ்யமாக உள்ளதாக,” அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒற்றுமைகளைப் பற்றிக் குறிப்பிடும்போது, “நாங்கள் இருவருவருமே திரும்பத் திரும்ப எரிச்சலூட்டாதவரை அமைதியானவர்கள் தான்! நாங்கள் இருவருமே அனைவரையும் மற்றும் அனைத்தையும் காதலிக்கும் பண்பு கொண்டவர்கள். அதேப்போல, நாங்கள் இருவருமே உணர்ச்சிகரமானவர்கள்,” என்றார் சாரா.

அனைத்து பெண்களும் இளமையிலேயே தற்காப்பு கலைகளில் ஒன்றை கற்றுக்கொண்டு உடல் ரீதியாக உறுதியாகத் திகழ வேண்டும் என தனது கோரிக்கையை சக பெண்கள் முன் வைத்துள்ளார்.

‘ஆங்ரி இண்டியன் காடெஸஸ்’, பெண்கள் தமது குரலை எழுப்புவதின் அத்தியாவசியத்தை எடுத்துக்கூறுவதில் தனது முதல் படியை தொடங்கி வைத்துள்ளது.

இது நம்மையும் நமது குரலையும் வெளிப்படுத்தி உலகை கேட்கச் செய்ய வைக்கவேண்டிய நேரம். நமக்குள் இருக்கும் காளியை வெளிப்படுத்தும் நேரம் வந்துவிட்டது! தயாரா பெண்களே?

ஆக்கம்: தன்வி துபே | தமிழில்: மூகாம்பிகை தேவி