சாலை பள்ளத்தை சரிசெய்யும் இயந்திரம் வடிவமைத்த மாணவர்கள்! 

இளம் புதுமையாளர் விருதை பெற்றுள்ளனர் இம்மாணவர்கள். 

0

ஆந்திரப்பிரதேசத்தின் குண்டூரில் இருக்கும் ’தி கிராஸ்வேர்ட் பள்ளி’யைச் சேர்ந்த மூன்று மாணவ மாணவிகள் அடங்கிய குழு சாலையில் இருக்கும் பள்ளங்களை சரிசெய்ய Pothole Warrior என்கிற எலக்ட்ரானிக் இயந்திரத்தை வடிவமைத்துள்ளது. இதற்காக மதிப்புமிக்க விருதினையும் இக்குழு வென்றுள்ளது.

ஹேமா ஸ்ரீவாணி எஸ், விஷ்ணுதேஜா சிஎச், சுதாம்ஷூ ஜி ஆகியோர் வடிவமைத்த இந்த சாதனம் ஐஐடி கராக்பூரில் இளம் புதுமையாளர் திட்டத்தில் ரன்னர் அப் விருது வென்றுள்ளது.

இந்த திட்டத்திற்காக தங்களது யோசனைகளை முன்வைத்த 2,000 பள்ளிகளில் 24 பள்ளிகளுக்கு மட்டுமே தங்களது செயல்பாட்டு மாதிரியை காட்சிப்படுத்த இந்த கல்வி நிறுவனத்திற்கு வருமாறு அழைப்பு விடப்பட்டதாக கிராஸ்வேர்ட் ஸ்கூல் முதல்வர் கேசவ ரெட்டி ’தி ஹிந்து’விற்கு தெரிவித்தார்.

Pothole Warrior எலக்ட்ரானிக் இயந்திரத்தில் எளிதாக நகர்த்தும் வகையில் சக்கரத்துடன்கூடிய அமைப்பு இணைக்கப்பட்டிருக்கும். இதில் தார் கலவை இருக்கும். அத்துடன் அல்ட்ராசவுண்ட் உணர்கருவிகள், ஆர்டினோ மைக்ரோ கண்ட்ரோலர், சர்வோ மோட்டர் ஆகியவை இந்த அமைப்பின்கீழ் இணைக்கப்பட்டிருக்கும். 

ஒருங்கிணைக்கப்பட்ட உணர்கருவி பள்ளத்தின் அளவுகளை கணக்கிடும். அதன் பிறகு மைக்ரோகண்ட்ரோலர் தரவுகளை திரட்டும். பின்னர் பள்ளத்தில் தேவையான தார் கொட்டப்பட்டு மிதி இயக்கி ரோலர் மூலம் சமன்படுத்தப்படும். தார் வெளியேறும் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சர்வோ மோட்டாரால் இந்த மிதி இயக்கி ரோலரானது கட்டுப்படுத்தப்படும் என ’தி பெட்டர் இண்டியா’ தெரிவிக்கிறது.

இளம் புதுமையாளர் திட்டத்திற்கு இந்தப் பள்ளி பரிந்துரைக்கப்படுவது இது இரண்டாவது முறையாகும். மாணவர்களின் படைப்பாற்றலுடன்கூடிய சிந்தனையை ஊக்குவிக்கும் விதத்தில் இப்பள்ளியின் பாடதிட்டம் அமைந்துள்ளது.

சாலையில் இருக்கும் பள்ளங்கள் எப்போதும் பயணிகளுக்கு ஆபத்தானதாகவே இருந்து வருகிறது. இந்த ஆண்டு மத்தியில் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் அறிக்கையின்படி 93,000 உயிரிழப்புகள் மதிப்பிடப்பட்டதாகவும் கடந்த மூன்று ஆண்டுகளில் 25,000 உயிரிழப்புகள் சாலைகளில் உள்ள பள்ளத்தால் ஏற்படுவதாகவும் இண்டியா டுடே தெரிவிக்கிறது.

கட்டுரை : THINK CHANGE INDIA