செய்தித்தாள் விற்பனை முதல் உள்ளூர் மளிகை வரை ஒவ்வொரு வணிகத்திற்கும் ஒரு மினி செயலியை வழங்கும் ‘Goodbox'

சிறு வணிகங்கள் ஆன்லைனில் செயல்பட உதவுகிறது பெங்களூருவைச் சேர்ந்த குட்பாக்ஸ். தனது மினி செயலி மற்றும் மெகா செயலி வாயிலாக வாடிக்கையாளார்களுடன் வணிகர்களை இணைக்கிறது.

2

”என்ன? மற்றொரு செயலி குறித்த விளக்கமா? வேண்டாம்... என்னுடைய பகுதிக்கு அருகிலேயே மளிகை கடை உள்ளது. உங்களுக்காக மற்றொரு செயலியை இணைக்க வேண்டிய அவசியம் என்ன?” என்றார் இந்திரா நகரில் உள்ள ஒரு மளிகை கடையின் வாடிக்கையாளார். இவருக்கு இரண்டு குழந்தைகள்.

அனைத்திற்கும் ஒரு செயலி உருவாகும் இன்றைய சூழலில் அவர் கேட்ட கேள்வி நியாயம்தானே? உலகளவில் 26 சதவீத செயலிகள் நிறுவிய ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே நீக்கப்படுவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்தியா, ப்ரேசில், சீனா, ரஷ்யா போன்ற நாடுகளில் நீக்கல் விகிதம் அதிகமாக காணப்படுகிறது.

”செயலிகள் வசதியானவைதான். ஆனால் உங்களது ஃபோனில் பல செயலிகள் இருக்கும். ஒவ்வொரு முறையும் அனைத்து செயலிகளும் பயன்படுத்தப்படுவதில்லை. எனவே நான் வழக்கமாக பயன்படுத்தும் செயலிகளை மட்டும் வைத்துக்கொண்டாலே வசதியாக இருக்கும்,” 

என்றார் ஏ.கார்த்திக் என்கிற 34 வயது மென்பொருள் ஊழியர்.

வாடிக்கையாளரை இணைப்பது

இதை உறுதிசெய்யும் வகையில் Apsalar-ல் ஒரு கட்டுரை வெளியானது. அதில் இந்தியா, ப்ரேசில், ரஷ்யா, சீனா போன்ற நாடுகளில் காணப்படும் பிரபலமான ஸ்மார்ட்ஃபோன்களில் குறைந்த அளவிலான மெமரி மட்டுமே உள்ளது. இதனால் ஒரு செயலியை சேர்க்க வேண்டுமெனில் மற்றொரு செயலியை நீக்கவேண்டிய நிலை உள்ளது. இன்று வணிகத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் சிறப்பாக செயல்படவும் மேம்படவும் ஆன்லைன் வர்த்தகத்தில் செயல்படவேண்டிய அவசியம் இருப்பதால் இது மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது.

ஆன்லைனில் செயல்படுவதற்கான கட்டணம் அதிகமாக இருப்பதால் இந்தியாவிலுள்ள பல்வேறு ரெஸ்டாரண்ட்களும் மளிகை ஸ்டோர்களும்; Grofers, BigBasket, Swiggy, Zomato போன்ற செயலிகளுடன் இணைந்து கொள்ளவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் ஒருங்கிணைந்த தளத்தை பயன்படுத்தும் எண்ணமும் பலருக்கு உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.

”Grofers போன்ற செயலிகள் எங்களது வணிகம் அதிகம் பேரை சென்றடைய உதவினாலும் வாடிக்கையாளர்கள் குறித்த விவரங்களை அவர்கள் அளிப்பதில்லை. வாடிக்கையாளர்களை சிறப்பாக புரிந்துகொள்ள உதவும் இப்படிப்பட்ட மதிப்புமிக்க தகவல்கள் நமக்கு கிடைப்பதில்லை,” 

என்கிறார் பெங்களூருவிலுள்ள எச்எஸ்ஆர் லேஅவுட்டிலுள்ள Eezykart என்கிற சூப்பர்மார்கெட்டின் உரிமையாளர் ஸ்ரீஹரி ஸ்ரீநிவாசன். இது ஒரு குறிப்பிட்ட நகரில் ஒரு பகுதியிலுள்ள ஒரு வணிகம். இந்தியா முழுவதும் இப்படி பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளோர் தங்களது வாடிக்கையாளர்களுடன் தொடர்பில் இருக்கவும் மொபைல் செயலி வாயிலாக இணைந்திருக்கவும் விரும்புகின்றனர்.

Goodbox குழு
Goodbox குழு

விலையுயர்ந்த வணிகம்

ஒரு செயலியை உருவாக்குவது மலிவான விலையில் சாத்தியமில்லை என்பதால் ஸ்ரீஹரியும் அவரைப் போன்றோரும் ’குட்பாக்ஸ்’ (Goodbox) தேர்வு செய்வதுதான் ஒரே வழி. சிறு வணிகங்கள் ஆன்லைனில் செயல்படவும் வாடிக்கையாளார்களுடன் நேரடியாக தொடர்பில் இருக்கவும் குட்பாக்ஸ் 2015-ம் ஆண்டு நிறுவப்பட்டது.

அவர்களது வளர்ச்சி குறித்து குட்பாக்ஸின் இணை நிறுவனர் மயான்க் பிடவட்கே விவரிக்கையில்,

”எந்த ஒரு வணிகமும் மக்களின் பார்வையில் நிலைத்திருக்கவேண்டும். அதன் வாடிக்கையாளர்களுடன் இணைந்திருப்பதையே வணிகர்கள் விரும்புவார்கள். மற்ற ஒருங்கிணைக்கும் தளங்கள் மக்களின் பார்வையிலிருந்து ஒதுக்கிவிடும். அருகிலிருக்கும் வாடிக்கையாளருக்கு சேவையளிப்பதாக இருந்தால் இடைத்தரகர்களின் தலையீடின்றி தாமாகவே நேரடியாக வாடிக்கையாளருக்கு சேவையளிக்கவே அனைவரும் விரும்புவார்கள்.”

ஒரு வணிகம் அதன் வாடிக்கையாளார்களுடன் நேரடி தொடர்பில் இருக்கவேண்டும். அவர்களுக்குத் தேவையானவற்றை வழங்கவேண்டும். தேவை ஏற்படும்போது வழங்கவேண்டும். அவர்களின் தனிப்பட்ட தேவைக்கேற்ப சேவையளிக்கும் திறன் வேண்டும். எனினும் ஒரு செயலியை உருவாக்குவது விலையுயர்ந்தது. மேலும் இதற்கு அதிக நேரம் செலவிடவேண்டும்.

”பல்வேறு சேனல்களில் செயல்படுவதைப் போன்ற ஒரு தளத்தை நான் உருவாக்க நினைத்தேன். ஆனால் அதற்குத் தேவையான நிதி என்னிடம் இல்லை. செயலி உருவாக்குபவர்களிடம் பேசியபோது தேவையான தொழில்நுட்ப விவரங்கள் அடிப்படையில் 30 லட்சம் முதல் 70 லட்சம் வரை செலவாகும் என்றனர்.” என்றார் ஸ்ரீஹரி.

மினி மற்றும் மெகா செயலி

இந்த பிரச்சனைக்காகவே வணிகங்கள் மினி செயலியை ஐந்து நிமிடத்திற்குள் உருவாக்க உதவுகிறது குட்பாக்ஸ். மேலும் குட்பாக்ஸ் மெகா செயலிக்குள் இருக்கும் ஆயிரக்கணக்கான மினி செயலிகளை, வாடிக்கையாளர்கள் அணுக அனுமதியளிக்கிறது.

வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுக்க பல்வேறு செயலிகளை வழங்குவதுடன் வணிகங்கள் ஆன்லைனில் செயல்படுவதில் இருக்கும் பிரச்சனைகளுக்கும் இது தீர்வளிக்கிறது என்கிறார் மயான்க். வணிகத்தைப் பொருத்தவரை மினி செயலி ஷாப்பிங் மாலில் இருக்கும் ஒரு ஸ்டோர் போன்றது. அதே சமயம் நுகர்வோருக்கு மெகா செயலி மால் போன்றது. இதன் மூலம் அவர்கள் வெவ்வேறு ஸ்டோர்களைப் பார்க்க முடியும்.

மினி செயலி மெசேஜ்கள், தயாரிப்பு அல்லது சேவை குறித்த விவரங்களின் விலைப்பட்டியல், அதனுள்ளேயே அமைக்கப்பட்டிருக்கும் ஆன்லைன் கட்டண வசதி ஆகியவற்றுடன் ஒரு வழக்கமான செயலியைப் போன்றது. இப்படிப்பட்ட வசதிகளைக் கொண்ட தனிப்பட்ட செயலியை உருவாக்கவேண்டுமெனில் லட்சக்கணக்கில் செலவிட நேரிடும்.

”ஆயிரத்தில் ஒரு மடங்கு செலவுடனும் நேரத்துடனும் ஒவ்வொரு வணிகமும் எளிதாக அணுகும் விதத்தில் இந்த தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளோம். தேவை மற்றும் வசதிக்கேற்ப மினி செயலியின் கட்டணம் 3,000 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரை ஆகும்.”

ஆண்டு உரிம கட்டணமாக 3,000 லிருந்து 4,000 ரூபாய்க்குள் செலுத்தி தனக்குத் தேவையான அனைத்தையும் பெற்றுக்கொள்வதாக தெரிவிக்கிறார் ஸ்ரீஹரி. குட்பாக்ஸின் பழமையான வாடிக்கையாளர்களில் ஒருவரான ஸ்ரீஹரி இந்தத் தளத்தின் வளர்ச்சியை கண்ணெதிரே பார்த்தவர்.

வணிகத்தை வளர்ச்சியடையச் செய்தல்

சாட் வசதி, வாடிக்கையாளர் தகவல்களை தெரிந்துகொள்வது, ஆய்வுகள் வாயிலாக அவர்களின் வாங்கும் நடவடிக்கையை புரிந்துகொள்ளுதல், மார்கெட்டிங் வாய்ப்புகள் என அனைத்து விவரங்களையும் இந்த செயலி தற்போது வழங்குகிறது.

ஸ்ரீஹரி குட்பாக்ஸை பயன்படுத்தத் துவங்கியபோது Eezykart 10 சதவீத வாடிக்கையாளர்களைப் பெற உதவியது. இன்று மெகா மற்றும் மினி செயலியுடன் Eezykart தனது 30-40 சதவீத வாடிக்கையாளர்களை குட்பாக்ஸிலிருந்து பெறுகிறது.

”கடந்த ஆறு மாதங்களில் செயலியில் எங்களுக்கு 400க்கும் மேற்பட்டோர் இணைந்தனர். ஆழ்ந்த புரிதல் பயனுள்ளதாக அமைந்தது.” என்றார் ஸ்ரீஹரி.

The Hole in the Wall Café மற்றும் ஷோபா சூப்பர்மார்கெட் போன்றவை குட்பாக்ஸ் மினி செயலியைக் கொண்டிருக்கும் மற்ற வணிகர்களாகும்.

இந்தியாவில் 50-55 மில்லியன் சிறு குறு நிறுவனங்கள் உள்ளன. எனவே உலகின் மிகப்பெரிய சிறு குறு நிறுவன சந்தையில் இந்தியாவும் ஒன்று. இன்றைய சூழலில் வாடிக்கையாளர்களுடன் தொடர்பில் இருக்கவேண்டியது அவசியம் என்பதாலும் வாடிக்கையாளர்கள் வசதியை எதிர்பார்ப்பதாலும் ஒவ்வொரு வணிகமும் சிறப்பாக செயல்பட தொழில்நுட்பம் அவசியமாகிறது.

”இவர்களுக்கு மினி செயலி வாயிலாக தீர்வளிக்க விரும்புகிறோம். இதனால் இவர்கள் ஆன்லைனில் செயல்படும் முக்கிய நிறுவனங்களுடன் போட்டியிட முடியும்.”

வாடிக்கையாளர்கள் தங்களது தேவையை நிறைவேற்றிக்கொள்ள ஒரே தளத்தையே விரும்புகின்றனர். அப்படிப்பட்ட விதத்தில் செயல்பட்டு குட்பாக்ஸ் மெகா செயலி வாடிக்கையாளர்களுக்கு அனைத்து பிரிவுகளையும் ஒன்றிணைத்து வழங்குகிறது. பல்வேறு செயலிகளை பதிவிறக்கும் செய்யவேண்டிய பிரச்சனையை போக்குகிறது குட்பாக்ஸ்.” என்கிறார் மயான்க்.

ஹைப்பர்லோக்கல் உலகிற்கு அப்பால்

தற்போது ஹைப்பர்லோக்கல் சந்தை சிறப்பாக செயல்படவில்லை. Grofers போன்றோர் இரண்டாம் நிலை நகரங்களில் தங்களது நடவடிக்கைகளை நிறுத்திக்கொண்டு ஊழியர்கள் எண்ணிக்கையையும் குறைத்து வருகின்றனர். ஆனால் குட்பாக்ஸ் ஹைப்பர்லோக்கல் நிறுவனம் அல்ல.

தயாரிப்பு வணிகம், உள்ளூர் வணிகம், சேவை வணிகம் என அனைத்திலும் செயல்படுவதாக தெரிவித்தார் மயான்க். ஹைப்பர்லோக்கல் வியாபாரிகள் வாடிக்கையாளர்களின் தேவைகளை விரைவாகவும் சிறப்பான முறையிலும் பூர்த்தி செய்வதால் அவர்கள் எப்போதும் நிலைத்திருப்பார்கள் என்று நம்புகிறார்.

இவர்களுக்கு மாற்றாக செயல்பட முயலும் எந்த ஒரு மிகப்பெரிய ஆன்லைன் ஒருங்கிணைப்பாளரும் இவர்களுடன் போட்டியிட சிரமப்படுவார்கள். இந்த வியாபரிகளுடன் இணைந்து பணிபுரியவேண்டுமே தவிர அவர்களுக்கு எதிராக செயல்படக்கூடாது என்பதே குட்பாக்ஸின் எண்ணம்.

”பெரும்பாலான நிறுவனங்கள் வியாபாரிகளுக்கு மாற்றாக செயல்பட முயன்று தோற்றுப்போனார்கள். எங்களுடைய மாதிரி இப்படிப்பட்டதல்ல. வியாபாரிகளுக்கு மினி செயலி வழங்கி அவர்களுடைய வாடிக்கையாளர்களுக்கு எளிதாக சேவையளிக்க உதவுகிறோம். இந்த இரு பிரிவினரின் நம்பிக்கையின் அடிப்படையிலேயே நாங்கள் இயங்குகிறோம்.”

Nexus நிறுவனத்திடமிருந்து 2.5 மில்லியன் டாலர் நிதி உயர்த்தியுள்ளது குட்பாக்ஸ். மேலும் 2015-ல் ஸ்மார்ட்பாக்கெட் நிறுவனத்தையும் வாங்கியுள்ளது. தற்போது உலகளவில் மேம்பட்ட தயாரிப்பையும் சந்தையையும் உருவாக்குவதில் பணிபுரிந்து வருகிறது குட்பாக்ஸ்.

”எங்களது மினி செயலி வாயிலாக இந்தியாவிலுள்ள வணிகத்திற்கு உதவுவதுதான் எங்களது நோக்கம். மேலும் தயாரிப்பை உலகளவில் செயல்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறோம்.” என்கிறார் மயான்க்.

Goodbox இணையதளம் | மினி செயலி உருவாக்க இங்கே க்ளிக் செய்யவும்

ஆங்கில் கட்டுரையாளர் : சிந்து காஷ்யாப்