வீடு, நிலங்களுக்கு பெண்களை உரிமையாளராகக் கொண்ட குற்றமில்லா, தீயப்பழக்கமில்லா இந்திய கிராமத்தை அறீவிர்களா?

0

நாம் எல்லாரும் ஒருவித நம்பிக்கைகளுடன் வாழ்ந்தே பழக்கப்பட்டுவிட்டோம். பொதுவாக கிராமப்புறங்களில் வாழ்பவர்கள், மாநகரவாசிகளைவிட பின்தங்கியவர்கள் என்றே பெரும்பாலானோரால் நம்பப்படுகிறது. ஆனால் மஹாராஷ்டிராவில் உள்ள ஆனந்தவாடி என்ற கிராமம் எல்லாரின் தவறான கண்ணோட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் ஆச்சர்யப்படுத்தி வருகிறது. 

நிலங்கா தாலுக்காவில் உள்ள ஆனந்தவாடி என்ற சிறிய கிராமத்தில் மொத்தம் 635 பேர் வாழ்கின்றனர். சுமார் 165 வீடுகள் மட்டுமே உள்ள இக்கிராமத்தில், எல்லா வீடுகளும் அந்தந்த வீட்டுப் பெண்களின் பெயரில் உள்ளது. இந்த முடிவை அந்த ஊர் கிராம சபை, கிராமத்தைச் சேர்ந்த ஒருவரின் பரிந்துரையின் பேரில் முடிவெடுத்து அமல்படுத்தியது. ஒரு சில கிராமத்தினர் தங்களின் நிலம் மற்றும் விவசாய நிலங்களையும் அவர்களின் வீட்டு பெண்களின் பெயரில் பதிவிட்டுள்ளனர். ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அதன் உரிமையாளராக பெண்களின் பெயரே மாட்டப்பட்டிருக்கும். அவர்களது பெயரோடு போன் எண்ணும் அதில் இடம் பெற்றிருக்கிறது.  

அக்கிராம சபையை சேர்ந்த ந்யானோபா சாமே என்பவர் டைம்ஸ் ஆப் இந்தியாவிடம் கூறுகையில்,

“ஒவ்வொரு தீபாவளிக்கும் பெண் தெய்வம் லஷ்மியை வீட்டுக்கு அழைப்பதுபோல, நாங்கள் எங்கள் வீட்டு லஷ்மிக்கு (மனைவி/மகள்) மரியாதை செலுத்த முடிவெடுத்தோம். ஒருவரை சார்ந்து இருக்கிறோம் என்று பெண்கள் நினைப்பதை மாற்ற விரும்பினோம். வீட்டில் இருப்பதால் தாங்கள் உரிமையாளராக இருக்கமுடியாது என்ற எண்ணத்தை மாற்றி சமூகத்தில் பெண்கள் மீதான மக்களின் பார்வையையும் மாற்ற விரும்பி இதை செய்தோம்.” 

இந்த கிராமத்தில் 15 ஆண்டுகளாக எந்த ஒரு குற்ற நடவடிக்கையும் நடந்தேறியதில்லை. ‘பிரச்சனையில்லா கிராம திட்டத்தின் கீழ் சிறந்த கிராமம் என்ற விருதை இவர்கள் பெற்றுள்ளனர். இதோடு நின்றுவிடாமல், பல நலப்பணிகளையும் கிராம மக்கள் செய்து வருகின்றனர். உறுப்பு தானம் செய்ய இவர்கள் பதிவிட்டு உள்ளனர். பலர், தங்களின் உடலை இறந்தபின் மருத்துவ ஆராய்ச்சிக்காக தானம் அளிப்பதற்கும் ஒப்புக் கொண்டுள்ளனர். உறுப்பு தானத்தை தாண்டி, உடல் ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். 

கிராமவாசி ஒருவர் கூறும்போது,

“எங்கள் கிராமத்தை சேர்ந்த 410 பேர் தங்களின் உறுப்பு தானம் செய்ய கையெழுத்திட்டு உள்ளனர். கிராமவாசிகள் தங்களின் ஆரோக்கியத்துக்கும் முக்கியத்தும் கொடுக்க ஆரம்பித்துள்ளனர். புகைப்பிடித்தல், புகையிலை பழக்கம், குடிப்பழக்கம் எல்லாம் எங்கள் கிராமத்தில் கடுமையாக தடைச் செய்யப்பட்டுள்ளது,” என்றார். 

ஆனந்த்வாடி கிராம மக்களின் முற்போக்கு சிந்தனையுடன் கூடிய வளர்ச்சிப் பாதையும், ஆணதிக்க சமூகத்தின் பார்வையை மாற்றியமைக்க அவர்கள் எடுத்துள்ள செயல்பாடுகளும் மற்ற இந்திய நகரங்களுக்கும், கிராமங்களுக்கும் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. இவர்களின் அணுகுமுறை குற்றங்கள் இல்லா, மதிப்புடன் கூடிய சமூகத்தை உருவாக்கமுடியும் என்று நிரூபித்து இந்தியர்களை பெருமைப்பட வைத்துள்ளது. 

கட்டுரை: Think Change India