கல்லூரிக்குச் செல்லாமல் மில்லியன் டாலர் நிறுவன சிஇஒ ஆன சுரேஷ் சம்பந்தம் பகிரும் வாழ்க்கைப் பாடம்!

5

வெற்றிகரமான தொழில்முனைவோர்கள் பெரும்பாலும் சமூகத்தின் உயர் மட்டத்தைச் சேர்ந்தவர்களாகவே இருப்பார்கள். பலரின் தந்தை பெரிய தொழிலதிபராகவோ அல்லது குடும்பத் தொழிலை பல தலைமுறைகளாகச் செய்துவரும் பரம்பரை பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவராகவும் இருப்பார்கள். சிறப்பான தொடர்புகளும், ஒருங்கிணைப்பு இவர்களுக்கு இருக்கும். மூலதனம் என்பது இவர்களுக்கு பிரச்சனையாகவே இருக்காது. மேலை நாடுகளுக்குச் சென்று பிரபல கல்லூரியில் பட்டப்படிப்பு  முடித்திருப்பார்கள்.

ஆனால் சிஇஓ ஜினோம் ப்ராஜெக்ட் ஆய்வாளர்கள் ஆயிரக்கணக்கான சிஇஓ-க்களிடையே ஆய்வு மேற்கொண்டதில் எட்டு சதவீதத்தினர் கல்லூரி படிப்பை முடிக்கவில்லை என்கிற தகவலை தெரிவித்தனர். இந்த சிஇஓ-க்கள் அவர்களது குழு உறுப்பினர்களால் பெரிதும்  மதிக்கப்படுகின்றனர். 

இன்றைய காலகட்டத்தில் வெற்றி தொழில்முனைவராக உலக அளவில் இருக்கும் பலரும் கூட பள்ளி அல்லது கல்லூரி படிப்பை முடிக்காதவர்களாக, பாதியில் கல்வியை விட்டு, தொழில் பின்னணி இல்லாதவர்களாகவும் இருப்பதை பார்க்கின்றோம். ஸ்டீவ் ஜாப்ஸ் முதல் பில் கேட்ஸ், ஃபேஸ்புக் மார்க் ஜுக்கர்பர்க், உபெர் நிறுவனர் டிராவிஸ் கலானிக், மைக்கேல் டெல் என்று பல முன்னணி வெற்றி தொழில்முனைவர்கள் அனைவருமே கல்லூரி படிப்பை பாதியில் விட்டவர்களாக இருக்கின்றனர். தங்களது சுய உழைப்பு மற்றும் பேரார்வத்தின் காரணமாகவே இவர்கள் நிறுவனம் தொடங்கி பல சவால்களை கண்டும் இன்று பலருக்கு முன்மாதிரியான வெற்றியாளர்களாக உலகில் இருக்கின்றனர். 

இதே போன்று பின்னணி பெரிதும் இல்லாது, கல்லூரிக்கே செல்லாது மில்லியன் டாலர் நிறுவனத்தை கட்டமைத்துள்ள சுரேஷ் சம்பந்தம் தனது அனுபவத்தை ப்ளாக் வடிவில் பகிர்ந்துள்ளார். சுரேஷ் KiSSFLOW எனும் SaaS அடிப்படையிலான தொழில்நுட்ப மேம்பாட்டு நிறுவனத்தின் சிஇஒ மற்றும் OrangeScape நிறுவனர். 

அவர் எழுதியதில் இருந்து...

வெற்றிகரமான நிறுவனத்தை உருவாக்க பாரம்பரிய வழி இருந்தாலும் அதை அப்படியே பின்பற்றவேண்டிய அவசியம் இல்லை என்பதை என்னுடைய அனுபவத்திலிருந்து கூறுகிறேன். நான் பல மில்லியன் டாலர் வருவாய் ஈட்டும் நிறுவனத்தை கட்டமைத்துள்ளேன். நான் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவன். நான் கல்லூரிக்குச் சென்றதில்லை.

எனக்கு 17 வயதிருக்கும்போது என்னுடைய அப்பா நான் பொறியியல் படிப்பை மேற்கொள்வதற்கு பதிலாக அவரது வணிகத்தை நடத்துவதற்கு உதவவேண்டும் என்றார். அந்த முடிவுதான் என்னை ஒரு வெற்றிகரமான தொழில்முனைவர் ஆக்கியது. ஏனெனில் என்னால் வகுப்பறையில் கற்றுக்கொள்ள முடியாத பல விஷயங்களைக் கற்றுக்கொள்ள எனக்கு வாய்ப்பு கிடைத்தது.

வகுப்பறைப் பாடத்தைவிட அனுபவ பாடமே சிறந்தது 

வகுப்பறை பாடங்களைக் காட்டிலும் அனுபவமே சிறந்தது கல்லூரிப் படிப்பை மேற்கொள்ள வேண்டாம் என தீர்மானித்ததும் ஒரு சிறிய கல்வி நிறுவனத்தின் கம்ப்யூட்டர் ப்ரோக்ராமிங் வகுப்பிற்கு செல்ல ஆரம்பித்தேன். அது எனக்குப் பிடித்துப்போனது. 20 டாலர் கொடுத்து ஒரு ப்ரோக்ராமிங் புத்தகத்தை வாங்கினேன். பாடத்தை முடித்ததும் நான்கு பார்ட்னர்களுடன் இணைந்து கம்ப்யூட்டர் பயிற்சி மையத்தைத் துவங்க திட்டமிட்டேன்.

கல்லூரிகளில் மாணவர்களுக்கு நிஜ உலக கருத்துக்களை அணுக முடியாத செயற்கையான ஒரு சூழலே உருவாக்கப்படுகிறது. ஆனால் என்னுடைய பயிற்சி மையத்தில் ப்ரோக்ராம்கள் உருவாக்குவதிலும் உண்மையான சிக்கல்களை தீர்ப்பதிலும் எல்லையற்ற அனுபவம்  கிடைத்தது. ஒருவேளை நான் பல்கலைக்கழகத்தில் கணிணி அறிவியல் படித்திருந்தால் எனக்கு ஒதுக்கப்பட்ட பணியை மட்டும் முடித்திருப்பேன். என்னுடைய முழுமையான திறனை  உணர்ந்திருக்கமாட்டேன்.

பொறியியல் பட்டப்படிப்பு இல்லாமல் தொழில்நுட்பத் துறையில் பணி தேடுவது மிகப்பெரிய சவாலாக இருந்தது. இறுதியில் ஹெச்பி நிறுவனத்தில் பணி கிடைத்தது. எளிதாக தீர்வு காண முடியாத பிரச்சனைகளில் பணிபுரிந்து தீர்வுகாண எனக்கென ஒரு தனித்திறன்  இருந்ததை உணர்ந்தேன்.

கல்லூரி பாடத்திட்டத்தை நான் பயிலாத காரணத்தால் அந்த பிரச்சனைகளின் ஆழம் வரை சென்று ஆய்வு செய்து அறிவை மேம்படுத்திக்கொள்ள முடிந்தது. இதில் சில பகுதிகள் என்னுடைய வருங்கால வணிகத்திற்கு அடித்தளமாகவே அமைந்தது.

பட்டப்படிப்பு இன்றி வெற்றியடைவது எப்படி?

என்னுடைய தொழில்முனைவுப் பயணத்தில் நேரடியாக களத்திலேயே நான் அதிகம் கற்றேன். நீங்கள் கல்லூரிப் படிப்பை மேற்கொள்ளாமல் நேரடியாக சுயமாக செயலில் ஈடுபட விரும்பினால் வருங்காலத்திற்கான வலுவான அடித்தளத்தை உருவாக்க இந்த  வழிமுறைகளை பின்பற்றலாம்.

1. தேர்விற்காக படிக்காதீர்கள் – ஆழமாக ஈடுபடுங்கள் : பெரும்பாலான கல்லூரிகளில் உள்ள மாணவர்கள் தேர்வில் தேர்ச்சி பெற்றால் வகுப்பில் தேர்ச்சி பெற்றதாக கருதுகின்றனர். எனவே தேர்விற்கு பரிந்துரைக்கப்படாத பாடங்களை அவர்கள் ஒரு பொருட்டாகவே  கருதுவதில்லை. என்னுடன் பணியாற்றிய பலரிடம் இத்தகைய  அணுகுமுறை இருந்ததை கவனித்துள்ளேன். 

பதிவி உயர்வு கிடைக்கவோ அல்லது பணியில் இருந்து வெளியேற்றப்படாமல் இருக்கவோ மிகக்குறைவான முயற்சியையே எடுப்பார்கள். ஆனால்  வணிகத்தில் பிரச்சனைகள் எழும்போது அதற்கான தீர்வுகாண்பதற்கு ஆழ்ந்து அறிவு அவசியம்.

தொழில்முனைவோர் மற்றும் முதலீட்டாளரான ஜேம்ஸ் அல்டுச்சர் சிஎன்பிசி உடனான நேர்காணலில் குறிப்பிடுகையில்,

”பிரபலமான கார்னெல் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருப்பினும் அவருக்கு முதல் பணி கிடைத்தபோது அந்தப் பணிக்குத் தேவையான திறன்களைக் கற்றறியாததால் இரண்டு மாத ப்ரோக்ராமிங் வகுப்பிற்கு செல்ல வேண்டியிருந்தது,” என்றார்.

கல்லூரி பாடங்கள் வாயிலாக ஆழமில்லாத அறிவைப் பெறுவதைக் காட்டிலும் உங்களுக்கு விருப்பம் உள்ள துறைக்குத் தொடர்பான திறன்கள் அடைவதில் நான்காண்டுவது செலவிடுவதே சிறந்தது என்கிறார் அல்டுச்சர். தொழில்முனைவோர் ஆக விரும்புவோர்  கல்லூரி, புத்தகம், ஆன்லைன் பயிற்சிகள் போன்றவற்றிற்கு பணத்தை செலவிடுவதற்கு பதிலாக அவர்கள் இலக்காகக் கொண்டிருக்கும் துறையின் செயல்பாடுகள் குறித்து ஆலோசகர்களிடம் கற்றறிவதே சிறந்தது. அவர்கள் நிபுணத்துவம் பெற விரும்பும் பாடம் குறித்து ஆழமாக அறிந்துகொள்வதில் கவனம் செலுத்தவேண்டும்.

2. தனிநபருக்கும் மதிப்பளித்து குழு மீது நம்பிக்கை வைக்கலாம் : கல்லூரியில் வெற்றியடைவது என்பது ஒரு தனிநபர் முயற்சியாகும். தனிப்பட்ட முறையில் பாடங்களை படித்துத் தேர்வெழுதி பட்டம் வாங்குவீர்கள். ஆனால் வணிகத்தைப் பொருத்தவரை குழுவின் தாக்கம் இல்லாமல் தனிநபரை மதிப்பிடுவதற்கான அளவுகோல் இல்லை. நான் என்னுடைய நிறுவனத்தைத் துவங்கியபோது என்னுடைய திறமையான நம்பிக்கையான சக ஊழியர்களுடன் சிறப்பான உறவுமுறையை ஏற்படுத்திக்கொள்வதற்கு முன்னுரிமை அளித்தேன்.

உங்களுக்குத் தேவையான திறன்களை நீங்கள் பெற்றதும் கடினமான சூழல்களில் கைகொடுத்து உங்களது முயற்சிக்கு ஆதரவளிக்கும் ஒரு நம்பகமான குழுவை உருவாக்குவதில் கவனம் செலுத்தவேண்டும்.

குழுவில் உள்ள ஒவ்வொரின் பங்களிப்பும் மதிப்புமிக்கது என்பதையும் ஒவ்வொரு தனிநபரிடமிருந்தும் சம அளவு பங்களிப்பு இருக்கவேண்டும் என்பதையும் குழுவில் இருப்பவர்கள் மனதில் ஆழமாக பதியவைக்க வேண்டும்.

ஹார்வேர்ட் பிசினஸ் ரெவ்யூ ஆய்வின்படி, ஆய்வில் பங்கேற்றவர்களில் 82 சதவீதம் பேர் தலைமைப்பண்பை முக்கிய தொழில்முனைவுத் திறனாகக் கருதுகின்றனர். எனவே உங்கள்  குழுவிற்கு வலுவான தலைமை இருப்பதை உறுதிசெய்யுங்கள்.

உங்களது ஊழியர்களை நிர்வகித்தல், நிறுவன கலாச்சாரத்தை பராமரித்தல், சச்சரவுகளை தீர்த்துவைத்தல், நோக்கத்தை ஊழியர்களிடையே கொண்டு சேர்த்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை முறையாக திட்டமிடுங்கள்.

3. கடினமான பிரச்சனைகளை ஆராய்ந்து தீர்வு காணுங்கள் : ஒரு மென்பொருள் பொறியாளராக நான் விதிகள் அடிப்படையிலான கம்ப்யூட்டிங் முறையை பின்பற்றினேன். இதுவே என்னுடைய சிறப்பம்சமாக மாறி என்னுடைய நிறுவனத்தின் அடித்தளமாக  அமைந்தது.

நான் விதிகள் அடிப்படையிலான கம்ப்யூட்டிங் முறையை கல்லூரியில் பொறியியல் பாடம் வாயிலாக ஆழமாக கற்றிருக்க வாய்ப்பே இல்லை. கடினமான பிரச்சனைகளுக்கு தீர்வு காண பல நேரம் செலவிட்ட பிறகே அதைக் கற்றுக்கொண்டேன்.

என்னுடைய தொழில்முனைவுப் பயணத்தில் கடினமான பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதிலேயே கவனம் செலுத்தினேன். நீங்கள் கடினமான பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டால் நீங்கள் வாடிக்கையாளர்களையே முதலீட்டாளர்களையோ தேடிச் செல்லவேண்டிய அவசியம் இருக்காது. அவர்களே உங்களை அணுகுவார்கள். 

ஆரம்ப நிலை வென்ச்சர் முதலீட்டு நிதி சமீபத்தில் குறைந்துள்ளது. எனவே கடினமான பிரச்சனைகளை சமாளிப்பதில் உங்களது நேரத்தை செலவிடுங்கள். உங்களது செயல்முறையை மேம்படுத்தற்கும் ப்ராடக்ட் அல்லது சேவையை உருவாக்குவதிலும் கவனம் செலுத்துங்கள். அவ்வாறு செய்தால் வாடிக்கையாளர்களும் முதலீட்டாளர்களும் உங்கள் நிறுவனத்தால் ஈர்க்கப்படுவார்கள்.

நீங்கள் உங்களது பயணத்தை துவங்கும் இடமோ அல்லது உங்களது பாதையோ இறுதி முடிவை தீர்மானிக்கக்கூடாது. உங்களுக்காக பகிர்ந்துகொள்ளப்பட்ட குறிப்புகளையும் அனுபவங்களையும் கொண்டு உங்களது வெற்றிப்பாதையை நீங்களே உருவாக்குங்கள்.

(பொறுப்புத்துறப்பு: சுரேஷ் சம்பந்தம் ஆங்கிலத்தில் எழுதியுள்ள வலைப்பதிவின் தமிழாக்கத் தொகுப்பு கட்டுரை இது. அவரின் கருத்துக்களுக்கு யுவர்ஸ்டோடி பொறுப்பேற்காது.)

Deputy Editor, tamil.yourstory.com I love to meet new people and hear their stories and put it to words for the world to read.

Related Stories

Stories by Induja Ragunathan