இயற்கையைக் காக்க இணைந்த ஐந்திணை படை!

வார இறுதியை பயனுள்ளதாக்கும் இளைஞர்கள்!

1

நாம் அனைவரும் சனி, ஞாயிறு விடுமுறை நாட்களை பொழுதுப்போக்க ஒரு பெரிய பட்டியலை வைத்து இருப்போம், ஆனால் இங்கு சில இளைஞர்கள் தங்கள் விடுமுறைகளை பயனுள்ளதாக்கி சமூகத்துக்கு எடுத்துக்காட்டாக வாழ்கின்றனர். ஒவ்வொருவாரமும் நாட்டை செழுமையாக்க மரக் கன்றுகளை நட்டு வருகின்றனர் இந்த இளைஞர் கூட்டம்.

’ஐந்திணை’, எங்கோ பள்ளியில் தமிழ் வகுப்பில் கேள்விப்பட்ட வார்த்தை போல் இருக்கிறது அல்லவா? பொதுவாக நம் நாடு ஐந்து நிலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது, அதை குறிப்பிடுவதே ஐந்திணை. இந்நிலங்களை செழுமையாக்கும் நோக்குடன் பிறந்ததே ஐந்திணை என்னும் தன்னார்வ தொண்டு அமைப்பு.

ஐந்திணை குழு
ஐந்திணை குழு

சென்னை ட்ரெக்கிங் கிளப் என்னும் அமைப்பின் ஒரு பகுதியே ஐந்திணை. இது 2012 ஆம் ஆண்டு சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டது. இந்த அமைப்பின் முக்கிய நோக்கம் மரம் வளர்ப்பு மற்றும் பராமரிப்பு, நீர் நிலங்களை சுத்தம் செய்தல், ஆர்கானிக் பண்ணை, கழிவு மேலாண்மை மற்றும் பிளாஸ்டிக் இல்லா வாழ்க்கை முறை ஆகும்.

ஒரு சில நண்பர்கள் மட்டும் சேர்ந்து தொடங்கிய இந்த அமைப்பில் தற்போது, 5000-க்கும் மேற்பட்ட வாலன்டியர்ஸ் இணைந்துள்ளனர்.

“ஒவ்வொரு நிகழ்வுக்கும் 50-60 தன்னார்வலர்கள் எங்களுடன் இணைவார்கள்,” 

என்கிறார் இந்த அமைப்பின் முக்கியக் குழுவினரான சிவா. ஒரு சில குழு, மரக்கன்றுகளை நட்டு, அதன் பராமரிப்பில் ஆர்வம் காட்டுவது இல்லை. ஆனால் ஐந்திணையோ அவ்வாறு இல்லாமல் ஜூன் முதல் பிப்ரவரி வரை மரக் கன்றுகளை நடவும், எஞ்சிய மாதங்களை அதை பராமரிக்கவும் செலவிடுகின்றனர். 

“இதனால் நாங்கள் நடும் மரக் கன்றுகள் 70% – 75% வரை பாழாகாமல் பாதுகாக்க முடிகின்றது,” என்கிறார்.

எல்லா வார இறுதியிலும் ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து அங்கு செடிகளை நடுகின்றனர். சில சமயங்களில் வார நாட்களிலும் செடிகள் நடுகின்றனர். ஐந்திணையின் முக்கிய அம்சமாக இருப்பது “Green Day”. 

கிரீன் டே, வருடத்தில் ஒரு நாள், காடு வளர்க்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டது. ஒரே நாளில் 1000-1500 மரக் கன்றுகளை நடும் முயற்சி. இதில் 300-க்கும் மேற்பட்ட வாலன்டீர்ஸ் பங்கேற்கின்றனர். இது வரை 3 கிரீன் டே நிகழ்வுகளை நடத்தியுள்ளது ஐந்திணை.

“கிரீன் டே, ஐந்திணையின் மிக முக்கியமான ஒரு முயற்சி ஆகும். முதல் கிரீன் டே நிகழ்வு காஞ்சிபுரம் அருகில் உள்ள தென்னேரியில் நடைப்பெற்றது, அங்கு 1000 செடிகளை நட்டுள்ளோம்.”

அடுக்கு மாடி குடியிருப்புக்காக மரங்களை அழிக்கும் இந்த சூழலில், கிரீன் டே போன்ற நிகழ்வு நம் நாட்டில் மிக அவசியமே. இது போன்ற நிகழ்வுகள் எஞ்சிய காட்டை வளர்க்கவும் அதை பராமரிக்கவும் உதவுகிறது.

இதை தவிர “Green Highways” என்று  நெடுஞ்சாலையில் செடிகளை நடும் நிகழ்வும் நடத்தப்படுகிறது. கடந்த வருடம் ஐந்திணை; நெடுஞ்சாலையில் 50 கீமி வரை செடிகளை நட்டுள்ளனர். அடுத்த ஆண்டு 200 கீமி ஆக உயர்த்துவதே இக்குழுவின் நோக்கமாக உள்ளது.

சென்னையில் வரதா புயல் தாக்கியப்போது, ஆங்காங்கே மரங்கள் சாய்ந்தன. சாலை எங்கும் பல வருடங்களாய் கம்பீரமாய் இருந்த மரங்கள் கூட மடிந்தது. இதை சீர் செய்ய தங்களால் முடிந்த வரை முயன்றனர் ஐந்திணை குழு. 

“ஐந்திணையுடன் இணைந்ததே என் வாழ்வில் மிகச் சிறந்த நிகழ்வாகும். இயற்கையை ரசிக்கவும் அதை பராமரிக்கவும் இங்கு தான் கற்றுக் கொண்டேன். ஐந்திணையின் சிறந்த அம்சமே எப்போழுதும் ஈடுப்பாட்டுடன் இருப்பதே,”

என்ற நெகிழ்கிறார் அதில் தன்னார்வலராக பணிபுரியும் சத்யா. ஐந்திணையின் அடுத்த பிரிவு “Green Ponds” இதில் குட்டைகள், குளங்களை சுற்றி செழுமையான சூழலை உருவாகின்றனர். இங்கு நம் நாட்டின் பாரம்பரிய மரங்களான வெட்டிவேர், ஆலமரம், அரசமரம் போன்ற மரக் கன்றுகளை நடுகின்றனர்.

இதை தொடர்ந்து “Green School” என்னும் நிகழ்வு பள்ளிகளை செழுமையாக்கும் முயற்சி, மற்றும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கிலும் தொடங்கப்பட்டுள்ளது.

“வருங்கால சந்ததியனருக்கு ஆரோக்கியமான உணவும், சுத்தமான காற்றும் இல்லாமல் போய் விடும் என்ற வருத்தம் என்னுள் எப்பொழுதுமே உள்ளது. இதுவே மரம் நடவும், இந்த அமைப்பின் ஒரு பங்காக இருக்கவும் ஊக்கப்படுத்தியது,” என்கிறார் மற்றொரு வாலண்டியர்  வினை.

செடிகள் நடுவது மட்டும் அல்லாமல், தாங்களே செடிகளை தங்கள் சொந்த நர்செரியில் வளர்கின்றனர். செடிகள் ஓர் அளவு செழுமையாக வளந்த பிறகு அதை வேறு இடத்தில் நட எடுத்து செல்கின்றனர். இதுவரை ஐந்திணை நர்செரியில் 500-600 செடிகள் வளர்க்கப்பட்டுள்ளது.

இயற்கையை பராமரிக்கும் பொறுப்பு இவ்வுலகில் அனைவருக்கும் உள்ளது. இந்த ஸ்மார்ட் போன் காலத்தில், ஐந்திணையோடு இப்பொறுப்பு நின்று விடாமல், நாம் அனைவரும் மரம் வளர்ப்பதிலும், இயற்கையை பராமரிக்கவும் கவனம் செலுத்த வேண்டும்.

Related Stories

Stories by Mahmoodha Nowshin