படித்தவர்கள் சமையல் செய்வதா...? 

மக்களின் மனநிலையை மாற்றும் ’அர்ச்சனாஸ் கிச்சன்’

0

சுவாரஸ்யமான உணவு வகைகள் பிடிக்கும் ஆனால் சமைக்க பிடிக்காது என நினைப்பவரா நீங்கள்? அப்படியானால் புதிய அனுபவங்கள் நிறைந்த ஒரு உலகை நீங்கள் தவறவிடுகிறீர்கள் என்று அர்த்தம். 

அர்ச்சனாஸ் கிச்சன் நிறுவனர் மற்றும் யூட்யூப் சமையல் நட்சத்திரம் அர்ச்சனா தோஷி அற்புதமான உணவு, எளிமையான சமையல் முறை, ஆரோக்கியமான வாழ்க்கை போன்றவை நிறைந்த உலகிற்கு நம்மை இட்டுச்செல்ல விரும்புகிறார்.

சௌகரியமான உணவு விரும்புவோருக்கு கீரை வகைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் உணவாகட்டும், உணவுக் கட்டுப்பாட்டில் கவனம் செலுத்துவோர் விரும்பும் அதிக புரதம் நிறைந்த வறுத்த ராஜ்மா கார்ன் உணவாகட்டும், மத்திய கிழக்கு உணவு வகைகளை விரும்புவோருக்கு மெடிடரேனியன் பூசணி கிப்பே உணவாகட்டும் அர்ச்சனாஸ் கிச்சனின் அர்ச்சனா தோஷி, தனது வலைதளத்திலும் யூட்யூப் சானலிலும் இது போன்ற எண்ணற்ற உணவு வகைகளை தயாரிப்பது குறித்து மக்களுக்கு விளக்குகிறார்.

சிறப்பு உணவு வகைகள், இரவு நேர உணவிற்கான யோசனைகள், லஞ்ச் பாக்ஸ் திட்டமிடல், கலோரி அளவின் அடிப்படையில் உணவு வகையைக் கட்டுப்படுத்துதல் போன்றவற்றிற்கான யோசனைகளை அர்ச்சனாஸ் கிச்சன் வலைதளம் வழங்குகிறது. விகாஸ் கண்ணா போன்ற முன்னணி செஃப்களுடன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். நேஷனல் டெலிவிஷனில் முதல் கூகுள் க்ரோம் விளம்பரத்திற்கு உந்துதலளித்துள்ளார். 

இன்று அர்ச்சனாஸ் கிச்சன் ஆயிரக்கணக்கான ரெசிபிக்களை உருவாக்கியுள்ளது. உலகிற்கு தனித்துவமான உள்ளடக்கத்தை தனது வலைதளம் மற்றும் யூட்யூப் சானல் வாயிலாக வழங்க நூற்றுக்கணக்கான வலைப்பதிவர்களையும் ஊட்டச்சத்து நிபுணர்களையும் அர்ச்சனாஸ் கிச்சன் ஒருங்கிணைத்துள்ளது.

அர்ச்சனா தோஷி தனது தொழில்முனைவுப் பயணம் குறித்து யுவர் ஸ்டோரி வீக்எண்டெர் உடன் பகிர்ந்துகொண்டார்.

உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்?

எனக்கு உணவுப் பிரிவில் ஆர்வம் ஏற்படுவதற்கு முன்பு மென்பொருள் பொறியாளராக இருந்தேன்.

முதலில் கலிஃபோர்னியாவில் வசித்தோம். பின்னர் பாஸ்டன் பகுதிக்கு மாற்றலானோம். அங்கு மதிய உணவிற்கும் இரவு உணவிற்கும் எப்போதும் விருந்தாளிகள் வருவார்கள். எனக்கு ஆரோக்கியமான உணவு சமைப்பதில் ஆர்வம் இருந்தது. என்னுடைய விருந்தாளிகளுக்கு விரும்பி சமைப்பேன். அவர்கள் என்னைப் புத்தகம் எழுதுமாறு எப்போதும் வற்புறுத்துவார்கள். ஆனால் நான் அதற்கு பதிலாக என்னுடைய சமையல் அனுபவத்தை மக்களுடன் பகிர்ந்துகொள்ள தீர்மானித்தேன். ஒரு வலைப்பக்கத்தைத் துவங்கினேன். மக்களைச் சென்றடைய ஒரு மாறுபட்ட தளத்தை அது உருவாக்கித் தந்தது.

நான் பயனர்களுடன் அதிகம் பகிர்ந்துகொள்ளத் துவங்கியதும் அதிக உள்ளடக்கம் உருவானது. சில ஆண்டுகளுக்கு முன்பு கூகுள் ஒரு விளம்பரத்தை க்ரோமிற்காக வெளியிட்டது. மக்கள் இணையத்தை தேடல்தளமாக மட்டுமே பயன்படுத்திக்கொள்ளாமல் வணிக வாய்ப்பாகவும் பயன்படுத்திக்கொள்ளமுடியும் என்பதை மக்களுக்குக் காட்ட என்னை அந்த விளம்பரத்தில் பங்கேற்கச் செய்தனர். பின்தொடர்பவர்கள் அதிகரித்தனர். 

சமையல் எளிதானது என்றும் ஒப்பீட்டளவில் ஆரோக்கியமற்ற உணவைக் காட்டிலும் ஆரோக்கியமான உணவு சுவை குறைவாகவே இருக்கும் என்றும் இந்திய உணவு ஆரோக்கியமானது என்றும் மக்களுக்கு எடுத்துரைக்க ஒரு தளத்தை உருவாக்கவேண்டும் என்பதே என் நோக்கம். எனவே வீடியோக்கள், வலைப்பக்கம், முகநூல் லைவ் போன்றவற்றைப் பயன்படுத்தி தகவலை மக்களிடையே பரப்புகிறேன்.

உணவு சம்பந்தப்பட்டு நீங்கள் மேற்கொண்ட மிகவும் முக்கிய விஷயமாக எதைக் கருதுகிறீர்கள்?

நான் மக்களின் வாழ்க்கையில் மதிப்பைக் கூட்ட விரும்புகிறேன். என்னுடைய ப்ராஜெக்டில் மிகவும் முக்கியமானதாக நான் கருதுவது எளிமையான லஞ்ச் பாக்ஸ் வகைகள். தாய்மார்கள் தங்களது குழந்தைகளுக்கு உணவை திட்டமிட உதவும் வகையில் அற்புதமான லஞ்ச் பாக்ஸ் ரெசிபிக்களை உருவாக்க விரும்பினேன். நாங்கள் வாரத்திற்கான லஞ்ச் பாக்ஸ் ப்ளானையும் உருவாக்கினோம். கலோரிகளுக்கு ஏற்றவாறு கட்டுப்பாடுடன் உணவைத் திட்டமிடுவது தொடர்பான ப்ராஜெக்ட் அடுத்தபடியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுகிறோம்.

பாரம்பரிய உணவு வகையை எவ்வாறு எளிதாக்கலாம்?

இன்றைய காலகட்டத்தில் பாரம்பரிய உணவு வகைகளை எளிதாகக் கிடைக்கக்கூடிய தயார் நிலையில் உள்ள பொருட்களைக் கொண்டு சமைக்கலாம். அனைத்தையும் எளிதாக்கிக் கொள்வதே சிறந்தது. தற்போது மோதகம் தயாரித்து வருகிறேன். இதற்கு தயார்நிலையில் கிடைக்கும் அரிசி மாவையே பயன்படுத்துகிறேன். பாரம்பரிய உணவு வகைகளை தயாரிக்கையில் எளிதாக கிடைக்கக்கூடிய பொருட்களைப் பயன்படுத்தவேண்டும் என்பதே என் கருத்து.

உணவு தயாரிப்பில் ஏதாவது தவறு நிகழ்ந்துவிட்டால் அதை எவ்வாறு சரிசெய்வீர்கள்?

தவறை அவ்வளவு எளிதாகச் சரிசெய்யமுடியாது. உதாரணத்திற்கு மோதகம் செய்யும்போது ஏதேனும் தவறு நேர்ந்துவிட்டால் நீங்கள் மீண்டும் தயாரிக்கவேண்டியிருக்கும். மோதகம் தயாரிக்கும் மாவில் தண்ணீர் அதிகமாகிவிட்டால் கூடுதல் மாவை சேர்த்துக்கொள்ளலாம். ஆனால் உப்போ காரமோ அதிகமாகிவிடாமல் இருப்பதை அனுபவத்தின் வாயிலாகவே தெரிந்துகொள்ளமுடியும். முதல் முறை தயாரிக்கும்போது இழைக்கும் தவறுகளைக் கொண்டே அடுத்த முறை சரிசெய்துகொள்ளமுடியும். உப்பு கூடுதலாக சேர்த்துவிட்டால் உருளைக்கிழங்கை சேர்க்கலாம் என்றாலும் அது உப்பு சுவையைக் குறைக்காது. அத்துடன் சுவையும் மாறிவிடும்.

நீங்கள் எந்த உணவு வகையை விரும்புவீர்கள்?

என்னுடைய மனநிலையையும் காலத்தையும் பொருத்து என் ரசனை மாறுபடும். உதாரணத்திற்கு சில சமயம் தயிர் சாதத்தையும் ஊறுகாயையும் விரும்புவேன். சில சமயம் மெக்சிகன் அல்லது தாய் உணவுவகைப் பிடிக்கும்.

இன்றைய சமையல் சூழல் எவ்வாறு உள்ளது?

இன்று அதிகமானோர் சமையலில் ஈடுபடுவதைப் பார்க்கமுடிகிறது. ஆனால் இன்னமும் பலர் வெளியில் சாப்பிடுகின்றனர். பெரும்பாலானோர் பல உணவு வகைகளை ஆராய விரும்புகின்றனர். ஆரோக்கியமான உணவின் முக்கியத்துவத்தையும் அறிந்துள்ளனர். ஆனால் இன்னும் அதிகமானோர் சமையலில் ஈடுபடவேண்டும் என விரும்புகிறேன். படித்தவர்களாக இருந்தால் சமையல் செய்யவேண்டிய அவசியமில்லை என்று பலர் நினைக்கின்றனர். பலர் சமையல் செய்யாத போக்கையும் காணமுடிகிறது. இதே போக்கினை இளம் சமூகத்தினர் பலரும் பின்பற்றுகின்றனர்.

உணவு டெலிவரி செயலிகளும் சேவைகளும் மக்களை சோம்பேறியாக்குகிறதா?

இந்த செயலிகள் நம் வாழ்க்கையை எளிதாக்குகிறது. ஆனால் அன்றாட வாழ்க்கையைப் பொருத்தவரை ஃப்ரெஷ்ஷாக சமைக்கப்படும் உணவே சிறந்தது. வீட்டில் சமைக்கும்போது அதில் என்ன சேர்க்கப்பட்டுள்ளது என்பது தெரியும். அத்துடம் தேவையான அளவை மட்டுமே சமைக்கலாம். உணவகங்களில் அதிக அளவு சமைக்கப்படும்போது உணவின் தரம் பாதிக்கப்படும். வாழ்க்கைமுறை சார்ந்த நோய்கள் ஏற்படும். நீங்கள் என்ன உட்கொள்கிறீர்கள் என்பதை தெரிந்துகொள்வது அவசியம்.

ஆரோக்கியமான உணவு பற்றிய உங்கள் கருத்து என்ன?

பொறிக்கப்பட்ட உணவு வகைகளையும் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளையும் தவிர்ப்பதே ஆரோக்கியமான உணவு ஆகும். பாஸ்தா போன்ற உணவு வகைகளை நீங்கள் சாப்பிட்டாலும்கூட புரதம், கார்போஹைட்ரேட் போன்றவை சேர்த்துக்கொள்ளப்படுவதை உறுதி செய்யவேண்டும். வெவ்வேறு உணவு வகைகள் சிறு அளவில் நம் உடலுக்கு அவசியம். சாதம், பருப்பு போன்றவற்றின் அளவும் அதிகரிக்கக்கூடாது. சாப்பிடும்போது சாதனங்களை தள்ளிவைத்துவிட்டு சாப்பாட்டில் கவனம் செலுத்தி சாப்பிடவேண்டும்.

நல்ல சமையலுக்கு சில குறிப்புகள் சொல்லமுடியுமா?

ஃப்ரெஷ்ஷான தரமான மூலப்பொருட்கள் பயன்படுத்தப்படுவதை உறுதிசெய்யவேண்டும். ரெசிபி எளிமையாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். புதிதாக சமைப்பவராக இருந்தால் அடிப்படையில் இருந்து துவங்கவும். மெல்ல அனுபவத்தைப் பெறலாம். சமையலில் திட்டமிடல் முக்கிய அம்சமாகும். சமையலைத் துவங்குவதற்கு முன்பு தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக வைத்துக்கொள்ளவேண்டும். முடிந்தவரை பதப்படுத்தப்பட்ட உணவைத் தவிர்க்கவேண்டும். நல்ல கத்தியைப் பயன்படுத்தவேண்டும்.

நீங்கள் எத்தகைய சவால்களைச் சந்தித்தீர்கள்?

நான் தொடர்ந்து கற்றுக்கொள்கிறேன். என் வணிகத்தை சிறிது சிறிதாகவே வளரச் செய்தேன். என்னுடைய பயணத்தில் எப்போதும் மிகுந்த கவனத்துடன் இருக்கிறேன். இந்த வணிகத்தில் ரெசிபிகளை முயற்சி செய்வது சோதிப்பது என 20,000 மணி நேரத்திற்கும் அதிகமாக செலவிட்டுள்ளேன். இருந்தும் நான் தொடர்ந்து கற்கத் தயாராக இருக்கிறேன்.

என்னுடைய ரெசிபிகளை வீட்டில் முயற்சி செய்வேன். சோதனை செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள சமையலறையில் இரண்டு நிபுணர்களைக் கொண்டு சோதனை செய்கிறேன். டயட் உணவு, லஞ்சு உணவு, பண்டிகைக்கால உணவுகள் என அனைத்தையும் முயற்சி செய்கிறோம்.

உங்களது எதிர்கால திட்டம் என்ன?

மக்களுடன் நேரடித் தொடர்பில் இருக்க ஆஃப்லைனிலும் செயல்பட விரும்புகிறேன். குழு அமர்வுகளையும் பாப் அப் நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்ய விரும்புகிறேன்.

சமையல் குறித்த உங்களது பார்வை என்ன?

சமையல் எனக்கு சிகிச்சை போன்றது. நான் சமையலறையில் இருக்கும்போது என்னைச் சுற்றி அமைதி என்கிற ஒளி படர்ந்திருக்கும். சமையலில் எனக்கு மிகவும் பிடித்த பகுதி நறுக்குவது. அந்த சமயத்தில் தியானம் செய்து போல் உணர்வேன். இன்றைய இளம் சமூகத்தினர் சமையலில் ஆர்வம் குறையாமல் பார்த்துக்கொண்டு விரும்பி சமைக்கவேண்டும்.

ஆங்கில கட்டுரையாளர் : ஆஷா சௌதரி | தமிழில் : ஸ்ரீவித்யா

Related Stories

Stories by YS TEAM TAMIL