குக்கிராமத்திலிருந்து கனவுகளை மெய்யாக்கிய அனிதா செந்தில்!

12

"ஒரு பெண்ணாக இருப்பதால் சாதிக்க இயலாது என்று நான் என்றுமே எண்ணியதில்லை. நாம் விரும்பியதை செய்யும் கனவு, அதை நோக்கி அயராத உழைப்பு, இதுவே வெற்றியை சாத்தியமாக்கிவிடும்".

அவரின் இந்த நம்பிக்கையை பிரதிபலிப்பதாகவே உள்ளது அவரது பயணம். கேரளா மாநிலத்தில் பாலக்காட்டில் உள்ள ஒரு கிராமத்தில் வளர்ந்தவர் அனிதா. நடுத்தர குடும்பத்தில் வளர்ந்தாலும் இவருடைய பெற்றோர் அனிதாவிற்கு விருப்பமான வேலையை மேற்கொள்ளும் சுதந்திரத்தை கொடுத்திருந்தனர்.

இளம் பருவம் முதற்கொண்டே தனக்கான தனி முத்திரையை பதிக்கவே அனிதா செந்தில் விரும்பினார். "மற்றவர்களுக்கு உந்துதலாக இருக்க வேண்டும்" என்கிறார். அவரை போன்று வெற்றி பெற்ற மற்ற பெண்கள் அவரது கிராமத்தில் உள்ளார்களா என்று அறிந்து கொண்டதில்லை என்று கூறும் அவரிடம், தன்னை ஒரு முன்மாதிரியாக நினைக்கிறாரா என்று கேட்டால் புன்முறுவலுடன் மறுக்கிறார்.

டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் "அக்னிச்சிறகுகள்" புத்தகமும், நண்பர்களின் உந்துதலும், தன்னை தொழில்முனைவராக ஆக்கியது என்கிறார். 2012 ஆம் ஆண்டில் "கோர்ஸ்கிக்.காம்" (coursegig .com) என்ற இணைய வர்த்தகத்தை தொடங்கினார். தொழில்முறை பயிற்சியும் அதற்கான பயிற்றுவிக்கும் குறிப்புகளையும் தருகிறது இந்த இணையதளம். அதிக அளவில் பயிற்சி குறிப்புகளை கொண்ட இந்த தளம், ஆன்லைன் வகுப்புகள் மூலம் பயிற்றுவிக்கிறது.

பள்ளிப் படிப்பை பாலக்காட்டில் முடித்த அனிதா, இள நிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பை கோயம்புத்தூரில் தொடர்ந்தார். பின்னர் 2008 ஆம் ஆண்டு சென்னையில் ஒரு BPO நிறுவனத்தில் பணி புரிந்தார். இது முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது என்கிறார். "நகரத்தில் பணி புரிந்த அனுபவமே இன்று என் வளர்ச்சிக்கு காரணம்".

வீட்டை விட்டு தொலை தூரத்தில் வாழ்ந்தது மிகுந்த சிரமமாக இருந்தது. ஒரு கட்டத்திற்கு பின் வீட்டின் பிரிவை தாங்க முடியாமல் அவரின் வேலையை 2009 இல் விட்டு சொந்த ஊருக்கே திரும்பினார். அங்கு சரியான வேலை அமையாததால், கல்வி துறையில் உள்ளடக்க தயாரிப்பில் ஈடுபட துவங்கினார். மிகுந்த சிரமமான காலகட்டமாக அது இருந்தது என்று கூறும் அனிதா, அதுவே தன்னை தைரியமான பெண்ணாக உருவாக்கியது என்கிறார்.

"என் வாழ்க்கையை துணிவாக எதிர்கொள்ளவும், எந்த சூழ்நிலையிலும் போட்டியிடவும் என்னை தயார்படுத்தியது."

தவறுகள், போராட்டங்கள், ஏற்றத் தாழ்வுகள் கொண்ட அனிதாவின் வாழ்க்கை பயணம் அவருக்கு நிறைய கற்று கொடுத்துள்ளது.

தனிப்பட்ட முறையில் பகுதி நேர பணியாளராக இருந்தது, வர்த்தகத்தின் சூட்சமங்களையும், சந்தை நிலவரத்தையும் அறிந்து கொள்ள உதவியது. "சந்தை ஆய்வு மேற்கொண்டதன் மூலம் என்ன பணி மேற்கொள்வது, போட்டியாளர்கள் யார் என்று நிறைய கற்றுக் கொள்ள முடிந்தது" என்கிறார்.

2014 ஆம் ஆண்டு மேலாண்மையில் முதுகலை பட்டம் பெற்றார். குடும்ப வாழ்க்கையும் தாய்மையும் தன்னுடைய வளர்ச்சிக்கும், கனவிற்கும் என்றுமே தடையாக இருந்ததில்லை என்பதில் பெருமிதம் கொள்கிறார்.

குடும்பத்தை பேணுவதற்கே நேரம் போதவில்லை என்பதால் வேறு செயல்களில் ஈடுபட நேரம் இருப்பதில்லை என்று அவரின் நண்பர்கள் கூறுவது ஆச்சர்யம் அளிப்பதாக கூறுகிறார். சரியாக திட்டமிட்டால் இரண்டையும் சம நிலையில் மேற்கொள்ள முடியும் என்று தான் நம்புவதாக கூறுகிறார்.

அடுத்த இலக்கு என்ன என்ற  எண்ணமும் அதை நோக்கி செல்வதே தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும், உந்துதலாக இருப்பதாகவும் அனிதா எண்ணுகிறார்.

அவரது அணியை பெருமையாக கருதும் அவர்,

 "அவர்கள் எனக்கு மிக பெரிய பலம். தற்பொழுது மூன்று நிரந்தர பணியாளர்களும், எண்ணற்ற தனிநபர்கள் பகுதி நேரமாகவும் ஈடுபட்டுள்ளனர். அலுவலக சூழல் இல்லாதது நெருடலாக இருந்தாலும், இந்த செயல் முறையில் இயங்குவது வசதியாக உள்ளது" என்கிறார்.

இந்த வருடத் தொடக்கத்தில் கொச்சினில் "கீவேஸ் எடு செர்விஸஸ்" Keyways Edu Services என்ற நிறுவனத்தை தொடங்கியுள்ளார். "இந்நிறுவனத்தில் மூலம் தனித்துவமான பயிற்சி முறைகளை கட்டுபடியாகும் கட்டணத்தில் அளிக்கிறோம். வலைத்தளம் முதல் பல்வேறு தொழில்நுட்பம் வரை மாணவர்களுக்கு தேவையான முறைகளின் மூலம் அவர்களின் கல்விக் கனவுகளை அடைய உதவுகிறோம். அவர்களின் எதிர்காலம் சிறக்க ஆன்லைன் பயிற்சி உதவ வேண்டும் என்பதே எங்களின் நோக்கம்". தற்பொழுது கோர்ஸ்கிக்.காம் மற்றும் அகாடமிபேப்பர்ஹப்.காம் academicpaperhub .com ஆகிய இரண்டுமே இந்த நிறுவனத்தில் கீழ் செயல்படுகிறது. அகாடமிபேப்பர்ஹப்.காம் ஆய்வறிக்கைகளில் உதவுகிறது.

ஒரு தொழில்முனைவராக நெட்வொர்க்கிங் முக்கியம் என்று கருதும் அனிதா, பல்வேறு சமூக அமைப்புகளிலும் ஈடுபட்டுள்ளார். இது தனக்கு நிறைய மனிதர்களை சந்திக்க உதவுவதாகவும் சிலர் தனக்கு உந்துதலை அளித்துள்ளதாகவும் கூறுகிறார்.

"தன்னுடைய கனவை அடைய , மற்றவர்கள் அவர்கள் கனவை அடைய உதவ வேண்டும்" என்ற அடிப்படையிலயே அனிதா தன் வாழ்க்கையை வழி நடத்துகிறார். யோகா மற்றும் தியானம் அவரை உற்சாகமாக வைத்துக் கொள்ள உதவுகிறது என்கிறார். "நல்ல விஷயங்களில் மட்டும் கவனம் செலுத்துகிறேன், நான் மேற்கொள்ளும் ஒவ்வொரு விஷயத்திலும் பெருமிதம் கொள்கிறேன்".