2016 ரியோ ஒலிம்பிக்ஸ் வீரர், வீராங்கனைகளுக்கு உத்வேகம் தரும் ஏஆர் ரஹ்மான் வரிகள்!

1

இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் ரியோ ஒலிம்பிக்சில் கலந்து கொள்ள பிரேசில் சென்ற இந்திய விளையாட்டு வீரர்களுக்காக "கோய் ஹம்சே ஜீத் நா பாவே" என்ற ஊக்கம் தரும் பாடலை கடந்த வாரம் பாடி உற்சாகப் படுத்தினார். அதை தொடர்ந்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வீரர்களை ஊக்குவிக்க தனது அறிவுரையை வழங்கியுள்ளார். அதன் தமிழாக்கம் இதோ:

2016 ரியோ ஒலிம்பிக்ஸ் செல்லும் இந்திய அணியினருக்கு:

சக்திவாய்ந்த நாடுகள் எல்லாம், தங்களின் தலைமைகள் குறித்த பிரச்சினைகளுடன் எதிர்காலம் குறித்த தெளிவின்மையுடன் போராடிக்கொண்டிருக்கும் போது , இந்தியா ஒற்றுமையுடன் சிறப்பாக செயல்பட சரியான நேரம் இது. நாம் வலுவான, எதிர்காலம் குறித்த தொலைநோக்கு பார்வையுடைய தலைமையைப் பெற்றுள்ளோம். 

இந்தியா ஒரு இளமையான நாடாக, 60% இளைஞர்களை மக்கள் தொகையில் கொண்டுள்ள நாடு. இன்று பல இளைஞர்கள் விளையாட்டை தங்கள் வாழ்க்கையாக தேர்ந்தெடுக்கத் தொடங்கிவிட்டனர். இது பாராட்டுக்குரியது. 'தேசிய விளையாட்டு திறன் தேடல்' திட்டம் (National Sports Talent Search Sheme) முயற்சி, இதற்கான சரியான வழிகாட்டுதலுக்கான அடித்தளத்தை அளித்து வருகிறது.   

நினைவில் கொள்ளுங்கள்! இவ்வுலகில் முடியாதது என்று எதுவுமில்லை. உங்கள் முழு மனதையும், உழைப்பையும் செலுத்தினால் எதுவும் சாத்தியம். விடாமுயற்சி மற்றும் சீரான முயற்சிகள் மட்டுமே இதற்கு மிக முக்கியம். முடியாது என்று இடையில் விட்டுக்கொடுத்து விடாதீர்கள்.

சிறு விஷயங்களுக்காக மனம் தளராதீர்கள். பல சவால்களை நீங்கள் சந்திக்க வேண்டி இருக்கும். அந்த சோதனைகள் எல்லாமே உங்களுக்கு உள்ளார்ந்த ஒன்றாகவே இருக்கும். அந்த உள்ளார்ந்த சுயத்தன்மை தான் ஒருவரது வெளிப்படையான சுயத்தன்மையாக வெளியில் தெரியும் நிலைக்கு உள்ளாகும்.

சில காலங்களுக்கு முன் ஒரு இந்தியர் ஆஸ்கர் அல்லது கிராமி விருதை பெறுவது சாத்தியமற்றது என்று நான் கூட எண்ணி இருந்தேன். ஆனால் காலம் அதை சாத்தியம் என உணர்த்தியது. அது என்னுடைய உண்மையான பேரார்வத்துக்கும் பணியின் தரத்துக்கும் கிடைத்த வெற்றி. 

உயர்ந்த இடத்தை அடைய நம்மை நாமே உந்தித் தள்ளவேண்டிய நேரம் இது... எதுவும் நம்மை நிறுத்திவிடக் கூடாது!!

கடவுளின் ஆசிர்வாதத்துடன், இந்திய மக்களின் வேண்டுதல் மற்றும் அன்போடும் நம்மால் எதுவும் முடியும் என்பதை இவ்வுலகிற்கு காண்பிப்போம்!

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்