ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் பணிபுரிந்த அனுபவத்தில் சுய தொழில் தொடங்கிய மெட்ராஸ்காரன்

0

கடந்த 5 வருடங்களாக சுய தொழில் ஒரு போக்காக மாறி கொண்டு வருகிறது. கல்லூரி படிக்கும் பொழுதே பெரும் நிறுவனங்களில் 9-6 வேலை செய்யத் தயாராக இல்லாமல் ஸ்டார்ட்-அப் தொழிலில் ஈடுப்படத் துவங்குகின்றனர் இளைஞர்கள். அந்த வகையில் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களிலே தன் தொழில் பயணத்தை துவங்கி இன்று தனக்கான ஓர் நிறுவனத்தை அமைத்துள்ளார் ‘தட் மெட்ராஸ்காரன்’ போட்டோகிராஃபி நிறுவனத்தின் நிறுவனர் அவினாஷ்.

2009ல் பி எஸ்சி இரண்டாம் ஆண்டு படிக்கும்பொழுதே ஓர் ஸ்டார்ட்-அப் நிறுவனத்தில் முழு நேர பணிக்கு அமர்ந்துவிட்டார் அவினாஷ். அப்பொழுது இருந்தே தனது ஸ்டார்ட்-அப் பயணம் தொடங்கிவிட்டதாக தெரிவிக்கிறார்.

“தொழில் சார்ந்த குடும்பப் பின்னணியில் வந்ததாலும், பணி வாழ்க்கை ஸ்டார்ட-அப்பில் துவங்கியதாலும் சுய தொழில் மீதான ஆர்வம் கல்லூரி படிக்கும்பொழுதே ஏற்பட்டது,” என்கிறார் அவினாஷ்.

கல்லூரிக்கு பின்னும் அதே நிறுவனத்தில் பணிப்புரிந்த அவினாஷ் தொழில் ரீதியாக தன்னை மெருகேற்றிக் கொண்டார். 5 வருடம் தனது அனுபவத்தை பெற்ற பிறகு மீண்டும் மற்றொரு ஸ்டார்ட்-அப் நிறுவனத்தில் தன் பணி வாழ்க்கையை தொடர்ந்தார். ஆனால் பெரும்பாலானோர் போலவே தன் குடும்ப விருப்பதால் ஸ்டார்ட் அப்-ஐ விட்டு ஒரு பெரும் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார்.

“மற்றவர்களுக்காக ஓர் பெரிய நிறுவனத்தில் நான் சேர்ந்தாலும், அதுவே எனக்கு என்ன தேவை என முடிவு செய்ய உதவியாக இருந்தது. தினமும் 9 மணிநேரம் ஒரே வேலையை செய்ய எனக்கு விருப்பம் இல்லை என்பதை உணர்ந்தேன்.”

ஐடி பணி வாழ்க்கை சில மாதங்களில் சலிக்க நிச்சயமாக சுய தொழில் தொடங்க வேண்டும் என தீர்மானமாக முடிவு செய்தேன் என்கிறார் அவினாஷ். தொழில் தொடங்க வேண்டும் என்று முடிவு செய்த பிறகு 2013ல் தனது நண்பருடன் இணைந்து ஒரு இ-காமர்ஸ் தளத்தை நிறுவினார். அமேசான், ஃபிளிப்கார்ட் போல் அனைத்து பொருட்களையும் விற்பனை செய்யும் தளத்தை உருவாக்கினர். சில வருடம் ஸ்டார்ட-அப் களிலும் பெரும் நிறுவனங்களில் பணிபுரிந்து பல ஐடி ஊழியர்களுடன் நெட்வொர்கிங்கை ஏற்படுத்திக்கொண்டதால் அந்த இணைப்புகள் மூலம் இணைப்பு சந்தைப்படுத்தலை (Affiliate marketing) பயன்படுத்தி விநியோகஸ்தர்கள் இல்லாமலே பொருட்களை விநியோகம் செய்தனர்.

“ஆனால் 2015ல் வந்த சென்னை வெள்ளத்தால் பொருட்கள் சேதம் அடைந்து எனது தளம் மூடப்பட்டது. இதற்கிடையில் போட்டோகிராபியில் பிரிலான்சிங் செய்து கொண்டிருந்ததால் அதேயே என் தொழிலாக எடுத்துக்கொண்டேன்.”

கல்லூரி சேரும் முன்பே போட்டோகிராபி மீது அவினாஷிற்கு ஆர்வம் இருந்தது அதனால் விஸ்காம் படிக்க வேண்டும் என விரும்பிய இவர் பெற்றோர்கள் சம்மதிக்காததால் கணினி துறையை தேர்ந்தெடுத்தார். அதனால் பொழுதுபோக்காக போட்டோகிராபியை தொடர்ந்து செய்த இவர் பின் அதையே தன் தொழிலாக மாற்றிக்கொண்டார்.

மீண்டும் ஸ்டார்ட்-அப் நிறுவனத்தில் தான் சம்பாதித்த இணைப்புகள் மூலம் பல நிறுவனங்களின் நிகழ்வுகளுக்கு பிரிலான்ஸ் போட்டோகிராபராக பங்கேற்றுள்ளார்.

“நிறுவனம் தொடங்க வேண்டும் என முடிவு செய்தப்பின் நமது இலக்கை நிர்ணயிக்க வேண்டும். என் தொழில் ஸ்டார்ட்-அப்பில் வளர்ந்ததால் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களையே எனது இலக்காக எடுத்துக்கொண்டேன்.”

தனது நிறுவனத்தின் இலக்கு மற்றும் அமைப்பை முடிவு செய்யவே தனக்கு இரண்டு வருடம் எடுத்துக்கொண்டதாக தெரிவிக்கிறார். அதிலும் எக்கச்சக்க போட்டோகிராபி நிறுவனம் நம்மி சுற்றி இருக்கும் நிலையில் அதில் இருந்து மாறுபட்டு இருக்க வேண்டும் என முடிவு செய்ததாக தெரிவிக்கிறார் அவினாஷ். அதன் பின் 2017ல் தோன்றியது தான் ’தட் மெட்ராஸ்காரன்’ நிறுவனம். வெறும் போடோக்களை எடுத்துக் கொடுப்பது போல் இல்லாமல் வாடிக்கையாளர்கள் பயனை அறிந்து அவர்களது கருத்தை ஊடகம் மூலம் கொடுப்பதே முக்கியமான புள்ளியாக எடுத்துக்கொண்டோம் என்கிறார்.

“ஒரு வருட ஸ்டார்ட்-அப் என்பதால் ஓர் அளவு என்னால் லாபம் பார்க்க முடிகிறது. இப்பொழுது எனது நிறுவனம் செல்லும் பாதை இன்னும் இந்நிறுவனத்தை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து செல்ல நம்பிக்கை அளிக்கிறது.”

மேலும் பல போட்டோகிராபி நிறுவனம் சந்தையில் இருந்தாலும் அது எதுவும் தனக்கோ தன் நிறுவனத்திற்கோ போட்டியாக இல்லை என்கிறார் அவினாஷ். போட்டோகிராபி மூலம் வணிகத்தை உருவாக்குவதே இவர்களது முக்கியம் நோக்கமாக இருக்கிறது.

ஆனால் இத்தோடு தனது ஸ்டார்ட்-அப் கனவை அவினாஷ் நிறுத்திக் கொள்ள வில்லை. கூடிய விரைவில் ஒரு இணையதளம் வசதியுடன் ஓர் கஃபேவை உருவாக்க வேண்டும் என்று லட்சியத்தோடு இருக்கிறார்.

“பல தொழில்முனைவர்கள் வளர்ந்து வரும் நிலையில் துவக்கத்தில் சந்திப்புகளை நடத்த இடத்தை தீர்மானிக்க சிரமப்படுவர். அப்படிபட்டோர்கள் எனது கஃபேவை பயன்படுத்தும் வண்ணம் ஓர் கஃபேவை உருவாக்க வேண்டும்.”

அடுத்த ஆண்டு முடிவிற்குள் இந்த கஃபெவை உருவாக்க மும்மரமாக முயற்சித்து வருகிறார் அவினாஷ். அதுவும் கண்டிப்பாக பெருநகர பகுதியில் தொடங்காமல் புறநகரில் துவங்க முயற்சி எடுத்து கருகிறார். தற்பொழுது இதுவே தனது கவனம் என முடிக்கிறார் அவினாஷ்.