காய்கறி விற்பனையாளராக இருந்து பிரபலமான ஓவியரான ஷகிலா ஷேக்! 

0

ஷகிலா ஷேக் கொல்கத்தாவிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு எளிமையான இல்லத்தில் வசிக்கிறார். இவருக்கு சொந்தமான ஒரு தனியார் ஸ்டூடியோ உள்ளது.  கொலாஜ் கலைக்கு உலகம் முழுவதும் பிரபலமான இவர் ஒரு இல்லத்தரசியும் ஆவார். இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய நாடுகள் முழுவதும் உள்ள பலரது வீடுகளை இவரது கலை அலங்கரித்துள்ளது.

காய்கறி விற்பனை செய்பவரின் மகளான ஷகிலா, 1990-ம் ஆண்டு தனது முதல் கண்காட்சியை ஏற்பாடு செய்தபோதே 70,000 ரூபாய் ஈட்டினார். இன்று அவரது விற்பனையை பராமரிக்க ஒரு குழு உள்ளது. அவரது படைப்பு இந்தியா, ஐரோப்பா, அமெரிக்கா என பல்வேறு பகுதிகளில் உள்ள சுவர்களில் மிளிர்கிறது.

இவர் வளரும் பருவத்திலேயே அதிக கஷ்டங்களை அனுபவித்துள்ளார். இவருக்கு ஒரு வயது இருக்கும்போது இவரது அப்பா குடும்பத்தை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டார். இதனால் இவரது அம்மாவான செஹ்ரன் பிபி, மொக்ராகாத் பகுதியில் இருந்து தல்தலா சந்தை வரை தினமும் 40 கிலோமீட்டர் பயணிக்கவேண்டிய சூழல் ஏற்பட்டது.

ஷகிலா தனது சிறுவயது நாட்கள் குறித்தும் காய்கறி விற்பனை செய்த தனது அம்மாவுடன் சென்றது குறித்தும் வீக்எண்ட் லீடர் உடன் பகிர்ந்துகொள்கையில்,

”என் அம்மா என்னை வேலை செய்ய விடமாட்டார். ஆனால் அந்த இடத்தை பார்ப்பதற்காகவே என்னை நகருக்கு உடன் அழைத்துச் செல்வார். சாலைகளில் ட்ராம், பஸ் போவதை பார்க்க எனக்குப் பிடிக்கும். அவர் வேலை செய்யும் நேரங்களில் நான் நடைபாதையில் தூங்குவேன்,” என்றார்.

ஓய்வுபெற்ற அரசு ஊழியர் மற்றும் கலைஞரான பிஆர் பனேசர் உந்துதலாக இருந்தாக குறிப்பிடுகிறார் ஷகிலா. அவர் அருகில் உள்ள பகுதிகளில் வசிப்பவர்களுக்கு இலவசமாக முட்டை, பிஸ்கட், சாக்லேட் போன்றவற்றை வழங்கி வந்தார். குழந்தைகளால் ’திம்பாபு’ என அழைக்கப்படும் இவர்தான் ஷகிலாவிற்கு கலை வடிவத்தின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தினார். ’லைவ்வ்மிண்ட்’ உடனான உரையாடலில் ஷகிலா குறிப்பிடுகையில், ஷகிலாவின் அம்மா தனது மகளின் பாதுகாப்பு குறித்து ஆரம்பத்தில் பயந்ததாகவும் அதன் பின்னரே பனேசர் மீது நம்பிக்கை பிறந்ததாகவும் தெரிவித்தார்.

மொக்ராகாத் கிராமத்தில் இருந்து தினமும் பள்ளிக்கு பயணம் செய்வது கடினமாக இருந்ததால் ஷகிலா தனது படிப்பை நிறுத்திக் கொண்டார். அவரது பன்னிரண்டு வயதில் அவரைக் காட்டிலும் பதினைந்து வயது மூத்தவரான ஏற்கெனவே திருமணமான அக்பர் ஷேக் என்பவருடன் திருமணம் நடந்தது. பணப் பற்றாக்குறை ஏற்பட்டதால் ஷகிலா பனேசரிடம் உதவி கேட்டார். ஷகிலா தனது கணவருக்கு ஆதரவளிக்க பேப்பர் பேக் செய்யும் பணியில் ஈடுபடுமாறு அவர் பரிந்துரைத்தார்.

இந்தக் கலையால் உந்துதலளிக்கப்பட்ட ஷகிலா காய்கறிகள் மற்றும் பழங்களை சித்தரிக்கும் வகையில் தனது முதல் கொலாஜ் பணியைத் துவங்கினார். இது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. 1991-ம் ஆண்டு முதல் முறையாக தனது கொலாஜை கண்காட்சியில் காட்சிப்படுத்தினார்.

கட்டுரை : THINK CHANGE INDIA