பில் கேட்ஸால் ஈர்க்கப்பட்டு மென்பொருள் நிறுவனம் நிறுவி வெற்றிநடை போடும் விவசாயக் குடும்பத்தில் பிறந்த வசந்த்!

11

"100 முறை சம்மட்டியால் அடிக்கப்பட்ட ஒரு பாறை பிளவுபடுகிறது என்றால், அது அந்த ஒரு அடியினால் உடைந்தது அல்ல... அதற்கு முன் அந்த பாறையை அடித்த ஒவ்வொரு அடிக்கும் அதில் பங்குண்டு...”

இந்த வாக்கியத்தை அடிக்கடி நினைவுக்கூர்ந்து, பில் கேட்ஸ் என்ற வெற்றித் தொழில்முனைவரால் பெரிதும் கவரப்பட்டு, ரத்தன் டாட்டா, ஸ்டீவ் ஜாப்ஸ், அம்பானி, ஸ்ரீதர் வேம்பு என்று பலரை முன்மாதிரியாகக் கொண்டு மனதிடத்தோடு தொழில்முனைவில் இறங்கிய வசந்த ராஜன், தனது முப்பதாவது வயதில் சென்னையில் லாபகரமான மென்பொருள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். கடந்த 7 ஆண்டுகளாக தொழில் புரியும் இந்த முதல் தலைமுறை தொழில்முனைவர், அவரின் தொழில்முனைவு பயணம் மற்றும் சந்தித்த சவால்கள் பற்றி பகிர்ந்து கொண்டவை இதோ.

விவசாயக் குடும்பத்தில் பிறந்து, கனவை நோக்கிய பயணம்

வசந்த் ராஜன் பிறந்தது, தூத்துக்குடியில் உள்ள ஒரு சிறிய கிராமமான நடுவைக்குறிச்சியில். அப்பா ராஜன், விவசாய நிலன்களை பராமறிப்பவர் மற்றும் தாயார் விமலா குடும்பத்தை கவனித்துக் கொள்கிறார். மூன்று மகன்களில் மூத்தவரான வசந்த், தூத்துக்குடியில் பத்தாவ்வது வரை படித்துவிட்டு, மேற்படிப்புக்கு சென்னைக்கு வந்தவர். வேலம்மாள் கல்லூரியில் பொறியியல் பட்டத்தை 2007-ம் முடித்தார் வசந்த். 

இஞ்சினியரிங் முடித்த வசந்துக்கு பலரைப் போல் காம்பஸ் ப்ளேஸ்மெண்டில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. ஆனால் வேறு கனவுகளோடு இருந்த அவர், Proteans Software Solutions எனும் பெங்களூரில் உள்ள ஸ்டார்ட்-அப் நிறுவனத்தில் சாப்ட்வேர் டெவலப்பராக சேர்ந்தார். 2007 முதல் ஓர் ஆண்டு பணிபுரிந்த வசந்த், பணியோடு ஃப்ரீலான்ஸ் ப்ராஜக்ட்களையும் எடுத்து செய்யத் தொடங்கினார். அதில் அவருக்கு நல்ல வாய்ப்புகள் வரத்தொடங்கியதால், 2009-ல் பணியை விட்டுவிட்டு முழுநேர ப்ரீலான்சராக ஆனார்.

”90’களில் வளர்ந்த பல குழந்தைகளை போலவே எனக்கும் பில் கேட்ஸ் என்றால் ரொம்ப பிடிக்கும். அவரது உன்னத வளர்ச்சியைக் கண்டு நானும் ஒரு நாள் அவரை போல கணினி உலகில் சாதனையாளராக, உலக பணக்காரராக வேண்டும் என்று கனவு கண்டேன். என் மாமா எனக்கு பில் கேட்சின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தின் தமிழ் பதிப்பை பரிசளித்தார். அது என்னை தொழில்முனைவில் ஈடுபட மேலும் ஊக்குவித்தது,” என்கிறார் வசந்த். 

வசந்த் ஒன்பதாவது படிக்கும்போது பள்ளி வினா-விடை போட்டியில் வெற்றிப்பெற்றதற்காக ’C’ லான்குவெஜை பள்ளியில் இலவசமாக படிக்க வாய்ப்பு கிடைத்தது. அன்று தொடங்கிய கணினி மற்றும் மென்பொருள் மீதான ஆர்வம் இன்றும் தொடர்கிறது என்கிறார். ஒரு வருட பணி அனுபவத்துக்கு பின் 2010-ல் சொந்த நிறுவனமான Vertace Consultants’ தொடங்கினார். 

‘Vertace Consultants’ தொடக்கமும், செயல்பாடும் 

பணியை விட்டுவிட்டு துணிச்சலோடு தொழில்முனைவில் இறங்கிய வசந்துக்கு 3 லட்ச ரூபாய் மதிப்புள்ள ஆர்டர் ஒன்று நிறுவனம் தொடங்கும் முன்பே ஒப்பந்தம் ஆகியது. இது ஒரு நல்ல தொடக்கமாக இருந்தாலும், நிறுவனம் நடத்த இடம், தேவையான கம்ப்யூட்டர்கள், உதவிக்கு ஓரிரு ஊழியர்கள் என தேவைப்பட்டது. குடும்பத்தார் மற்றும் நண்பர்கள் உதவியோடு 50 ஆயிரம் ரூபாய் சுயமுதலீட்டில் பார்ட்னர்ஷிப் நிறுவனம் ஒன்றை சென்னையில் தொடங்கினார். 

  “டி.நகரில் இருந்த என் உறவினர் தன் இடத்தை அலுவலகம் வைக்க இலவசமாக அளித்தார். இருப்பினும் நான் அதற்கான வாடகை தந்தேன். ரிச்சி தெருவில் இருந்து ஒரு கணினி வாங்கினேன். பட்டதாரி ஒருவரை பணிக்கு சேர்த்துக் கொண்டேன். நானும் அவரும் சேர்ந்து ஆன்லைன் டெஸ்ட் மென்பொருள் உருவாக்கி, கல்லூரிகளில் விற்றோம். அதில் கிடைத்த வருமானத்தை வைத்துக்கொண்டு முதல் இரண்டு ஆண்டுகளை ஓட்டினேன்,” என்றார் வசந்த்.

‘Vertace Consultants’ மென்பொருள் தீர்வுகளை அளிக்கும் நிறுவனம் என்பதால், ப்ராடக்ட் தயாரிக்கும் நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் கார்ப்பரேட்களை அணுகி ப்ராஜக்ட்கள் எடுத்தார். பெரிய நிறுவனங்கள் முதல் ஸ்டார்ட்-அப்’கள் வரை பல நிலைகளில் இவர்கள் க்ளையண்ட் கொண்டுள்ளனர். நிறுவனத்தின் நிலையை பொருத்து இவர்களின் சேவைக் கட்டணமும் வேறுபடும். நிறுவனத்தை தொடங்கி ஆறரை வருடங்கள் கடந்த நிலையில், HRMS, AMS, பேரோல், பிண்டெக், எம்பெடெட் மருத்துவ சேவைகள் என்று தங்கள் சேவைகளை விரிவுப்படுத்தியுள்ளனர்.  

தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்பட்டதை அடுத்து, அலுவலகத்தை விரிவுப்படுத்த நினைத்த வசந்திடம் அதற்கு போதிய முதலீடு இல்லை. அப்போது புதிய திட்டம் ஒன்றை வகுத்தார் அவர்.

“எங்களின் இரண்டு வாடிக்கையாளர் நிறுவனத்திடம் பேசி, அவர்கள் ஒர் ஆண்டிற்கான எங்கள் சேவை கட்டணத்தை முழு பேமண்டாக அப்போதே கொடுத்தால், கட்டணத்தில் தள்ளுபடி தருவதாக கூறினேன். அவர்களும் ஒப்புக்கொள்ள, அலுவலகத்தை தயார் பண்ணும் செலவுக்கான பணம் எனக்கு கிடைத்தது. மேலும் அவர்கள் எங்கள் மீது வைத்திருந்த நம்பிக்கையும் புலப்பட்டது,” என்றார் வசந்த். 

வளர்ச்சி மற்றும் வருமானம்

தனி ஒரு ஆளாக வசந்த் நிறுவனத்தை ஒரே ஒரு ஊழியருடன் தொடங்கினாலும் தற்போது சொல்லத்தக்க வளர்ச்சியை அடைந்து 38 முழு நேர ஊழியர்களை கொண்டுள்ளார். இளைஞர்களையே பெரும்பாலும் கொண்டிருக்கும் இவரது நிறுவனத்தில் 30 வயதாகும் வசந்த் தான் அதிக வயதுடையவராம். 

“நாங்கள் நிறுவனத்துக்குள் உற்சாகமாக பணியாற்றுவோம். பாட்டும், சிரிப்பு, கூட்டு விவாதம் என எங்கள் வேலையை விரும்பி செய்கிறோம். ஒவ்வொரு ஊழியரின் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடி மகிழ்வோம். இதுவே எங்கள் குழுவின் வெற்றி ரகசியம்,” என்கிறார் வசந்த். 

சவால்களும் பிரச்சனைகளும் இல்லாத பிசினசே கிடையாது. இவர்களும் சில சிக்கல்களை சந்தித்துள்ளனர். நிறுவனம் தொடங்கிய இரண்டாம் ஆண்டில், வாடிக்கையாளர் நிறுவனத்துடன் சரியான எழுத்துவழி காண்ட்ராக்ட் இல்லாததால், தரவேண்டிய 8 லட்ச ரூபாயை தராமல் ஏமாற்றினர். சிறியதோ, பெரியதோ எந்த காண்ட்ராட்டும் வாய்மொழியில் இல்லாமல் சரியான முறைப்படி எழுத்து வடிவில் இருக்கவேண்டியது அவசியம் என்பதை அப்போது வசந்த் புரிந்து கொண்டுள்ளார். அடுத்ததாக மேலும் ஒரு பிரச்சனையை சந்தித்தனர்.

“எங்களது அலுவலகத்தை திடீரென சிஎம்டிஏ, சீல் வைத்தனர். அந்த இடம் விதிமீறல் கட்டிடம் என்ற காரணத்தில் அந்த நடவடிக்கையை எடுத்தனர். எங்கள் கம்ப்யூட்டர், பொருட்கள் எல்லாம் கட்டிடத்துக்குள் மாட்டிக் கொண்டது. நல்லவேளயாக எல்லா டேட்டாக்களும் க்ளெவ்டில் இருந்ததால் சமாளித்தோம்,” என்கிறார். 

இது போல் பல சவால்களை சந்தித்தும், சமயோஜிதம், விடாமுயற்சி கொண்டு தொழிலை முன்னெடுத்ததால் இன்று லாபகரமாக இயங்கமுடிகிறது என்றார். வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்துவதில் நன்மதிப்பை பெற்றதால், பிரபல வங்கிகளான கேவிபி, சிட்டி யூனியன் வங்கி, இக்குவிட்டாஸ், டிசிபி பான்க் என்று பலரை க்ளையண்ட்களாக கொண்டுள்ளது ‘Vertace Consultants’. ஒரு நாளைக்கு 1லட்சம் பார்வையாளர்களை கொண்ட மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலின் ஒட்டுமொத்த புக்கிங் மற்றும் பக்தர்களின் மேலாண்மை சேவையை இவர்கள் தான் சிஸ்டம்ஸ் கொண்டு நிர்வகிக்கின்றனர். 

கடந்த ஆண்டு 80 லட்ச ரூபாய் வருவாய் ஈட்டிய இந்நிறுவனம், இந்த ஆண்டில் 1.5 கோடி ஈட்ட இலக்கு வைத்துள்ளது. இருக்கும் சேவைகளோடு நின்றுவிடாமல், புதிய சேவைகளை, தயாரிப்புகளை மார்க்கெட்டுக்கு தேவையின் படி உருவாக்கியும் வருகின்றனர். புதிதாக ஆப்லைன் மற்றும் இ-வர்த்தகத்துக்கான தீர்வு ப்ராடக்டை, சிறு-குறு தொழில்முனைவு நிறுவனங்களுக்காக அண்மையில் தயாரித்து வெளியிட்டுள்ளனர். SaaS தளம் கொண்டு இயங்கும் இதை உலகமெங்கும் உள்ள சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளனர். 

”உங்களிடம் என்ன இருக்கிறது என்பது முக்கியமில்லை, இருப்பதை வைத்துக்கொண்டு நீங்கள் அதை என்ன செய்யப்போகிறீர்கள் என்பதே முக்கியம். ஒரு முடிவில் சரி, தவறு என்று எதுவும் இல்லை. நீங்கள் எடுக்கும் முடிவை சரியாக்குங்கள் அதுவே மிக முக்கியம்,” என்று கூறி விடைப்பெற்றார் வசந்த். 


Deputy Editor, tamil.yourstory.com I love to meet new people and hear their stories and put it to words for the world to read.

Related Stories

Stories by Induja Ragunathan