தொழில் மற்றும் பணிபுரியும் பெண்களின் வளர்ச்சிக்கு நீங்கள் உதவிட 3 சுலப வழிகள்!

0

பணியிடங்களில் பெண்கள் வளர்ச்சிப் படியில் ஏறும்போது வெற்றி இலக்கை அடைவதற்குள் பல தடைகளை சந்திக்கவேண்டி இருக்கிறது. பெண்கள் முன்னேற்றம் பற்றி தொடர்ந்து முழங்கினாலும், நிதர்சனத்தில் அவர்களின் வளர்ச்சிக்கு தடை போடுபவர்களே அதிகமாக உள்ளனர். பெண்களை உண்மையில் முன்னேற்ற பாதையில் பார்க்கவேண்டுமெனில், அவர்களுக்கு உரிய மரியாதையை, வாழ்க்கையில் எல்லா அம்சங்களில் தருவதே அவசியம். ஒரு ஆணாக இருந்தால் மட்டுமே பணியிடத்திலும் சிறக்கமுடியும் என்பதை மாற்றி திறமைக்கு ஏற்ற முன்னேற்றத்தை பெண்களும் பெறவேண்டும். 

பணி வாழ்க்கை அல்லது தொழில் தொடங்கும் இளம் பெண்களுக்கு நீங்கள் உதவ நினைத்தால் கீழே குறிப்பிட்டுள்ள சிலவற்றை பின்பற்றுங்கள்.

உங்களின் தொடர்புகளின் உதவியோடு பெண்கள் உயர உதவிடுங்கள்

நீங்கள் தொழிலில் நீண்ட நாட்களாக இருப்பவர் என்றால் உங்களுக்கு பல தொடர்புகளும், வாய்ப்புள்ள இடங்கள் பற்றியும் தெரிந்திருக்கும். அதை பயன்படுத்தி, உங்களின் பெண் நண்பர்களுக்கு தொழிலில் காலூன்ற உதவி செய்யலாம். ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களில் உங்களை தொடர்பவர்கள் மற்றும் நண்பர்களிடமும் உங்கள் பெண் நண்பர்களின் தொழில் குறித்து பதிவிட்டு, உதவிடலாம். இது போன்ற அறிமுகம் மூலம் பெண் தொழில்முனைவோர்களுக்கு தேவையான ஆரம்பக்கட்ட பணிகளில் நல்ல வாய்ப்பும், முன்னேற்றமும், நம்பிக்கையான வெண்டர்களும், வாடிக்கையாளர்களும் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. இது அவர்களை தொழிலில் சரியான பாதையில் இட்டுச்செல்லும். 

பெண்களின் குரல் ஒலிக்கச் செய்யுங்கள்

பல சமயங்களில் பெண்களை பற்றி உயர்வாகவும், பலமுறை தாழ்வாகவும் கூட்டங்களில் பேசப்படுகிறது. அலுவலங்களில் சிலசமயம் பெண் ஊழியர்கள் பகிரும் ஐடியாக்களை ஏளனப்படுத்துவதும், அதுவே நன்றாக இருந்தால் தங்களது போல் மாற்றிச் சொல்லிக் கொள்வதும் கூட பலமுறை நடக்கும். இவையெல்லாம் தவிர்த்துவிட்டு, சந்தர்ப்ப சூழ்நிலைக்கு தேவையான முடிவுகளை ஆண், பெண் என்ற பேதம் பாராமல் இணைந்து கூட்டாக முடிவெடுப்பது பணியிடத்தில் சிறந்ததாக இருக்கும். இதுவே பெண்களின் பங்கு கார்ப்பரேட் உலகில் அதிகரிக்கவும் உதவும்.

உங்களுடன் பெண்களையும் வழிநடத்தி செல்லுங்கள்

உங்களில் எத்தனை பேர் உங்களுடன் பணியாற்றும் பெண் ஊழியர்களின் வளர்ச்சிக்கு உதவி இருக்கிறீர்கள்? பொதுவாகவே உயர் பதவி ஆண்களால் மட்டுமே நிரப்பப்பட்டு பெண்களை வரவிடாமல் தடுப்பதெல்லாம் கூட நடைபெறுகிறது. அதே போல் ஒரு ஆண் ஊழியர், சக பெண் ஊழியருக்காக குரல் கொடுத்து, அவரின் வளர்ச்சிக்கு உதவுவதும் அரிதாகவே உள்ளது. குறிப்பாக அவர்களின் பதவி உயர்வு, சமபள உயர்வு போன்றவைகளுக்கு ஆண்களும் பெண்களுடன் துணை இருந்து அவர்களின் தேவையை மேலதிகாரிகளிடம் எடுத்துரைக்கவேண்டும். உயர் பதவியில் இருக்கும் ஆண்களும், பெண் ஊழியர்களை சமமாக பாவித்து அவர்களுக்கு தரவேண்டிய அங்கீகாரத்தை அவ்வப்போது தருவது நல்லது. 

ஆண், பெண் என இருவரும் இணைந்து ஒத்துழைத்து செயல்படுவதே, தொழில், பணியிடம் என்று எல்லாவற்றிலும் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். ஒரு ஆணாக நீங்கள் சக பெண் ஊழியர்கள், தொழில்முனைவோர்களுக்கு வேண்டிய உதவிகளை, வழிகாட்டுதலை அளித்தால் ஒரு நல்ல சூழ்நிலையும், உயர் இடங்களில் பெண்களை அதிக அளவில் நம்மால் இனி பார்க்கமுடியும்.