விவசாயிகளின் மரணம்: ஒரு மாறுபட்ட பார்வை... 

தற்போது தமிழகத்தில் நடக்கும் விவசாயிகளின் மரணங்கள் எதனால் நடக்கிறது என்றும் அதை எப்படி தடுக்கலாம் என்பதை பற்றியும் இக்கட்டுரையில் பார்க்கலாம்! 

3

தற்போது தமிழகத்தில் நடக்கும் விவசாயிகளின் மரணங்கள் மிகுந்த வருத்தத்தை அளிக்கின்றது, அதைவிட வேதனை அளிப்பது அதைச் சுற்றி நடக்கும் அரசியல். அனைத்து அரசியல் கட்சிகளுமே பரிதாபப்படுவது போன்று காட்டி கொள்கின்றன, தங்கள் இதற்கு மற்ற கட்சிகள் தான் காரணம் என்றும் பழி போடுவதிலே குறியாக இருக்கின்றன.

சரி, என்னதான் பிரச்னை ?
ஒரு மனிதன் சாகும் அளவிற்கு அப்படி என்ன விரக்தி? மன அழுத்தம் ?
இந்த பிரச்னை 2017-ல் தான் முதல் முறை நடக்கின்றதா?
இதுபோன்று வருங்காலத்திலும் நடக்குமா?
இதற்கு தீர்வு இல்லையா?
மாநில அரசு காரணமா?
மத்திய அரசு காரணமா ?
கர்நாடகா காவேரி தண்ணீர் தராதது தான் காரணமா?

பட உதவி: கூகிள்
பட உதவி: கூகிள்

நான் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன் என்ற முறையில், இந்த பிரச்னை பற்றி என்னுடைய புரிதலும் மாறுபட்ட தீர்வையும் இந்த பதிவில் பார்க்கலாம்...

"நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும் வான்இன்று அமையாது ஒழுக்கு"

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உலக பொதுமறையாம் திருக்குறள் சொல்லியது போல், வான்மழை பொய்த்தால் உ(ப)யிர்கள் அழிவது நிச்சயம். இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை வழக்கத்தைவிட 70% குறைவாகவே பெய்துள்ளது. இதனால் பயிர்களின் இற(ழ)ப்பு தவிர்க்க முடியாத ஒன்று.

வடகிழக்கு பருவ மழை பொய்க்கும் என்று முன்னரே துல்லியமாக சொல்லாதது அரசாங்கத்தின் குற்றமா? 

இல்லை, இந்த வருடம் மழை குறைவு என தெரிந்தும் எதோ நம்பிக்கையில் நெல் போன்ற தண்ணீர் அதிகம் தேவை படும் பயிர்கள் சாகுபடி செய்தது விவசாயிகளின் குற்றமா?

உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கு மிஞ்சுமா?

கடந்த ஐந்து வருடங்களில் பயிரிட்ட அனைத்து வரவு செலவுகளை எழுதி வைத்து இருந்தாலும், 2 ஏக்கரில் நெல் பயிரிட ஆகும் செலவு மற்றும் அதில் இருந்து வரும் அதிகபட்ச வருமானம் பற்றி பார்ப்போம்:

*இது நெல் ரகம், கூலி நிலவரம், பாசன அமைப்பு போன்றவற்றை வைத்து வேறுபடும்.

விதை நெல் (IR 20) - ரூ.750
உழவு (டிராக்டர்) - ரூ.12000
அடி உரம் - ரூ.6000
யுரியா - ரூ.2000
பொட்டாஷ், வெப்பம் புண்ணாக்கு - ரூ.2000
பூச்சி மருந்து - ரூ.4000
அறுவடை (இயந்திரம்) - ரூ.4000
நடவு கூலி - ரூ.6000
நீர் பாய்ச்ச கூலி - ரூ.8000
வரப்பு வேலை - ரூ.8000
இதர செலவு - ரூ.5000
--------------------------------------
மொத்த செலவு - ரூ.57,750
--------------------------------------
விளைச்சல் - 5000 Kg
--------------------------------------
நெல் விற்பனை - 5000*ரூ.14 = ரூ. 70,000
வைக்கோல் - ரூ.7000
மொத்த வருமானம் - ரூ.77,000
இலாபம்: ரூ.77,000 - ரூ.57,750 = ரூ.19,250

இதுவே கூலி ஆள் இல்லாமல் முடிந்த வரை சுயமாக வேலை செய்யும் விவசாயக் குடும்பம் என்றால் ரூ.25,000 முதல் ரூ.30,000 வரை இலாபம் பார்க்கலாம். இதற்கு தண்ணீர் கட்டாயம் இருக்க வேண்டும், வேறு எதாவது நோய் தாக்காமல் இருக்க வேண்டும்.

மூன்று மாதம் ஒரு குடும்பம் உழைத்தால் 2 ஏக்கரில் அதிக பட்சம் ரூ.30,000 தான் சம்பாதிக்க முடியம். தமிழ்நாட்டில் பெரும்பாலான விவசாயிகள் சராசரியாக 2-3 ஏக்கர் நிலம்தான் வைத்து இருக்கிறார்கள் எனவே அதிக பட்சம் அவர்களுடைய ஆண்டு வருமான சராசரியாக ரூ.30,000 - 45,000 ருபாய் தான் இருக்க முடியம்.

இந்த வருமானமும் முழுக்க முழுக்க இயற்கையை நம்பியே உள்ளது. சாதகமான பருவ நிலை இல்லை என்றால் இழப்பை தவிர்க்க முடியாது

விவசாயிகள் மரணம் ஏன்?

ஒரு வருடம் விவசாயம் செய்ய முடியவில்லை என்றால், அந்த ஆண்டிற்கான வருமானம் பாதிக்கப்படுவது மட்டும் இல்லாமல் பழைய கடன், இந்த வருடம் வாங்கிய புதிய கடன் இரண்டுக்கும் வட்டி கட்ட முடியாத நிலைக்கு அந்த விவசாயி தள்ளப்படுகிறார். இதில் கொடுமை என்னவென்றால் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயி ஒன்றும் கோடி கணக்கில் கடன் வாங்கியவர் அல்ல, அதிகபட்சம் 2 லட்சம் கடன் தான் இருக்கும்.

சக மனிதன் துன்பப்படுவதை கண்டால் அதை சமூக வலை தளங்களில் ஷேர் செய்து லைக் வாங்கும் மனிதர்கள் இருக்கும் இந்த காலத்தில் வாடிய பயிரை கண்டதும் நெஞ்சு பொறுக்காமல் மாரடைப்பால் இறந்த விவசாயிகள் பற்றியும் செய்திகள் வருகின்றன.

ஊடக செய்திகள் 130 விவசாயிகள் இறந்தார்கள் என்று சொல்கிறது, தமிழக அரசு 17 பேர் என்கிறது, எது உண்மை என்ற ஆராய்ச்சி செய்வது இந்த பதிவின் நோக்கம் இல்லை என்றாலும், விவசாயிகளின் தற்கொலை என்ற செய்தியில் இருக்கும் உண்மையை மட்டும் நாம் உணர்ந்து அதற்கான மாறுபட்ட தீர்வு என்ன என்பதைப் பார்க்கலாம்.

மாறுபட்ட தீர்வு

நம்பகமான வானிலை அறிக்கை

மங்கல்யான் பற்றி நாம் அனைவரும் பெருமையாக பேசலாம், ஆனால் இந்த வருடம் பருவ மழை எந்த அளவு இருக்கும் என்று கணிக்க முடியாத நிலையில் தான் இருக்கிறோம் என்பது வேதனைப்பட வேண்டிய ஒன்று.

இந்த ஆண்டு ஜனவரி 4-ம் தேதி வரை, மழை இருக்கும், தமிழகம் முழுதும் மழை பெய்யலாம் என்று ஒரு பொய்யான தகவலே சொல்ல பட்டது. தீடிரென ஜனவரி 4-ம் தேதி, பருவ மழை முடிவுக்கு வந்ததாக அறிவிப்பு வந்தது. மங்கல்யானை விட மிக முக்கியம், வானிலை மற்றும் பருவ மழை பற்றி துல்லியமாக கணிக்க கூடிய செயற்கைகோள்.

மத்திய மாநில அரசுகள் ஒருங்கிணைத்து, ஒவ்வொரு வருடமும் பருவ மழை பற்றி தெளிவான அறிக்கை தயார் செய்ய வேண்டும். பருவ மழை குறைவாக இருக்கும் என்று தெரிந்தால் அதை மக்கள் அனைவருக்கும் முன்னரே பரப்ப வேண்டும். சரியான பருவ மழை இல்லாத போது காவிரியில் தண்ணீர் வரும், கர்நாடகா திறந்து விடும் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனம்.

காலத்திற்கேற்ற பயிர்

இந்த வருடம் விவசாயம் செய்யாதே - என்று சொல்ல எந்த அரசுக்கும் துணிவு இல்லை. விவசாயம் என்பது முழுக்க முழுக்க இயற்கையை சார்ந்தே இருக்கும், இதை நாம் மறுக்க முடியாது. எனவே, மழையின் அளவை வைத்து, என்னென்ன பயிர் செய்யலாம் என்று ஒரு அட்டவணை ஒவ்வொரு பஞ்சாயத்து அளவில் தயாரிக்க வேண்டும். தவறான பயிர் செய்து நட்டம் அடைவதை விட சும்மா இருப்பதே மேல்.

பயிர் பாதுகாப்பு திட்டம்

இன்று மக்களின் உயிர் பாதுகாப்பு மற்றும் எதிர்பாராத மருத்துவ செலவுகளை சமாளிக்க இன்சூரன்ஸ் திட்டம் இருப்பதை போன்று அனைத்து விவசாயிக்கும் பயிர் பாதுகாப்பு அளிக்க வேண்டியது மிக முக்கியம். பிரதம மந்திரியின் பயிர் பாதுகாப்பு திட்டம் தமிழ்நாட்டில் இன்னும் 10% கூட அமல் படுத்தவில்லை என்பதே உண்மை.

மாற்று வருமானம்

விவசாயம் என்பது நிலமும் பயிரும் மட்டுமே அல்ல, அதனோடு ஆடு, மாடு, கோழி சேர்த்து ஒருங்கிணைந்த பண்ணையம் ஆகவே இருந்து வந்துள்ளது. பருவ மழை பொய்த்து போகும் காலங்களில் மாற்று வருமானம் கைக் கொடுத்து உள்ளது. விவசாயிகள் அனைவருக்கும் இதன் பொருளாதார முக்கியத்துவத்தை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியம்.

விவசாயிகள் அனைவருக்கும் அடிப்படை பொருளாதார அறிவு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது நம் அனைவரின் கடமை ஆகும். வரவு செலவு கணக்கு கட்டாயம் தெரிந்து இருந்தால் மட்டுமே இது போன்ற சூழ்நிலைகளை சமாளிக்க முடியும். 

மழை பெய்வதும் பொய்ப்பதும் நமது கையில் இல்லை, ஆனால் சரியான திட்டமிடல் மூலம், நட்டத்தை தவிர்த்து சராசரி வாழ்க்கை வாழ முடியும் என்பதே என்னுடைய கருத்து.

பொறுப்புத்துறப்பு: கட்டுரையாளர் செல்வகுமார். இவர் Rainbowagri என்னும் விவசாயிகளை இணையத்தில் இணைக்கும் நிறுவனத்தின் நிறுவனர். இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துக்கள் அவரது சொந்த கருத்துக்கள். இதற்கு யுவர்ஸ்டோரி பொறுப்பேற்காது. 

Founder and CEO of RainbowAgri - Internet of Farmers. On a mission to connect every Indian Farmer on a digital network and empower digital marketplace for farmers.

Related Stories