மாவட்ட ஆட்சியரின் ஓட்டுனருக்கு கிடைத்த மறக்கமுடியாத பிரியாவிடை...

பணி ஓய்வு அடைந்த ஓட்டுனர் பரமசிவனை, அவரை வீட்டிற்கு காரில் ஓட்டிச் சென்ற கரூர் மாவட்ட ஆட்சியர்!

0

வேலையில் இருந்து பணி ஓய்வு பெரும் நாள் ஒவ்வொருவருக்கும் ஒரு விதமாக அமையும். பெரும் பதவியில் இருப்போருக்கு பெரிய விழா, வாழ்த்து மடல் என நடப்பது இயல்பு தான். ஆனால் ஒட்டுனர்கள், காவலாளிகளுக்கு அது போன்ற சிறந்த பிரியாவிடை கிடைப்பதில்லை. ஆனால் இங்கு கரூர் மாவட்ட ஆட்சியர் தனது ஓட்டுனருக்கு மறக்கமுடியாத பிரியாவிடையை கொடுத்து மகிழ்வித்துள்ளார்.

அரசுத் துறையில் 34 ஆண்டுகள் பணியாற்றிய பரமசிவன் கடந்த திங்கள்கிழமை பணி ஓய்வுபெற்றார். அவர் ஓர் நல்ல பணியாளர் மற்றும் சிறந்த ஊழியர் என்பதால் அவரை கௌரவிக்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் டி. அன்பழகன், பரமசிவன் மற்றும் அவரது மனைவியை அலுவலகத்திற்கு அழைத்து சிறப்பித்துள்ளார்.

தங்க நாணயம் கொடுத்து, பொன்னாடை போற்றி, 1996ல் இருந்து ஒரு ஓட்டுனராக பல ஆட்சியர்களுக்கு சிறந்து பணியாற்றியது பற்றி புகழ்ந்துள்ளார். பரமசிவனின் பணி நாளின் கடைசி வேலை, ஆட்சியரை வீட்டில் சேர்ப்பது தான். ஆனால் ஆட்சியர் அன்பழகன் தனது ஓட்டுனரையும் அவரது மனைவியையும் பின் சீட்டில் அமர்த்தி அவரே வீட்டுக்கு ஓட்டிச் சென்றார்.

“இது திட்டமிட்ட செயல் இல்லை. அந்த நேரத்தில் நான் அவர்களை பின் சீட்டில் அமர்த்தி அழைத்துச் செல்ல வேண்டும் என்று நினைத்தேன். இது எனக்கும் ஒரு நல்ல அனுபவம்,” என்கிறார் ஆட்சியர் அன்பழகன்.

அவர்களை வீட்டில் விட்டு அரை மணி நேரம் அவரது வீட்டில் நேரம் செலவழித்துவிட்டு தான் திரும்பியுள்ளார்.

“1996 முதல் கரூர் மாவட்டத்தின் பல ஆட்சியர்களுக்கு நான் பணியாற்றியிருக்கிறேன். ஆனால், ஒரு கலெக்டர் என்னை வீட்டிற்கு அழைத்துச் செல்வார் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை. இது கற்பனைக்கே அப்பாற்பட்டது,”

என நெகிழ்கிறார் பரமசிவன் இந்து நாளிதழுக்கு அளித்த பேட்டியில். இது மிகப்பெரிய விஷயம் இல்லை என பலர் கருதினாலும், இந்த செயல் ஓட்டுனருக்கு ஒரு சிறந்த நாளாக நிச்சயம் அமைந்திருக்கும். 

Related Stories

Stories by Mahmoodha Nowshin