பாட்டிலில் கூல் இளநீர் விற்பனையில் ரூ 60 லட்சம் வருவாய்: அசத்தும் அண்டை மாநிலக்காரர்!

63

ஆடி காத்து அடிப்பதுடன், ஆடிக்கு கிடைத்த ஆஃபராய் மண்டையை பிளக்கும் வெயிலும் சேர்ந்து அடிப்பதன் விளைவாய், மக்கள் ரோட்டோர இளநீர் கடையை தேடி அலைந்து வருகின்றனறர். அயல் நாட்டு பானங்கள் எல்லாம் அக்கம் பக்கத்து கடைகளிலே கிடைக்க, சுட்டெரிக்கும் கோடையிலும் உடலை குளுகுளுவாக்கும் இயற்கையின் வரமாம் இளநீர் இல்லத்தின் அருகிலேயே கிடைப்பதில்லை... ஏன்?

ஏன் எனும் இரு எழுத்துக்கான விடையை உருவாக்க வேண்டும் என்று முடிவு செய்து, ’இளநீர் கூல்’ என்ற பெயரில் பாட்டில் இளநீர்களை தென்னிந்தியா முழுவதும் விற்பனை செய்து வருகிறார் சேட்டன் தேசத்துக்காரரான பைஜூ நெடும்கெரி.

கேரளாவின் எர்ணாகுளத்தை சேர்ந்த பைஜூ, விவசாயக் குடும்பத்தை சேர்ந்தவர். படித்த முடித்தவுடன், செய்யும் முதல் பணியே தன் சொந்த தொழிலாக இருக்க வேண்டும் என்று தீர்மானித்துள்ளார். இதனால், கல்லூரில் படித்துக் கொண்டிருந்தபோதே, கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரித்துதரும் நோக்கில் தொடங்கப்பட்ட முதலமைச்சரின் ‘ரோஜ்கர் யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ 30, 000 கடன்தொகையாக பெற்றிருக்கிறார். கிடைத்த சொற்ப பணத்தை கொண்டு, மொசைக், டைல்ஸ் கடை ஒன்றை வைத்திருக்கிறார்.

அனுபவமற்ற தொழிலில் தொடக்கத்திலே நஷ்டம். கையிலிருந்த பணம் கரைந்து போனதுடன், சொந்த வீட்டையும் இழந்திருக்கிறார். மொசைக் கல் கொடுத்த பெரும் அடியில் இருந்து பைஜூ மீண்டு வருவதற்கு, உறுதுணையாக இருந்துள்ளனர் அவருடைய பெற்றோர்கள். அடுத்ததாய், இரண்டு டஜனுக்கும் அதிகமான பஞ்சாயத்துக்களுக்கு சாண எரிவாயு கலன்களை அமைத்து கொடுத்திருக்கிறார். அதற்கடுத்த ஆண்டுகளில், பாலக்காட்டின் பிளாச்சிமாடாவில் நடைபெற்ற போராட்டத்துக்கு பின் பைஜூவின் வாழ்க்கையே மாறிப்போனது. 

தண்ணீருக்காக போராடுவது இந்தியர்களுக்கு புதிதல்ல. ஆனால், கோகோ கோலாவிற்கு எதிரான பிளாச்சிமாடா போராட்டத்தினை உலகெங்கும் உள்ள மக்கள் வாழ்வாதார மூலவளங்கள் மீதான தங்கள் உரிமைகளை காப்பாற்றுவதற்கான நடத்தும் ஒரு போராட்டமாக பார்த்து ஆதரவு அளித்தனர். எங்கு பார்ப்பினும் பச்சை பசேல், சுத்தமான காற்று மற்றும் குடிநீர் என்று விளங்கும் கேரளாவின் நெற்களஞ்சியமான பாலக்காட்டில் 2000ம் ஆண்டில் கோகோ கோலா நிறுவனம் ஒரு தொழிற்சாலையை கட்டியது. 

தொடக்கத்தில் கிராமப்புற மக்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கி வந்ததால், மக்கள் கோகோ கோலாவை வரவேற்றனர். ஆனால், நாளடைவில் நிலத்தடி நீரின் மட்டம் குறைந்ததுடன், மாசுவும் கலந்தது. மக்கள் முதல் எதிர்ப்பு குரலை பதிவு செய்தனர். தொடர்ச்சியாய் தொழிற்சாலைக்கு கொடுக்கப்பட்ட அழுத்தத்தில், தொழிற்சாலையை மூட வைத்தனர். இப்போராட்டத்தில் கலந்துக் கொண்ட பிறகே, வாழ்வின் திசையே மாறிப்போனது என்கிறார் பைஜூ. 

“கோகோ கோலோவுக்கான மாற்றை உருவாக்குவதில் முனைப்பாக இருந்தேன். 2010ம் ஆண்டு வாக்கில் இளநீரின் விலையும் மிகவும் மலிவாக இருந்தது. ஒரு இளநீர் 3 ரூபாயுக்கு தான் விற்பனையாகியது. பல தரப்பட்ட சோதனைகளுக்கு பின், 250மி.லி இளநீரை பாட்டிலில் அடைத்து 25 ரூபாயுக்கு விற்றேன். தொடக்கமாய் ரூ 32 லட்சம் முதலீடு செய்து, தொழிற்சாலையை உருவாக்கினேன்,”

எனும் அவர், உணவு வல்லுநர்களையும் பணிக்கு அமர்த்தி கேரளா வேளாண் மதிப்புக்கூட்டு பொருட்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தை (கவ்பார்ட்) தொடங்கினார். பைஜூவின் பிரதான கஸ்டமர்களாக விளங்கிய டாஸ்மாக் கடைகள் தடை செய்யப்பட்ட பின், பைஜூவின் விற்பனையில் சரிவு கண்டது. ஆனால், இதற்கு முன் செய்த தொழில்கள் தந்த தோல்வி அனுபவத்தால், இதை ஈடுசெய்தார். 

பாட்டிலில் அடைக்கப்பட்ட 250 மி.லி இளநீர் 40 ரூபாயுக்கும், கேனில் அடைக்கப்பட்ட 250மி.லி இளநீர் 45 ரூபாயுக்கும் விற்பனை செய்யும் கவ்பார்ட் நாள்தோறும் 9,000 பாட்டில் இளநீர்களை உற்பத்தி செய்து வருகிறது. 

“தொடக்கத்தில் இளநீரின் விலை மலிவாக இருந்தது. ஆனால், இப்போது கொள்முதல் விலையே அதிகமாக இருப்பதால், குறைந்த விலையில் விற்க முடியவில்லை. பாட்டிலில் அடைக்கப்படும் இளநீர் மூன்று மாதங்களுக்கு கெடாமலிருக்கும். பாட்டிலை வாங்கி மூடியை திறந்து விட்டால், 3 முதல் 4 மணி நேரத்துக்குள் இளநீர் புளித்துவிடும்...” 

எனும் பைஜூவின் ‘இளநீர் கூல்’ கடந்த நிதியாண்டில் ரூ 60 லட்சம் வருவாய் ஈட்டியுள்ளது. 32 தயாரிப்புக் கூடங்களுடன் செயல்படும் இளநீர் கூலின் தொழில்நுட்பம், ஒரிசா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழகத்திலும் பின்பற்றப்பட்டு வருகிறது. இளநீர் போன்று இயற்கைப் பானங்களை மக்கள் அருந்தவேண்டும் என்று பைஜூ அடுத்ததாய், ‘பாட்டில் கரும்புச்சாறு’-யை அறிமுகப்படுத்தும் நோக்கில் இருக்கிறார். 

தவிர, தான் தொழில் முனைவோர் ஆகுவதற்குள் சந்தித்தச் சவால்களில் கிடைத்த அனுபவத்தைக் கொண்டு, வேளாண் மற்றும் உணவுப் பதப்படுத்துதல் சார்ந்து தொழில் முனைவராகும் என்ற சிறந்த யோசனையில் உள்ளவர்களுக்கு ஏ டூ இசட் அனைத்து உதவிகளையும் செய்யக்கூடிய ‘அக்ரோ பார்க்’ என்னும் இன்குபெஷன் மையத்தையும் நடத்தி வருகிறார். விவசாயம், உணவு பதப்படுத்துதல், பால், கோழிப்பண்ணை, கைத்தறி, காதி, மீன் பதப்படுத்துதல், பாரம்பரியத் தொழில், மற்றும் நாட்டுப்புற கைவினை தொழில்களை தொடங்கும் முனைப்பில் இருப்போருக்கு, தொழிற்சாலைக்கான இடம், மின்சாரம், இயந்திரங்கள், உரிமம் பெறல், சந்தைப்படுத்துதல் என ஒட்டு மொத்த ஏற்பாடுகளையும் செய்து கொடுக்கிறார்.

தகவல் உதவி : டெக்கன் க்ரானிக்கல்

Related Stories

Stories by jaishree