ஏழைகளிடம் சிரிப்பை வரவழைக்கும் 'ஸ்மைலிஸ் இந்தியா'வின் முயற்சி!

0

பள்ளி நாட்களிலே கூட க்ரியேட்டிவ்வாக ஏதாவது செய்யவேண்டும் என்று நினைத்தவர் விஷ்ணு சோமன். அதில் ஆச்சரியம் கொள்வதற்கு ஏதுமில்லை. அவர் மெக்கானிக்கல் என்ஜினியரிங் படிக்கும்போது "ஸ்மைலிஸ் இந்தியா" (Simleys India), என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தை, சமூகத்தில் கலாச்சாரமயமாகும் கலை, பண்பாடு மற்றும் விளையாட்டை வளர்க்கும் நோக்கத்துடன் தொடங்கினார். ஆரம்ப நிலையில், தனிப்பட்ட நபர்கள் மற்றும் தன்னார்வலர்களிடம் உள்ள ஆர்வத்தை கண்டறிந்து உற்சாகப்படுத்துவது மற்றும் ஊக்கப்படுத்துவதாக இருந்தது.

“தன்னார்வலராக சேவை செய்யும் பழக்கம் என் பள்ளியின் பாடத்தில் ஒரு பகுதி. அதுதான் என்னுடைய பேரார்வத்தை வெளிப்படுத்துவதற்கான முதல் தளமாக அமைந்தது. பூமி மற்றும் துபையில் உள்ள சில அமைப்புகளுடன் சேர்ந்து சேவை புரிந்தபோது, சர்வதேச அரங்கில் என் எண்ணங்களை செயல்படுத்திப்பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது” என்கிறார் விஷ்ணு.

இந்தியா திரும்பிய விஷ்ணு, 2011ம் ஆண்டு தன்னுடைய சொந்த தன்னார்வலர் குழுவைத் தொடங்கினார். தற்போது அவர் எனேபிள் இந்தியா அமைப்பில் தன்னார்வலர் மேலாளராக வேலைபார்க்கிறார். தன்னார்வலர்கள் மற்றும் வேலை பயற்சித் திட்டங்களையும் கவனித்துக்கொள்கிறார்.

நோக்கம்

“கலை, கலாச்சாரம், விளையாட்டு மற்றும் தொழில்நுட்பத்தை வசதி குறைவான மக்களுக்கு எடுத்துச் செல்வதும் அவர்களுடைய பேரார்வத்தை புரிந்துகொண்டு, திறனை வெளிப்படுத்த உதவுவதுமே எங்களுடைய நோக்கம். சமூகத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் தங்கள் பேரார்வத்தை வெளிப்படுத்தவதற்கு உதவி தேவைப்படுகிறது என்று நாங்கள் நம்புகிறோம். அவர்களுடைய திறனை ஒரு பணியுடன் இணைக்க எங்களுடைய அமைப்பின் மூலம் முயற்சி செய்கிறோம். எங்களிடம் பணியை மாற்றிக்கொண்டு பகுதிநேரமாக பணியாற்றும் தன்னார்வலர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தாங்கள் விரும்பும் துறைகளில் கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள்” என்கிறார் விஷ்ணு.

இங்கே சில சுவாரசியமான தொடக்கநிலை தன்னார்வலர் குழுக்கள்…

ஒரு நோக்கத்திற்காக ஒவியம் தீட்டுதல் – ஒரு குறிப்பிட்ட குறிக்கோளுக்காக பள்ளிச் சுவர்கள், அனாதை இல்லங்கள், நூலகங்கள் மற்றும் சில இடங்களில் தன்னார்வலர்களும், பங்கேற்பாளர்களும் சுவர் ஒவியங்கள் வரைதல். விஷ்ணு கூறுகிறார், “ஒரு சுவரை பாதுகாக்கும் நோக்கத்தைத் தவிர்த்து, (சுவர் எழுத்துக்கள் மற்றும் வண்ண ஓவியங்கள்) ஒரு செய்தியை சொல்வதற்கு சிறந்த வழிகளில் இதுவும் ஒன்று.”

மறுசுழற்சி செய்வோம் - குழு உறுப்பினர்களும் நிபுணர்களும் மறுசுழற்சி பயிற்சிப்பட்டறைகளை நடத்துவார்கள். அதில் தன்னார்வலர்கள் மற்றும் மாணவர்களுக்கு மறுசுழற்சி மற்றும் கழிவு மேலாண்மை அடிப்படைகளை கற்றுத்தரப்படுகின்றன.

ஸ்மைல் டிவி – அமெச்சூர் புகைப்படக் கலைஞர்கள் அந்தக் குழுவில் இருக்கிறார்கள். தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் சிறந்த உள்ளடக்கத்தை உருவாக்க தன்னார்வலர்கள் உதவுகிறார்கள். புரொபஷனல் போட்டோகிராபி மற்றும் திரைப்படம் தயாரித்தல் ஆகியவை செலவுமிக்கவையாக இருக்கின்றன. இந்த சேவைகளை தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் வழக்கமாக வழங்கமுடியாது.

ஆண்டுதோறும் பொம்மைகள் முயற்சி - இது ஒரு புதிய தொடக்கம். நல்ல நிலையில் உள்ள பொம்மைகளை தன்னார்வலர்கள் சேகரிப்பார்கள். பின்னர் அதனை அவர்கள் பிரித்து, சுத்தம் செய்து சேரிகளில் வாழும் குழந்தைகளுக்கு மற்றும் அரசுப் பள்ளிகளுக்கும் வழங்குவார்கள். விஷ்ணு கூறுகிறார், “எந்த தன்னார்வலரும் சொந்த ஐடியாவுடன் வரலாம். நாங்கள் அதை செயல்படுத்து முயற்சி செய்வோம். சில புதிய எண்ணங்கள்: தெருவில் ஐஸ்கிரிம்கள், மேக் ஓவர் மேனியா(கண் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு), அனாதை இல்லங்களில் சண்டே சர்ப்ரைஸ் மற்றும் சில.”

தாண்டவ் – ஒரு வித்தியாசமான நடனத் திருவிழா

பார்வைக் குறைபாடுள்ள, காதுகேளாத, உடல் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகள், டவுன் சிண்ட்ரோம் உள்ளவர்கள், ஆட்டிசம், செரிபரல் பால்ஸி மற்றும் பலரை தாண்டவ் திருவிழா ஒருங்கிணைக்கிறது. சமூகத்தில் அடிமட்டத்தில் வாழும் குடும்பங்களைச் சேர்ந்த மற்றும் அனாதை இல்லங்களில் இருக்கும் குழந்தைகள் அவர்களிடம் தன்னார்வலர்களாக சேர்கிறார்கள். அவர்கள் பார்வைக் குறைபாடுள்ளவர்களுக்கு வழிகாட்டியாகவும், அல்லது காது கேளாதவர்களுக்கு சைகை மொழியை பயிற்றுவிக்கிறவர்களாகவும் இருக்கிறார்கள். இசையின் ரிதத்தைப் புரிந்துகொள்ள, இசைக்குத் தகுந்தாற்போல அவர்களுக்கு தன்னார்வலர்கள் தொடுதல் மூலம் புரியவைக்கிறார்கள்.

“எல்லா பின்னணிகளில் இருந்தும் வரும் மக்கள் இந்த ஒற்றுமையைக் கொண்டாடுகிறார்கள். குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளான மக்கள் பல்வேறுபட்ட நடனங்களை ஆடவும், அவர்களுடைய சிக்கல்களை வெளிப்படுத்தவும் இது களம் அமைத்துத் தருகிறது” என்கிறார் விஷ்ணு.

நல்லவற்றுக்கான சமூகவலைதள தினத்தை ஸ்மைலிஸ் இந்தியா கொண்டாடுகிறது. அன்று பெங்களூருவைச் சேர்ந்த தன்னார்வலர்கள் தன்னார்வலத் தொண்டு நிறுவனங்கள் சமூக வலைதளங்களில் கால்பதிக்க உதவுகிறார்கள்.

தாக்கம்

“2014ம் ஆண்டில் 122 தன்னார்வலர்கள் (ஸ்மைலிஸில் இருந்து) 200க்கும் அதிகமான குழந்தைகளுக்கு ஒரே நாளில்(தாண்டவ் நடனத் திருவிழா) உதவினார்கள். குழந்தைகள் ஏழு வித்தியாசமான நடனங்களை வெளிப்படுத்தினார்கள் ” என்று விவரிக்கிறார் விஷ்ணு.

தாண்டவ் அவர்களுடைய மிகப்பெரிய நிகழ்வாக இருக்கிறது. அது எண்ணற்ற தன்னார்வலர்களை கொண்டுவந்தது. “நாங்கள் எங்களுடைய தன்னார்வலர்களை தக்கவைத்துக்கொள்ள முயற்சி செய்வதில்லை. ஆனால் அவர்களை நாடு முழுமைக்குமாக உருவாக்கமுடியும் மற்றும் கட்டமைக்கமுடியும் என்று நம்புகிறோம். எங்களுடைய அடுத்த தொடக்கம் இந்த எண்ணைத்தை அடிப்படையாகக் கொண்டது. அது தன்னார்வலர் தொழிற்சாலை(Volunteer Factory) என்று அழைக்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் 5 ஆயிரம் தன்னார்வலர்களை சேர்க்கும் நோக்கம் வைத்திருக்கிறோம்” என்கிறார் நம்பிக்கையான குரலில் விஷ்ணு.

குழுவினர்

விஷ்ணுவைத் தவிர்த்து மற்ற முக்கிய உறுப்பினர்கள்: ரெஜி, விஷால், அபூர்வா மற்றும் திவ்யா. விஷ்ணு, அவர்களுடைய பொறுப்புகளையும் கடமைகளையும் விளக்குகிறார்: “நாகாலாந்தில் ரெஜி பள்ளிக்கூடம் நடத்துகிறார். தற்போது அவர் ஸ்மைலிஸ் டிவியை பார்த்துக்கொள்கிறார், விரைவில் சில நடவடிக்கைகளை நாகலாந்தில் மேற்கொள்ள இருக்கிறோம். விஷால் சோமன், என் சகோதரர் – அவர் ஒரு பிரிலேன்ஸ் போட்டோகிராபர், ஸ்மைலிஸின் முழு ஊடகத் தொடர்பையும் கவனித்துக்கொள்கிறார். அபூர்வா ஒரு தன்னார்வலர், எங்களுக்கான கார்பரேட் நிகழ்வுகளை வழிநடத்துகிறார். திவ்யா மிகவும் இளையவர், கல்லூரிகளில் பிரச்சாரம் செய்ய தயாராகி வருகிறார்.”

தற்போது அவர்கள் கூட்டு நிதி சேகரிப்பில் இருக்கிறார்கள். கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து மூலப் பொருட்கள் மற்றும் ஒரு நோக்கத்திற்காக ஓவியம் தீட்டுதல் (Paint for a Cause) போல நிகழ்ச்சிகளுக்கும் உதவி கிடைத்திருக்கிறது. விஷ்ணுவின் கூற்றுப்படி சில அரசு வேலைகளும் கிடைத்தன. “அரசுடன் சேர்ந்து சில பணிகளை தொடங்கவுள்ளோம். இது எங்களுக்கு முதல்முறை என்பதால் ஆச்சர்யத்தில் இருக்கிறோம். அந்தப் பணி எங்களுக்கு முனனேற்றமாக அமையும்.”

தங்களுடைய சவால்களைப் பற்றிப் பேசினார் விஷ்ணு, “நல்ல தொடக்க பணிகளுக்காக தன்னார்வலர்களை அதிகரிப்பதுதான் முக்கியமான சவாலாக இருக்கிறது. இந்த ஆண்டில் மாணவர்களை தன்னார்வலர்களாகப் பார்ப்போம். இப்போது நாங்கள் மேலும் பல பணிகளை செயல்படுத்த வேலை செய்துவருகிறோம். அது மாணவர்களுக்கு விருப்பமானதாக இருக்கும்.”

ஸ்மைலிஸ் இந்தியா மற்ற அமைப்புகளைவிட சிறந்ததாக அமைந்திருப்பது எப்படி என்று அவர் கூறுகிறார், “எங்களுடைய தன்னார்வலர்களின் பேரார்வத்துடன் சேர்ந்த பணிகளைத் தருகிறோம். அது ஆர்வமிக்க குழுவினரை உருவாக்குகிறது.”

விளிம்பு நிலை மனிதர்களின் சமூகத்தை நேர்மறையான சிந்தனையை உள்ளடக்கிய சமூகமாக உருவாக்குவது விஷ்ணுவின் கனவு. அவரது பொறுப்புணர்வுக்கும் வாழ்க்கை அனுபவத்துக்கும் வாழ்த்து தெரிவிப்போம்.

ஆக்கம்: SNIGDHA SINHA தமிழில்: தருண் கார்த்தி