சிதைந்துப் போன சென்னையை சுத்தம் செய்து சிங்காரமாக்கும் தன்னார்வலர்கள்!

0

வெள்ளம் புகுந்த வீடுகளை ப்ளீச்சிங் பவுடர் போட்டுக் கழுவ வேண்டும், கழிவு நீர் கலந்த மழை வெள்ளத்தில் மூழ்கி இருந்த பொருட்கள், பொம்மைகளை உபயோகப்படுத்தக் கூடாது, கொதிக்க வைத்த குடிநீரை மட்டுமே குடிக்க வேண்டும், நோய்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பூசிகள் போட்டுக் கொள்ள வேண்டும், இவற்றையெல்லாம் தாண்டியும் காய்ச்சல் வந்தால் நிலவேம்பு குடிநீர் வைத்துக் குடிக்க வேண்டும் என மீட்புப் பணிக்கு பிறகு பல வரும் முன் காக்கும் நோய் தடுக்கும் யுக்திகளும், அறிவுரைகளும் பல புறம் இருந்து வந்தவாறே இருக்கின்றன.

மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைத்திருப்பவர்களை பாதுகாக்க தடுப்பூசி, கொசு வலை போன்ற தற்காலிக முயற்சிகள் எடுக்கப் பட்டிருந்தாலுமே, காலரா, டெங்கு, மலேரியா போன்ற தொற்று நோய்கள் பெருமளவில் பரவாமல் இருக்க, குவிந்துக் கிடக்கும் குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டிய கட்டாயம் உருவாகியிருக்கிறது. வெள்ளப் பெருக்கிற்குப் பிறகு, இதுவரை, தொற்று நோய்கள் எதுவும் பரவத் தொடங்கவில்லை என்றாலுமே, மலை போல குவிந்து கிடக்கும் குப்பைகளால், பல நோய்கள் பரவு வாய்ப்புகள் இருக்கின்றன என தொடர்ந்து மருத்துவர்கள் எச்சரித்து வருகின்றனர்.

கோட்டூர்புரம், கே.கே நகர், வேளச்சேரி, அசோக் நகர், ஜாஃபர்கான் பேட்டை, தி.நகர், ஈக்காட்டுத்தாங்கல் என குடியிருப்புகள் நிறைந்திருக்கும் இடங்களில் தான் அதிகளவில் குப்பை கூடியிருக்கிறது. கூவம் மற்றும் அடையாற்றில், வெள்ளப்பெருக்கால் மிதந்து வரும் ஃபிரிட்ஜ், பீரோ, டீ.வி போன்றவற்றை பிடிப்பதற்காக நின்றவர்கள் ஒருபுறமெனில் , உபயோகப்படுத்த முடியாத சோஃபா, நாற்காலிகள், மேசைகள், மெத்தைகள் போன்றவற்றை முறையாக அப்புறப்படுத்த வசதி இல்லாமல் தவிக்கின்றனர் மறுபுறம் .

சிங்காரச் சென்னை குப்பை மேடாய் கிடப்பதை பார்த்து சகித்து கொள்ள முடியாத சென்னை மற்றும் பிறநகர வாசிகள் களத்தில் யோசிக்காமல் குதித்துள்ளனர். சேறும் சகதியுமாக உள்ள இடங்களை சுத்தப்படுத்தும் பணியில், அரசு சுகாதார ஊழியர்களை நியமித்துள்ளது. இருப்பினும் தன்னார்வலர்கள் மற்றும் இளைஞர்கள் பலர், குழுக்களாக இணைந்து செயல்படத் தொடங்கியிருக்கின்றனர். ஏறத்தாழ பத்து டன் குப்பை அகற்றப்பட்டப் பின்னரும் கூட சென்னை நகரம் முற்றிலும் சுத்தமாகவில்லை என்கின்றனர் மக்கள்.

clean chennai campaign group
clean chennai campaign group

'க்ளீன் சென்னை'

‘க்ளீன் சென்னை கேம்பெயின்’, என்று சென்னையை சுத்தம் செய்யும் நிகழ்வை ஒருங்கிணைத்திருக்கும் கார்திக்கேயனிடம் பேசிய போது,

“என்னுடைய தொண்டு நிறுவனத்தின் பெயர் ‘சர்வேஷா’. துணை ஒருங்கிணைப்பாளர்கள், அகில் பிரகாஷ் மற்றும் பரணிதரன் அரசு சாரா அமைப்புகளில் வேலை செய்திருக்கின்றனர். பரணிதரன் ‘பாஸ்’ என்றொரு தொண்டு நிறுவனம் நடத்துகிறார். குழுவில், முனாஃப் மட்டும் தான் சென்னையை சேர்ந்தவர், மற்ற அனைவருக்கும் பிறப்பிடங்கள் வெளி மாவட்டங்கள் தான். பல களங்களில் சந்தித்தப் போது பழக்கம் ஏற்பட்டு, இன்று, இப்படி ஒரு விளைவுக்காக ஒன்றாகியிருக்கிறோம். 

இப்போது,மொத்தமாக 600 பேர் இருக்கின்றனர், இன்று இரவுக்குள் எப்படியும் ஆயிரம் பேர் சேர்ந்து விடுவார்கள் என நம்புகிறோம். ஜாஃபர்கான் பேட்டையை சுத்தம் செய்வதற்கு அனுமதி வாங்கியிருக்கிறோம். நாளை, (டிசம்பர் 13,2015) ஜாஃபர்கான் பேட்டை முழுவதையுமே சுத்தம் செய்வதாய் திட்டம். இன்று, நடத்தவிருக்கும் கூட்டத்தில், துடைப்பம், ப்ளீச்சிங் பவுடர், கையுறைகள், முகமூடிகள் ஆகியவை கொண்ட கிட்-ஐ கொடுத்து, செயல்முறை விளக்கங்கள் அளிப்பதாய் இருக்கிறோம்

மீட்புப் பணிகளின் போது, ப்ளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் கொடுத்துக் கொண்டிருந்ததனால், மலை மலையாய் காலி பாட்டில்கள் குப்பைகளாக குவிந்துக் கிடக்கிறது. மேலும், எலி மற்றும் கொசுவினால் நோய்கள் ஏற்பட பெரிய வாய்ப்பு இருக்கிறது. அதனால், இதை உடனடியாக சுத்தம் செய்தே ஆக வேண்டும் என முடிவு செய்தோம்.

மேலும், மிகப் பெரிய இளைஞர் படை ஒன்று உருவாகியிருக்கிறது, இந்த நிலை சரியான பிறகும்கூட, அது கலைக்கப்படாமல் இருக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது”, என்கிறார்.

சென்னை ரன்னர்ஸ் & சென்னை ட்ரெக்கிங்

‘சென்னை ரன்னர்ஸ்’ மற்றும் ‘சென்னை ட்ரெக்கிங்’ குழுவை சேர்ந்த தன்னார்வலர்களும் நாளை சுத்தம் செய்ய களமிறங்குகிறார்கள். ‘சென்னை ரன்னர்ஸ்’ குழுவை சார்ந்த ப்ரீத்தி அகல்யமிடம் பேசிய போது,

“நாளை, சென்னையின் எட்டுப் பகுதிகளை சுத்தம் செய்வதாய் திட்டம். தற்போதைய நிலையில், சுத்தம் செய்வது இமாலய வேலையாக இருக்கிறது. நகராட்சிக்கும் குப்பைகளை அப்புறப்படுத்துவதில் உதவி தேவைப் படுகிறது, எங்களால் ஆன உதவியை செய்வோம். ஒவ்வொரு பகுதியிலும் நூறு, இருநூறு தன்னார்வலர்கள் இருக்கிறார்கள். இத்தனை உற்சாகமான தன்னார்வலர்கள் இருப்பது, கூடுதல் சக்தி அளிப்பதாய் உணர்கிறோம். உதவ வரும் தன்னார்வலர்களிடம் ‘உங்கள் உடல் நலன் முதலில் முக்கியம்’ என அறிவுறுத்தியிருக்கிறோம். களத்தில் இருப்பவர்களுக்கு கிருமிகளாலும், நுண்ணுயிர்களாலும் பாதிப்பு ஏற்படாமல் இருக்க மருத்துவ ரீதியாகயும், தயாராக இருக்கிறோம்.

இந்த சமயத்தில் நான் சொல்ல நினைக்கும் மற்றொரு விஷயம், மறு சுழற்சி செய்வது. அதைப் பற்றி பேச நேரம் இல்லை என பலர் சொன்னாலுமே, மறு சுழற்சி இப்போது மிக அவசியமான ஒன்றெனத் தான் நான் நினைக்கிறேன். ஏனென்றால், இந்தக் குப்பைகள், ஒரே இரவில் உருவானவை அல்ல; பல ஆண்டுகளாக தொடரும் நம் சீரில்லாத பழக்க வழக்கங்களில் விளைவு தான் இது. விழிப்புணர்வு ஏற்பட இதுவும் ஒரு காரணமாக இருக்கும் என நம்புகிறோம்.”

நகரை சுத்தம் செய்யும் நோக்கோடு, திரை நடிகர்கள், அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் மற்றும் பல அமைப்புகள் களமிறங்கியுள்ளது. பிரச்சனை ஏற்படும் போதுதான் தீர்வு பிறக்கும் என்பது நிதர்சன உண்மை. குப்பை மேடுகளிலிருந்து விடுபட்ட சிங்காரச் சென்னையை கூடிய விரைவில் ரசிக்கத் தயாராகுவோம். 

அவ்வளவு பெரிய வெள்ளத்தையே, எதிர்நீச்சல் போட்டுக் கடந்திருக்கிறோம், குவிந்து கிடக்கும் இந்த அசுத்தத்தை சுத்தம் செய்ய மாட்டோமா என்ன?