தீபா அடைக்கலவன் செய்யும் ’பலகாரம்’- வீட்டில் இருந்து தொழில் தொடங்கிய ஹோம்ப்ரூனர்! 

வீட்டில் சும்மா இருக்கப் பிடிக்காத தீபா, தனக்கான தொழிலை ஏற்படுத்திக் கொண்டு மெல்ல வளர்ந்து வருகிறார்.

0

உழைக்கும் பெண்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே இருப்பது நம்பிக்கையளிக்கும் ஒரு விஷயம். பொருளாதார விடுதலை, பெண் விடுதலைக்கு முக்கியமானதொரு ஊன்றுகோலாக இருக்கிறது. ஆனால், பல்வேறு தருணங்களில், பெண் தன்னுடைய பணி வாழ்க்கையை துறக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்படுவாள். அதீத பேஷனுடன் இருக்கும் பெண்களையும் கூட, ‘பாதுகாப்பு’, ‘அடக்கம்’, ’மானம்’ போன்ற பல காரணிகள் சொல்லி வீட்டில் முடக்கும் சமூகம், தினசரி 9-5 வேலையை செய்து கொண்டிருக்கும் பெண் ஒருவரை மிக எளிதாக வீட்டிற்குள் அடைத்துவிடும். இப்படி ஒரு சூழலில் இருந்து கொண்டே, அதற்கான பதிலை தேடி கண்டுபிடித்தவர் தீபா அடைக்கலவன்.

சென்னையில் பிறந்து வளர்ந்த தீபா, பி.காம் படித்து முடித்து அக்கவுண்டண்டாக வேலை செய்து கொண்டிருந்தார். திருமணத்திற்கு பிறகும் வேலையில் தொடர்ந்து கொண்டிருந்த தீபா, குழந்தை பிறந்த பிறகு வேலையிலிருந்து விலகியிருக்கிறார். இருந்தாலும், தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருந்துவிட்டு, வீட்டில் நிறைய நேரம் பெரிய வேலைகள் எதுவும் இல்லாமல் இருப்பது தீபாவிற்கு பிடிக்கவில்லை. 

அதனால், 2017 ஆம் ஆண்டு மீண்டும் வேலைக்கு போகத் தொடங்கினார். மறுபடியும், தனிப்பட்ட காரணங்களினால் வேலையில் இருந்து விலக வேண்டிய சூழல். 

“வேலைக்கு போயிட்டே இருந்துட்டு, அப்புறம் நாள் முழுக்க வீட்டுலயே இருக்கறது பெரிய ஸ்டிரெஸ்ஸா இருந்துச்சு. நான் என் கணவரை சார்ந்து இருக்கேன்னு யோசிச்சேன். அதுவரைக்கு பிசினஸ் பண்ணனும் எல்லாம் தோணுனது இல்லை, ஆனா அப்போ எதாவது செய்யணும்னு நினைச்சேன்,” என்கிறார் தீபா. 
தீபா அடைக்கலவன்
தீபா அடைக்கலவன்

அப்போது தான், ‘பலகாரம்’ நிறுவனத்தை தொடங்கினார் தீபா. 2017 தீபாவளி சமயத்தில் செட்டிநாடு பதார்த்தங்களை செய்து விநியோகம் செய்யும் நோக்கோடு தொடங்கப்பட்டது ‘பலகாரம்’ நிறுவனம். தீபாவின் சேமிப்புகளை வைத்துத் தான் இதை தொடங்கினார். தீபா தன் அம்மாவுடைய உதவியோடு தேன்குழல், ரிப்பன் பக்கோடா, மணப்பாறை முறுக்கு, சீப்பு சீடை, கார பூந்தி என பல வகையான பதார்த்தங்களை செய்து விநியோகம் செய்யத் தொடங்கினார். மூலிகை வத்தலும் கூட செய்கிறார். 

“தொடக்கத்துல நானா தான் கொண்டு போய்  ஒவ்வொருத்தர் வீட்டுலயும் கொடுத்துட்டு வந்துட்டு இருந்தேன். அப்படி என்னால தொடர்ந்து கொண்டு போக முடில, அப்புறம் ஸ்விக்கி மாதிரியான ஃபுட் டெலிவரி பண்ற நிறுவனங்களோட டை-அப் வெச்சேன்,” என்கிறார்.

இப்படி பிசினஸ் செய்யத் தொடங்கிய போது, அவருக்கென தனிப்பட்ட வாடிக்கையாளர் கூட்டம் பெரிய அளவில் உருவாகியிருக்கவில்லை. நண்பர்கள், தெரிந்தவர்கள் என ஒரு சின்ன குழு தான் வாடிக்கையாளர்களாக இருந்தார்கள். பெரிய அளவு வாடிக்கையாளர் கூட்டத்தை சென்றடைய முயற்சி செய்யத் தொடங்கினார் தீபா. 

தொழில் முனைவோருக்கான கண்காட்சிகள் நடக்கும் போது அங்கு சென்று ஸ்டால்கள் அமைத்தார். ஃபேஸ்புக்கில் ‘பலகாரம்’ என்றொரு பேஜ் தொடங்கினார். இவ்வாறு ஒரு பெரிய வாடிக்கையாளர் வட்டத்தை சென்றடைந்திருக்கிறார். 

Homepreneur - சுயசக்தி விருதுகள்
Homepreneur - சுயசக்தி விருதுகள்

தீபாவின் கணவர் தன் வேலை காரணமாக அடிக்கடி வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டியதாக இருக்கும். எனவே, தனியே குழந்தையை பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பும் தீபாவிற்கு இருந்தது. இது போன்ற சவால்களை எல்லாம் கடந்து தான் தன் முன்முயற்சியை நடத்திக் கொண்டிருக்கிறார்.

“கஸ்டமர்களை நம்பவைப்பதும் பெரிய சவால் தான். மார்க்கெட்டில் கிடைக்கும் தயாரிப்புகளை விட என்னுடைய தயாரிப்பு எப்படி சிறப்புன்னு சொல்லி புரிய வைக்கணும். மத்தவங்க செய்யுற மாதிரி நான் பாம் ஆயில் யூஸ் பண்ணலன்னு சொல்லி புரிய வைக்கணும்” என்கிறார். 

மேலும் தன்னுடைய குடும்பம் குறித்து பேசிய தீபா, “இந்த பலகாரங்களோட ரெசிபி எல்லாமே என் அம்மாவோடது தான். அவங்களும் எனக்கு இதுல ஹெல்ப் பண்றாங்க. அவங்க இல்லாம இத கண்டிப்பா பண்ண முடியாது. நான் இதை என் சேமிப்பு காசுல இருந்து ஆரம்பிச்சாலும், என் கணவர் பொருளாதார ரீதியா உதவி பண்ணிருக்கார். 

”பெரிய பெரிய நிறுவனங்கள்ல டீ பிரேக்குக்கு கொடுக்குற சாண்ட்விச், பர்கர் மாதிரியான ஸ்நாக்ஸுக்கு பதிலா நான் என்னோட பலகாரங்களை கொண்டு வைக்கிறேன். என் கணவரோட ஆஃபிஸ்ல இருந்து இதை தொடங்கியிருக்கோம்” என்கிறார். 

அவருடைய ஆறு வயது குழந்தை மீனாவும் கூட ‘பலகாரம்’ வெற்றிகரமாக நடந்து கொண்டிருப்பதற்கு முக்கியக் காரணம் என்கிறார் தீபா. அவருடைய நண்பர்களுக்கும் இந்த வெற்றியில் பங்கிருப்பதாக சொல்லும் அவர், சவேரா ஹோட்டலின் நீனா ரெட்டியின் ஆதரவு என்றைக்குமே மறக்க முடியாதது என்று சொல்கிறார். 

’பலகாரம்’ தயாரிப்புகள்
’பலகாரம்’ தயாரிப்புகள்

’பலகாரம்’ வழியே விற்கப்படும் பதார்த்தங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. ஆனாலும், சிலர் பலகாரங்களின் விலை அதிகமாக இருக்கிறது என்று சொல்வது உண்டாம். 

“நான் எந்த தயாரிப்பிலுமே மைதா யூஸ் பண்றது இல்ல. எண்ணெயும் தரமானது மட்டும் தான் யூஸ் பண்றேன். அதனால், இது தான் எனக்கு சரியான விலையா தோணுது,” என்கிறார் தீபா.

சமீபத்தில் ஹோம்ப்ரூனர் - சுயசக்தி விருதுகள் பெற்ற பெண்களில் தீபா அடைக்கலவனும் ஒருவர். விருது பெற்றதை குறித்து பேசும் போது, “இந்த முயற்சியை பெரியதாக நினைத்து இதற்கு ஒரு அங்கீகாரம் கொடுத்தது பெரிய விஷயம் தான். இதொரு நல்ல ஊக்குவிப்பாக இருக்கிறது,” என்றார். தற்போது, தீபாவையும் அவருடைய அம்மாவையும் தவிர இன்னொரு சமையல் நிபுணர் இவர்கள் குழுவில் இணைந்திருக்கிறார். விரைவில், ‘பலகாரம்’ நிறுவனத்தை விரிவுபடுத்தும் எண்ணமும் இருக்கிறதாம். 

தொழில்முனைவு பாதையை தேர்ந்தெடுப்பவர்களுக்கு என்ன அறிவுரை சொல்வீர்கள் எனக் கேட்ட போது, 

“சின்ன அளவில் தொடங்குங்கள். பெரிய அளவில் தொடங்கி திணற வேண்டாம்.” என்று சிரித்துக் கொண்டே சொல்லி விடை பெற்றார் இந்த ஹோம்ப்ரூனர்.