பொறியியல் துறையில் பெண்களும் தலைமை வகித்து சாதிக்க முடியும் என்று காட்டியுள்ள பத்மினி!  

சிக்ஸ் சிக்மா ப்ளாக் பெல்ட் சான்றிதழ் பெற்று பத்மினி, ஃப்ளெக்ஸ் நிறுவனத்தில் 50 பேர் கொண்ட குழுவிற்கு தலைமை வகிக்கிறார்!

0

’ஃப்ளெக்ஸ்’ (Flex) இந்தியாவின் தரம் மற்றும் பிசினஸ் எக்ஸலன்ஸ் பிரிவின் தலைவர் பத்மினி பொக்காலா. இவர் ப்ளாக் பெல்ட் சான்றிதழ் பெற்றவர். 2011-ம் ஆண்டு ஆசியாவின் பிராந்தியத் தலைவராக பொறுப்பேற்றார். இதற்கு முன்பு ஃப்ளெக்ஸ் நிறுவனத்தில் க்வாலிட்டி சிஸ்டம்ஸ் பிரிவில் நிர்வாகியாகவே தனது பயணத்தை துவங்கினார். தற்போது பெங்களூருவில் வசித்து வருகிறார். இவர் தொழில்நுட்பப் பிரிவைச் சேர்ந்தவர். பொதுவாகவே உற்பத்திப் பிரிவானது அதிக உடலுழைப்பு தேவைப்படும் பிரிவென்பதால் ஆண்களே அதிகம் காணப்படுவார்கள். இப்பிரிவின் தலைமைப்பொறுப்பில் வெகு சில பெண்களே காணப்படுவர். இதில் இவருக்கென ஒரு தனி முத்திரையை பதித்துள்ளார். 

ஃப்ளெக்ஸ்ட்ரானிக்ஸ் என்று இதற்கு முன்பு அழைக்கப்பட்ட ஃப்ளெக்ஸ் ஒரு அமெரிக்க நிறுவனம். பன்னாட்டு தொழில்நுட்பத் தயாரிப்புகளை உற்பத்தி செய்கிறது இந்நிறுவனம். இதன் தலைமயகம் சிங்கப்பூரில் உள்ளது. உற்பத்தி நடவடிக்கைகள் நாற்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் நடைபெறுகிறது. 2,00,000 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இந்தியாவில் இதன் உற்பத்தி ஆலை சென்னையில் உள்ளது. இதில் லெனோவோ மற்றும் ஹவாய் ஸ்மார்ட்ஃபோன்கள் தயாரிக்கப்படுகிறது.

இந்தியாவில் உற்பத்திப் பிரிவு மிகப்பெரிய பிரிவாகும். ‘மேக் இன் இந்தியா’ போன்ற திட்டங்களினால் இப்பிரிவு பன்மடங்கு வளர்ச்சியடைந்துள்ளது. சென்னையில் உள்ள ஃப்ளெக்ஸ் உற்பத்தி ஆலை மூன்று மில்லியன் ஹவாய் ஃபோன்களை 2017-ம் ஆண்டில் உற்பத்தி செய்வதை இலக்காகக் கொண்டுள்ளது. ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விவரங்களை ஐடி மற்றும் சட்ட அமைச்சர் ரவிஷங்கர் பிரசாத் கடந்த செப்டம்பர் மாதம் ஊடகங்களுக்குத் தெரிவித்தார். 

”இது எங்களுக்கு ஒரு மிகப்பெரிய சவால். அத்துடன் மிகவும் உற்சாகமளிப்பதாகவும் உள்ளது.” என்றார் பத்மினி.

தொழில்நுட்பத்தை விரும்பும் பெண்மணி

பத்மினி, மோட்டோரோலாவில் உற்பத்தி பிரிவில் தனது பணி வாழ்க்கையைத் துவங்கினார். விரைவில் தரப்பிரிவிற்கு மாறினார். ஏழு வருடங்கள் மோட்டோரோலாவில் பணியாற்றிய பிறகு நடவடிக்கைகள் (Operations) சிறப்புப்பாடமாக எடுத்து சிம்பயோசிஸில் எம்பிஏ முடிப்பதற்காக ஒரு இடைவெளி எடுத்துக்கொண்டார்.

பத்மினி கூறுகையில்,

சில மிகச்சிறந்த வழிகாட்டிகளிடமிருந்து நான் கற்றுக்கொண்டேன். நவாஸ் மெக்ரி என்கிற ப்ளாக் பெல்ட் ஆசிரியரின் கீழ் என்னுடைய பயிற்சியை நிறைவு செய்தேன். லீன் சிக்மா ப்ளாக் பெல்ட் சான்றிதழ் எனக்குக் கிடைத்தது. இந்த பயிற்சி என்னுடைய வாழ்க்கைப் பாதையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

புதிய விஷயங்களை கற்றுக்கொள்ளவேண்டும் என்கிற ஆர்வம் பத்மினியிடம் எப்போதும் இருந்தது. அத்துடன் அனைத்து விஷயங்களிலும் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவார். இதனால் உற்பத்தித் துறை அவருக்கு மிகச்சரியாகவே பொருந்தியது. பெங்களூரு, குர்கான், மும்பை, கொல்கத்தா ஆகிய பகுதிகளுக்கு அவர் தலைமை வகிக்கிறார். தயாரிப்பின் ஒட்டுமொத்த தரம், செயல்முறை மற்றும் சிஸ்டம் தரம், வாடிக்கையாளரின் விவரக்குறிப்புகளுடன் பொருந்துவதை உறுதிசெய்தல், உள் தர அமைப்புத் தேவைகள் (Internal quality system requirements) ஆகியவற்றிற்கு பொறுப்பு வகிக்கிறார். மேலும் அனைத்து பகுதிகளுக்கும் லீன் சிக்ஸ் சிக்மா டூல்கள் practices and philosophy ஆகியவற்றிற்கும் பொறுப்பு வகிக்கிறார்.

தடைகளை தகர்த்தல்

பத்மினி கூறுகையில்,

பெண்கள் கட்டாயம் பொறியியலை தங்களது வாழ்க்கைப் பாதையாக தேர்ந்தெடுக்கவேண்டும். பெண்கள் தங்களுக்காகவும் தங்களது கனவிற்காகவும் போராடி உயரத்தை எட்டவேண்டும். 

அதேபோல் ஆண் ஊழியர்களுக்கு நிகரான தளத்தையும் சிறப்பாக செயல்படுவதற்கான வாய்ப்பையும் அளிக்கும் நிறுவனத்தில் பணிக்குச் சேருவது அவசியமாகும்.

பெண்கள் தடைகளை தகர்த்து ஆண்களுக்கானது என வகைப்படுத்தப்படும் பிரிவிலும் தொடர்ந்து கால் பதித்து வருகின்றனர். பெரும்பாலான ஆண்கள் அடங்கிய 50 பேர் கொண்ட குழுவிற்கு தலைமை தாங்குவது பத்மினிக்கு எளிதான காரியமாக இல்லை. எனினும் அவரது தனித்துவமான செயல்பாடுகளைக் கண்டு அவரது குழுவினர் அனைவரும் பாராட்டினர்.

தலைவர்கள் மக்களை புரிந்துகொள்வார்கள்

ஒரு பெரிய நிறுவனத்தில் வெவ்வேறு சுபாவங்கள் கொண்ட அதிக எண்ணிக்கையிலான மக்களுடன் ஒருவர் பணிபுரியும்போது பல்வேறு சவால்கள் இருப்பது இயற்கைதான். சில பணிகளை மேற்கொள்வதில் சில முரண்பாடான கருத்துகள் மக்களிடையே எழும். ஆனால் இப்படிப்பட்ட மாறுபட்ட மனிதர்களையும் அரவணைத்துச் செல்லவேண்டும். அவர்கள் முன்வைக்கும் கருத்துக்களையும் புரிந்துகொள்ளவேண்டும் என்கிறார் பத்மினி. அவர் கூறுகையில்,

பணியின் கலாச்சாரத்திற்கு ஏற்றவாறு ஒவ்வொருவரையும் சீர்படுத்துவது அவசியம். சுதந்திரமாக தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தும் வகையிலான பணிச் சூழலையும் உருவாக்குவதும் முக்கியம்.

மாறுபட்ட விதத்தில் பணிகளை மேற்கொள்ளும் ஆர்வம் நிறைந்த உயர் நோக்கம் கொண்டவர்களையே பணியிலமர்த்த விரும்புகிறார் பத்மினி. நோக்கத்தை செயல்படுத்துகையில் திறம்பட பணிபுரியவேண்டும். சிறப்பான பணி ஒழுக்கங்களைக் கொண்ட இளம் ஊழியர்களே அதிக திறனுடன் விரைவாக நோக்கத்தை அடைவார்கள் என்று நம்புகிறார் பத்மினி. நேர்மை, ஒருமைப்பாடு மற்றும் கடின உழைப்பு ஆகிய முக்கிய பண்புகள் குழுவில் நிறைந்திருக்கவேண்டும் என்று விரும்புகிறார். கண்களால் பார்ப்பதையே அவர்கள் நம்புவார்கள் என்பதற்காக தானே ஒரு முன்னுதாரணமாக இருந்து வழிநடத்துகிறார்.

பெண் பொறியாளர்களுக்கான பத்மினியின் செய்தி இதோ : ‘உங்கள் மீது நம்பிக்கை வைக்கவும். மிகப்பெரிய கனவை உருவாக்குங்கள். அந்தக் கனவையே உங்களது லட்சியமாக மாற்றுங்கள். எந்தவித பயத்தையும் வலிமையால் வெல்ல முடியும் என்கிற மனநிலையை உருவாக்கிக் கொள்ளுங்கள். ஒரு விஷயம் நடக்கவேண்டும் என்றாலும் நீங்கள் விரும்பினால் அன்றி அது நடக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.” 

ஆங்கில கட்டுரையாளர் : ஷரிகா நாயர்