ஒரே நாளில் நிறுவனம் துவங்கலாம் - விரைவில்! 

0

இந்தியாவைப் பொருத்தவரை தொழில் துவங்குவது என்பது எளிதாகிக்கொண்டே வருகிறது. சாதாரணமாக ஒரு நிறுவனத்தின் பெயரை பதிவு செய்ய வேண்டும் என்றால் ஐந்து நாட்கள் ஆகும். இனி நிறுவனத்தின் பெயரை ஒரே நாளில் பதிவு செய்ய முடியும் என டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் செய்தி வந்துள்ளது.

பெருநிறுவனங்களுக்கான விவகாரத்துறை அமைச்சகம் இந்த முறையை டெல்லியில் சோதித்துப் பார்த்திருக்கிறது. மார்ச் 17ம் தேதி அன்று சாஸ்திரி பவனில் உள்ள அமைச்சகத்தின் கான்ஃபரன்ஸ் ஹாலில் இது சோதிக்கப்பட்டது. அப்போது சுமார் 28 நிறுவனங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் தங்கள் நிறுவனத்தின் பெயரைப் பதிவு செய்ய வந்திருந்தார்கள். அமைச்சகத்தைச் சேர்ந்த சில அதிகாரிகளும், இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பிரதிநிதிகளும் இந்த பணியை சோதித்தனர். வந்திருந்த நிறுவனங்களையெல்லாம் வைத்து ஒரே நாளில் பதிவு செய்ய முடிகிறதா என்று சோதித்துப் பார்த்தனர்.

படம் : ஷட்டர்லாக்
படம் : ஷட்டர்லாக்

அடுத்த சில வாரங்களில் இந்த முறை நடைமுறைக்கு வர உள்ளது. இதற்காக குர்கானுக்கு அருகில் உள்ள மனேசர் என்ற பகுதியில் புதிய அலுவலகம் ஒன்று துவங்கி உள்ளனர். இனி ரெஜிஸ்ட்ரார் ஆஃப் கம்பெனீஸ் என்ற அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.

உலக வங்கியின் எளிதில் தொழில் துவங்க முடிவது தொடர்பான ஆய்வு ஒன்று கடந்த ஆண்டு நடத்தப்பட்டது. ஒரு நிறுவனத்தின் பெயரைப் பதிவு செய்ய இரண்டிலிருந்து ஏழு நாட்கள் வரை ஆகிறது என அந்த ஆய்வில் தெரியவந்தது. மேலும் ஒரு ஐந்து நாட்கள் அலுவலக முறைகளுக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது என அது சுட்டிக்காட்டியது. “ஒருவேளை உங்களுக்கு அதிர்ஷ்டம் இல்லையென்றால் ஒருவருடம் கூட ஆகும்” என்கிறார் அதிகாரி ஒருவர்.

இந்த பணியை ஒரே நாளில் முடித்துவிடும் படி செய்யலாம் என மத்திய அமைச்சகம் ஜனவரி இறுதியில் தான் முடிவெடுத்தது. ஏற்கனவே இருக்கும் நடைமுறைகளில் சில மாற்றம் செய்து, தானியங்கி முறையில் செயல்படும் வகையில் இதை உருவாக்கினார்கள். இதற்கான பணிகள் முன்பு 39 கட்டங்களில் இருந்தது. தற்போது இதுவே 26 கட்டங்களாக சுருக்கப்பட்டிருக்கிறது. தற்போது ஒரு மாதத்திற்கு 14 ஆயிரம் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் 70 சதவீத விண்ணப்பங்களுக்கு ஒரே நாளில் ஒப்புதல் அளிக்கப்பட்டன. மீதமிருக்கும் 30 சதவீத விண்ணப்பங்களில் கேட்கப்பட்ட பெயர்கள் ஏற்றுக்கொள்ள இயலாததாக இருந்த காரணத்தால் தாமதம் ஏற்பட்டது.

“ஆனால் உங்களது விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டதா இல்லையா என்பதைத் தற்போது ஒரே நாளில் தெரிந்துகொள்ள முடியும், செவ்வாய் முதல் வெள்ளி வரை இது எந்த தடையுமில்லாமல் நடக்கிறது. வெள்ளிக்கிழமை பதிவு செய்யப்பட்டவை மட்டும் கூடுதல் வேலை காரணமாக திங்கள்கிழமை வரை ஆகிறது” என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தற்போது இது அடுத்தக்கட்டத்தை எட்டியுள்ளது. பெயர் பதிவு மற்றும் அலுவலகப் பணி என அனைத்துமே ஒரே நாளில் செய்யும் விதமாக மாற்றப்பட உள்ளது. இது ஜூன் மாதம் முதல் அமலுக்கு வரும் என பெருநிறுவன விவகாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நிறுவனத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை என்றாலும் கூட இனி உங்கள் நிறுவனத்தைப் பதிவு செய்ய முடியும். அதற்கான குறிப்பாணை ஒன்று வழங்கப்படும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த பணிகளை இன்ஃபோசிஸ் நிறுவனத்திடம் ஒப்படைத்திருக்கிறார்கள். அவர்கள் எல்லாவற்றையும் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் முடியும் வகையில் வடிவமைத்திருக்கிறார்கள். ஒருவேளை தாமதமானால் அபராதம் விதிக்கப்படும்.

தமிழில் : ஸ்வரா வைத்தீ

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்