சந்தா கோச்சார் தன் மகளுக்கு எழுதிய கடிதம் மூலம் ஒவ்வொரு தாய்மாரும் தெரிந்து கொள்ள வேண்டிய குறிப்புகள்! 

0

ஃபோர்ப்ஸின் “ஆசியாவின் சிறந்த பெண்தொழிலதிபர்கள் 2016” பட்டியலில் இடம்பெற்றதன் மூலம் ஈடுஇணையில்லா திறமையான தொழிலதிபர் என்று மற்றொருமுறை நிரூபித்துள்ளார் ICICI வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் CEO சந்தா கோச்சார். அவர் தனது மகளுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். வாழ்க்கையின் நுணுக்கமான விஷயங்களான அன்பு, குடும்பம், ஓய்வு போன்றவற்றிற்கும் முக்கியத்துவம் அளிக்கிறார் என்பதற்கு இந்தக் கடிதம்தான் சாட்சி. அவரது மகள் ஆர்த்தி கோச்சார் வாழ்க்கைப்பாதையை தேர்த்தெடுக்க உள்ளார். ஆகவே ஒரு தாயாக அவர் தன் மகள் வாழ்க்கையின் பல சவால்களை எதிர்கொள்ளத் தயார்படுத்துகிறார். அவர் எழுதிய கடிதத்திலிருந்து சில பகுதிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இது அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய பாடமாகும். இன்றைய சூழலில் இதை அனைத்துத் தாய்மார்களும் தங்களுடைய குழந்தைகளுக்கு அறிவுறுத்தவேண்டியது அவசியம். 

1. இளம் பருவம் 

“என்னுடைய பெற்றோர் எங்கள் மூவரையும் (2 சகோதரிகள், 1 சகோதரன்) சமமாக நடத்தினார்கள். எங்கள் படிப்பாகட்டும், எதிர்கால திட்டமாகட்டும் எந்தவிதத்திலும் ஆண் பெண் என்ற பாகுபாடின்றி எங்களை வளர்த்தார்கள். என் வாழ்க்கைப் பாதையில் நான் பயணிக்கும்போது இது எனக்கு மிகவும் உதவியாக இருந்தது." என்று சந்தா எழுதியிருக்கிறார்.

ஆண் குழந்தையையும் பெண் குழந்தையையும் சமமாக வளர்க்கவேண்டும். சமமாக மதிக்கவேண்டும். வாய்ப்புகளை கைபற்ற பயிற்சியளிக்கவேண்டும். எதிரிகளை எதிர்கொள்ள பயிற்சியளிக்கவேண்டும். நிஜ உலகை அவர்கள் சந்திக்க நேரும்போது இந்த விஷயங்கள் அவர்களுக்கு நிச்சயம் உதவும். உலகம் அவர்களிடம் எதிர்பார்ப்பது எதுவானாலும் கடுமையாக உழைத்து வெற்றி பெறவேண்டும் எனும் அணுகுமுறை அவர்களுக்குள் உருவாகும்.

2. மகிழ்ச்சி வங்கிசேமிப்பைவிட உயர்ந்தது

"முழு நேரமாக பணிபுரியும் பெற்றோர்கள், தங்கள் வேலை குடும்பத்தை பாதிக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும். நீ அமெரிக்காவில் படிக்கும்போது நான் ICICI வங்கியின் MD மற்றும் CEO வாக பொறுப்பேற்ற செய்தி எல்லா செய்தித்தாள்களிலும் வெளிவந்ததே உனக்கு நினைவிருக்கிறதா? இரண்டு நாட்கள் கழித்து நீ அனுப்பிய மெயில் எனக்கு நினைவிருக்கிறது. ”இவ்வளவு கடினமான, மனஅழுத்தம் நிறைந்த சவாலான பணியை மேற்கொண்டிருக்கிறீர்க்ள் என்று எங்களுக்கு தெரியப்படுத்தியதில்லை. வீட்டில் எங்கள் அம்மாவாகவே இருந்தீர்கள்” என்று குறிப்பிட்டிருந்தாய். நீயும் இதேபோல் நடந்துகொள். உறவுகள் அவசியம். அவற்றை அன்புடன் பேணிக்காக்கவேண்டும். உறவுமுறைகளிடமிருந்து நாம் எதை எதிர்பார்க்கிறோமோ அதை முதலில் நாம் கொடுத்துப் பழகவேண்டும்."

இதில் ஒன்றை கவனிக்கவேண்டும். அவர் ”பெற்றோர்” என்று குறிப்பிட்டுள்ளாரே தவிர “அம்மா” என்று குறிப்பிடவில்லை. எல்லா பெற்றோரும் அவர்களின் வேலைகளை பட்டியலிட்டு அதன்மூலம் கிடைக்கும் பணத்தைவைத்து முன்னுரிமை அளிக்காமல் அவர்களுக்கு கிடைக்கும் மகிழ்ச்சியின் அடிப்படையில் முன்னுரிமை அளிக்கவேண்டும். வீட்டையும் குடும்பத்தையும் வெற்றிகரமாக நடத்துவதற்கும் முக்கியத்துவம் அளிக்கவேண்டும். உங்கள் குழந்தைக்கு உங்கள் வழிகாட்டுதல் அவசியம். அதற்காக உங்கள் நேரத்தை செலவிடுவது அவசியம். இதனால் உங்களுக்கு கிடைக்கும் அன்பும் மரியாதையும் விலைமதிப்பற்றது.

3. நெருக்கடிகளை அமைதியாக எதிர்கொள்ளவேண்டும் 

"கடினமான சூழ்நிலைகளை கையாள்வது குறித்தும் வாழ்க்கையில் தொடர்ந்து முன்னேறுவது குறித்தும் என் அம்மாவிடம் கற்றுக்கொண்டேன். என் தந்தையின் மரணத்திற்குப்பின்னும் எப்படி மனஅமைதியுடன் அவர் நெருக்கடிகளை சமாளித்தார் என்று எனக்கு இன்றும் நினைவிருக்கிறது. சர்வதேச பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக 2008ம் ஆண்டு ICICI வங்கியின் நிலைமை மோசமாக இருந்தது. இந்த நிலைமையில் ஒரு நாள் நான் இரண்டு மணிநேரம் அவகாசம் எடுத்து உன் சகோதரனின் ஸ்குவாஷ் போட்டியை பார்க்கச்சென்றேன். ஆனால் நான் அங்கு சென்றதால் வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கை பிறக்கும் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை. அங்கு வந்திருந்த தாய்மார்களில் சிலர் இவ்வளவு நெருக்கடியிலும் நான் போட்டியை பார்க்கவந்திருந்ததால் வங்கி பாதுகாப்பாகத்தான் இருக்கவேண்டும் என்றும் அவர்களின் பணமும் பாதுகாப்பாத்தான் இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தனர்."

கணவனை இழந்ததும் சந்தாவின் அம்மா அப்பாவின் பொறுப்புகளையும் சேர்த்து சுமந்தார். மனம் தளராமல் குழந்தைகளை வளர்க்க தைரியமான மனநிலையில் நெருக்கடிகளை எதிர்த்து போராடினார். இதேபோல் ஒரு நெருக்கடியான சூழலை தனது நிறுவனத்தில் சந்திக்க நேர்ந்தபோது சந்தா முடங்கிப்போகாமல் துணிந்து தைரியத்துடனும் அமைதியாகவும் எதிர்கொண்டார். ஒரு நெருக்கடி நேரும்போது அதைக்கண்டு அவசரமாக ஓடிஒளியாமல் திறமையாக எதிர்கொள்ளும் விதத்தில்தான் அந்த தலைவரின் சிறப்பான தலைமைத்திறன் அவருக்குகீழ் பணிபுரிவோருக்கும் எடுத்துச்செல்லப்படும்.

4. சரியான வாழ்க்கைத்துணையை தேர்ந்தெடுக்கவேண்டும்

"உன் அப்பாவும் நானும் அவரவர் பணியில் பரபரப்பாக இருந்தாலும் எங்கள் உறவு சரியாக பராமரிக்கப்பட்டது. அதற்கான நேரம் வரும்போது நீயும் இதேபோல் நடந்துகொள்வாய் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது."

ஒவ்வொரு பெண்ணும் அவர்களின் மனநிலைக்கேற்ற வாழ்க்கைத்துணையை தேர்ந்தெடுப்பது கட்டாயமாகும். சுதந்திரமாக செயல்பட்டாலும் குடும்பத்தினரிடமிருந்து ஆதரவு கிடைக்காததுதான் ஒரு பெண்ணுக்கு மிகப்பெரிய தடையாக உள்ளது. அதனால், உங்களைப்போன்ற அதே சமுதாய மற்றும் கருத்தியல் பார்வை கொண்ட ஒரு நபரை தேர்ந்தெடுப்பது முக்கியம். அப்படிப்பட்ட ஒருவர்தான் உங்கள் வளர்ச்சிக்கு ஊக்கமளிப்பவராக இருப்பார்.

5. துணிந்து முடிவெடுக்கவேண்டும்

"சில சமயங்களில் சில கடினமான முடிவுகளை எடுக்க நேரிடும். மற்றவர்களை அவமதித்ததாக நினைத்து அதை சிலர் எதிர்க்க நேரிடும். ஆனால் நீ துணிந்து உன் முடிவில் தைரியமாகவும் நம்பிக்கையுடன் இருக்கவேண்டும். உனக்கு சரி என்று படும் விஷயத்தில் திடமான நம்பிக்கையுடன் இரு. அந்த திட நம்பிக்கை உருவானதும் உன் பாதையை சந்தேகம் திசைதிருப்பாமல் பார்த்துக்கொள். நியாயமாகவும் நேர்மையாகவும் நடந்துகொள்வதில் துளியும் சமரசம் செய்யாதே. உன்னைச் சுற்றி இருப்பவர்களின் உணர்ச்சிகளுக்கு மதிப்புகொடு. மன அழுத்தம் உன்னை நெருங்கவிடாமல் பார்த்துக்கொண்டால் நிச்சயம் உன் வாழ்வில் பிரச்சனைகள் இருக்காது. உயரத்தை அடையும் குறிக்கோளோடு இரு. ஆனால் நிதானமாக செயல்படு. வாழ்வின் ஒவ்வொரு அடியையும் ரசித்து எடுத்துவை. உன் பயணத்தை இந்த சின்னச்சின்ன அடிகள்தான் முழுமைப்படுத்தும்." 

பெண்கள் தன் வாழ்க்கைப் பயணத்தில், ஒவ்வொரு நிலையிலும் தீவிரமான விமர்சனத்திற்கு ஆளாவார்கள். இயற்கையை மீறுவதாக பெண்களை சுட்டிக்காட்டி குற்றம்சாட்டுவார்கள். உங்கள் கனவுகளை நோக்கி நீங்கள் பயணிப்பது அவசியம். உங்களுக்கு எது உகந்தது என்று நீங்களே தீர்மானியுங்கள்.

இதுபோன்ற சிறந்த கொள்கைகளுடன் உலகை எதிர்நோக்க ஆர்த்தி தயாராக இருக்கும் நிலையில், நாமும் நல்ல வலுவான சிறந்த கொள்கைகளை நம்முள் ஊன்றி சந்தாவைப்போல் நம் மகள்களுக்கு நாம் ஒரு முன் உதாரணமாக இருப்போம். இதனால் இளம்பெண்களை தன்னம்பிக்கையுடையவர்களாக மாற்ற முடியும்.

ஆக்கம் : பின்ஜால் ஷா | தமிழில் : ஸ்ரீ வித்யா 

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

தொடர்பு கட்டுரைகள்:

மனதுக்கு செவி சாய்த்ததால் மற்ற பெண்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்திய அனு அனந்தகிருஷ்ணன்

சர்வதேச பொருட்கள் வர்த்தகத்தில் நிலையாக இருக்கும் வெற்றிமங்கை வைஷாலி சர்வன்கர்