5 மாத கர்ப்பத்துடன் 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் கலந்துகொண்டு கலக்கிய அலிசியா!

0

31 வயதாகும் நியூயார்க்கை சேர்ந்த பெண் ஒருவர் 800 மீட்டர் தடகள் போட்டியின் தேர்ச்சிச் சுற்றில் கலந்துகொண்டு ஓடினார். அவர் அமெரிக்க ஓட்டப்பந்தய வீராங்கனை அலிசியா மொண்டானா. கடந்த வாரம் அமெரிக்காவில் நடைப்பெற்ற பீல்ட் அவுட்டோர் சாம்பியன்ஷிப் போட்டிக்கான தேர்வு சுற்று அது. இதில் என்ன இருக்கிறது என்கிறீர்களா?

அலிசியா ஓடியபோது அவரின் வயிற்றுக்குள் ஐந்து மாத சிசுவும் இருந்தது. இது அவரின் இரண்டாவது குழந்தை. அலிசியா தலையில் அழகிய பூவோடு வயிற்றுப் பிள்ளையுடன் ஓடும் புகைப்படம் வைரல் ஆக உலகம் முழுதும் அவரை வாழ்த்தினர். தனக்குள் தைரியத்தை ஏற்படுத்திக்கொள்ள தலையில் பூவோடு ஓடினார் அலிசியா.

2014-ல் நடைப்பெற்ற இதே போட்டியில் தன் முதல் குழந்தை வயிற்றில் 8 மாதமாக இருந்தபோதும் ஓடினார். இப்போது அக்குழந்தைக்கு 2 வயதாகிறது. இந்த ஆண்டு போட்டியில் கடைசியாக வந்த அலிசியா, தான் வெற்றி பெற வரவில்லை என்றும் பெண்களின் பிரதிநிதியாகவும் அவர்களுக்கு ஊக்கத்தை அளிக்க வந்ததாக தெரிவித்தார். 

”என்னைப் பொறுத்தவரையில் இந்த ட்ராக்குக்கு வருவதே முக்கியம் என கருதுகிறேன். இங்கே வெற்றி பெற வரவில்லை. இதில் கலந்துகொண்டு அதனால் ஏற்படும் தாக்கத்தை உணரவந்தேன். ஒரு தடகள வீராங்கனையாக எனக்கு கிடைத்த இந்த தளத்தை போல் எத்தனையோ பெண்களுக்கு அவரவரின் துறைகளில் கிடைப்பதில்லை. அதனால் அவர்களின் குரலை ஒலிக்கச் செய்ய ஓடினேன்,” என்றார்.

நான் பலரின் பிரதிநிதியாக இங்கே இருக்கிறேன். ஒரு பெண்ணாக, கருப்பு இனப் பெண்ணாக, கர்ப்பிணிப்பெண்ணாக என்றார். இவர்கள் அனைவரது குரலாக இருப்பது என் கடைமையாகும் என்றார் மேலும். 

ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும்போது உடற்பயிற்சி செய்வது குறித்து பல சந்தேகங்கள் இருப்பதாக அலிசியா குறிப்பிட்டார். இது ஒரு சாதரண விஷயமாகவேண்டும். இந்தியா போன்ற நாட்டில் பொருளாதார வசதியில்லாத பல பெண்கள் தங்கள் பிழைப்பிற்காக கர்ப்பமாக இருக்கும் போதும் கடுமையாக உழைக்கின்றனர். ஆனால் வாழ்க்கையில் மேல் தட்டில் இருப்பவர்கள் உடற்பயிற்சி செய்ய அஞ்சுகின்றனர். கர்ப்பமாக இருக்கும் பெண்ணின் மருத்துவரின் ஆலோசனைக்குப் பின்னர் இயல்பாக இருந்து தேவையான உடற்பயிற்சி செய்வது நல்லது என்கிறார். 

கால் கடோத் என்ற வொண்டர் வுமன் திரைப்பட நாயகியை ஊக்கமாகக் கொண்டே அலிசியா இவ்வாறு ஓடினார். கால், 5 மாத கர்ப்பத்தோடு சூப்பர் ஹீரோ படத்தில் காட்சிகளில் நடித்தார். அலிசியா வயிற்றில் குழந்தையுடன் ஓடியதால் எந்த ஒரு பிரச்சனையையும் சந்திக்கவில்லை.

“எனக்கு என்னை பார்த்துக்கொள்ள தெரியும். குடிநீர் மற்றும் எனர்ஜிக்கு தேவையானவற்றை நான் அதிகம் பருகிவிட்டே ஓடினேன்,” என்கிறார்.