மத்திய பட்ஜெட்: இணையவழியில் அனைத்து வகையான கல்விகளை அளிக்கும் ’ஸ்வயம்’ திட்டம்!

1

இன்று 2017-18 மத்திய பட்ஜெட்டை வெளியிட்ட நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, அரசின் இணையவழியில் அனைத்து வகையான கல்விகளை அளிக்கக்கூடிய புதிய தளம் பற்றி தெரிவித்தார். ‘ஸ்வயம்’ SWAYAM என்று பெயரிடப்பட்ட இந்த தளத்தில் சுமார் 350 ஆன்லைன் கோர்சுகள் இருக்கும் என்றார். இந்த தளம் மூலம் மாணவர்கள் மெய்நிகரில் பாடங்களை சிறந்த ஆசிரியர்களின் காணொளி மூலம் இலவசமாக கற்றுக்கொள்ளமுடியும்.  அதைத்தவிர இத்தளத்தில் தரமான, பாட சம்பந்தப்பட்ட குறிப்புகள், விவாதக்குழுக்கள், அவ்வப்போது தேர்வுகள் நடத்தப்பட்டு மதிப்பெண்களும் வழங்கப்படும். ஸ்வயம் தளத்தை தவிர டிடிஎச் வழியே கல்வி சேனல்கள் மூலமும் பாடங்கள் கற்றுத்தரப்படும் என்று தெரிவித்தார். 

பட்ஜெட் தாக்கல் செய்து மேலும் பேசிய அருண் ஜெட்லி, உயர் கல்வியின் தரத்தை மேலும் அதிகரிக்க யூஜிசி’ யில் பல மறுசீரமைப்புகள் செய்யவுள்ளதாக கூறினார். சிறந்த தரமான கல்வி நிலையங்களில் மேம்படுத்தப்பட்ட நிர்வாகம் மற்றும் கல்விக்கான தனி அதிகாரம் வழங்கப்படும் என்றார். இதற்கு தகுதி பெறும் கல்லூரிகள், தரப்பட்டியல் வரிசை மட்டும் ரேன்கிங் அடிப்படையில் அடையாளம் காணப்படும் என்றார். பின்னர் அவைகளுக்கு தனி அதிகாரம் வழங்கும் பணிகள் நடைப்பெறும் என்றார். இதற்கான திருத்தப்பட்ட அமைப்பு விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்றார் ஜெட்லி.