தெருக்களில் நடந்து செல்லும் பெண்களை, ஆண்கள் ஏன் உற்றுநோக்குகின்றனர்?  

0

”தனியாக செல்லும் ஒரு பெண் திறந்த பெட்டகத்தைப் போல..., அப்படி இல்லையென்றாலும் அவள் ஒரு காட்சிப்பொருளே...”

வரைப்படம்: அருண் ப்ரேம்
வரைப்படம்: அருண் ப்ரேம்

தெருக்களில் நடந்து செல்லும் பெண்கள் மீதான அத்துமீறல்கள் சகஜமாகிப்போன விஷயம். பெண்கள் தாங்களே அதை சமாளித்துக் கொள்ளவேண்டும். டெல்லியில் தீபாவளி அடுத்த தினத்தன்று, மாசின் காரணமாக மக்கள் மூச்சுவிட தவித்ததை போன்று, தினமும் பெண்கள் திணறவேண்டும். அவர்களின் நுரையீரல் நொறுங்க மூச்சுத்திணறவேண்டும்.

2016 இல் ஆக்‌ஷன் ஏய்டு நடத்திய ஆய்வின் படி, உலகெங்கும் தெருக்களில் நடக்கும் பெண்கள் மீதான அத்துமீறல்கள்; இந்தியாவில் 79 சதவீதமும், தாய்லாந்தில் 86 சதவீதம், பிரேசிலில் 89 சதவீதம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுவெளியில் நடக்கும் பெண்கள் மீதான துன்புறுத்தல்கள் மற்றும் வன்முறைகளை இது கணக்கிட்டுள்ளது. லண்டன் மாநகரில் இது 75 சதவீதமாக இருக்கிறது.  

சுமார் பத்தாண்டுக்கு முன்பு, சிந்தியா க்ராண்ட் ப்ரவுன்மான் தனது கட்டுரையில் குறிப்பிட்டு இருந்து வரிகள் இன்னமும் அப்படியே மாறாமல் இருப்பது, ஆண்கள் பெண்கள் மீது கொண்டுள்ள பார்வையில் மாற்றம் ஏதுமில்லை என்பதை தெள்ளத்தெளிவாக காட்டுகிறது. அவர் எழுதியது, “ஒரு பெண் நகரின் தெருவில் நடந்து செல்லும்போது, அவளை யாரேன்றே தெரியாத ஒருவன், அவளை நோக்கி ஆபாசமான செய்கையை அல்லது வார்த்தைகளை பிரயோகிக்கிறான். அவள் அதை எதிர்க்கிறாள் அல்லது அதை புறக்கணித்து நடக்கிறாள்... மேலோட்டமாக பார்த்தால் இது ஒரு சாதரண விஷயம், ஆனால் உள்ளார யோசித்தால், சமூகத்தில் ஆண்களிடையே நிலவிவரும் மனப்போக்கு, எண்ணங்கள், உள்நோக்கம் எல்லாம் இன்னமும் அப்படியே மாறாமல் இருக்கிறது என்று தெரிகிறது. பல நூற்றாண்டுகளாக இதைப்பற்றி பெண்கள் குரல் கொடுத்தும், எழுதியும் இது தொடர்கிறது. இப்போதே இதை உடைத்தெரிய மெல்ல தொடங்கியுள்ளோம். இந்த பிரச்சனையின் ஆழத்தில் பெண்களின் வாழ்க்கையின் தனிப்பட்ட மற்றும் அரசியல் முரண்பாடுகள் மறைந்திருக்கின்றன. தெருக்களில் அத்துமீறல் அனுபவத்தை, நம் கலாச்சார பெண்மையில், தவிர்க்க முடியாத தருணமாக ஆக்குவதும் இது தான்...” 

மீண்டும், மீண்டும் இது பற்றி எழுதியும், வீடியோ பதிவுகள் மூலம் உரைத்தும், பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சிகள் எடுத்தாயிற்று. இதில், மும்பையைச் சேர்ந்த குறும்படம் தயாரிப்பாளர் குழு ஒன்று திடுக்கிடும் படம் ஒன்றை எடுத்து வெளியிட்டுள்ளது. 

ஆதித்யா சிங், அன்விதா சுதர்ஷன் மற்றும் கிருஷ்ணன் காட்ரா, தெருக்களில் பிரவேசம் செய்து அங்குள்ளோருக்கு, ஆண் ஏன் ஒரு பெண்ணை பார்க்கிறான்? அதற்கான பின்னணி என்ன என்று வித்தியாசமாக எடுத்துறைத்துள்ளனர். 

“எங்களின் ஐடியா முதலில் அவர்களை எதிர்நோக்கி கேள்விகள் கேட்டு அதன் காரணங்களை அறிவதே. ஆண்கள் தரப்பின் கருத்துக்களை, பார்வையை புரிந்துகொள்ளவே முயற்சித்தோம். ஆனால் உண்மையில், அவர்களிடம் இருந்து இப்படிப்பட்ட பதில்கள் வரும் என்று நாங்கள் எதிர்ப்பார்க்கவே இல்லை,” என்றா அன்விதா. 

படத்தை எடுத்த இந்த இளைஞர்கள், தெருவில் நின்ற இரண்டு பெண்களை நேரடியாக உற்றுப்பார்த்துக்கொண்டிருந்த ஒருவரை பேட்டி எடுத்தபோது, அதிர்ச்சி அடைந்தனர். அந்த நபர் தான் செய்த தவற்றுக்கு வருத்தப்படவில்லை. ஒரு பெண்ணை முறைத்து அல்லது உற்று பார்ப்பதில் தவறு என்ன இருக்கிறது? என்ற மனோபாவம் அவரின் பதிலில் வெளிப்பட்டது. வீடியோவில் பலவிதமான பதில்கள் உள்ளன. 

“பெண் பூவை போன்றவள், தொட்டுப் பார்த்து அனுபவிக்கவேண்டியவள் என்றிலிருந்து தாஜ் மஹாலோடு ஒப்பிடும் வரை பெண்ணின் அழகு காட்சிப்பொருளுக்கு நிகரானது என்பன போன்ற பதில்கள். அதனால் பெண்களை தொல்லை செய்வதில் தவறொன்றும் இல்லை என்பதே பலரது கருத்தாக உள்ளது. அதேபோல் பெண்ணின் உடை இதை எதிலிருந்தும் மாறுபடுத்தவில்லை என்பதும் இந்த வீடியோவின் மூலம் புலப்பட்டுள்ளது. இந்தியவகை ஆடைகள் அணிந்த பெண்களும், ஆண்களின் கழுகுப்பார்வையில் இருந்து தப்பிப்பதில்லை என்பது வெளிப்பட்டுள்ளது. 

இது பற்றி அன்விதா கூறுகையில்,

“இந்த வீடியோ ஒரு கண்ணாடியை போல நம் எல்லார் முகத்தையும் தெளிவாக காட்டியுள்ளது. இந்த உலகில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். மக்களின் மனநிலையை வெளிப்படுத்தி, விவாதத்தை எழுப்பி, தவறிழைப்போருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதே எங்கள் இலக்காகும். இது மறைத்துவைக்கக்கூடிய விஷயம் இல்லை. இது பற்றிய விவாதங்கள் எழவேண்டும். இதை ஒரு பிரச்சனையாக நாம் ஒப்புக்கொண்டு வெளிப்படையாக பேசினால் மட்டுமே இதற்கான தகுந்த தீர்வு கிடைக்கும்,” என்கிறார். 

நம் நாட்டின் சமூக பார்வை மாற்றியமைக்கப்பட வேண்டிய ஒன்றாகும். இது ஓர் இரவில் ஏற்படாது என்றாலும், தொடர் முயற்சிகள் மற்றும் ஆரோக்கியமான விவாதங்கள் கூட்டாக இதற்கான தீர்வை ஒரு நாள் நிச்சயம் எட்டவைக்க உதவும் என்பதில் நம்பிக்கை உள்ளது.  

ஆங்கில கட்டுரையாளர்: தன்வி துபே