உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தட்டு எறிதலில் பங்கேற்கும் முதல் தமிழச்சி!

உலக ஜூனியர் சாம்பியன்ஷிப்பில் தட்டு எறிதல் போட்டிக்காக இந்தியாவின் சார்பாக கலந்துக் கொள்ளும் முதல் தமிழக வீராங்கனை காருண்யா முத்துராமலிங்கம்.

2

உலகில் உள்ள அனைத்து வீரர், வீராங்கனைகளுக்கும் கரகோஷங்கள் நிறைந்த ஒலிம்பிக் மைதானத்தில் தன் நாட்டின் கொடியைப் பறக்கவிட வேண்டும் என்பது வாழ்நாள் லட்சியமாக இருக்கும். அதில் நான் மட்டும் விதிவிலக்கல்ல. ஆனால், அதற்கான படிக்கல்லாய் அமைவது காமெல்வெல்த் மற்றும் ஆசியப்போட்டிகளின் பதக்கங்கள். 

"இப்போது தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி, ஆசிய இளைஞர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்று பதக்கம் பெற்றுள்ளேன். விரைவில் ஆசியப்போட்டிகளில் பங்கேற்பேன்,”

என்று குறிக்கோளுடன் பேசும் தடகள வீராங்கனை காருண்யா முத்துராமலிங்கம், மற்றொரு பதக்கத்துக்காக பின்லாந்தில் காத்துக் கொண்டிருக்கிறார்.

ஆம், பின்லாந்தின் டாம்ப்ரே சிட்டியில் நடைபெற்றுவரும் 20 வயதுக்கு உட்பட்டோருக்காகன உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில், இந்தியாவின் சார்பாக தட்டு எறிதல் போட்டியில் கலந்து கொண்டுள்ளார் காருண்யா. 1986ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் தட்டு எறிதலுக்காக தமிழகத்தில் இருந்து ஒரு வீராங்கனை பங்கேற்பது இதுவே முதன் முறை. 

மதுரையைச் சேர்ந்த காருண்யாவின் தந்தை ஆல் இந்தியா ரேடியாவில் பணிப்புரிகிறார். அவருடைய அம்மா ஒரு டீச்சர். காருண்யாவுக்கு விளையாட்டு உடன்பிறந்ததது எல்லாம் இல்லை. சொல்லப்போனால், தன் வாழ்க்கையில் எதேர்ச்சியாக நடந்த ஒரு நிகழ்வு என்கிறார் அவர். பின்லாந்தில் போட்டிக்காக காத்திருந்தவரின் வாட்சப்புக்கு பாராட்டுடன் பூங்கொத்து ஸ்மைலியை அனுப்ப, மறுநிமிடமே நன்றிச் சொல்லி பேசத் தொடங்கினார்.

“மதுரை நரிமேட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் தான் படித்தேன். 8ம் வகுப்பு படிக்கும் போது ஸ்கூலில் விளையாட்டுப்போட்டிகளுக்கு போட்டியாளர்களை தேர்வு செய்தனர். அப்போது, என் வகுப்பு ஆசிரியர் முதல் சீனியர் அக்காக்கள் வரை எல்லோரும் உயரம் தாண்டுதலில் கலந்துக் கொள்ளச் சொன்னார்கள். அதற்கு என் உயரம் ஒரு காரணம். உயரமாக இருப்பவர்கள் உயரம் தாண்டுதலில் சுலபமாகச் சாதிக்க முடியும் என்று எடுத்துரைத்தனர். நான் வட்டு எறிதலை தேர்ந்தெடுத்தேன்.

”முதல் போட்டியே வெற்றி. அடுத்து தேசிய அளவிலான போட்டிக்கும் தேர்வாகினேன். இப்படி எதேர்ச்சியாக நடந்த ஒன்று தான். ஆனால், இன்று அது தான் எல்லாம்...”

விளையாட்டு போட்டியில் நான் கலந்து கொள்ள என் பள்ளி பி.டி ஆசிரியர்கள் பன்னீர் செல்வம், மலைச்சாமி மற்றும் ஆங்கில ஆசிரியர் பி.டி , ஸ்ரீநிவாசன் ஆகிய மூவரும் தான் முழு உந்துதல். இப்போது சென்னை எம்.ஓ.பி. வைஷ்ணவா பெண்கள் கல்லூரியில் படித்துவருகிறேன், எனும் அவர் வெற்றிக்கு முழுகாரணக்கார்த்தாவாய் கைக்காட்டுவது அவருடைய தந்தையை. 

படிப்பைத் தாண்டி வேறு எதையும் யோசிக்கக் கூடாது என்று சொல்லும் பெற்றோர்கள் மத்தியில் காருண்யாவின் தந்தை முத்துராமலிங்கம் சற்று வித்தியாசமானவர். ‘விளையாட்டுதான் வாழ்க்கை’ என்று காருண்யாவுக்கு அவர் கற்றுக்கொடுத்தார்.

சுற்றத்தார் ‘பொம்பல பிள்ளைக்கு எதுக்கு விளையாட்டுலாம்’ என்று பேசுவார்கள் என்ற அச்சத்தில் காருண்யாவின் தாய், முட்டுக் கட்டை போட, அவரது தந்தையின் ஆதரவில் பயணிக்கத் தொடங்கியுள்ளார். 

2014ம் ஆண்டு தான் புரோபஷனல் விளையாட்டு வீராங்கனையாகி, பயிற்சிகளை மேற்கொண்டிருக்கிறார். ஒரு வருட முழுப் பயிற்சிக்கு பின், தொடர்ச்சியாய் சந்தித்த மூன்று மாநிலப் போட்டிகளிலும் தோல்வி. துவண்டு போனவருக்கு மீட்பராய் இருந்து, பயிற்சிக்கு அழைத்து செல்வது, போட்டிகளில் பங்கேற்க வைப்பதையே தன் முதல் கடமையாக்கி கொண்டுள்ளார் காருண்யாவின் தந்தை. 2015ம் ஆண்டு, தஞ்சையில் நடைபெற்ற மாநில தடகளப் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை பெற்றுள்ளார். அன்று தொடங்கியது பதக்க வேட்டை.

த்ரோஸ் பிளேயர்களுக்குரிய ஒரு பெரிய பிளஸ் என்னவெனில் அவர்கள் ஒரேயொரு கேட்டகிரியுடன் முடங்கி விட வேண்டியதில்லை. காருண்யா அந்த வகைதான். தட்டு எறிதலுடன், குண்டு எறிதலிலும் பயிற்சி மேற்கொண்டு முத்திரை பதித்து வருகிறார். 

பயணத்தைத் தொடங்கிய மூன்றே ஆண்டுகளில் மாநில அளவில் 15 பதக்கங்கள், தேசிய அளவில் 10 பதக்கங்களுடன், கடந்த ஓராண்டுக்குள் தெற்காசிய ஜூனியர் தடகளப் போட்டியில் 48.58மீட்டர் தட்டெறிந்து வெள்ளிப்பதக்கத்தினையும், ஆசிய இளைஞர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் நான்காவது இடத்தினையும், 2017ம் ஆண்டுக்கான அகில இந்திய பல்கலைகழகங்களுக்கிடையேயான போட்டியில் நான்காவது இடத்தினையும் பிடித்திருக்கிறார். 

தவிர, இந்தாண்டுக்கான முதல்வர் கோப்பையில் பங்கேற்று தங்கம் வென்று, ஒரு லட்ச ரூபாய் ரொக்கப் பரிசினையும் பெற்றுள்ளார்.
பி.டி. உஷாவுடன் காருண்யா 
பி.டி. உஷாவுடன் காருண்யா 

மதுரையில் கண்ணன் என்ற கோச்சிடமும், கோவையில் நாராயணன் சாரிடமும் பயிற்சி செய்தேன். இப்போது, பெருமாள் ராசாமி சாரிடம் பயிற்சிப் பெற்று வருகிறேன். புது புது யுக்திகளை கற்றுக் கொடுத்து வருகிறார்.

”ஆனால், என்ன பயிற்சி செய்ய தான் மைதானம் இல்லை. எறிதல் போட்டியாளர்கள் பயிற்சி செய்வது கால்பந்து மைதானத்தில் தான். அதனால், பெரும்பாலான மைதானங்களில் பயிற்சி எடுக்க இடம் கிடைப்பதில்லை.”

எங்கள் கோச்சே ‘பெருமாள்சாமி அகாடமி’ என்ற பெயரில் பல வீரர், வீரங்கனைகளை உருவாக்கி வருகிறார். தனியார் கல்லூரி மைதானத்தை ஒப்பந்த அடிப்படையில் எடுத்து சொந்த செலவில் த்ரோஸ் பிளேயர்களுக்காகவே பிரேத்யமாக  மைதானத்தை  தயார்செய்து கொண்டு இருக்கிறார், ” என்றவர், பயிற்சிக்கு தாமதமாகிறது என்று சொல்லி விடைபெற்றார். 

ஆல் தி பெஸ்ட் வீராங்கனையே... பதக்கத்துடன் திரும்புங்கள்!