நிறுவனர்கள் இடையே கூட்டு முயற்சிக்கே ஜனநாயகம் ஏற்றது; முடிவெடுக்க அல்ல!

0

ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தோல்வி அடைவதற்கான முக்கிய காரணங்கள் குறித்து தொழில்முனைவோர் எழுதிய கட்டுரைகளை சிபி இன்சைட்ஸ் 2014 ல் வெளியிட்டது. நிறுவனர் அல்லது நிறுவன குழு தொடர்பான பிரச்சனைகளே ஸ்டார்ட் அப்கள் தோல்விக்கான இரண்டாவது முக்கிய காரணமாக இருப்பதாக தொழில்முனைவோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

நிறுவனர் தொடர்பான பிரச்சனை என்றால், ஒரு சில நிறுவனர்களால் எதிர்பார்த்த அளவுக்கு செயல்பட முடியாமல் போவதில் இருந்து, நேர்மையில்லாமல் நடந்து கொள்வது வரை அனைத்து அம்சங்களாகும். மோசடி அல்லது திருட்டு தொடர்பான பிரச்சனைகளை எளிதாக கையாளலாம் என்றாலும் செயல்பாடு அல்லது பங்களிப்பு தொடர்பான மற்றும் குழுவின் இயக்கம் தொடர்பான பிரச்சனைகளை எதிர்கொள்வது அத்தனை எளிதல்ல.

நான் நெருக்கமாக தொடர்பு கொண்ட ஒரு நிறுவனத்தில், நிதி முதலீடு பெற்ற ஒரு மாதத்தில் மூன்று நிறுவனர்களில் இருவர் எங்களை அணுகி தாங்கள் விலக விரும்புவதாக தெரிவித்தனர். இருவரையுமே அந்த முடிவை மாற்றிக்கொள்ள வைத்து நிறுவன வளர்ச்சியில் கவனம் செலுத்த வைத்தோம். இதே போன்ற நிலை அடுத்த மூன்று ஆண்டுகளில் மேலும் சில முறை உண்டாகி, நிறுவனர்களில் ஒருவர் விலகி கொள்வதாக தெரிவித்தார். நிறுவனர் என்ற அந்தஸ்திற்கு ஏற்ப அந்த நிறுவனத்தில் தனக்கான பொறுப்பு இருப்பதாக நினைவில்லை என்றும், தான் இணை நிறுவனராக உருவாக்கிய நிறுவனத்தில் பணியாற்றுவதை விட பன்னாட்டு நிறுவனத்தில் மூன்று ஆண்டுகள் இருந்தால் அதிகம் கற்றுக்கொள்ளலாம் என்றும் அவர் காரணங்களை கூறினார். செயல்பாடுகளை பாதிக்காமாலும், தலைமை வகித்த குழுவின் நம்பிக்கையை பாதிக்காமலும் அவர் வெளியேறுவதற்கான நிபந்தனைகளுடன் வழி காண முடிந்தது. அந்த நிறுவனம் பங்குதாரர்களுக்கு நல்ல பலன் அளிக்கக்கூடிய நிறுவனமாக உருவானது.

நீங்கள் ஒரு ஸ்டார்ட் அப்பை உருவாக்க நினைத்து, இணை நிறுவனர்களை தேடத்துவங்கும் போதே அனைத்துவிதமான சூழல்களுக்கும் ஏற்ற ஒரு ஒப்பந்தத்தை முன்கூட்டியே தயார் செய்து கொள்வது மிகவும் முக்கியம். ஒப்பந்தத்தில் கீழ்கண்ட அம்சங்கள் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும்.

1. பதவிகளும் பொறுப்புகளும்.

நிறுவனர்கள் இடையிலான ஒப்பந்தத்தில் ஒவ்வொரு நிறுவனரின் பதவி மற்றும் பொறுப்புகளை தெளிவாகக் குறிப்பிட வேண்டும். நிறுவனர்களின் அனுபவம் அடிப்படையில் இது அமையலாம். இல்லை என்றால் நிறுவனர்களின் ஆர்வத்தின் அடிப்படையில் அமைந்திருக்கலாம். (இணை நிறுவனருக்கு ஒரு குறிப்பிட்டத்துறையில் ஆர்வம் இருந்தால் அது தொடர்பான ஆற்றலை அவர் வளர்த்துக்கொள்வார் என்பது பொதுவான எதிர்பார்ப்பு). இணை நிறுவனரின் செயல்பாடின்மை அல்லது நிறுவனத்தில் பாதையில் மாற்றம் தேவை போன்ற காரணங்களினால் பதவிகள் மற்றும் பொறுப்புகளில் மாற்றம் செய்து கொள்வதற்கான வழி இருக்க வேண்டும்.

2. முடிவெடுத்தல்

முடிவெடுக்கும் அதிகாரம் ஓரிடத்தில் இருக்க வேண்டும்; பல இடங்களில் அல்ல. மேலும் ஒவ்வொரு இணை நிறுவனரும் சி.இ.ஓவாக அல்லது இணை சி.இ.ஓவாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஸ்டார்ட் அப்களைப் பொருத்தவரை முடிவெடுப்பது என்பது ஒரு குழுவால் மேற்கொள்ளப்படுவதாக அல்லது வாக்குகள் அடிப்படையில் அமைவது நேரத்தை விரையமாக்குவதாக அமைந்து, பாதகமான விளைவுகளை உண்டாக்கலாம். முடிவெடுக்கும் அதிகாரம் ஒரு நபரிடம் இருப்பது அனைத்து பங்குதாரர்களுக்கும் தெளிவை அளிக்கும். எனவே நிறுவனத்தில் இப்படி முடிவெடுக்கக் கூடிய ஒருவரை அடையாளம் காண வேண்டும். தலைமையில் மாற்றம் செயல்பாடு அடிப்படையில் இருக்க வேண்டும். ஒரு போதும் சுழற்சி முறையில் இருக்கக்கூடாது. முக்கிய முடிவுகள் அனைத்துமே இணை நிறுவனர்களால் கலந்தாலோசிக்கப்படுவது அவசியம் ( வர்த்தகத்தின் பாதையை மாற்றுவது அல்லது முதலீட்டாளர் அல்லது மதிப்பீடு குறித்து தீர்மானிப்பது போன்றவை). ஆனால் இதன் பொருள் எல்லா முடிவுகளும் ஒத்த கருத்தின் அடிப்படையில் அமையவேண்டும் என்பதல்ல. கூட்டு முயற்சி மற்றும் விவாதங்களில் ஜனநாயகம் ஏற்றதாக இருக்கும் ஆனால் முடிவெடுத்தலில் அல்ல.

3. பங்கு உரிமை மற்றும் ஊழியர்களுக்கான பங்கு

நிறுவனர்கள் மத்தியில் பெரும்பாலும் பங்குகள் சமமாக பிரித்துக்கொள்ளப்படுவதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. நிறுவனர் குழுவில் உள்ளவர்கள் ஒரே மாதிரியான அனுபவம் மற்றும் பின்னணியை கொண்டிருக்கும் போது இது மேலும் அதிகமாக இருப்பதாகத் தெரியவந்துள்ளது. ஒரு ஸ்டார்ட் அப்பில் சமபங்கு என்பது எதிர்கால மதிப்பை உருவாக்குவது தொடர்பானது. ஆனால் நிறுவனர் குழுவில் இருப்பவர்கள் அனைவருமே ஒரே மாதிரியாக பங்களிப்பார்கள் என்றோ அல்லது ஒரே செயல்பாட்டு அளவுக்கோளுக்கு பொருந்து வருவார்கள் என்றோ கூற முடியாது. மேலும் நிறுவனர்களின் பின்னணி மற்றும் அனுபவம் வேறுபட்டிருந்தால் இணை நிறுவனர்கள் சமமான பங்கீட்டை பெற வேண்டியதில்லை. பொதுவாக முன்னணி இணை நிறுவனர்/சி.இ.ஓ மற்ற இணை நிறுவனர்களை விட அதிக பங்கு உரிமை பெறுபவராக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இவை தொடர்பான உரையாடல்கள் கசப்பாக இருக்கலாம். ஆனால் பின்னர் மனக்கசப்பு ஏற்படுவதை தவிர்க்க இவை பற்றி முதலிலேயே விவாதிப்பது நல்லது. நிறுவனர்கள் மத்தில் கருத்து வேறுபாடு இருந்தால் அது நிறுவன செயல்பாட்டை பாதிக்கும். சமபங்கு ஒதுக்கீடு தவிர ஊழியர்களுக்கான பங்கு அம்சமும் முக்கியமானதாகும். இதற்காக, நிறுவனர்கள் சந்தை அடிப்படையிலான முறையை பின்பற்ற வேண்டும். மூத்த தலைமையிடம் இருந்து எதிர்பார்க்கப்படுவதற்கு நிகரானதாக அமைய வேண்டும். இணை நிறுவனர் ஒருவர் இடையில் விலகினால் அவரது பங்குகள் பொருத்தமானவருக்கு அளிக்கப்படலாம்.

நிறுவனர்/குழு இடையிலான உறவு திருமணம் போன்றது. நாம் அனைவரும் இது எப்போதும் நிலைத்திருக்க வேண்டும் என எதிர்பார்த்தாலும் திருமணம் போலவே, ஆச்சர்யங்கள் நிகழலாம். எனவே பின்னர் வருந்தும் நிலை ஏற்படுவதை விடவே முதலிலேயே திருமணத்திற்கு முந்தையை ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

ஆக்கம்; பாரதி ஜேகப் | தமிழில்; சைபர்சிம்மன்