நாடே பணத்தட்டுப்பாட்டில் அல்லல் படும் வேளையில், ரூ.500 கோடி செலவில் திருமண நிகழ்வை நடத்திய முன்னாள் அமைச்சர்! 

0

இந்திய நாடே பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்ற நீண்ட வரிசைகளில் நின்று அவதிப்பட்டு கொண்டிருக்கும் வேளையில், முன்னாள் அமைச்சர் மற்றும் சுரங்கத்தொழிலதிபரும் ஆன பி.ஜனார்தன் ரெட்டி தனது மகளின் திருமணத்தை பலநூறு கோடிகள் செலவில் பெரும் ஆரவாரத்துடன், கோலாகலமாக நடத்தி எல்லாருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளார். ஆனால் பெங்களூரில் நேற்று நடந்த இந்த திருமண நிகழ்ச்சி சர்ச்சைக்கும் ஆளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

ஐந்து நாள் அமோகமாக நடைப்பெற்ற திருமண சடங்குகள், நேற்றுடன் முடிந்தது. மக்கள் செல்லா நோட்டுகளை வைத்துக்கொண்டு அலைந்து கொண்டிருக்க இந்த தொழிலதிபர் எந்தவித பதட்டமுமின்றி திருமணத்தை அதுவும் பணத்தை வாரி இறைத்து நடத்தியது பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பிரம்மாண்டமான திருமண விழாக்கள் நடத்துவதற்கு பெயர் போன பாலஸ் கார்டென்ஸ் என்ற இடத்தில் இத்திருமணம் நடந்தேறியது. மணப்பெண் ப்ரம்மணி வைர, வைடூரியங்கள் ஜொளிக்க ராஜீவ் ரெட்டி என்ற ஆந்திர தொழிலதிபரின் மகனை மணமுடித்தார். திருமலா திருப்பதியில் இருந்து ப்ரோகிதர்கள் வந்து திருமணத்தை நடத்திவைத்தனர். ஹம்பியில் உள்ள விஜயநகர சாம்ராஜ்யத்தின் விஜய வித்தலா கோவிலை போன்றே வடிவமைக்கப்பட்ட பின்னணி ஒருபுறமும், திருப்பதி கோவிலின் வடிவமைப்பு மறுபுறமும் எழுப்பப்பட்டு பார்வையாளர்கள் கண்களை கவர்ந்தது. 

பல ஊர்களை சேர்ந்த நடனக்கலைஞர்கள், நடிகர்கள் என்று தினமும் எல்லா வேளையிலும் பங்கேற்பாளர்களை மகிழ்வித்தனர். பெரிய எல்சிடி திரைகள் மூலம் இந்த நிகழ்ச்சிகள் ஆங்காங்கே விழா இடத்தில் ஒளிப்பரப்பு செய்யப்பட்டது. 

ஆயிரக்கணக்கான விருந்தினர்கள் கலந்துகொண்ட இந்த திருமண விழாவில், வந்தோருக்கு மரக்கன்று ஒன்று இனிப்புகளுடன் பரிசாக வழங்கப்பட்டது. சுமார் 50 ஆயிரம் பேர் இந்த திருமணத்துக்கு வந்ததாக தகவல் வெளிவந்துள்ளது. திருமண விழாவில் வைக்கப்பட்டிருந்த பாத்திரங்களும், பூஜை பொருட்களும் தங்கம் மற்றும் வெள்ளியில் மின்னின. சுற்றிலும் பூ அலங்காரத்துடன், விழா இடம் அனைத்திலும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டிருந்தது. 

கர்நாடகா மற்றும் ஆந்திர சினிமா நட்சத்திரங்கள் உட்பட, கர்நாடகா ஆளுனர், உள்துறை அமைச்சர், பிஜிபே மாநில தலைவர் பிஎஸ்.யெட்யூரப்பா என்று பல அரசியல் தலைவர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். 

பிரதமர் நரேந்திர மோடியின் கறுப்புப்பணத்துக்கு எதிரான நடவடிக்கை நேரத்தில் பிஜேபி அமைச்சர்களும், தலைவர்களும் கலந்துகொண்டது சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதேசமயம் காங்கிரஸ் தலைவர்களும் இதில் கலந்துகொண்டது கூடுதல் தகவல். 

முன்பு ரெட்டி மற்றும் அவரின் சகோதரர் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டுகளை எழுப்பி, பல்லாரியில் பாதையாத்திரை போராட்டம் நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பிஜேபி அரசில் அமைச்சராக இருந்துள்ள ஜனார்தன் ரெட்டி, சட்டவிரோதமாக சுரங்கத்தொழிலில் ஈடுபட்டதற்காக 3 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து தற்போது பெயிலில் வெளியில் உள்ளார்.