தடுப்பூசி மருந்து விற்பனை – திடீர் வியாபார சாதனை!

0

விற்பனைக்கு ஒரு மகத்தான பொருள், தேவைப்படுவோரிடம் முன்பதிவு பெறுவது, விநியோகத்தில் கட்டுப்பாடு, விரைவான விற்பனை, அதிகரிக்கும் தேவையைப் பயன்படுத்திக் கொள்வது. சியாயோமியின் (Xiaomi) வெற்றிக்குப் பின்னால் இருக்கும் மந்திரம் இதுதான். "மெட்யோக்" (Medyog) இணையதளத்தில் நாங்கள் இந்த மாதிரியைத்தான் (ஒரு பகுதியளவுக்கு) பயன்படுத்த வேண்டியிருந்தது. உண்மையில் நாங்கள் அதை விரும்பக் கூட இல்லை.

நாடு முழுவதும் பன்றிக் காய்ச்சல் பற்றிய பீதி பரவி இருந்த நேரம் அது. அனைவருக்கும் தடுப்பூசி மருந்து கொடுக்க வேண்டும் என்ற யோசனை தோன்றியது. ஆனால் அளவு கடந்த தேவைக்கு ஏற்றபடி மருந்து சப்ளை இல்லை. மருந்துகளை கொள்முதல் செய்வது என்பது மலையைப் புரட்டும் வேலையாக இருந்தது. மருத்துவமனைகள், பரிசோதனை மையங்கள், தடுப்பூசி மருந்து மையங்கள், மருந்துக் கம்பெனிகள், அந்தக் கம்பெனிகளின் ஏஜென்சிகள் என்று ஒன்றைக் கூட விடாமல் கேட்டுப்பார்த்தோம். எங்கும் மருந்து இல்லை. தொடர்ந்த முயற்சிக்குப் பிறகு, இரண்டு வாரங்களுக்குப் பின், ஒரு முன்னணி பரிசோதனை மையத்தில் இருந்து, தடுப்பூசி மருந்துகள்  விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து, தடுப்பூசி மருந்துக்கு முன்பதிவு பெற போர்ட்டல் ஒன்றை ஆரம்பித்தோம்.

இரண்டே நாளில் 1200 முன்பதிவு குவிந்து விட்டது. ஆனால் சந்தையில் மருந்து இல்லை. எங்களுக்கு வாக்குறுதி அளித்த விற்பனையாளர், உரிய நேரத்தில் மருந்து சப்ளை செய்வாரா என்பது உறுதியாகத் தெரியவில்லை. ஆனால் நாங்கள் முன்பதிவை நிறுத்தவில்லை. ஆனால் நுகர்வோருக்கு மருந்து தாமதமாவது குறித்து தகவல் சொல்லிவிட்டோம். புதிதாக பதிவு செய்பவர்களுக்கு இரண்டாம் கட்ட விநியோகத்தில்தான் மருந்து கிடைக்கும் என்று சொல்லிவிட்டோம் (முதல் கட்ட பதிவில் இருப்பவர்களுக்குத்தான் முன்னுரிமை). மறுபக்கம் மருந்தை கொள்முதல் செய்வதற்கான எங்களது முயற்சியை தீவிரப்படுத்தினோம். பெங்களூரில் மட்டும் இந்தப் பற்றாக்குறை இல்லை. நாங்கள் தொடர்பு கொண்ட பிற நகரங்களிலும் அதே பதில்தான் வந்தது ”மருந்து இல்லை” என்று...

மிகப்பெரிய அளவில் பரவிவரும் இந்தத் தேவையைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு தடுப்பூசி மருந்து உற்பத்தியாளர்களும் தயாராகவில்லை. அவர்கள் உற்பத்தி செய்யும் குறைந்த பட்ச மருந்துகளும், அரசாங்கத்தால் கடுமையான பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட ராஜஸ்தான், குஜராத், ஆந்திர மாநிலங்களுக்குச் சென்றன.

எங்கள் பெற்றோர்களில் சிலர் இந்த வேலையையே விட்டு விடுங்கள் என்று சொல்ல ஆரம்பித்தனர். அப்படி விட்டு விட்டால்,எங்களிடம் பதிவு செய்தவர்கள் நிச்சயம் ஏமாற்றமடைவார்கள். ஆனால் மருந்து பற்றாக்குறை பற்றி அவர்களுக்குத் தெரியும். எனவே எங்களை மன்னித்து விடுவார்கள். அதனால் நாங்கள் உறுதியாக இருந்தோம், திரும்பிச் செல்வதாக இல்லை. எங்களது முதல் வாக்குறுதியை நிறைவேற்றும் சந்தர்ப்பமே இன்னும் வரவில்லை.

நுகர்வோரிடம் இருந்து எங்களுக்கு முன்பதிவுகள் குவிந்தன. பெங்களூரில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனைகளை அணுகினோம். இறுதியாக கடந்த மார்ச் 18ம் தேதியன்று அப்பல்லோ மருத்துவமனை எங்களுக்கு வாக்குறுதி அளித்தது. எங்களின் விடாப்பிடியான முயற்சிக்குப் பலன் கிடைத்தது. அப்பல்லோ டீம் மருந்துக்கு ஏற்பாடு செய்தது. ஆனால் அவர்கள் கொடுத்த மருந்துகள் எங்கள் தேவையைப் பூர்த்தி செய்யக் கூடிய அளவுக்கு இல்லை. எனினும் அந்த நேரத்தில் அவர்கள் கொடுத்ததை மகிழ்ச்சியோடு வாங்கிக் கொண்டோம். 100 மருந்துகள் மட்டுமே (அவர்களால் கொள்முதல் செய்ய முடியும் அளவு) தருவதாக அவர்கள் வாக்குறுதி அளித்தனர். கிடைத்த மருந்தை முதல்கட்ட முன்பதிவாளர்களுக்கு சமமாகப் பிரித்துக் கொடுத்து விடுவது என்று முடிவு செய்தோம். அந்த வெள்ளிக் கிழமை(20 மார்ச் 2015) மதியம் 2 மணிக்கு மருந்தை விநியோகித்தோம். சில மணி நேரத்தில் அத்தனையும் விற்றுத் தீர்ந்து விட்டது. அதிக பட்சமாக ஒரு நபருக்கு இரண்டு மருந்துகள் மட்டுமே தர முடிந்தது

பெரும்பாலானவர்கள் வெறும் கையோடு திரும்பினர். அதிகம் கேட்ட பலருக்கு இரண்டுக்கு மேல் கிடைக்கவில்லை. முடிந்திருந்தால், நாங்கள் அனைவருக்கும் மருந்து கொடுத்திருப்போம். ஒரு பகுதி அளவுக்கு நாங்கள் வாக்குறுதியை நிறைவேற்றி இருந்தாலும் அதுவே வாடிக்கையாளர்கள் எங்கள் மீது வைத்திருந்த நம்பிக்கையைக் காப்பாற்றியது. அடுத்த கட்டத்தில் முன்பதிவுகள் மேலும் அதிகரித்தன. இப்போதே சுமார் 2 ஆயிரத்து 500 மருந்துகளுக்கும் மேல் முன்பதிவுகள் வந்து விட்டன. (விளம்பரத்திற்காக ஒரு பைசா கூட நாங்கள் செலவு செய்யவில்லை.)

இந்தப் பயணத்தில், தடுப்பூசி மருந்து தொடர்பான கடினமான பணிகளை எல்லாம் நாங்கள் எளிமையாக்கி இருக்கிறோம். இந்தத் துறை தொடர்பான அனைத்து தகவல்கள், மருத்துவரிடம் அப்பாயின்ட்மென்ட் புக் செய்வது, தொடர்புகள் ஏற்படுத்திக் கொடுப்பது என வாடிக்கையாளருக்கு அனைத்துப் பணிகளையும் செய்கிறோம். ஆனால் இதை எல்லாம் விட, மிகப்பெரும் விற்பனையாளர்கள் கூட கொடுக்க முடியாத மருந்துகளை எங்களால் கொடுக்க முடிந்தது என்பதுதான் எங்களுக்கு மிகவும் திருப்தி அளிக்கும் விஷயம். இப்போது எங்களது விருப்பம் இன்னும் அதிகரித்திருக்கிறது. 2500க்கும் மேற்பட்டவர்கள் முன்பதிவு செய்திருக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் மருந்து கொடுக்க வேண்டும் என்பதுதான் எங்களது விருப்பம் (அடுத்த கட்டம் விரைவில் வருகிறது) எங்கள் குழுவிற்கு வாழ்த்துக்கள்.

Campaign url :http://www.medyog.com/swineflu/

ஆங்கில கட்டுரையாளர்" திரு.ப்ரனத் பாதனி, மெட்யோகின் இணை நிறுவனர்