அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் ரூ.3500 கோடி ஒதுக்கீட்டில் 2 லட்சத்து 27 ஆயிரத்து 956 வீடுகள் கட்டி தமிழ்நாடு முதலிடம் ! 

0

நாட்டில் 2022 – ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு கிடைக்க வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் லட்சியம் நிறைவேற மத்திய அரசு பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாக மத்திய நகர்ப்புற மேம்பாட்டு, நகர்ப்புற வறுமை ஒழிப்பு, மற்றும் தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பதவி ஏற்று 3 ஆண்டுகள் நிறைவு செய்வதை ஒட்டி தமது நகர்ப்புறமேம்பாட்டு அமைச்சகம் கடந்த 3 ஆண்டுகளில் நிறைவேற்றிய திட்டங்கள் குறித்து செய்தியாளர்களிடம் அமைச்சர் விவரித்தார்.

ரியல் எஸ்டேட் (முறைப்படுத்தும் மற்றும் மேம்பாடு) சட்டம் 2016 –ன் அனைத்து அம்சங்கள் உள்ளடக்கிய அறிவிக்கையை மத்திய அரசு நேற்று வெளியிட்டது என்றும் இதன்படி இச்சட்டம் வரும் மே மாதம் முதல் தேதியிலிருந்து முழுமையாக அமலுக்கு வரும் என்றும் கூறினார்.

புதிய குடியிருப்புகளை கட்டும் ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் தங்களது புதிய திட்டங்களை 3 மாதங்களுக்குள் பதிவு செய்ய வேண்டும் என்றும் ரியல் எஸ்டேட் ஏஜென்ட்டுகள் ஒழுங்குபடுத்தும் அமைப்பிடம் பதிவு செய்ய வேண்டியது கட்டாயமாகிறது என்றும் வெங்கய்யா நாயுடு கூறினார். இதைப் பதிவு செய்யத் தவறுபவர்கள் மீது கடும் அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறினார். இந்தச் சட்டத்தை மாநில அரசுகளே அமுல்படுத்த வேண்டும் என்று அவர் தெளிவுபடுத்தினார்.

இச்சட்டத்தின்படி ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் வீடுகளையோ அல்லது அடுக்குமாடிக் குடியிருப்புகளையோ விற்கும்போது ஒரு குடியிருப்பின் கட்டப்பட்ட இடத்தின் அளவை குறிப்பிட்டு வாடிக்கையாளர்களுக்கு விற்க முடியும் என்றும் குடியிருப்பு மனையின் பொது இடங்களை குறிப்பிட்டு வீடுகளை விற்க முடியாது என்றும் அவர் கூறினார். இது வீட்டு வசதித் துறையில் பெரிய சீர்திருத்த நடவடிக்கை என்றும் வாடிக்கையாளர்களுக்கு பெரிய வரப்பிரசாதம் என்றும் வெங்கையா நாயுடு குறிப்பிட்டார்.

வேலை தேடி மற்ற மாநிலங்களில் குடியேறும் பொது மக்களின் நலனைக் கருதி தேசிய நகர்ப்புற வீட்டு வாடகைத் திட்டம் வடிவமைக்கப் பட்டிருப்பதாகவும் இது விரைவில் மத்திய அமைச்சரவையின் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார். இத்திட்டம் மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் பெற்ற பின் நடைமுறைக்கு வரும்போது வீட்டு வாடகைப் பரிமாற்றத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புத்தன்மையை கொண்டு வரும் என்று கூறினார்.

2022 – ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் பெரும் அளவில் நிதி வழங்கி வருவதாகக் கூறிய அமைச்சர் இத்திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு தமிழகத்திற்கு சுமார் ரூ 3482 கோடி ரூபாய் வழங்கியிருப்பதாக கூறினார். நாட்டிலேயே தமிழ்நாட்டில்தான் மத்திய அரசு நிதி உதவியுடன் மிக அதிகமான அளவிலான வீடுகள் அதாவது 2 லட்சத்து 27 ஆயிரத்து 956 வீடுகள் கட்டப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். இந்த திட்டத்தை 2019 – ம் ஆண்டிற்குள் நிறைவேற்ற கேரளா, இமாசலப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட 15 மாநிலங்களுக்கும் புதுச்சேரி உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களுக்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதன்படி இந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வீடு இல்லாதவர்கள் குறித்த ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் வெங்கையா நாயுடு கூறினார்.