50 ஆண்டுகளாக கைகளால் சோப்பு தயாரித்து மிகப்பெரிய வெற்றி கண்ட மெடிமிக்ஸ் சோப்பு நிறுவனம்... 

0

பிரகாசமான சிகப்பு நிற பேக்கினுள் பச்சை வண்ணத்தில் இருக்கும் சோப்பு பல கதைகளை உள்ளடக்கியுள்ளது.

உங்களது பாட்டி இதன் ஆயுர்வேத தன்மையை ஆதரித்திருப்பார். உங்கள் அப்பா இதன் புத்துணர்ச்சிக்கு உத்தரவாதமளித்திருப்பார். உங்கள் அம்மா தோலுக்கு மென்மையான உணர்வை அளிப்பதால் இது பிடித்திருக்கிறது என்று கூறியிருப்பார். உங்கள் வீட்டிற்கு அருகில் வசிப்பவர் வெளியே செல்லும்போது எடுத்துச் செல்ல சரியான அளவில் உள்ளது என்று வியந்திருப்பார்.

பச்சை வண்ணத்தில் இருக்கும் மெடிமிக்ஸ் சோப்பு இந்தியாவில் கடந்த 50 ஆண்டுகளாக பல்வேறு மக்களின் வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே இருந்து வருகிறது என்றால் அது மிகை அல்ல. பல ஆண்டுகளாக வேறுபட்ட வடிவத்திலும், நறுமணத்திலும், பேக்கேஜிலும் மாறுதல்கள் செய்யப்பட்டது. ஆனால் அதன் முக்கிய சாரம் மாறவில்லை. சர்வதேச ப்ராண்டுகளை எதிர்த்து சிறப்பாக போட்டியிட்டதுடன் இன்று வரை தொடர்ந்து கைகளால் தயாரிக்கப்பட்டு வருவதே இந்த உள்ளூர் ப்ராண்டின் சிறப்பம்சமாகும்.

இந்த காதி நிறுவனம் டாக்டர் வி பி சிதன் என்கிற ஆயுர்வேத பயிற்சியாளரின் சமையலறையில் இருந்தே துவங்கப்பட்டது. இவர் இந்திய ரயில்வே ஊழியராவார். இவர் பல்வேறு ஆயுர்வேத எண்ணெய் மற்றும் வீட்டிலேயே தயாரிக்கப்படும் பொருட்கள் மூலம் தனது நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தார்.

தோல் பிரச்சனைகளுக்கு இவர் பரிந்துரைக்கும் மருத்துவ எண்ணெய் பிரபலமானதால் இந்தத் தீர்வை தோல் பராமரிப்புக்கு உகந்த சோப்பை உருவாக்குவதற்கு பயன்படுத்தலாம் என இவரது நண்பர்கள் அறிவுறுத்தினர். இவரது சிகிச்சை பிரபலமானதாலும் நண்பர் அளித்த நம்பிக்கையினாலும் இவர் சென்னையின் பெரம்பூர் பகுதியில் வாடகைக்கு எடுக்கப்பட்ட ஒரு சிறிய இடத்தில் தொழிற்சாலை ஒன்றை அமைத்தார். ஒரே ஒரு ஊழியருடன் துவங்கப்பட்ட இந்த முயற்சி ’சோலாயில் பிரைவேட் லிமிடெட்’ என்கிற பெயரில் பதிவு செய்யப்பட்டது.

70-களில் மெடிமிக்ஸ் நிறுவனத்தின் ஆரம்பகால விளம்பரங்களில் மெடிமிக்ஸ் தயாரிப்பின் உண்மைத்தன்மைக்கு உத்தரவாதம் அளிக்கும் விதத்தில் ‘மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்டது’ என்கிற வாக்கியம் விளம்பரத்தில் இடம்பெற்றிருந்தது.

எனினும் 80-களில் ஒரு மிகப்பெரிய வேலைநிறுத்தம் காரணமாக உற்பத்தி தடைபட்டு நிலை மாறிப்போனது. இதைத் தொடர்ந்து இரண்டாண்டுகள் தொழிற்சாலை மூடப்பட்டிருந்தது.

ஓராண்டு கழித்து 1983-ல் சிதனின் மருமகனான டாக்டர் ஏ வி அனூப் தென்னிந்திய சந்தைக்கு பொறுப்பேற்று மாதவரத்தில் தொழிற்சாலையை துவங்கியபோது உற்பத்திப் பணிகள் மீண்டும் துவங்கப்பட்டது. 2007-ம் ஆண்டு சிதனின் மகன் பிரதீப் சோலாயில் வட இந்திய செயல்பாடுகளுக்கு பொறுப்பேற்று பொறுப்புகள் பகிர்ந்தளிக்கப்பட்டது. டாக்டர் அனூப் மெடிமிக்ஸ் சோப்பு தயாரித்து சந்தைப்படுத்தும் தாய் நிறுவனமான ஏவிஏ க்ரூப், சோலாயில் பிரைவேட் லிமிடெட் நிர்வாக இயக்குனர் ஆவார்.

தயாரிப்பிற்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களுக்கு மட்டுமின்றி பன்னாட்டு நிறுவனங்களால் ஆக்கிரமிக்கப்பட்ட சந்தையில் சக்திவாய்ந்த ஆயுர்வேத சோப்பாக உருவானதன் பின்னணியில் இருக்கும் செயல்முறைகளுக்கும் மெடிமிக்ஸ் சோப்புகள் பெயர் போனவை. இந்த செயல்முறைகளில் மின்சார பயன்பாடு இல்லை. இந்நிறுவனத்தின் தொழிலாளர்கள் தொடர்ந்து முன்வைக்கும் புதுமையான சிந்தனைகளயே பெரிதும் சார்ந்துள்ளது. இதுவே இந்த தயாரிப்பு மலிவான விலையில் கிடைக்கவும் காரணமாக உள்ளது.

மூலப்பொருட்களை கலக்க கைகளால் சுழற்றக்கூடிய சக்கரங்கள் பயன்படுத்தப்படுகிறது. அச்சுகளில் சோப்பு ஊற்றப்பட்டு தனியாக வைக்கப்படும். அச்சுகளை தட்டுகளாகவும் பார்களாகவும் கட் செய்ய ஊழியர்கள் கைகளால் சுழற்றக்கூடிய சக்கரங்கள் வாயிலாக இயங்கும் இயந்திரங்களை வடிவமைத்து புதுமையான வழிகளை பரிந்துரைத்தனர். முத்திரையிடும் செயல்முறைகள்கூட பாதுகாப்பாக இருக்கும் விதத்தில் மாற்றியமைக்கப்பட்டது.

வளர்ச்சி

“மின்சார பயன்பாடின்றி வளர்ச்சியடைவது சாத்தியமில்லை என்றே பொறியியல் நிறுவனங்கள் தெரிவித்தன. எனவே ஒவ்வொரு ஊழியரிடமும் தங்களது யோசனைகளை முன்வைக்குமாறு கேட்டுக்கொண்டோம். இது பலனளித்தது. எங்களது ஊழியர்களே தயாரிப்பை உருவாக்கினார்கள். அவர்களே தினமும் மெடிமிக்ஸ் தயாரிப்பை கையாளுவதால் அவர்களுக்கு சிறப்பாக புரிதல் இருக்கும். இதனால் எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்த தொழிலாளர்கள் இயந்திர உற்பத்தியை கையாளும் திறன் கொண்டவர்களாக இருக்கின்றனர். அவர்களே திட்டங்களை வகுத்து இயந்திரங்களையும் வடிவமைக்கின்றனர்,” என டாக்டர் அனூப் விவரித்தார். 

இந்நிறுவனம் ஒவ்வொரு மாதமும் தென்னிந்தியா முழுவதும் உள்ள எண்ணற்ற தொழிற்சாலைகளைச் சேர்ந்த பணியாளர்களிடம் இருந்து யோசனைகளை கேட்டறிகிறது. நிறுவனத்தினுள் அமைக்கப்பட்டிருக்கும் குழுவிற்கு இந்த யோசனைகளை சோதனை செய்யவும் முயற்சித்துப் பார்க்கவும் தனியாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சோதனை வெற்றிகரமாக அமைந்தால் இந்நிறுவனம் அதன் அனைத்து தொழிற்சாலைகளிலும் இந்த யோசனையை நடைமுறைப்படுத்துகிறது.

தொழிலாளர்களுக்கே முக்கியத்துவம்

ஏவிஏ குழு அதன் தொழிலாளர்கயையே பெரிதும் சார்ந்துள்ளது. அதுவே இந்நிறுவனத்தின் மிகப்பெரிய பலமாகும்.

சோப்புகளை கைகளால் தயாரிப்பதற்கு அதிக உழைப்பும் நேரமும் செலவாகும். இருப்பினும் ஏவிஏ குழு வலுவான அர்ப்பணிப்புடன்கூடிய தொழிலாளர்கள் இருப்பதால் அதிகளவிலான உற்பத்தியை தொடர்ந்து முறையாக நிர்வகித்து வருகிறது. 

இந்நிறுவனத்திற்கு சென்னையில் இரண்டு தொழிற்சாலைகளும், புதுச்சேரி மற்றும் பெங்களூருவில் தலா ஒரு தொழிற்சாலையும் உள்ளது. இந்த நான்கு தொழிற்சாலைகளையும் சேர்ந்த 262 ஊழியர்களுடன் இந்நிறுவனம் 10 கோடி குளியல் சோப்புகளை ஒவ்வொரு ஆண்டும் தயாரிக்கிறது.

”தொழிலாளர்கள், ஊழியர்கள், விற்பனையாளர்கள், ஆடிட்டர்கள் என அனைவருடனும் நீண்ட கால இணைப்பு ஏற்படுத்திக்கொள்வதே எங்களது கொள்கையாகும். இவர்கள் எங்களுடன் ஆரம்பத்தில் இருந்தே இணைந்துள்ளனர். எனவே எங்களது தொழிற்சாலைகள் எப்போதும் முழுவீச்சில் இயங்குகிறது,” என்றார் டாக்டர் அனூப்.

இத்தனை ஆண்டுகால செயல்பாடுகளில் ஏவிஏ க்ரூப் வீடு, கல்வி, குடும்பத்திற்கு சுகாதார வசதி, மருத்துவ காப்பீடு, காலை நேரங்களில் யோகா வகுப்புகள், பயிற்சி திட்டங்கள் உள்ளிட்ட வசதிகளை தொழிலாளர்களுக்கு வழங்கி தக்கவைத்துக் கொண்டு வருகிறது.

மேலும் ஏவிஏ க்ரூப் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பெண்களை பணியிலமர்த்துவதில் முக்கிய கவனம் செலுத்தி வருகிறது. பெண்களின் நிலையை மேம்படுத்தி சுகாதாரம், தொடர்புகொள்ளும் திறன் ஆகியவற்றில் அவர்களுக்கு அடிப்படை பயிற்சி அளித்து அவர்கள் படிப்பைத் தொடரவும் ஊக்கமளிக்கின்றனர்.

இயந்திரமயமான சந்தையில் செயல்படுதல்

தரத்தில் நிலைத்தன்மையை தக்கவைத்துக்கொள்வது, முழுமையான செயல்முறை, பாதுகாப்பு ஆகியவை இந்தத் துறை சார்ந்த சவால்களாகும்.

கைகளால் தயாரிக்கப்படும் சோப்புகள் குடிசைத் தொழிலாகவே இருந்து வரும் நிலையில் மெடிமிக்ஸ் இந்தத் துறையில் முன்னணியில் இருந்து வருகிறது. ஹிந்துஸ்தான் யூனிலிவர் லிமிடெட் (HUL), விப்ரோ, கோத்ரேஜ் ஆகிய மிகப்பெரிய சோப்பு தயாரிப்பாளர்கள் இயந்திரமயமான உற்பத்திக்கு மாறியுள்ளனர்.

இந்நிறுவனம் ஆண்டு தோறும் 9000 டன்னுக்கும் அதிகமான மெடிமிக்ஸ் சோப்புகளை உற்பத்தி செய்வதாக தெரிவிக்கிறது. இந்நிறுவனத்தின் தொழிலாளர்கள் சிறு தொழில்முனைவோர் ஆக ஊக்குவிக்கப்படுகின்றனர். இவர்களால்தான் இந்த சோப்பு 15 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை மலிவு விலையில் கிடைப்பது சாத்தியமாகிறது.

தற்போது மெடிமிக்ஸ் தயாரிப்புகளில் ஆறு வகைகளில் சோப்புகள், இரண்டு வகையான பாடி வாஷ், மூன்று வகையான முகத்தை சுத்தப்படுத்தும் க்ரீம் மற்றும் மேலும் சில தயாரிப்புகள் அடங்கும். அத்துடன் மெடிமிக்ஸ் அதன் தயாரிப்புகளை விரிவுபடுத்தி உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு தோல் பராமரிப்பு பொருட்களை வழங்கி வருகிறது. சித்ரகா, தாரு ஹரித்ரா, குக்குளு, தேவதார், நிம்பா ட்வாக், வச்சா, சீரகம், கிருஷ்ண சீரகம், சாப்சினி, சரிபா, உஷீரா, தன்யகா, ஜோதிஷ்மதி, வனர்திரகா, பகுசி, யாஷ்திமது உள்ளிட்ட மூலிகைகள் இந்த தயாரிப்புகளில் பயன்படுத்தப்படுகிறது.

மூலிகைகள் பயன்படுத்தப்படுவதும் கைகளால் தயாரிக்கப்படுவதும் தொடர்ந்து பின்பற்றப்படுகிறது. இயந்திரமயமாக்கல் வழியை பின்பற்றவில்லை. கைகளால் தயாரிக்கப்படும் சோப்புகள் தோலுக்கு உகந்ததாகும். ஆயுர்வேத மூலிகைகளுடன் அதிகளவிலான தேங்காய் எண்ணெய் கலக்கப்படுவதால் உடலின் இயற்கையான கிளிசரின் தக்கவைத்துக்கொள்ளப்படுகிறது. இது தோல் மென்மையாக இருக்க உதவுகிறது.

”கடந்த இருபதாண்டுகளில் விற்பனையாகும் எங்களது சோப்புகளை ஒப்பிட்டுப் பார்த்தால் எங்களது சோப்புகள் மாறுதல் ஏதும் இன்றி ஒரே மாதிரியாக இயந்திரங்களால் தயாரிக்கப்பட்ட சோப்புகளுக்கு நிகராக இருக்கும்,” என்றார் டாக்டர் அனூப்.

மெடிமிக்ஸ் அடுத்த ஆண்டு 50 ஆண்டுகால செயல்பாடுகளை நிறைவு செய்யும் இந்த தருணத்தில் ஒரு மருத்துவரின் நோக்கத்துடனும் ஒரு பாட்டில் மருத்துவ எண்ணெயுடனும் துவங்கப்பட்ட இந்த மரபு இத்தனை காலங்களைக் கடந்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆங்கில கட்டுரையாளர் : ஸ்ருதி கேடியா | தமிழில் : ஸ்ரீவித்யா

Related Stories

Stories by YS TEAM TAMIL