தினந்தோறும் ஒரு மில்லியன் இட்லி மாவை உற்பத்தி செய்யும் 'ஐடி ஃப்ரெஷ்'

2

கேரளாவை பூர்விகமாக கொண்ட முஸ்தஃபா பி சி, கணினி பொறியியல் பயின்ற பின் IIM பெங்களுருவில் மேலாண்மை பட்டம் பெற்றவர். இந்த பின்னணியில் ஒரு நல்ல வேலையில் அமரும் வாய்ப்பு இருந்த போதிலும், உணவின் மேலுள்ள ஆர்வம் அதே துறையில் சாதிக்க தூண்டியது. இத்தனைக்கும் இந்த துறை மற்றும் உற்பத்தியில் முன்னனுபவம் இல்லாதவர். இந்தியா முழுவதும் இட்லி தயாரிப்புக்கான மாவு, பிளாஸ்டிக் பையில் அடைத்தே விற்கப்படுகிறது. லட்சகணக்கான மக்கள் இந்த மாவை அன்றாடம் உபயோக்கின்றனர். இதை பார்த்து தான் 2006 ஆம் ஆண்டு பெங்களூரில் ஒரு நாள் அவருக்கு தனது 'ஐடி ஃப்ரெஷ்' (iD Fresh) நிறுவனதுக்கான எண்ணம் உதயமானது. முஸ்தஃபா, தனது நான்கு சகோதர்களுடன் இணைந்து முதல் கட்டமாக சிறிய அளவில் தயாரிப்பில் ஈடுபட எண்ணினார்.

மாவு தயாரிப்பு மற்றும் அதை பேக் செய்வதற்கும் இயந்திரங்களை வாங்கினர். "சுகாதார முறையில் முறையே பேக் செய்து நுகர்வோர் பயன்பாட்டிற்கு அளிக்க வேண்டும் என்பதே எங்கள் எண்ணம்" என்கிறார் முஸ்தஃபா. தொடங்கிய சில வாரங்களிலேயே, பெங்களூர் புறநகர் பகுதியில் இயங்கி வந்த அவர்களின் சிறிய தொழிற்சாலை, களை கட்ட துவங்கியது. உணவு பதப்படுத்தும் செயற்கை பொருட்களை சேர்க்காமல் வீட்டிலேயே எளிதாக சமைக்கக் கூடிய வகையில் பெரிய அளவில் தயாரிப்பில் ஈடுபட துவங்கினர்.

"தரம் மற்றும் பேக்கேஜிங் ஆகியவற்றில் நாங்கள் மிகுந்த கவனம் கொண்டுள்ளோம். இந்த தயாரிப்புக்கான சந்தை பெரிய அளவிலேயே உள்ளது" என்கிறார் முஸ்தஃபா. விநியோக வழிமுறைகளிலும் தெளிவான சிந்தனை இருந்தது.பெங்களூருவில் மட்டும் அறுபதாயிரத்திற்கும் மேலான சில்லறை வர்த்தக நிலையங்கள் உள்ளன. இதில் பனிரெண்டாயிரம் நிலையங்கள் குளிர்சாதன வசதி கொண்டவை. தங்களின் தயாரிப்பை முடிந்த அளவுக்கு இந்த நிலையங்களுக்கு கொடுப்பதே இவர்களின் இலக்கு.

திடமான வளர்ச்சி கண்ட சில வருடங்களுக்கு பின், தங்களின் வர்த்தகத்தை விரிவுபடுத்த நிதி திரட்ட முற்பட்டனர். 2014 ஆம் ஆண்டு ஹெலியன் பார்ட்னர் வென்ச்சர்ஸ் என்ற நிறுவனத்திடமிருந்து முப்பத்தியைந்து கோடி நிதி திரட்டினர். அச்சமயம் இந்நிறுவனத்தில் அறநூறு பேர்கள் பணி புரிந்தனர். இந்த நிதி மேலும் வளர்ச்சியடையவும் புதிய பொருட்களை சந்தை படுத்தவும் பயன்படுத்தப்படும்.

தற்பொழுது ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாட்களும், எட்டு அலுவலங்களும், ஏழு தயாரிப்பு நிலையங்களும் கொண்டு செயல்படுகிறது. "ஐம்பதாயிரம் கிலோ மாவு தயாரிக்கப்படுகிறது, இது கிட்டதிட்ட ஒரு மில்லியன் இட்லி செய்ய தேவைப்படும் அளவாகும்" என்கிறார் முஸ்தஃபா. இட்லி / தோசை மாவு தவிர மலபார் பரோட்டா மற்றும் சட்னியும் இவர்கள் அறிமுகப்படுத்தியுள்ளார்கள். தென்னிந்தியாவின் வீடுகளில் இவர்களின் தயாரிப்பிற்கு மிகுந்த வரவேற்பு உள்ளது. தங்களின் செயல்முறையை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் முஸ்தஃபா, "தயாரித்த மாவை, சீல் பேக் செய்து அதிகாலை ஐந்து மணிக்கு குளிரூட்டப்பட்ட வண்டிகளில் ஏற்றுகிறோம். பெங்களூரு மற்றும் இதர நகரங்களுக்கும் இது கொண்டு செல்லப் படுகிறது. ஆயிரக்கணக்கான சில்லறை வர்த்தக நிலையங்களுக்கு மதியம் இரண்டு மணிக்குள்ளாக எங்கள் தயாரிப்பு சென்றடைந்து விடும்".

ஒவ்வொரு கடையிலும் எவ்வளவு மாவு தேவைப்படும் என்று கணிக்கும் அளவிற்கு இவர்களின் வளர்ச்சி உள்ளது. உணவு வர்த்தகத்தில் நிலையான அதே சமயம் வலுவான இடத்தை அடைய முடியும் என்பதற்கு ஐடி ஃப்ரெஷ் ஒரு சிறந்த உதாரணம். பிக் பாஸ்கட், க்ரோஃபார்ஸ் போன்ற ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களுடனும் இவர்களுக்கு ஒப்பந்தம் இருக்கிறது. "ஆன்லைன் மூலம் நுகர்வோர் தங்களின் தேவைற்கேற்ப ஆர்டர் செய்து கொள்ளும் வாய்ப்பு இருந்தாலும், ஆன்லைன் மூலம் நடைபெறும் வர்த்தகம் மிக சிறிய அளவிலேயே உள்ளது" என்கிறார் முஸ்தபா.

உணவு வர்த்தக துறையில் அதிக அளவில் தொழில் முனை நிறுவனங்கள் உள்ளன மற்றும் நிதி திரட்டலும் அதிகமாகவே உள்ளது. சந்தை வாய்ப்பு அதிகமாக இருந்தாலும் தற்பொழுது அதிக அளவில் இந்த துறையில் நிறுவனங்கள் செயல்படுகின்றன. இந்த நிலை மாறும், நிறுவனங்களின் ஒருங்கிணைப்பு நடைபெறும். எங்களின் தொலைநோக்கு பார்வை மிக தெளிவாக உள்ளது - புதிய பொருட்களை சேர்ப்பது மற்றும் அதிக நகரங்களுக்கு எங்களின் தயாரிப்பை கொண்டு செல்வது. சர்வேதச அளவில் வளைகுடா நாடுகளிலும் எங்களின் தயாரிப்புகள் சந்தை படுத்தப்படுகின்றன. "எங்களின் முன்னோடி நிலையை தக்க வைத்துக் கொள்ளவே விரும்பிகிறோம். 2020 ஆம் ஆண்டுக்குள் ஆயிரம் கோடி மதிப்புள்ள நிறுவனமாக உருவெடுக்க வேண்டும் என்பதே எங்களின் இலக்கு" என்கிறார் முஸ்தஃபா.

இணையதள முகவரி: iD Fresh