'விவசாயிகளின் தோழனாக இருப்போம்'- டாஃபே புதிய முயற்சி!

0

ஒரு சாதாரண விவசாயியின் அன்றாட வாழ்க்கை அனுபவத்தை மாணவர்களுக்கு வழங்கும் திட்டம் ஒன்று கோவையில் தொடங்கப்பட்டது. "பி அ ஃபார்ம் தோஸ்த்" அதாவது விவசாயிகளின் தோழனாக இருப்போம் (‘Be a FarmDost) என்ற அந்தத் திட்டத்தை ‘ட்ராக்டர் அண்ட் ஃபார்ம் எக்யூப்மென்ட் லிமிட்டட் நிறுவனம் – டாஃபே (Tractor and Farm Equipment Ltd-TAFE)’ கோவையில் துவங்கியது. விவசாயத்திற்குத் தேவையான விதைகள், சிறு கையேடு உள்ளிட்டவை அடங்கிய கருவிப் பெட்டிகளை (Kits) மாணவர்களுக்குக் கொடுத்து இந்தத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

கோவை நேஷனல் மாடல் மேல்நிலைப்பள்ளியில் நடந்த இத்திட்டத் துவக்க விழாவில் பங்கேற்ற கார்ப்பரேட் கம்யூனிகேஷனின் மூத்த துணை பொது மேலாளர் சுனிதா சுப்பிரமணியம், சமூகத்தில் மறக்கப்பட்ட விவசாய சமூகத்தினரை மீண்டும் நினைவுக்கு கொண்டு வருவதும், அவர்களின் முக்கியத்துவத்தை மாணவர்களை உணரச் செய்வதும், அவர்களைக் கொண்டாடுவதும்தான் இந்தத் திட்டத்தின் நோக்கம் என்றார்.

“இந்த முன்முயற்சியின் மூலமாக கோவையில் விவசாயிகளின் தோழன் எனப்படும் ஃபார்ம் தோஸ்த் கருவிப்பெட்டியை கொடுத்து 20 ஆயிரம் மாணவர்களை சென்றடைய டாஃபே நிறுவனம் விரும்புகிறது” என்றார் சுனிதா சுப்பிரமணியம். “அந்தப் பெட்டியில், விவசாயத்திற்குத் தேவையான விதைகள், ஒரு நட்பு ஒப்பந்தம், விவசாயிகளின் தோழன் எனும் ‘ஃபார்ம் தோஸ்த் ஸ்டிக்கர்’ ஒன்று, ஒரு கையேடு, மற்றும் மாணவர்களின் பெற்றோருக்கு எழுதப்பட்ட ஒரு கடித்தத்தில் இந்தத் திட்டத்தில் உங்கள் குழந்தைகளை பங்கேற்கச் செய்யுங்கள் எனும் வேண்டுகோள் அடங்கியிருக்கும்” எனத் தெரிவித்தார் அவர்.

விதைகளை விதைத்து விவசாயத்தைத் துவக்கும் மாணவர்கள், அவர்கள் விவசாயம் செய்யும் காட்சிகளைப் புகைப்படங்களாக்கி ஃபார்ம் தோஸ்த் இணையதளத்தில் தொடர்ச்சியாக பதிவு செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பதாகவும் சுனிதா கூறினார். அதே படங்கள் பின்னர் ஃபார்ம் தோஸ்த் முகநூல் பக்கத்திலும் இடம் பெறும் என்றும் ஒவ்வொரு நகரத்திலும் முதல் மூன்று மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு ‘ஃபார்ம் தோஸ்த் ஸ்டூடண்ட்’ எனும் ‘விவசாயத் தோழனான மாணவன்’ விருது வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

“கோவை, மதுரை, திருச்சி ஆகிய நகரங்களில் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு சென்னை பள்ளிகளிலும் இது அறிமுகப்படுத்தப்படும் என்றார். அது மட்டுமல்ல விரைவில் விருது வழங்கும் விழாவும் நடைப்பெரும். ‘விவசாய மாணவருக்கு நன்றி' என்ற விருது மாணவர்களை ஊக்கப்படுத்தும். விவசாயிகளுக்கு புதுமையான முறையில் நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த விழா அமையும்” என்று சுனிதா கூறினார்.

ஃபார்ம் தோஸ்தி பற்றிய மேலும் விவரங்களுக்கு: FarmDost