இணையத்தின் உதவியுடன் தொழில்முனைவோரான 5 பெந்தி பஜார் பெண்கள்!

1

மும்பையின் முகமது அலி சாலை அருகே உள்ள பெந்தி பஜார் (Bhendi Bazaar) வழியே செல்லும் போது, இடைவிடாத போக்குவரத்தின் இறைச்சல், தங்கள் பொருட்களை கூவி விற்கும் வியாபாரிகளின் சத்தம் ஆகியவை உங்கள் காதுகளில் ரீங்காரம் இட்டுக்கொண்டே இருக்கின்றன. இவற்றுடன் உணவு மற்றும் இனிப்பின் நறுமணமும் சேர்ந்து கொள்கிறது. பெந்தி பஜாரில் எல்லாவிதமான பொருட்களையும் வாங்கலாம். அதோடு பல ஆண்டுகளாக மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தில் இருந்து வந்த இஸ்லாமிய சமூகத்தின் இருப்பிடமாகவும் இருக்கிறது. இப்போது பெந்தி பஜார், சைபி புர்ஹனி மேம்பாட்டு அறக்கட்டளை மேற்கொள்ள உள்ள சீரமைப்பு திட்டத்தால் மாற்றம் காண உள்ளது. இந்த அமைப்பு இங்குள்ள மக்கள் மற்றும் கடைகளுக்கு இடமளிக்கும் வகையில் நவீன கட்டிடங்களை எழுப்ப உள்ளது.

சீரமைப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இங்கு வசித்த குடும்பங்கள் மும்பையில் உள்ள இரண்டு மாற்று இடங்களுக்கு குடிபெயர்ந்துள்ளனர். இந்த சமூகத்தின் பெண்களுக்கு இது புதிய வாய்ப்புக்கான கதவுகளை திறந்துள்ளது. பெண்கள் சுதந்திரமாக நடமாடி, புதிய தொடர்புகளை தேடிக்கொண்டு வீட்டில் இருந்தே புதிய தொழில் (ஸ்டார்ட் அப்)களை துவக்க வைத்துள்ளது. பல பெண்கள் இணையம் மூலம் வர்த்தகத்தை மேற்கொள்கின்றனர்.

தங்களுக்கு கிடைத்த வளத்தைக்கொண்டு சிறிய அளவில் வர்த்தகத்தை நடத்தி வரும் ஐந்து பெண்களிடம் யுவர் ஸ்டோரி குழு உரையாடியது:

சகீனா வசன்வாலா, நகைகள் மீது ஆர்வம் கொண்டவர். பல இடங்களில் இருந்து அவற்றை வாங்கி ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் போன்ற சமூக ஊடகங்கள் மூலம் விற்பனை செய்து வருகிறார். அவரது வாடிக்கையாளர் பரப்பும் பெருகி வருகிறது. அவர் மூன்று ஆண்டுகளுக்கு முன் இதை துவங்கினார். சுலபமாக நட்பு வலைப்பின்னலை உருவாக்கி கொள்ள முடிவது அவரது பலமாக இருக்கிறது.

சகீனா வசன்வாலா
சகீனா வசன்வாலா

சகீனா, மும்பை ரயில்கள் மற்றும் பொது இடங்களில் சந்திக்கும் பெண்களுடன் சகஜமாக உரையாடுகிறார். அவர்களில் யாரேனும் தன்னிடம் உள்ள நகைகள் மீது ஆர்வம் காட்டினால், விற்பனை பற்றி பேசி தொடர்பு விவரங்களை பரிமாறிக்கொள்கிறார். “ பெண்கள் எப்போதுமே மற்ற பெண்களுடன் பேச ஆர்வமாக உள்ளனர். பேருந்து நிலையம் போன்ற பொது இடங்களில் கூட சாதாரணமாக துவங்கும் உரையாடல் நட்பு தொடர்பை உண்டாக்கும். ஆனால் நாம் பேசும் பெண்கள் எந்த அளவு நட்பாக இருக்கின்றனர் என்பதை பொருத்தே இது அமையும்” என்கிறார் அவர்.

39 வயதாகும் அவர், ஒரு மகள் மற்றும் ஒரு மகன் என இரு பிள்ளைகளுக்கு தாயார். பி.காம் பட்டம் மற்றும் சி.எஸ் கோர்ஸ் அடிப்படை முடித்துள்ளார் ஐ.டி துறையில் உள்ள தனது கணவரின் உதவியுடன் தன் தொழிலை சமாளித்து வருகிறார். ” நான் தாஹொதில் வசித்தேன். அங்கு கிளர்க்காக வேலை பார்த்தேன். இங்கு வந்த பிறகு அஞ்சல் மூலம் எனது படிப்பை தொடர முயன்றேன், ஆனால் முடிக்க முடியாமல் விட்டுவிட்டேன்” என்கிறார் அவர்.

அவருக்கு திருமணமாகி 14 ஆண்டுகள் ஆகின்றன. மாமானார், மாமியார் உடன் இருப்பதால் வீட்டை பார்த்துக்கொள்வது தான் சவாலாக இருக்கிறது. தனக்கு வாழ்க்கையில் சில விஷயங்கள் கிடைக்காவிட்டாலும் தன் மகளுக்கு அந்த நிலை இருக்க கூடாது என விரும்புகிறார். ” எங்கள் சமூகத்தில் எல்லோரும் ஒருவர் செய்வதையே பின் தொடர்கின்றனர். ஒரு பெண் பி.காம் படித்தால் மற்றவர்களும் அதையே படிக்கின்றனர். எங்கள் உண்மையான ஆர்வம் என்ன என கண்டறிந்து வழிகாட்ட யாரும் இல்லை. இப்போது பள்ளியில் படிப்பவர்கள் மிகுந்த லட்சிய நோக்கு கொண்டுள்ளனர். வாய்ப்புகள் பற்றி அறிந்துள்ளவர்கள் அதை எப்படி அடைவது என்றும் அறிந்துள்ளனர். எனவே என் மகள் தன் கனவுகள் மற்றும் இலக்குகளை அடைய உதவ உறுதியாக இருக்கிறேன்”. தனக்கு ஆதரவாக இருக்கும் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய தோழிகளுக்கு அவர் நன்றி தெரிவிக்கிறார்.

மரியா ஜஸ்தன்வாலா, 48 வயதான இவர் முதியோர்களை சுற்றுலா அழைத்துச்செல்கிறார். பெந்தி பஜாரில் இருந்து வந்த பிறகு, வயதானவர்கள் தொலை தூரங்களில் உள்ள கோயில் மற்றும் மசூதிகளுக்கு சென்று வருவதை அவர் கவனித்தார். அவர் அழைத்துச்செல்லும் குழுவில் 58 வயது முதல் 94 வயது வரை ஆன முதியோர்கள் இடம்பெறுகின்றனர். ஆண்டுக்கு ஒரு பெரிய பயணம் மற்றும் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை சிறிய பயணங்களையும் ஏற்பாடு செய்கிறார். இந்த பயணங்களில் சாகச பயணம் மற்றும் யாத்திரையும் அடங்கும். மூத்த குடிமக்களின் வீடுகளுக்கு சென்று இந்த பயணங்கள் பற்றி விளக்குவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

மரியா ஜஸ்தன்வாலா, முதல் வரிசை இடமிருந்து மூன்றாவது
மரியா ஜஸ்தன்வாலா, முதல் வரிசை இடமிருந்து மூன்றாவது

இப்போது பலரும் அவரைத்தேடி வந்து தாங்கள் சுற்றுலா குழுவில் இணைந்து கொள்ளலாமா என்று கேட்கும் அளவுக்கு இந்த பயண திட்டம் பிரபலமாகி இருக்கிறது. வயதானவர்களுக்கு பட்ஜெட் முக்கியம் என்பதால் அவர் எல்லாவற்றையும் கட்டணம் குறைந்த முறையில் ஏற்பாடு செய்வதில் கவனம் செலுத்துகிறார். "இதை நான் ஒரு வர்த்தகமாக பார்க்கவில்லை, ஒரு சேவையாகவே கருதுகிறேன்” என்கிறார் மரியா.

இந்த பயணங்கள் அனைவருக்கும் சிறப்பாக அமைய வேண்டும் என்பதற்காக மரியாவின் சகோதரி அவருடன் பயணம் செய்கிறார். வயதானவர்களுக்கு கூடுதல் கவனம், அக்கறை தேவைப்படுவதை மனதில் கொண்டு ஏசி வகுப்பில் தான் டிக்கெட் பதிவு செய்கிறோம். சில நேரங்களில் விமானத்திலும் செல்கிறோம். எங்களுடன் மருந்துகளை கொண்டு செல்வதோடு, டாக்டரை அழைக்கும் வசதி உள்ள ஓட்டல்களில் தான் தங்குகிறோம். அங்கு லிஃப்ட் இருப்பதையும் உறுதி செய்கிறோம்” என்கிறார்.

பி.காம் பட்டதாரியான அவர் தனது கணவர் மற்றும் மாமியாருடன் வசிக்கிறார். அவரது மிகப்பெரிய சவால் தனிமையை வெல்வது தான். பெண் தொழில்முனைவோர் பற்றி கூறுகையில், “அவர்கள் தங்கள் உள்ளுணர்வுக்குத் தகுந்தவாறு நடந்து கொள்ள வேண்டும். தங்கள் உள்ளுணர்வு காட்டும் பாதையில் எல்லாவற்றையும் செய்யத்தயாராக இருக்க வேண்டும். முதல் படியை எடுத்து வைப்பது தான் முக்கியம். பின்னர் எல்லாம் தானாக நடக்கும். உங்களாள் முடியாது என நினைத்து ஊக்கமிழக்க வேண்டாம்” என்கிறார் அவர். எதிர்காலத்தில் அவர் வயதான ஆண்களையும் சேர்த்துக்கொள்ள திட்டமிட்டுள்ளார். வயதான பெண்களை வெளிநாட்டுக்கு சுற்றுலா அழைத்துச்செல்லவும் திட்டமிட்டுள்ளார்.

ஜமீலா பெட்டிவாலா,22 வயது ஒரு கைக்குழந்தையின் தாய்.  12வது படிக்கும் போது அவர் தைக்கத்துவங்கினார். இப்போது குடும்பத்தினரின் உதவியுடன் அவர் பாரம்பரிய ஆடையான ரிடாசை (ridas) தைக்கத்துவங்கியிருப்பதுடன் விரிவாக்கமும் செய்துள்ளார். இப்போது ஷுக்கள்,கைகடிகாரங்கள் மற்றும் டி-ஷர்ட்களும் விற்பனை செய்கிறார். அவர் ரிடாசை வடிவமைக்க, மாமியார் அதை தைத்து தருகிறார்.

ஜமீலா பெட்டிவாலா
ஜமீலா பெட்டிவாலா

ஜமீலாவுக்கு சொந்தமாக இணையதளம் இருக்கிறது. புகைப்பட கலைஞரான அவரது கணவர் அதை அமைத்து கொடுத்துள்ளார். அவர் சமூக ஊடகங்கள் மூலம் தனது தயாரிப்புகளை புகைப்படமாக பகிர்ந்து கொள்கிறார். அவருக்கு 500-600 வாடிக்கையாளர்கள் உள்ளனர். மும்பை மற்றும் போபாலிலும் வாடிக்கையாளர்கள் உள்ளனர். மும்பையை சேர்ந்த பி.காம் பட்டதாரியான ஜமீலா, “ என் மகள் அவளது எல்லா கனவை நிறைவேற்றிக்கொள்ளும் வகையில் நல்ல வாழ்க்கையை கொடுக்க விரும்புகிறேன். அவள் விரும்பும் எதையும் என்னால் கொடுக்க முடியாத நிலை வருவதை விரும்பவில்லை” என்கிறார்.

ஷெனாஸ் எலக்டிரிக்வாலா, ஆரம்பத்தில் டியூஷன் நடத்திக்கொண்டிருந்தவர், பின்னர் சிறிய அளவிலான டிபன் சேவையை துவக்கினார். பெந்தி பஜாரில் இருக்கும் போது இதை துவக்கினார். இப்போது வயதானவர்கள் மற்றும் ஆலை ஊழியர்களுக்கு இந்த சேவையை அளித்து வருகிறார். தானே சமைக்க கூடிய வகையில் வாடிக்கையாளர் எண்ணிக்கையை குறைவாக வைத்திருக்கிறார். அவருக்கு சமையலில் ஆர்வம் உள்ளது. வாய்மொழி பரிந்துரை மூலம் தான் வாடிக்கையாளர் வருகின்றனர்.

ஷெனாஸ் எலக்டிரிக்வாலா
ஷெனாஸ் எலக்டிரிக்வாலா

அவருக்கு 48 வயதாகிறது. மகள் மற்றும் மகன் உள்ளனர். “எங்களுடையது கூட்டு குடும்பம் என்பதால் கடினமாக இருந்தது. எல்லாம் நன்றாக இருந்தாலும் என் குழந்தைகளுக்கு எனக்கு கிடைத்ததைவிட அதிகமான மற்றும் எனக்கு கிடைத்ததை விட வசதியான வாழ்க்கை கிடைக்க விரும்புகிறேன்” என்கிறார் அவர். கல்வி பலரது பார்வையை மாற்றி இருப்பதாகவும் இன்று மனைவி மற்றும் மகளை வேறு பரிமானத்தில் மக்கள் பார்ப்பதாகவும் சொல்கிறார்.

சைனாப் பெப்பர்மிண்ட்வாலாவுக்கு பேகிங் செய்வதில் ஆர்வம் இருக்கவில்லை. ஆனால் சமையல் ஆர்வம் தான் அதை நோக்கி ஈர்த்தது. இதன் விளைவாக அவர் சாக்லெட்கள் செய்யத்துவங்கினார். விரைவில் அவர் இணையதளமும் துவக்க உள்ளார். தனது வாடிக்கையாளர் பரப்பை அதிகமாக்குவதற்காக அவர் ஃபேஸ்புக் மற்றும் இண்ஸ்டாகிராம் போன்ற சேவைகளை பயன்படுத்தி வருகிறார். இவற்றோடு நெருங்கியவர்களின் வாய்மொழி பரிந்துரையும் உதவுகிறது.

சைனாப் பெப்பர்மிண்ட்வாலா
சைனாப் பெப்பர்மிண்ட்வாலா

அவர் எளிமையான கேக்குகளில் துவங்கி ஃபாண்டண்ட் மற்றும் கருத்தாக்கம் சார்ந்த கேக்குகளுக்கு முன்னேறியிருக்கிறார். இங்கும் இணையம் தான் கைகொடுத்தது. அவர் இணைய வகுப்பு ஒன்றில் சேர்ந்து அடிப்படைகளை கற்றுக்கொண்டார். வீடியோ வழிகாட்டிகளையும் பயன்படுத்துகிறார். அஞ்சல் வழியில் கல்லூரி படிப்பை முடித்தவர் தணிக்கை நிறுவனம் ஒன்றில் பணியாற்றினார். குழந்தை பிறந்த போது வேலையை விட்டுவிட்டார். குடும்பத்தில் கணவர், மாமனார் மற்றும் மகன் உள்ளனர். புகைப்படம் எடுப்பது உள்பட எல்லாவற்றையும் அவரே செய்கிறார். ஆர்டர்கள் அதிகமாகும் போது கணவரும் உதவுகிறார்.

வீட்டில் இருந்து பணி செய்வது மற்றும் குடும்பத்தின் ஆதரவு அவருக்கு உதவுகிறது. குழந்தை பிறந்த பிறகு சும்மா உட்கார்ந்திருக்க விரும்பாமல் கேக் தயாரிப்பில் ஈடுபட்டவர் இப்போது பெரிய அளவில் விரிவாக்கம் செய்து கார்ப்பரேட் ஆர்டர்களும் பெற விரும்புகிறார். "தொழில்நுட்பம் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது, இணையம் இல்லாவிட்டால் மிகவும் கஷ்டப்பட்டிருப்போம் “ என்கிறார் சைனாப்.