700 மில்லியன் டாலர் டிஜிட்டல் பரிவர்த்தனை துறையில் முன்னிலை வகிக்கும் சைன் ஈஸி

0

2009 ம் ஆண்டை திரும்பி பாருங்கள். மெக்சிகோவில் ஒரு கடற்கரையை நினைத்துப்பாருங்கள். பர்டியூ பல்கலைக்கழகத்தில் பயின்றவரும், ஐகான் டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தவருமான சுனில் பேட்ரோ (Sunil Patro )விடுமுறையை கழித்துக்கொண்டிருந்தார். சூரியனின் வெப்பத்தில் திளைத்திருந்தவருக்கு உடனடியாக பதில் அளிக்க வேண்டிய இ-மெயில் ஒன்று வந்தது. பிரிண்டர் மற்றும் பேக்ஸ் சாதனங்களை தேடும் மனநிலையில் அவர் இல்லை என்றாலும் வேறுவழி இருக்கவில்லை. கொஞ்சம் அலைந்து திரிந்து கண்டுபிடித்துவிட்டார் என்றாலும் இந்த சிக்கல் அவரை யோசிக்க வைத்தது. போன் மூலமே ஒருவரால் ஆவணங்களை கையெழுத்திட்டு அனுப்பி வைக்க முடிந்தால் எப்படி இருக்கும் என அவர் யோசித்தார். இந்த அனுபவம் தான், முக்கிய ஆவணங்களை எங்கிருந்தாலும் கையெழுத்திடும் வசதியை அளிக்கும் எளிமையான கையெழுத்திடம் செயலியை உருவாக்கும் எண்ணத்தை ஏற்படுத்தியது. இந்த செயலி தான் "சைன் ஈஸி" (SignEasy). 2010ல் துவங்கிய சைன் ஈஸி பல சவால்களை சந்தித்தாலும் இப்போது 700 மில்லியன் டாலர் மதிப்பு மிக்க டிஜிட்டல் பரிவர்த்தனை நிர்வாகத்துறையில் குறிப்பிடத்தக்க இடத்தில் உள்ளது. சொந்த நிதியில் துவங்கி உலக அளவில் வளர்ந்திருக்கும், லாபகரமான இந்த நிறுவனம் பற்றி அறிய சுனிலை தொடர்பு கொண்டோம்.

யுவர் ஸ்டோரி: சைன் ஈஸியின் பயணம் சுவாரஸ்யமானது. கடந்த ஐந்தாண்டுகளில் நீங்கள் நிலைத்து நிற்க உதவிய முக்கிய தருணங்கள்?

சுனில்: சைன் ஈஸியின் ஆரம்ப காலத்தில் இந்தியாவில் சொந்த நிதியில் இருந்து துவக்கிய இந்த சேவை மூலம் வருவாய் ஈட்டுவதற்கான வழியை விரைவாக தேட வைத்தது. அமெரிக்க சந்தைக்கு விலை நிர்ணயிக்கப்பட்ட சேவையை இந்தியாவில் விற்பனை செய்வதனால் உண்டான விலை மாறுபாட்டின் விளைவாக, உலகம் முழுவதும் உள்ளவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைக்கான எளிய தீர்வை வழங்க சேவையில் புதுமைகளை உண்டாக்குவதில் கவனம் செலுத்தினோம்.

ரியல் எஸ்டேட், களப்பணி, சேவை வல்லுனர்கள், தணிக்கையாளர்கள், லாஜிஸ்டிக்ஸ் துறையினர் என தங்கள் துறையில் பயணம் செய்து கொண்டிருக்கும் பிரிவினரில் கவனம் செலுத்தியது எளிமையான, பயன்படுத்த சுலபமான மற்றும் சிக்கல் இல்லாத சேவையை உருவாக்க உதவி இந்த பிரிவில் முன்னணி நிலையை அடைந்து ஆப்பிள், டிராப் பாக்ஸ் மற்றும் பாக்ஸ் ஆகிய நிறுவனங்கள் தங்கள் செயலிகள் சிறப்பு அம்சம் மூலம் ஆங்கீகாரம் அளிக்கும் அளவுக்கு உயரச்செயதது.

தொழில் வல்லுனர்கள் மற்றும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை நோக்கி முன்னேறுவது முக்கியமாக இருந்தது.மொபைல் செயலியில் புதிய அம்சங்களை சேர்ப்பது மூலம் இதை செய்தோம். வாடிக்கையாளர் கருத்து மற்றும் நீண்டகால நோக்கில் கவனமாக இருந்தோம். இதன் மூலம் மைய சந்தாவுக்கான விலையை உயர்த்த முடிந்தது. இது லாபம், வளர்ச்சி இரண்டையும் அளித்தது.

யுவர் ஸ்டோரி: டிஜிட்டல் பரிவர்த்தனை துறை கவனத்தை ஈர்க்கத்துவங்கியுள்ளது. இதன் வளர்ச்சி பற்றி கூற முடியுமா? டிஜிட்டல் கையெழுத்தில் நாம் எங்கே இருக்கிறோம்? எங்கே செல்கிறோம்?

சுனில்: 2020 ல் 30 பில்லியன் டாலர் மதிப்பு கொண்டதாக மாறும் என கருதப்படும் 700 மில்லியன் டாலர் மதிப்பு கொண்ட வேகமாக வளரும் டிஜிட்டல் பரிவர்த்தனை நிர்வாகத்துறையின் அங்கமாக மின்னணு கையெழுத்து இருக்கிறது. இந்த துறையில் ஆண்டுக்கு 1.5 பில்லியன் ஆவணங்கள் கையாளப்படுகின்றன. அமெரிக்காவில் மட்டும் 28 மில்லியன் சிறுதொழில் நிறுவனங்கள் உள்ளன என்பதும், இவற்றில் 22 மில்லியன் சொந்தமாக தொழில் செய்பவர்கள் என்பதும், மேலும் பல நிறுவனங்கள் கார்பன் பாதிப்பை குறைப்பது மற்றும் காகித பயன்பாட்டை குறைப்பது பற்றி யோசிக்கும் நிலையில் மின்னணு கையெழுத்து மற்றும் கிளவுட் ஸ்டோரேஜ் வளர்ச்சி அடைய உள்ளது.

கிளவுட் கம்ப்யூட்டிங் அமெரிக்காவில் ஏற்கனவே மைய சேவையாக வந்துவிட்டது. அமெரிக்க வர்த்தக நிறுவனங்களில் பாதிக்கு மேல் கிளவுட் சேவையை பயன்படுத்துகின்றன. மின்னணு கையெழுத்து சட்டம் இயற்றப்பட்டதன் விளைவாக பல நிறுவனங்கள் காகித முறையை கைவிட்டு வருகின்றன. எனவே இந்தியாவை ஒப்பிடும் போது சைன் ஈஸியின் பயன்பாடும் அங்கு அதிகமாக உள்ளது.

இந்தியாவிலும் ஸ்மார்ட்போன் பயன்பாடு மற்றும் இணைய வசதி அதிகரித்து வருகிறது. இந்திய அரசும் மின்னணு கையெழுத்து உள்ளிட்டவற்றை ஊக்குவிக்கும் டிஜிட்டல் இந்தியா போன்ற திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.

யுவர் ஸ்டோரி: சைன் ஈஸி அதுவரை என்னவாக இருந்தது?

சுனில்: கடந்த சில மாதங்கள் உற்சாகம் அளிக்கும் வகையில் அமைந்தன. ஐஓஎஸ்-க்கான சைன் ஈஸி செயலி நீட்டிப்பு அறிமுகத்தில் இருந்து துவங்குகிறது. ஆப்பிள் மைல்பாக்ஸ், பாக்ஸ், கேம்ஸ்கேனர், டிராப்பாக்ஸ், ஜீனியஸ் ஸ்கேன், ஒண்டிரைவ், ஸ்கேனபிள் மற்றும் ஸ்லேக் உள்ளிட்ட செயலிகளில் இருந்து கையெழுத்திடுவதை இது சுலபமாக்கியது. ஆண்ட்ராய்டு சாதனங்களில் கையெழுத்திடுவதை மேம்படுத்தும் ஆண்டார்ய்டு செயலிக்கான அப்டேட் இதை தொடர்ந்து வெளியானது. இதன் பிறகு ஆப்பிள், தனது ’எல்லாம் ஐபேடால் மாறும்’ விளம்பரத்தில் ஸ்கையர், குவிக்புக்ஸ், ஆம்னிபோகஸ்2 மற்றும் நம்பர்ஸ் ஆகிய செயலிகளுடன் எங்களை இடம்பெற வைத்தது. இந்த விளம்பரத்தில் இடம்பெற்ற ஒரே இந்திய சேவை அல்லது ஸ்டார்ட் அப் நாங்கள் தான் என்பதில் பெருமை கொள்கிறோம். இதில் இடம் பெற்ற நிறுவனங்களில் சொந்த நிதியில் துவக்கப்பட்டது எங்கள் நிறுவனம் மட்டுமே. இதை டைப் செய்து கொண்டிருக்கையில் இணையத்திற்கான சைன் ஈஸி வடிவம் வெளியாகி உள்ளது. இணையத்தில் உள்ள எண்டர்பிரைஸ் சார்ந்த சேவைக்கு எளிய மாற்றாக இது உருவாகியுள்ளது. இந்த புதிய இணைய செயலி மூலம் பயனாளிகள் கம்ப்யூட்டரில் இருந்தும் ஆவணங்களில் கையெழுத்திடலாம். இது சிறிய நிறுவனங்களுக்கு மிகவும் ஏற்றது.

மேலும் நாங்கள் 5 வது பிறந்த நாளையும் கொண்டாட உள்ளோம்.

யுவர் ஸ்டோரி: உங்கள் வருவாய் மாதிரி? நிதி நிலை பற்றி?

சுனில்: சைன் ஈஸி 3 இலவச கையெழுத்தை அளிக்கும் பிரிமியம் மாதிரி கொண்டுள்ளது. மூன்று கட்டண முறைகளும் உள்ளன. பே அஸ் யு கோ, ப்ரோ மற்றும் பிஸினஸ் சந்தா மூலம் எவ்வளவு முறை வேண்டுமானலும் பயன்படுத்தலாம். 2010 ல் சேமிப்பு நிதியில் துவக்கப்பட்ட நிறுவனம் 3 ஆண்டாக லாபகரமாக இயங்குகிறது.

யுவர் ஸ்டோரி: உங்கள் குழு பற்றி?

சுனில்: எங்கள் குழுவில் 20 பேர் உள்ளனர். பிராடக்ட் மேனேஜர்கள், பொறியாளர்கள், மார்கெட்டிங் வல்லுனர்கள் ஆகியோர் உள்ளனர்.

யுவர் ஸ்டோரி: டாக்கு சைன் மற்றும் போட்டி பற்றி?

சுனில்: சைன் ஈஸி மொபைல் அடிப்படையிலானது. இந்த பிரிவில் மிகவும் எளிதானது. சிறிய நிறுவனங்களுக்கு ஏற்றது. விரைவில் இணையத்திற்கான சேவையை அறிமுகம் செய்ய இருக்கிறோம். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் விரும்பிய சாதனத்தில் இருந்து பயன்படுத்தலாம். உள்ளூர்மயம் மற்றும் சர்வதேசமயத்தில் நாங்கள் மிகவும் முன்னணியில் இருக்கிறோம். உலக அளவில் 15 மொழிகளில் பயன்படுத்தலாம். போட்டியாளர்களை விட விலையிலும் சிறந்து விளங்குகிறோம்.

யுவர் ஸ்டோரி: அமெரிக்கா பெரிய சந்தையாக இருக்கிறது. எதிர்காலம் பற்றி?

சுனில்: எங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் வருவாயில் 50 சதவீதம் அமெரிக்காவில் இருந்து வருகிறது. ஐரோப்பா, ஆசியா மற்றும் தென் அமெரிக்காவிலும் வாடிக்கையாளர்கள் உள்ளனர். சரியான சட்டங்கள், கட்டுப்பாடுகள் மற்றும் விழிப்புணர்வு மூலம் மின்னணு கையெழுத்து மேலும் பரவலாகும்.

இணையதள முகவரி: SignEasy