அருகாமை மளிகைக் கடைகளை ஆன்லைனில் அறிமுகப்படுத்தும் 'ஆர்டர் ராப்பிட்'

2

ஆன்லைன் மூலமும் மொபைல் போன் பயன்படுத்தியும் உலகின் எந்த பகுதியில் இருந்தும் பொருட்களை வீட்டு வாசலில் பெற முடியும் என்பது அனைவரும் அறிந்ததே. அனால் உங்களுக்கு அருகாமையில் உள்ள கடைகளில் இருந்து பொருட்களை 3 மணி நேரத்திற்குள் ஆன்லைனில் பெற முடியும் என்று அறிவீர்களா? இந்தச் சேவையை அளிக்கிறது "ஆர்டர் ராப்பிட்" (OrderRabbit).

அருகில் உள்ள உங்கள் அபிமான கடைகளை ஆன்லைன் சந்தையில் அறிமுகப்படுத்துவதே, ஆர்டர் ராப்பிட் நிறுவனத்தின் குறிக்கோளாக உள்ளது. வியாபாரிகள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் நேரடியாக வாடிக்கையாளர்களின் ஆர்டர்களை பெறவும், வாடிக்கையாளர்கள் பொருட்களை வாங்கவும் இரு பிரத்யேக செயலிகளை கொண்டுள்ளது ஆர்டர் ராப்பிட். மளிகைக் கடை, காய்கறிக் கடை, உணவகம், பேக்கரி அனைத்தையும் ஆன்லைனில் ஒருங்கிணைக்க விரும்புகிறது இந்நிறுவனம்.

இந்நிறுவனத்தின் நிறுவனர் கிருஷ்ணன் நாரணபட்டி மற்றும் இணை நிறுவனர் சுதர்சன், அவர்களது பயணத்தைப் பற்றி தமிழ் யுவர்ஸ்டோரி யுடன் பகிர்ந்து கொண்ட உரையாடல் இதோ...

தொடக்கம்

இந்நிறுவனத்தை துவக்கிய கிருஷ்ணன் நாரணபட்டி, தொழில்நுட்பத்துறையில் 25 வருடம் அனுபவம் கொண்டுள்ளார், ஒரு சிறப்பான பயனர் அனுபவத்தின் (User Experience) மூலம் சிக்கலான பிரச்சினைகளுக்கு எளிய தீர்வுகளை காண முடியும் என்று நம்புகிறார் இவர். யோசனைகளை மேம்படுத்துவதில் பேரார்வம் கொண்ட கிருஷ்ணன், ஒரு பொருளின் தொடக்கம் முதல் முழு நிறைவு பெறுவது வரை, ஈடுபடுவதில் மகிழ்ச்சி காண்கிறார், இதுவே ஆர்டர் ராப்பிட் உருவாக உந்துதலாக இருந்தது என்கிறார்.

இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்பாடு அபரிமிதமாக அதிகரித்து வரும் சூழ்நிலையில், இதற்கேற்ப நவீன இந்திய வியாபாரிகளை, தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தங்கள் வாடிக்கையாளர்களை சென்றடைய உதவுகிறது ஆர்டர் ராப்பிட். சென்னை, புதுச்சேரி, கோயம்புத்தூர், சேலம், கடலூர், ஏலூரு, பாப்பட்லா, தூத்துக்குடி, திருச்சி, விஜயவாடா, சேலம், திருநெல்வேலி, கரூர் போன்ற 13 நகரங்களில் 400க்கும் மேற்பட்டக் கடைகளை தன் செயலியின் மூலம் இணைக்கிறது.

"2013இல் இந்தியாவில் ஸ்மார்ட் போன் பயன்பாடு வளர்ச்சிக்கட்டத்தில் இருந்தது, எனவே அமெரிக்காவில் கடைகளை இணைக்கும் ஆன்லைன் சந்தையை துவக்க நினைத்தேன். பின்னர் சென்னை மற்றும் அமெரிக்காவில் உள்ள ஒரு சில கடைகளை அணுகினோம், சிலர் ஆர்வமாக இருந்தனர் மற்றும் பலர் ஆன்லைன் ஷாப்பிங் அலையின் விழிப்புணர்வின்றி இச்சேவையை புறக்கணித்தனர். சரக்கு கையிருப்பும், நாளுக்கு நாள் விலை நிர்ணயிப்பதும் சிரமமாக இருந்தது" என கிருஷ்ணன் நினைவு கூர்ந்தார்.

பின்னர் 2014 தொடக்கத்தில், கோயம்புத்தூரில், கோரிக்கையின் அடிப்படையில் மளிகைப் பொருட்களை வழங்கும் ப்ரொவிஷன் பஜாரை நடத்திவந்த தொழில்முனைவரான சுதர்சன், ஆர்டர் ராப்பிட்டின் ஆன்லைன் வர்த்தகத்தில் ஆர்வம் கொண்டு அதில் இணைந்தார்.

மறுகட்டமைப்பு

ஒரு கட்டத்தில், ஆர்டர் ராப்பிட் நாள் ஒன்றுக்கு 100 ஆர்டர்களை கையாளத் தொடங்கியது, எந்த பெரிய முதலீடுகள், சீரான தளவாடங்கள் இல்லாமல் அவற்றை கையாள சிரமப்பட்டனர்.

"சில்லறை விற்பனையாளர்களை ஆன்லைன் மூலம் வாடிக்கையாளருடன் இணைப்பதை விடுத்து நாங்களே வியாபாரிகள் போல் செயல்படும் நிலை உண்டானது, எனவே ஆர்டர் ராப்பிட்டின் உருவாக்கக் கருத்தில் இருந்து விலகுவதை உணர்ந்தோம். ஒரு சிறிய இடைவெளி எடுத்து எங்கள் உத்திகளை சீர் படுத்தி ஆர்டர் ராபிட் டின் அடிப்படை நோக்கத்தை தழுவி மீண்டும் மேம்பட்ட திட்டங்களுடன் இதை உருவாக்கினோம்" என்கிறார் கிருஷ்ணன்.

செயல்பாட்டு மற்றும் வணிக யுக்திகள் மூலம் 6 மாதங்களுக்குள், சில்லறை விற்பனையாளர்கள் நேரடியாக வாடிக்கையாளர்களின் ஆர்டர்களை பெறவும், வாடிக்கையாளர்கள் பொருட்களை வாங்கவும் இரு பிரத்யேக செயலிகளை உருவாகியது ஆர்டர் ராப்பிட்.

சந்தை சூழல்

ஆன்லைன் மளிகைப் பிரிவில் 2022 ஆம் ஆண்டுக்குள் 17.39 பில்லியன் தொழில் பரிவர்த்தனைகள் நடைபெறும் என கணிக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்திய சந்தையில், தளவாடங்கள் மற்றும் சரக்கு, உள்ளூர் வியாபாரிகள் மூலம் கையாளப்படுகிறது. தொழில்நுட்பம் மூலம் சில்லறை விற்பனைத் துறையில் குறைந்த போட்டியே உள்ளது.

இணையவழி விற்பனையின் எதிர்காலம் உள்ளூர் வியாபாரிகளை நம்பியே உள்ளது. ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரிப்பதனாலும், இதற்கேற்ப வியாபாரிகள் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதனாலும் ஆர்டர் ராப்பிட்டின் எதிர்காலம் ஒளிமயமாக தெரிகிறது.

வருங்கால திட்டங்கள்

"சுயநிதி முதலீட்டுடன் துவக்கிய இந்நிறுவனம் பின்னர் தயாரிப்பு மேம்பாட்டிற்காக நியூயார்க்கை சேர்ந்த தொழிலதிபரிடமிருந்து குறிப்பிட்டத் தொகை நிதியை திரட்டினோம், பின்னர் செயல்பாடுகளை மேம்படுத்த, கலிபோர்னியாவைச் சேர்ந்த தொழிலதிபரிடமிருந்து நிதி திரட்டினோம்." என்கிறார் கிருஷ்ணன்

இப்போது வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்த முக்கிய கவனம் செலுத்தி வருகிறது ஆர்டர் ராப்பிட். மே 2016க்குள் 15 நகரங்களில் 5000 கடைகளை இணைப்பதை இலக்காக கொண்டுள்ளனர். பெங்களூர் மற்றும் ஹைதராபாத்தில் விரைவில் விரிவுப்படுத்த உள்ள ஆர்டர் ராப்பிட், சந்தைப்படுத்துதளுக்காக இம்மாதம் மேலும் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளனர்.

8 உற்சாக உழைப்பாளிகளின் கடின திறமையாலும், முயற்சியாலும் உயர் தொழில்நுட்பத்தாலும், தற்போது 2 மில்லியன் டாலர் நிறுவனமாக உயர்துள்ளது ஆர்டர் ராப்பிட்.

"ஒவ்வொரு நாளும் அனைவரிடமும் இருந்து ஏதோ ஒன்றைக் கற்றுக்கொள்கிறோம். அவர்களே எங்கள் வழிகாட்டி. புதுமையைப் புகுத்துவதும், காரியங்களை எளிமைப்படுதுவதும் எங்கள் தாரக மந்திரம்" என்று நம்புகிறார் கிருஷ்ணன்.

இணையதள முகவரி: OrderRabbit, செயலி பதிவிறக்கம்