பாரம்பரிய நெல் வகைகளை மீட்டெடுக்க போராடிய 'நெல் ஜெயராமன்'  

இன்று காலமாகியுள்ள விவசாயத்தில் பெரும் புரட்சி செய்துள்ள இவரைப் பற்றிய ஒரு தொகுப்பு!

0

நம் பாரம்பரிய உணவான நெல் வகைகளை மீட்டெடுக்க பல நிகழ்வுகளை நடத்தி முழங்கி வந்த விவசாயி நெல் ஜெயராமன் புற்று நோய் பாதிப்பால் இன்று காலை காலமானார்.

தனது வாழ்க்கையையே விவசாயத்திற்காகவும், பாரம்பரிய நெல் வகைகளை பாதுகாப்பதற்காகவும் அர்ப்பணித்தவர் நெல் ஜெயராமன். 

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கட்டிமேடு கிராமத்தில் 1968ம் ஆண்டு பிறந்த இவர் பெரியதாய் படிக்கவில்லை என்றாலும் சிறு வயது முதலே விவசாயத்தின் மீது ஆர்வம் கொண்டிருந்தார். விவசயாத்தின் மீதுள்ள ஆர்வத்தால் 2003ல் நம்மாழ்வார் ரசாயன பூச்சுக்கொல்லிக்கு எதிராக குரல் கொடுத்து தொடங்கிய பிரச்சாரத்தில் பங்கேற்றார்.

அந்த பிரச்சாரத்தின் போது ஏழு பாரம்பரிய நெல் விதைகளை நம்மாழ்வாருக்கு வழங்கியுள்ளார். அதன் பின் நம்மாழ்வாரின் அறிவுரைப்படி நமது பாரம்பரிய நெல் வகைகளை மீட்டெடுத்து விவசாயிகளுக்கும் மக்களுக்கும் விழிப்புணர்வு அளிக்க வேண்டும் எனக்கூற, அங்கிருந்து ஜெயராமனின் பயணம் துவங்கிவிட்டது.

2003ல் இருந்து இன்று வரை உழைத்த இவர் இதுவரை 174 பாரம்பரிய நெல் வகைகளை மீட்டேடுத்துள்ளார்.

நெல் வகைகள் மற்றும் இயற்கை விவசாயம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் 2006 ஆம் ஆண்டு முதல் திருத்துறைப்பூண்டி வட்டம், ஆதிரெங்கம் கிராமத்தில் தேசிய அளவிலான நெல் திருவிழாவை ஆண்டுதோறும் நடத்தி வந்தார். அத்திருவிழாவிற்கு வருகை தரும் விவசாயிகளுக்கு 2 கிலோ பாரம்பரிய விதை நெல்களை இலவசமாக அளித்தார். இதன் முலம் நெல் விளைச்சலை அதிகப்படுத்தினார். 

ஒவ்வொரு ஆண்டும் பல இடங்களில் இருந்து விவசாயிகள் இத்திருவிழாவிற்கு வருகை தந்தனர். இவசமாக பெற்ற விதை நெல்களை விவசாயம் செய்து 4 கிலோ விதை நெல்களை அடுத்த ஆண்டு திருவிழாவில் ஒப்படைக்க வேண்டும் என்பதை வாடிக்கையாக வைத்திருந்தார்.

12 ஆண்டுகளாக அரங்கேறி வரும் இத்திருவிழாவிற்கு ஆந்திரா, கேரளா, ஒடிசா, மேற்குவங்கம் போன்ற பல மாநில மக்களும் வந்தனர். இதன் மூலம் பாரம்பரிய நெல் விதிகளைப்பற்றி தமிழ்நாடு மட்டுமின்றி இதியாவில் உள்ள பல விவசாயிகளுக்கு அதனை பற்றிய விழிப்புணர்வு அடைந்து நெல் வகைகள் உற்பத்தி ஆயின.

இந்த விழாவில் பங்கேற்கும் பல இளைஞர்கள் இன்று இயற்கை விவசாயத்தை கையில் எடுத்துள்ளனர். இந்த 12 வருடத்தில் இதுவரை 37,000 விவசாயிகள் இயற்கை விவசாயத்திற்கு திரும்பியதோடு பாரம்பரிய நெல்களிலும் கவனம் செலுத்தியுள்ளனர்.

இதற்காக பல பாராட்டுகள் மற்றும் விருதுகளை பெற்ற இவர், இரண்டு வருடங்களாக புற்று நோயால் அவதிப்பட்டுள்ளார். கடந்த சில மாதங்களாக சிகிச்சை எடுத்து வந்த இவர் இன்று (06/12/2018) சிகிச்சை பலன் இன்றி காலை 5 மணிக்கு காலமானார்.

காலத்தால் அழியக்கூடிய பல நெல் ரகங்களை மீட்டெடுக்க தனது வாழ்கையை அர்ப்பணித்த இவர் இன்று இல்லை என்றாலும் இவர் ஊன்றிய விதைகள் நிலைத்திருக்கும்...

இவரின் இறுதி சடங்கு அவரது சொந்த மண்ணில் நடக்க இருக்கிறது அதற்காக சென்னையில் காலமான அவரின் உடலை சொந்த ஊருக்கு எடுத்துச் செல்வதற்கான மொத்த செலவையும் நடிகர் சிவகார்த்திகேயன் ஏற்றுள்ளார். ஏற்கனவே நெல் ஜெயராமனின் மருத்துவ செலவை முழுவதையும் சிவகார்த்திகேயன் ஏற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

கட்டுரையாளர்: மஹ்மூதா நௌஷின் | தகவல் உதவி: இந்தியன் எக்ஸ்பிரஸ்

Related Stories

Stories by YS TEAM TAMIL