முதியோர்களின் உடல்நலத் தேவைகளுக்காக உருவாகிய கண்டுபிடிப்புகள்...

0

ஸ்ரீராம் வெங்கட சுப்பிரமணியத்தின் அப்பா ஒருமுறை தனியாக பயணம் செய்துகொண்டிருந்தார். அன்று பேருந்தில் இருந்து இறங்கும்போது தவறி விழுந்துவிட்டார். அப்போது அதிகாலை என்பதால் அவரை யாரும் பார்க்கவில்லை. தலையில் அடிபட்டுவிட்டது. நிற்காது ரத்தம் சொட்டியது. எப்படியோ தட்டுத்தடுமாறி வீடுவந்து சேர்ந்தார்.

சஜித் ஹுசேனுக்கு இதுபோன்ற அனுபவம் ஏதும் இல்லை. அவரது பெற்றோர் ஆம்பூரில் வசிக்கின்றனர். அவர்களது உடல்நலத்தின் மீது எப்போதும் ஒரு கண் இருக்குமாறு பார்த்துக்கொண்டார். சஜித்தின் அப்பாவுக்கு உயர் ரத்த அழுத்தம் இருக்கிறது. மருந்து எடுத்துக்கொள்வதன் மூலம் அதைக்கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார். எனினும் அவர் அடிக்கடி மருத்துவப் பரிசோதனைக்குச் செல்ல வேண்டிய நிலை இருக்கும். ஆனால் குறிப்பிட்ட தூரம் வரை தான் அவர் தனியாக செல்ல முடியும் என்பதால் அது எப்போதுமே சவாலான ஒன்றாகவே இருந்திருக்கிறது.

ஸ்ரீராமும், சஜித்தும் விப்ரோ நிறுவனத்தில் ஒன்றாக பணியாற்றியவர்கள். ஒருநாள் இந்த பிரச்சினை குறித்து எதேச்சையாக பேசியபோது இதற்குத் தீர்வு காண வேண்டும் என்று இருவருக்கும் தோன்றியது. என்னதான் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டாலும் வயதானவர்களின் உடல்நலத்தைப் பார்த்துக்கொள்வதில் இருக்கும் சிரமத்தை இருவருமே புரிந்துகொண்டனர்.

வயதானவர்களின் தனிப்பட்ட பாதுகாப்பு என்பதைவிட, உடல்நலக்குறைவோடு இருப்பவர்கள், எந்த இடத்தில் இருக்கிறார்கள் என்பதை அவ்வப்போது கண்காணிப்பதே முக்கியமான தேவையாக இருப்பதைப் புரிந்துகொண்டனர். 'க்ளோஸ் கனெக்சன்ஸ்' CloseConexions என்ற நிறுவனத்தின் முதன்மை நோக்கமாக இது இருந்தது.

க்ளோஸ்கனெக்சன்ஸ் குழு
க்ளோஸ்கனெக்சன்ஸ் குழு

இவர்கள் என்ன செய்கிறார்கள்?

க்ளோஸ் கனெக்சன்ஸ், டிஜிட்டல் சுகாதாரப்பொருட்களை உருவாக்குவதில் ஈடுபட்டிருக்கும் ஒரு நிறுவனம் ஆகும். தனிப்பட்ட பாதுகாப்புப் பொருட்கள், ஐஓடி கம்யூனிகேசன்ஸ், அணிந்துகொள்ளக்கூடிய கருவிகள், எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லக்கூடிய கருவிகள், அனலிடிக்ஸ் மற்றும் மொபைல் செயலி ஆகியவற்றையும் உருவாக்கியிருக்கிறார்கள். இவையெல்லாம் குறிப்பாக வயது முதிர்ந்தோர்க்காகவும், அதீத உடல்நலக்குறைவு கொண்டவர்களுக்குமானவை.

அணிந்து கொள்ளக்கூடிய கருவிகளைக்கொண்டு அவ்வப்போது நடக்கக்கூடிய செயல்களை சேகரித்து ஆராய்ந்து மருத்துவ நிபுணர்களுக்கும் பாதுகாவலர்களுக்கும் வழங்குகிறார்கள். அவசரகாலங்களில் மட்டும் இந்த தகவல்களை தெரியப்படுத்தும் வகையில் உருவாக்கியிருப்பது சிறப்பு.

க்ளோஸ்கனெக்சன்ஸ் நிறுவனத்தின் ஸ்மார்ட்வார்ச்
க்ளோஸ்கனெக்சன்ஸ் நிறுவனத்தின் ஸ்மார்ட்வார்ச்

இந்த நிறுவனம் இரண்டு முக்கியமான பொருட்களை உருவாக்கி இருக்கிறது:

1) டெம்கேர்: டெம்னீசியா கவனிப்புகளுக்கு உதவக்கூடிய வகையிலான ஸ்மார்ட்வாட்ச் ஒன்றை உருவாக்கி இருக்கிறார்கள். குறிப்பாக இது அல்சீமர் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கானது. இதில் மொபைல் செயலி ஒன்றைப் புகுத்தியிருக்கிறார்கள். நோயாளிக்கு எதேனும் பிரச்சினை, அவசரமான உதவி தேவையென்றால் சம்பந்தப்பட்டவருக்கு அது பற்றிய தகவலைத் தெரியப்படுத்தும்.

2) சேஃப்ஸ்டெப்ஸ்: கண் தெரியாதவர்கள், வயதானவர்கள் மற்றும் நடக்க சிரமப்படுபவர்களுக்கு உதவும் ஸ்மார்ட் வாக்கிங் ஸ்டிக்கை உருவாக்கி இருக்கிறார்கள். கண் தெரியாதவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம் ஆகும். இந்த வாக்கிங் ஸ்டிக்கைப் பயன்படுத்தி நடந்து செல்லும்பொழுது எதிரே ஏதேனும் தடை இருந்தால் நடப்பவருக்கு அது பற்றி தெரியப்படுத்தும் வகையில் வடிவமைத்திருக்கிறார்கள்.

இந்த பொருட்களை உருவாக்கிய புதிதில் ஹெல்த் சென்சார் மற்றும் சில தொழில்நுட்ப சேவைகளில் இருந்த பிரச்சினைகளை விட பேட்டரியின் ஆயுள் ஒரு முக்கியமான பிரச்சினையாக இருந்திருக்கிறது. வெற்றிகரமான ஒன்றை உருவாக்க பலமுறை மெனக்கெட வேண்டி இருந்திருக்கிறது. இதை வெற்றிகரமாக உருவாக்கிய பிறகு ஐஓடி பிளாட்ஃபார்மில் இயங்கக்கூடிய கருவி ஒன்றை உருவாக்கி இருக்கிறார்கள்.

யதார்த்த வாழ்க்கைக்கு உதவும் கருவி

“க்ளோஸ்கனெக்சன்ஸ் உருவாக்கி இருக்கும் இந்த ஐஓடி ப்ளாட்ஃபார்ம், பிரச்சினை என்றால் சம்பந்தப்பட்டவருக்கு தெரியப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், ஒரு அனலிடிக்ஸ் தொழில்நுட்பத்தையும் கொண்டிருக்கிறது. ஒருவரின் உடல்நல மேம்பாடு மற்றும் நுண்ணறிவைப் பயன்படுத்தி சுகாதாரம் பற்றிய முன்னறிவிப்பையும் வழங்கக்கூடும் வகையில் உருவாக்கி இருக்கிறோம்” என்கிறார் சஜித்.

இந்த தொழில்நுட்பத்தை மருத்துவமனையிலோ ஆம்புலன்சிலோ பயன்படுத்தும் வகையில் உருவாக்கி இருப்பது சிறப்பு. க்ளோஸ்கனெக்சன்ஸ் மூன்று வகையான முக்கிய கருவிகளை உருவாக்கி இருக்கிறார்கள்.

1) அணிந்துகொள்ளக்கூடிய / எடுத்துசெல்லக்கூடிய கருவி

2) ஐஓடி மற்றும் அனலிடிக்ஸ் கிளவுட் பிளாட்ஃபார்ம்

3) மொபைல் செயலி

அணிந்துகொள்ளக்கூடிய கருவியானது உடல் ஆரோக்கியத்தை மட்டுமல்லாமல் எந்தந்தெந்த பகுதிக்கு செல்கிறார் என்பதையும் பதிவு செய்யக்கூடியது. இவையெல்லாம் பாதுகாப்புக் காரணங்களுக்காகவே உருவாக்கி இருக்கிறார்கள். இதில் ஜிஎஸ்எம் சிம்கார்டுகளைப் பொருத்தமுடியும். சில அவசரத் தேவைகளின்போது, கீழே விழும்போது அது பற்றிய தகவல்களை ஐஓடி மற்றும் அனலிடிக்ஸ் கிளவுட் பிளாட்ஃபார்முக்கு அனுப்பும்.

நோயாளிகள் பற்றியத் தகவல்களை டாக்டரோ, மருத்துவமனையோ அல்லது அவரது உடல்நலத்தில் அக்கறை இருப்பவர்களோ தங்களிடம் இருக்கும் மொபைல் செயலியைப் பயன்படுத்தி அவ்வப்போது தெரிந்துகொள்ள முடியும்.

இந்த குழு இன்னொரு மொபைல் செயலியையும் உருவாக்கி இருக்கிறார்கள். நோயாளிக்கு ஏதேனும் அவசரத்தேவை என்றாலோ அவர் கீழே விழுந்துவிட்டார் என்றாலோ அது பற்றிய தகவலை மருத்துவமனைக்கோ, அவரது சொந்தக்காரருக்கோ மட்டுமல்லாமல் புதிய நபர் ஒருவருக்குத் தெரியப்படுத்த வகை செய்திருக்கிறார்கள். நோயாளியின் பாதுகாவலர் தொடர்புகொள்ள முடியாத இடத்தில் இருக்கும்போது இந்த செயலி உதவும்.

மருத்துவ ஆலோசனைகளுக்காக டாக்டர் அரவிந்த் கஸ்தூரி என்பவரைத் தங்கள் ஆலோசனைக்குழுவில் சேர்த்திருக்கிறார்கள். இவர் பெங்களூருவில் உள்ள செயிண்ட் ஜான்ஸ் மருத்துவக் கல்லூரியில் சமூக சுகாதாரத்துறையில் விரிவுரையாளராக இருப்பவர். இவர் 2015 அக்டோபரில் இருந்து மூன்று மாதங்கள் முழு நேரமாக பணியாற்றி இந்த கருவி உருவாக்கத்திற்குத் தேவையான ஆலோசனைகளை வழங்கினார். இந்த கருவி வெற்றிகரமாக இயங்குகிறதா என சில மருத்துவமனைகளில் பரிசோதனை செய்து பார்த்திருக்கிறார்கள்.

வருமானம்

கருவிக்கான விலையை ஒரே ஒரு தடவை கட்டினால் போதும். அதுமட்டுமல்லாமல் மாதம் தோறும் ஒரு குறிப்பிட்டத் தொகையை ஒரு நபருக்கு அல்லது ஒரு கருவிக்கு செலுத்த வேண்டும். கருவிக்கான பணத்தை ஈஎம்ஐயாக செலுத்தக்கூடிய வசதியையும் வழங்குகிறார்கள்.

இந்த குழு தற்போது, ஒவ்வொரு குடும்பத்திற்கும் தேவையான மருத்துவ உபகரணங்களை உருவாக்குவதில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

“அணிந்துகொள்ளக்கூடிய கருவி மற்றும் எடுத்துசெல்லக்கூடிய கருவி ஆகிய இரண்டும் ஐஓடி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒன்றோடு ஒன்று தொடர்புகொள்வது போன்ற தொழில்நுட்பத்தை உருவாக்க இருக்கிறோம். வீட்டுப்பாதுகாப்பு, பணம் செலுத்துதல் மற்றும் டிராபிக் போன்ற ஸ்மார்ட் சிட்டித் தேவைகளை பூர்த்தி செய்யும் தொழில்நுட்பத்தையும் இதோடு சேர்க்க இருக்கிறோம்” என்றார்.

எதிர்காலத்தில் patchables, augmented reality மற்றும் virtual reality போன்ற மேலும் சிலவற்றையும் இவர்களது கருவிக்குள் கொண்டுவர இருக்கிறார்கள். இந்த நிறுவனத்தின் கருவி ஜனவரி மாதம் வெளியிடப்பட்டுள்ளது. 2016ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் உலகம் முழுவதும் தங்கள் கருவியை விற்கத் திட்டமிட்டிருக்கிறார்கள். குறிப்பாக ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவில் இந்த விற்பனையை விரிவுபடுத்த திட்டமிட்டிருக்கிறார்கள்.

ஐஓடி தொழில்நுட்பத்தின் எதிர்காலம்

ஆரோக்கியத்துறை மற்றும் ஐஓடி தொழில்நுட்பத்துறையில் பல்வேறு நிறுவனங்களும் நுழைந்துகொண்டிருப்பதால் இந்த துறை வேகமாக வளர்ந்துவருகிறது. இந்த துறையில் இருக்கும் கார்டியா என்ற நிறுவனம் ஈசிஜியை கண்காணிக்கக்கூடிய அணிந்துகொள்ளக்கூடிய கருவி ஒன்றை உருவாக்கி இருக்கிறார்கள். லீசெல் என்ற நிறுவனம் உருவாக்கி இருக்கும் ஷூவை அணிந்துகொண்டால் வழி சொல்லும். கெகோ, கோகுய், சென்ஸ்கிஸ், கெட்ஆக்டிவ் போன்ற பல நிறுவனங்களும் இந்த துறையில் இயங்கி வருகின்றன.

இவர்கள் மட்டுமல்லாமல் சில பெரிய கார்பரேட் நிறுவனங்களான ஐபிஎம், இண்டெல், கெமல்டோ, இன்ஃபோசிஸ், விப்ரோ மற்றும் டெக்ஸாஸ் இன்ஸ்ட்ருமென்ஸ் போன்ற நிறுவனங்கள் ஐஓடி தொழில்நுட்பத்தில் தீவிரமாக கவனம் செலுத்திவருகிறார்கள். மெசினா நிறுவனம் செய்த ஆய்வின் படி, ஐஓடி தொழில்நுட்பத்தின் சந்தையானது 2020 ஆம் ஆண்டில் 373 பில்லியன் டாலர் மதிப்பைக்கொண்டிருக்கும். இதில் ஹார்டுவேருக்கு 194 பில்லியன் டாலரும், சாஃப்ட்வேருக்கு 179 பில்லியன் டாலரும் இருக்கும். இந்தியாவின் சந்தை 10ல் இருந்து 12 பில்லியன் டாலராக இருக்கும்.

ஃபின்ரோபோடிக்ஸ் நிறுவனத்தின் ஆரம்ப முதலீட்டாளரான ரித்தேஷ் மாலிக் யுவர்ஸ்டோரிக்குத் தெரிவித்ததாவது,

அணிந்துகொள்ளக்கூடிய கருவிகளுக்கான சந்தை வேகமாக வளர்ந்துவருவதாக நினைக்கிறேன். நாங்கள் பல வித்தியாசமான கருவிகளையும் ஆர்வமூட்டும் கருவிகளையும் தினம் தினம் பார்த்துவருகிறோம். ஒரு முதலீட்டாளராக இந்த நிறுவனங்களில் முதலீடு செய்வது நல்லது என எனக்குத் தோன்றுகிறது. காரணம் கூகிள் மற்றும் ஃபேஸ்புக் போன்ற பெரிய நிறுவனங்கள் இந்த சந்தையில் இருக்கும் தனித்துவமான கருவிகளுக்காகக் காத்திருக்கிறார்கள். இவர்களில் யாரேனும் வாங்கப்பட்டால் அது முதலீட்டாளருக்கு மிகப்பெரிய லாபமாக இருக்கும்.

இணையதளம் : Closeconnexions

ஆங்கிலத்தில் : சிந்து காஷ்யப் | தமிழில் : ஸ்வரா வைத்தீ

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

தொடர்பு கட்டுரைகள்:

மூதியோர்களின் திறமைகளை ஊக்குவிக்கும் 'சில்வர் சர்ஃபர்ஸ் கிளப்'

முதியோர்களின் வாழ்வில் இளங்காற்றை வீசும் ட்ரிபேகா கேர்!