நிஷிதா மந்த்ரி: பாதகங்களை சாதகங்களாக்கிய எழுச்சி நாயகி!

0

"என் வாழ்நாள் முழுவதுமே என்னை நானே உயர்த்திக்கொள்ள கற்றுக்கொண்டு, பாதுகாப்பான குறுகிய வட்டத்தில் இருந்து வெளியேறியதால்தான் இந்த வெற்றிப் பயணம் சாத்தியம் ஆனது" என்கிறார் மை லைஃப் டிரான்ஸ்கிரிப்ட் (My Life Transcript) நிறுவனத்தின் சி.இ.ஓ. நிஷிதா மந்த்ரி.

நிஷிதா தன் வாழ்க்கையில் பாதகங்களை சாதகங்களாக மாற்றிக்கொண்டவர். நொடிந்த குடும்பம், பருமன் பிரச்சினை, சுற்றத்தாரின் கேலிகளுக்கு இடையே சுதந்திரமானக் குழந்தையாக வளர்ந்தார். "இரட்டைக் கடமைகளுடன் தனியாக என்னை நல்லபடியாக வளர்த்தது மிஸ்டர் மாம்" என்று தன் தாயாரை வாயாரப் புகழ்கிறார் நிஷிதா.

நிஷிதாவுக்கு நம்பிக்கையின் வல்லமையை அளித்தது, எந்த விதமான பிரச்சினைகளைச் சந்தித்தாலும் அவற்றை சிறந்த முறையில் எதிர்கொண்டு, பாதகங்களைப் பந்தாடுவது என்பதை சொல்லித் தந்தது எல்லாமே அம்மாதான். அதன்படி, தன் அனைத்து சவால்களையும் எதிர்கொண்டதன் பலனாக, நிஷிதாவின் அறக்கட்டளைக்கு வலுவான அடித்தளம் அமைக்கப்பட்டது.

சொல்லால் பேசாமல், செயலால் பேசக் கற்றுக்கொண்டு, பிறருக்காக அல்லாமல் தனக்காகவே தனது திறமையை நிரூபிக்க முற்படும் நிஷிதா "நேற்றை விட சிறந்து விளங்க வேண்டும் என்று எனக்கு நானே சவால் விட்டுக்கொள்வேன்" என்கிறார்.

அதேநேரத்தில், தான் கடந்து வந்த பாதையில், தன்னைக் குத்திய முட்களால் ஏற்பட்ட வலியையும் அவர் மறக்கவில்லை. தன் குழந்தைப் பருவம் முதலே தந்தையின் விரல்கள் பிடித்து வலம்வர முடியாத ஈடில்லா இழப்பின் கவலை, ஆண் நட்புகளின் மூச்சே படாத அளவுக்கான இடைவெளிகள், தன்னை சுற்றியிருப்பவர்களால் முக்கியத்துவம் கிடைக்காத போக்குகள்... இப்படி பின்னடைவுகள் பல பின்தொடர்ந்தாலும் கூட, இவை எதுவுமே தனது வளர்ச்சியை பாதிக்காமல் பார்த்துக்கொண்டார். சுய முன்னேற்ற புத்தகங்கள், சிறந்த பயிலரங்குகளில் பங்கேற்பது உள்ளிட்ட முயற்சிகள் மூலம் தன் அனைத்து உணர்வுகளையும் நல்வழிப்படுத்தினார். இவை அனைத்தும்தான் தன்னை அறிந்து, தன்னைத் தானே நேசித்து வாழும் பக்குவத்தைத் தந்தது என்கிறார்.

சாதாரணமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்வதற்கே போராட வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்ட நிஷிதா, தன்னைப் போலவே பலரது வாழ்க்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்த முடிவு செய்தார். அந்த ஆசைதான் தனது புதிய முயற்சியான 'மை லைஃப் டிரான்ஸ்கிரிப்ட்' (My Life Transcript) உருவெடுக்க வித்திட்டது. மூன்று வயது முதல், சொந்தமாக தானே முடிவு எடுக்கும் திறனைப் பெறுவது வரையிலான ஒவ்வொரு குழந்தைக்கும் மதிப்பு (Value) கல்வியை சொல்லித் தரும் நிறுவனம் இது. "குழந்தைப் பருவத்தில் இருந்தே சரியான மதிப்பு கல்வியை பெற்றால் மட்டுமே நாம் வளர வளர தடைகளைத் தகர்த்து முன்னேற முடியும் என நம்புகிறேன்" என்று தன் நிறுவன நோக்கத்தைச் சொல்கிறார் நிஷிதா.

ஏற்கனவே ஒரு தொழில்முனைவோராக தடம் பதித்த இவருக்கு இது முதல் முயற்சி அல்ல. மும்பை பல்கலைக்கழகத்தில் துடிப்பான மாணவியாக மாஸ் மீடியா அண்ட் கம்யூனிகேஷனில் பட்டப்படிப்பை முடித்தவர், லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் அட்வர்டைசிங் அண்ட் மார்க்கெட்டிங்கில் முதுகலைப் பட்டம் பெற்றார். படிப்பை முடித்து இந்தியா திருப்பினார். அது, உலகப் பொருளாதார வீழ்ச்சி காலக்கட்டம். அந்தச் சூழலிலும் தன்னை ஒரு தொழில்முனைவோராக உயர்த்திக்கொண்டார். அதற்கு, அவரது மார்வாடி பின்புலத்துக்கே உரிய அணுகுமுறைகள் துணைபுரிந்தன.

'உனக்கு அனுபவம் இல்லை. தொழில் தொடங்குவது தப்பான திட்டம். உன் முடிவை மாற்றிக்கொள்' என்று நட்பு வட்டத்தில் வந்த அறிவுரைகள் எதையும் தன் செவிகளுக்கு எட்டாமல் பார்த்துக்கொண்டார். "ஒரு தொழிலை எப்படி நடத்துவது என்பதற்கான வரையறைகளும் எனக்கு வேண்டாம். நானே புதிதாகவும் தனித்துவமாகவுமான பாணியை உருவாக்க விரும்பினேன்" என்கிறார் தன்னம்பிக்கையுடன்.

கடந்த 2009-ல் பாம்பூ ஷூட் கம்யூனிகேஷன் (Bamboo shoot communication) நிறுவனத்தைத் தொடங்கினார். அதேவேளையில், மும்பையில் உள்ள பல்வேறு கல்லூரிகளிலும் மேலாண்மைக் கல்வி நிறுவனங்களிலும் அட்வர்டைசிங், பிராண்டிங் மற்றும் நேரடி மார்க்கெட்டிங் முதலானவை குறித்து வகுப்புகள் எடுத்தார். இதை இப்போதும் தொடர்பவர், தன் பணிகளைத் தொடங்குவதற்கு முன்பு காலை 7 மணிக்கு மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கிறார்.

"ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, நான் தொழில்முனைவோராக பயணத்தைத் தொடங்கினேன். அப்போது, நான் எந்தவித விதிமுறைகளையும் யோசனைகளையும் வரையறுக்கவில்லை; என் பாதையில் எல்லாவற்றையும் கற்றுக்கொண்டு, அதன் மூலம் பலனடையவே விரும்பினேன். அதற்காக, என் இதயத்தையும் மூளையும் திறந்தே வைத்திருத்தேன். என் கனவை மிகச் சரியான நேரத்தில் உணர்ந்தேன். அதன்படி, எனக்காக செயலாற்றத் தொடங்கி, எனது சொந்தத் தொழிலை ஆரம்பித்தேன்."

"நாங்கள் உன்னை நேசிக்கிறோம். என்ன நடந்தாலும் கவலையில்லை, உனக்கு உறுதுணையாக இருப்போம்." பெற்றோரின் இந்த மந்திரச் சொல்தான் தன் வல்லமைக்கு ஆதாரம் என்று சிலாகிக்கும் நிஷிதா, "உங்களுக்கு மிகவும் பிடித்த, உங்களின் உலகம் எனும் கருதும் வாழ்வின் நெருக்கமானவர்களிடம் இருந்து இதுபோன்ற வார்த்தைகளைப் பெறுவது நிச்சயம் பலம் தரும். முயற்சிகளுக்கும் வெற்றி - தோல்விகளுக்கும் போராடுவதற்கு உரிய சக்திகள் கிடைக்கும்" என்றார்.

தனிப்பட்ட மற்றும் தொழில்முனைவோர் வாழ்க்கை அனுபவத்தின் மூலம், பெண் தொழில்முனைவோர் எதிர்கொள்ளும் தடைகற்களை உணர்ந்திருக்கிறார் நிஷிதா. அந்தத் தடைகற்களைத் தகர்த்தெறிய பெண்களுக்கு உதவுவதற்காகவே 'வின்' (WIN) என்ற திட்டத்தை இப்போது செயல்படுத்தி வருகிறார். பெண் தொழில்முனைவோர்களின் சுதந்திரமான வலையமைப்பு என்ற சமூக அமைப்பாகவே இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. வீட்டில் இருந்து வேலை செய்யும் பெண்கள், மார்க்கெட்டிங் திறன் அதிகம் இல்லாத ஃபிரீலான்சர்கள், அற்புதமான தொழில் யோசனைகளை வைத்திருக்கும் பெண்கள் முதலானோருக்கு இந்த அமைப்பு வழிகாட்டுதலை வழங்குகிறது. இதுபற்றி நிஷிதா கூறும்போது, "மிகச் சிறப்பாக செயலாற்றி, தங்கள் தயாரிப்புகளை சரியாக மார்க்கெட் செய்து, அவற்றை உரிய விலைக்கு விற்பனை செய்து பலனடைவதற்காக நாங்கள் உதவுகிறோம். ஏற்கெனவே திறமைகளை வளர்த்துக்கொண்ட அவர்களுக்குத் தேவையெல்லாம் சரியான வழிகாட்டுதல்கள்தான்" என்றார்.

உணர்வெழுச்சி உன்னதத்தை உருவாக்கிப் பேணுவது குறித்ததே இவரது அடுத்த பயிலரங்கம். உணர்வெழுச்சி உன்னதத்தைக் கொண்டிருப்பதுதான் தனது சவால்களை எதிர்கொள்வதற்கு அடித்தளமாக அமைந்துள்ளது என்று நம்புகிறார் நிஷிதா. உலகம் சொல்வதை உதாசீனப்படுத்தி, குறிப்பாக எதிர்மறை சக்திகள் உள்ளே நுழையாத வகையில், நெகட்டிவ் மனிதர்களின் சொற்களுக்கு மதிப்பு தராமல், தன் மனம் சொல்வதை மட்டுமே கேட்டு நடந்தார். இதனால், எப்போதும் நம்பிக்கையுடன் செயல்படும் ஆற்றல் கிடைத்தது.

நிஷிதா வாழ்க்கையின் மிக முக்கிய மந்திரச் சொல் இதுதான்: "உங்களது சுயமரியாதையும் சுயமதிப்பும் உச்ச தரத்தில் இருக்கட்டும். சுயமரியாதை - சுயமதிப்பு இரண்டுமே ஒன்றுதான் என்று நினைக்கலாம். ஆனால், இந்தச் சொற்களுக்கு வேறுபாடு உண்டு. சுயமரியாதை என்பது உலகத்தில் நீங்கள் மதிக்கப்படுவதைக் குறிப்பிடுகிறது. சுயமதிப்பு என்பது உங்களுடைய சொந்த மதிப்பின் மீதான முதல் மரியாதையைச் சொல்கிறது."

நிஷிதாவின் இந்த மந்திரச் சொல்லின் மகிமை எளிதில் இவரது தொழில்முறை நட்பு வட்டாரத்துக்கு திருப்தி தராமல் போகலாம். தன்னுடைய குழுவுக்குக் கூட உடன்பாடு இல்லாமல் போகலாம். எனினும், போகப் போக எது சரி என்பது விளங்கிவிடும். பிறகு, "சரியான திசையில், இலக்குக்கு அழைத்துச் செல்லும் புதிய வெளிச்சம்தான் இது" என்ற உண்மையை அனைவரும் உணர்வார்கள்.

முன்னேறும் பெண்மணியாக தன்னைப் பார்க்கும் நிஷிதா, பெண் தொழில்முனைவோர்களுக்கு முன்வைக்கும் சில முக்கிய அறிவுரைகள் இவை:

பேசுங்கள்:

ஆண்களுடன் ஒப்பிடும்போது, பெண்களிடம் ஆற்றல் நிறைய உள்ளது. தினமும் காலை 6 மணிக்கு எழுந்து, நள்ளிரவில் உறக்கத்தை நாடவேண்டும். அவர்களுக்கு மிகப் பெரிய பின்னடைவாக இருப்பது, தொடர்புகொள்ளும் திறன்தான். அவர்கள் எப்போதும் புகார்களைச் சொல்வார்களே தவிர, உண்மையான பிரச்சினைகளையும் கவலைகளையும் பகிர்ந்துகொள்வதே இல்லை. எனவே, இவற்றைப் பற்றி பேசத் தொடங்குவதே வெற்றிக்கு வித்திடும்.

முன்னுரிமைகளை வரிசைப்படுத்துங்கள்:

தொழில் முறை வேலைகள், வீட்டுப் பணிகள், குழந்தைகள், வாழ்க்கைத் துணை, உறவுகள், பெற்றோர், சமூகக் கடமைகள் என பலவற்றையும் சமரசத்துடன் அணுகுவது பெண் தொழில்முனைவோர்களுக்கு சவாலான அம்சம். இந்த விவகாரத்தில் நீங்கள் அளிக்கும் முன்னுரிமைதான் முடிவுகளை நிர்ணயிக்கும். எனவே, உங்கள் சூழலுக்கு உகந்த முன்னுரிமைகளை வரிசைப்படுத்திக் கொண்டு செயல்படுங்கள்.

விருப்பங்களைத் தெரிவு செய்யுங்கள்:

பெண்களின் வழக்கமான சவால்களான சமரசத்தையும் தியாகத்தையும் தகர்த்தெறிய வேண்டும். இவ்விரண்டிலும் சிக்கிக்கொண்டு பெரும்பாலான பெண்கள் போல் ஒரு குறுகிய வட்டத்துக்குள் இருக்காமல், உங்களது விருப்பங்களைத் தெரிவு செய்து செயல்படுங்கள்.

"எழுச்சி பெறுங்கள், உங்கள் தெரிவை உரக்கச் சொல்லுங்கள், உங்கள் மனதைப் பின்பற்றுங்கள், உங்கள் திறமையை வெளிப்படுத்துங்கள்... உங்களது நிழலாய் பின் தொடரும் வெற்றி!"

இணைய இதழியல், சினிமா எழுத்து, சிறுவர் படைப்பு, சமூக ஊடகம் சார்ந்து இயங்க முயற்சிக்கும் ஒர்த்தன்!

Stories by கீட்சவன்